Sunday, December 16, 2007

விலை குறும்பட விமர்சனம்.

கூகுள் வீடியோவில் நான் கண்ட குறும்படம்; விலை. நான் வாழ்வில் கண்ட முதல் குறும்படம். ஈழத்து போராட்ட வாழ்வின் தழும்புகளை தழுவி எடுக்கப் பட்டது என்ற அறிவுப்புடன் துவங்குகிறது. ஒவ்வொரு பத்து நிமிடங்களை கொண்ட இரண்டு பதிவுகளாக காணக்கிடைத்தது.

கூகுள் வீடியோவில் பதிவுகளை பார்த்துக்கொண்டிருந்த பொழுது ஏதேச்சையாக கண்ணில் பட்டது முதல் பகுதி. அதை பார்த்து முடித்த உடன்
இரண்டாம் பகுதியை தேடிப்பிடித்துப் பார்த்தேன்.

ஏனோ இந்தப் படத்தை பார்த்த பொழுது ஒரு படம் பார்க்கிறோம் என்ற உணர்வே எழவில்லை, ஏதோ ஒரு களத்தில் நாமும் கூடவே நின்றுகொண்டிருப்பது போலான ஒரு உணர்வே மேலிட்டது.

கதை நாயகி சுருதி சேர்த்துவைப்பது போல எந்த மண்ணையாவது சேர்த்திட
வேண்டும் என்ற உணர்வு இது நாள்வரை எனக்கு தோன்றியிருக்கிறதா? என
நீண்ட நேரம் யோசித்துப் பார்த்தேன். சுருதியின் பாத்திரப் படைப்பும், நடிப்பும்
அற்புதம். மிக இயல்பான வசனங்கள். ஆனால் முதல் முறை பார்க்கும் பொழுது ஈழத்து தமிழ் புரிவது சற்று கடினமாக இருந்தது. ஆனால் திரும்ப
திரும்பத் பார்த்த பொழுது, அந்தத் தமிழுக்காகவே மீண்டும் மீண்டும் பார்க்க
வேண்டும்போல் இருந்தது.

மதி, கலைஅரசி, ஐயா என எல்லோரும் திரும்பவும் மனக் கண்ணில் வந்து
போய்க் கொண்டிருக்கிறார்கள். ஐயாவை தவிர மற்ற அனைத்து முக்கிய பாத்திரங்களும் பெண்ணாகவே இருப்பது, புலிகள் இயக்கத்தில் பெண்களின் பங்களிப்பை தெளிவாக எடுத்துக் காட்டுகிறது.

இசையும் அற்புதம். கதை மற்றும் இயக்கம் சாரதா என்றிருக்கிறது. வாழ்த்துக்கள். இதே போன்று நிறைய படங்கள் எடுங்கள்.
புத்தகங்களில் எத்தனை படித்தாலும், எத்தனை கேட்டாலும் சரியான அழுத்தத்தில் உணரப்படாத ஈழ மக்களின் வாழ்க்கையையும், போராட்டத்தையும்
இத்தகைய குறும்படங்களால் உணரச் செய்ய முடியும்.

படத்தில் மண் ஒரு வரலாற்றின் குறியீடாக உள்ளபடியால், "என்னை என் மண்ணில் புதைப்பாய், என் மண்ணை எங்கே புதைப்பாய்" என்ற காசி அனந்தனின் வரிகளை நினைவு படுத்தியது ( நன்றி: திரு.சுப.வீ ).

ஈழம் மலர வாழ்த்துக்கள்.
என்றென்றும் அன்புடன்,
பா. முரளி தரன்.

Monday, October 08, 2007

ராமரும் நானும்.

இறைவனை ஆபத்பாந்தவன், அநாதரட்சகன் என்றெல்லாம் சொல்வார்கள். அது முற்றிலும் சரியென்றே தோன்றுகிறது.
ராமரைப் பற்றிய விமர்சனமும், அதை தொடர்ந்த விவாதங்களும்,
நாட்டின் முக்கியமான பிரச்சனைகளை மறந்துபோகும் அளவுக்கு
மக்களை திசை திருப்பியிருக்கிறதே. அரசியல்வாதிகள் கொஞ்சநாட்கள்
நிம்மதியாக இருக்கலாம்.

ராமன் கற்பனையான புராண பாத்திரமா? பூமியில் வாழ்ந்த இறையின் அவதாரமா? ஆரியனா? ஆதாரம் உள்ளதா? என்றெல்லாம் நிறைய விவாதங்கள். ஆதரித்தும், எதிர்த்தும் நிறைய பதிவுகள் வந்துகொண்டே
இருக்கின்றன.

போற போக்குல ஒரு கல்ல வுட்டு அடிப்போம், வுளுந்தா மாங்கா லாபம், இல்லன்னா கல்லுதான நஷ்டம் என்ற மனோபாவத்தோடு பெரியார் பக்தர்கள் மனசுல பட்டதையெல்லாம் கேள்விகளாக வீசி அடிக்கிறார்கள்.

ராம பக்தர்கள் பெரிய முயற்சி செய்து, சிலப்பதிகாரம், மணிமேகலை, கம்ப இராமாயனம், ஆழ்வார்கள், நாயன்மார்கள் என்றெல்லாம் மேற்கோள் காட்டி பதில் அளித்துக் கொண்டிருக்கிறார்கள்.

நமக்கு, சும்மா எதுத்து எதையாவது ஒன்ன சொல்லி வைப்போம்னு நினைக்க முடியல்ல. ஆதரிச்சு எதையாவது
சொல்வோம்னா , மேல் மாடி காலி. அதனால குறைந்தபட்சம் இராமர் சம்பந்தமாக எனது அனுபவங்களை ஒரு பதிவா போடலாம்னு
முடிவு செஞ்சுட்டேன்.

அநேகமாக ராமர் எனக்கு முதன் முதலாக அறிமுகமானது ஒரு சீதாகல்யாண நிகழ்ச்சியில் என்று நினைக்கிறேன். இறைவனுக்கே
திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று யாருக்கு தோன்றியதோ
தெரியவில்லை. ஆனால், இந்த சீதா கல்யாணம், ராதா கல்யாணம் எல்லாம் வந்து விட்டால் குழந்தைகளான எங்களுக்கு ஒரே கொண்டாட்டம்தான்.

பஜனை, பாட்டு, ஆட்டம், மாறு வேடம், கல்யாண சாப்பாடு என ஒரே
சந்தோஷம்தான். இந்த அனுபவம் முதல் முறையாக கிடைத்தது மூன்றிலிருந்து , நான்கு வயது இருக்கும்பொழுது.

மீதி அனுபவங்கள் அடுத்த வரும் பதிவுகளில்.
என்றென்றும் அன்புடன்,
பா. முரளி தரன்.

Sunday, September 23, 2007

ஓடினான் ஓடினான் வாழ்க்கையின் ஓரத்திற்கே ஓடினான்.

இன்று தி.மு.க டாக்டர் கலைஞரின் தலைமையில் ஒரு விசித்திரமான சூழ் நிலையை எட்டியிருக்கிறது. உதய சூரியன் அஸ்தமன சூரியன் ஆகி விடும் நேரம் மிக அருகில் இருக்கிறதோ என எண்ணத் தோன்றுகிறது.

முதலில் இந்த டாக்டர் பட்டத்தை பார்ப்போம். இந்த டாக்டர் பட்டத்தை எதிர்த்த கல்லூரி மாணவர்களில் ஒருவரான சிட்டிபாபு உலகத்தை விட்டே ஓடினார். அந்த நேரத்தில் பாலத்தில் குண்டு வைக்க முயண்று கைதாகிய ஒரு மாணவர் பிறகு அனு விஞ்ஞானி ஆகி அமேரிக்காவிற்கு ஓடினார். அங்கு புலி ஆதரவாளராக செயல்பட்டு கைது செய்யப்பட்டு சிறைக்குள் ஓடினார்.

கருணாநிதியே, நிதிக்கான கணக்கு என்ன ஆயிற்று எனக் கேட்டதால் எம்.ஜி.ஆர் தி.மு.க-வை விட்டே ஓடினார்.அவரோடு நாவலர்
நெடுஞ்செழியன் போன்ற மூத்த தலைவர்கள் எல்லாம் கழகத்தை விட்டு
ஓடினர். இந்த நேரத்தில் இராமன் பதினாலு ஆண்டுகள் வனவாசம் செய்தது போல கலைஞரும் தனது அரியனையை விட்டு ஓடினார்.

வை.கோ மீது கொலைப்பழி சுமத்தப் பட்டதால் அவரும் தனிக் கட்சி கண்டு ஓடினார்.

தயாநிதி, கலாநிதி மாறன்கள் தலை தெறிக்க ஓடினர்.

சரத் குமார் சமத்துவ ஜனநாயக முன்னனி கண்டு ஓடினார்.

இவர்கள் அத்தனை பேரையும் ஓட விட்டு மகிழ்ந்த கலைஞர். முக்கியமான
ஒருவன் ஓடுவதை கவனிக்க தவறி விட்டார்.

அவன்தான் தமிழன்.

இந்த கேடு கெட்ட அரசியலால் தமிழகம் எந்த முன்னேற்றமும் அடையாததால், வாழ்வாதாரம் இழந்த தமிழன், ஆந்திராவுக்கும், கேரளத்திற்கும், கர்நாடாகாவிற்கும்,
மும்பைக்கும், டில்லிக்கும், கொத்தடிமைகளாக, கூலி வேலை செய்யவும்
ஓடினான். மற்றும் உலகமெல்லாம் வேலை தேடி ஓடினான்.

தமிழக மக்கள் நலம் பேன, தன்னைப் பற்றி உண்மையாக கவலைப்பட ஒரு தகுதியான தலைவர் கிடைப்பாரா? என்று தேடி தமிழன் ஓடினான், ஓடினான் வாழ்க்கையின் ஓரத்திற்கே ஓடினான்.

ஓடிக்கொண்டே இருப்பான்.

அட ராமா இன்னும் எத்தனைக் காலம் ஓட வேண்டுமோ?
என்றென்றும் அன்புடன்,
பா. முரளி தரன்.

Friday, July 20, 2007

செங்கரப்பான், மாந்தம், அரவத்தல்.

நண்பர்களே வணக்கம்,
ஒரு மாத விடுப்பில் தாயகம் சென்று வந்தேன், எனது குடும்பத்தில் புதிய வரவான எனது இரண்டாவது மகனை காண்பதற்காக. மகனை அருகில் இருந்து காணும், கொஞ்சும் பாக்கியம் ஒரு மாதம் மட்டுமே. அந்த நாட்களில் கேட்ட புதிய வார்த்தைகள் மற்றும் அது சம்பந்தமான சில தகவல்கள்.

செங்கரப்பான் - பிறந்த சிறு குழந்தைகளின் உடலில் காணப்படும் அல்லது புதிதாக உருவாகும் சிரங்குக்கு பெயர் கரப்பானாம். இதில் இரு வகை உண்டாம். ஒன்று செங்கரப்பான் மற்றது கருங்கரப்பான். எனது மகனின் உடலில் கருப்பாக ஒரு திட்டு காணப்பட்டது. இது கருங்கரப்பான் எனவே அதைச் சரி செய்ய கழுதைப்பால் கொடுக்க வேண்டும் என சிலர் சொல்ல,
வேறு சிலர் அது கரப்பான் அல்ல, மச்சம்தான் என்று சொல்லவே, கழுதைப்பால் தேடி அலையவேண்டிய இக்கட்டில் இருந்து தப்பித்தேன். நடுவே ஒரு டாக்டர் உறவினரை பார்த்து விஷயத்தை சொல்ல, என்னை ஒரு முறை முறைத்து, நக்கல் பன்றியா ? நல்லாதான் இருக்கான் குழந்தை ,
போய் வேற வேலையப் பாரு என்று அனுப்பி வைத்தார்.

மாந்தம் - குழந்தையின் ஜீரன சக்தி மந்தம் ஆவதைத்தான் மாந்தம் என்று குறிப்பிடுகிறார்கள். தாய்மார்கள் பலா, மா போன்ற பழங்களை உண்டாலோ, பச்சை கடலை போன்றவற்றை உண்டாலோ, தாய்ப்பால் கொடுக்கும் நாட்களில் கணவருடன் இணைந்தாலோ, தாயின் உடலில் ஏற்படும் மாறுபாட்டால், குழந்தை குடிக்கும் தாய்ப்பால் ஜீரனம் ஆகாமல், தாய்ப்பாலை குழந்தை கக்கிக்கொண்டே இருக்குமாம். இதை சரி செய்ய பழங்காலத்தில், மாந்தகட்டையை, வேப்ப எண்ணை விட்டு எரிக்கும் விளக்கில் சுட்டு , பிறகு அதை சந்தனக் கட்டையில் தேய்த்து, அதில் சிறிது விழுதை எடுத்து, குழந்தையின் நாக்கில் தடவ மாந்தம் சரி ஆகிவிடுமாம். தற்காலத்தில் டாக்டர் கொடுக்கும் சிரப்தான்.

அரவத்தல் - பிறக்கும்போது மூன்றிலிருந்து மூன்றரை கிலோ வரைக்கும் இருக்கும் சில குழந்தைகள், முதல் மாதத்தில் சிறிது உடல் வற்றி / இளைத்து
பிறகு திரும்பவும் உடல் பெருக்குமாம். அப்படி குழந்தை சிறிது இளைப்பதை
அரைவத்தல் என்கிறார்கள்.

ஐயாமாரே, அம்மாமாரே இது சம்பந்தமாக ஏதெனும் புதிய தகவல்கள் இருந்தால் தெரியப்படுத்தவும்.
என்றென்றும் அன்புடன்,
பா. முரளி தரன்.

Monday, May 07, 2007

தமிழர்களின் அடையாளமாகிப்போன புலிகள்-பாகம் 1.

தமிழகம், தமிழர்கள் என்றால் எவையெல்லாம் ஞாபகம் வருகிறது?. காதலும் வீரமும் தமிழர்களின் அடையாளமா?. காதலிப்பவர்களை கண்டால், பிரித்துப் போடத்தான் தமிழ் சமூகம் முயற்சிக்கிறது. வக்கிரம் காதலாக உருவகப் படுத்தப்படுகிறது. பொறுக்கித்தனம் வீரமாக உருவகப் படுத்தப்படுகிறது.
சரி, நடைமுறையில் எவையெல்லாம் தமிழர்களின் அடையாளமாக இருக்கிறது.

1. தமிழகத்தின் திருக்கோவில்கள். கட்டட, சிற்ப கலைகள்.
2. தமிழ் செம்மொழி, மற்றும் அதன் இலக்கிய வளம்.
3. இட்லி, வடை, சாம்பார்.
4. தீபாவளி, பொங்கல் பண்டிகைகள்.
5.ஞானிகள், மற்றும் ஞான மொழிகள்.
6. இசை, சங்கீதம், நாட்டியம்.
7. ஆங்கில அறிவு. கல்வி அறிவு.
8. கூந்தலில் பூ சுமக்கும் பெண்கள்.
9. இன, மொழி, ஜாதி வெறி அரசியல் வியாதிகள்.
10. சினிமா மோகம். கட் அவுட், போஸ்டர்.
இப்படியே பல விஷயங்களை சொல்லிக் கொண்டே போகலாம். நேற்று ஒரு சம்பவம்..........ம்ம்ம், நேரமாகிவிட்டது, மீதி அடுத்த பதிவில்.
என்றென்றும் அன்புடன்,
பா.முரளி தரன்.

Tuesday, April 24, 2007

ஏன் தடை செய்யக் கூடாது தி.க-வை?.

நெய்வேலியில் பிராமணர்களின் பூணூல், குடுமி அறுக்கப் பட்டுள்ளது.
இதில் ஈடுபட்டவர்கள் தி.க வை சேர்ந்தவர்கள் என சந்தேகிக்கப் படுகிறது. தொடர்ந்து பிராமணர்களுக்கு எதிராக திட்டமிட்டு வன்முறையை கைக்கொள்ளும் தி.க வை
ஏன் தடை செய்யக் கூடாது? .

துரதிஷ்டவசமாக எந்த அரசியல் தலைவர்களும் இது போன்ற நிகழ்வுகளை கண்டித்து கடுமையான அறிக்கை வெளியிடுவதில்லை.
சாது ஜீவிகளான பிராமணர்களுக்கு பாதுகாப்பு அளிக்க அரசாங்கமும் முன்வருவதில்லை.

தாக்குதல் நடத்தப்பட்ட வேலுடையான்பட்டு கோவில், எனது வாழ்வின் ஒரு பகுதியாகவே இருந்து வந்துள்ளது. இந்த கோவிலைப் பற்றியும்,
இறைவனைப் பற்றியும், இந்த கோவில் சார்ந்த எனது அனுபவங்களையும், ஒரு தனி பதிவாக எழுதுவேன்.

நெய்வேலியில் தி.க வின் தொந்தரவு ரொம்பவும் அதிகம். இங்கு தி.கவினர், வாரியார் சுவாமிகளுக்கு செருப்பு மாலை போட்டு அவமதித்ததையும் எனது முந்தைய பதிவில் நான் குறிப்பிட்டுள்ளேன்.

நெய்வேலியில் ஒரு காலத்தில் எல்லாச் சுவர்களிலும் தி.க வினர் பிராமணர்களை தூற்றி, வன்முறை வசனங்களை எழுதி இருப்பார்கள்.
கோவிலுக்கு மிக அருகில் மைக் கட்டி, கூட்டம் போட்டு இறைவனை
கேலி பேசிக் கொண்டிருப்பார்கள். நான் சிறுவனாய் இருந்த பொழுது
இதை எல்லாம் கண்டு, கேட்டு மிகவும் மனம் வெதும்பியிருக்கிறேன்.

அரசியல் லாபங்களுக்காக ஒரு அமைதியான, ஒழுக்கமான சமூகத்தை,
பொய்ப் பிரச்சாரங்களின் மூலம், தமிழகத்தில் பொது எதிரி போல ஆக்கி
விட்டார்கள். ஒரு எழுத்தாளர் முன்பு வேதனைப்பட்டு எழுதியது இக்கனத்தில் ஞாபகம் வருகிறது.

தமிழகத்தில், பிராமணர்கள், யூதர்கள் போல நடத்தப் படுகிறார்கள்.
இது நூறு சதம் நிஜம் என்று இது போல சம்பவங்கள் ஊர்ஜிதப் படுத்துகின்றன.

பிராமண துவேஷிகள், பிராமண எதிர்ப்பு என்னும், நிகழ்காலத்திற்கு ஒவ்வாத, அர்த்தமில்லாத நடவடிக்கைகளை நிறுத்திக் கொள்ள வேண்டும்.

தயவு செய்து தூக்கி எறியுங்கள் பிராமண எதிர்ப்பு என்னும் துருப் பிடித்த வாளை.

தமிழகத்தின் பிரச்சனைகளான ஏழ்மை, வேலை வாய்ப்பின்மை, தண்ணீர் பஞ்சம், பிரிவினைவாதம், தீவிரவாதம், இன வெறி, மொழி வெறி,அரசியல்
அதிகாரவர்கத்தின் பித்தலாட்டம், ஊழல், சட்டம் ஒழுங்குப் பிரச்சனை
போன்றவற்றிற்கும், பிராமணர்களுக்கும் துளியாவது சம்பந்தம் உண்டா?
மன சாட்சியை தொட்டு பதில் சொல்லுங்கள்.

எனது தனிப்பட்ட வாழ்வில் இதே போல் ஒரு தி.க வினரின் தாக்குதலை ஒரு பொதுக் கூட்ட நிகழ்ச்சியில் நான் எதிர் கொண்டுள்ளேன். ஆனால் அன்று தி.கவினர் எங்களிடம் வசமாக சிக்கிக் கொண்டனர். எனது அத்தனை ஆத்திரங்களையும் அன்று அவர்களை புரட்டி அடித்து தீர்த்துக் கொண்டேன்.

நல்லதுக்கு தமிழகத்தில் காலமில்லையோ என்று தோன்றுகிறது.
பிராமணர்களுக்கு இன்றைய, எதிர்கால தேவை; தங்களை தற்காத்துக்கொள்ள, பரசு ராமனின் ஆவேசத்தை முன் மாதிரியாகக்
கொண்ட ஒரு போர்ப்படையா?
என்றென்றும் அன்புடன்,
பா. முரளி தரன்.




Saturday, April 21, 2007

மீண்டும் பூணூல் அறுப்பு.

என்னங்க நடக்குது தமிழ்நாட்டுல?. மீண்டும் பெரியார் சிலை சேதம், மீண்டும் பிராமணர்களின் பூணூல் அறுப்பு. தென்ன மரத்துல தேள் கொட்டினா, பன மரத்துல நெறி கட்டிச்சாங்கர மாதிரி, எவனோ பெரியார் சிலைய சேதம் பன்னா, பிராமணர்களின் பூணூல அறுக்க கிளம்பிடுராங்க.

ஒரு வலைப்பதிவர், பூணூல் அறுக்கப் படும்தான்-னு, மிரட்டல் வேற விட்டுருக்கார். அண்ணா உங்கள மாதிரி ஆளுங்கள நாங்க இன்னிக்கி புதுசா பாக்குரமா என்ன? நாப்பது வருஷமா தமிழ்நாட்டுல நடந்துகிட்டுத்தான இருக்கு.பழைய கள்ளு; புதிய மொந்தை.

நீங்க எத்தன முறை குடுமி அறுத்தாலும், மசுருதான, போனா போதுன்னு
திரும்பி குடுமி வெச்சுப்போம். எத்தன முறை பூணூல் அறுத்தாலும், திருப்பி மாட்டிப்போம். என்ன செஞ்சாலும் அசர மாட்டேங்கரானே பார்ப்பான்னு வெம்பி சாவுங்க.

அப்பறம், இதுல யோசிக்கரதுக்கு வேற விஷயமும் இருக்கு. இந்த சிலைய சேதம் பன்ற விஷமிகளோட உள் நோக்கம் என்ன? யார் செய்யறான்னு கண்டுபிடிச்சு மொத்தமா எல்லாரையும் தூக்கி
உள்ள போடனும். அப்பத்தான் இந்த பிரச்சனை தொடராம தடுக்க முடியும்.

மேலும், தென் மாவட்டங்களில், சில வருடங்களுக்கு முன்னாடி நடந்த, ஜாதிக் கலவரங்களுக்கு காரணமாக இருந்த, தேவர், அம்பேத்கார் சிலை
உடைப்பு சமயத்தில், அங்கு இருந்த போலீஸ் அதிகாரி ஜாங்கிட் ஒரு உபாயம் செய்தார். சிலைகளுக்கு கூண்டு வலை அமைத்து, பூட்டி, அதன்
சாவியை உள்ளூர் பொறுப்பாளர்களிடம் ஒப்படைத்திருந்தார். அதுபோல்
பெரியார் சிலைகளுக்கும் கூண்டு அமைப்பது. இப்பிரச்சனைக்கு தற்காலிக தீர்வாக இருக்கும் என்பது எனது எண்ணம்.

ஏனென்றால் இந்த சிலை உடைப்பு விஷயத்தில் ஈடுபடுவது, தமிழகத்தில் சட்டம், ஒழுங்கை கெடுக்க வேண்டும் என்ற தேச விரோத,
தமிழக விரோத சக்திகளின் செயலாகக் கூட இருக்கலாம்.

என்றென்றும் அன்புடன்,
பா. முரளி தரன்.

Saturday, March 31, 2007

CREAMY LAYER கயவர்களே.

"ஈர்ங்கை விதிரார் கயவர் கொடிறுடைக்கும்
கூன்கைய ரல்லா தவர்க்கு".
கயவர், தம் கன்னத்தை இடித்து உடைக்கும்படி கை உடையவரல்லாத மற்றவர்க்கு, தாம் உண்ட எச்சில்
கையையும் உதறமாட்டார், என்ற குறளுக்கு ஒரு உதாரணமாகவே இருந்து வருகிறார்கள் கிருமி லேயர் கயவர்கள்.அவர்கள் கன்னத்தை
இடித்து அடேய் போதுமடா உங்கள் பேராசை என்று சொல்வதுபோலவே வந்துள்ளது உச்சநீதி மன்றத்தின் தீர்ப்பு. யார் பிற்படுத்தப்பட்டவர் என்று கண்டுபிடிப்பது, பிரம்மனும்,
ஹரியும் முயன்று முடியாமல் போன சிவனின்அடியும் முடியும் போல அத்தனை கடினமான காரியமா என்ன?

இலவச கேஸ் அடுப்பு, இலவச நிலப்பட்டா வழங்க, வறுமை கோட்டிற்கு
கீழே உள்ளவர்களை ஆறே மாதத்தில் கண்டுபிடித்த அரசால் இதை
கண்டுபிடிக்க முடியாதா என்ன? முயன்றால் முடியும், முயலக் கூடாது என்பதுதானே பிற்படுத்தவர் வேஷம் கட்டும் இந்த பணக்கார ஓட்டு வேட்டை அரசியல்வாதிகளின் கொள்கை.

"ஊணுடை எச்சம் உயிர்க்கெல்லாம் வேறல்ல
நாணுடை மாந்தர் சிறப்பு"
உணவும், உடையும் எல்லோருக்கும் பொதுவானது. அம் மக்களில் சிறப்பானவர்கள் என்பவர்கள், தகாத செயல்களை செய்வதற்கு வெட்கப்படுபவர்கள் என்பவர்தாமே. அதுவும் நூல் பல கற்றவர், அறிவில் சிறந்தோர் இதில்
ஒரு படி மேலே அல்லவா இருக்க வேண்டும்.

ஆனால் இந்த கிருமி லேயர்கள், ஏழைகளின் சலுகைகளை நாங்களும்
அனுபவித்தே தீருவோம் என வெட்கங்கெட்டு திரிகின்றனவே.

"அக்கி அகன்ற அறிவென்னாம் யார்மாட்டும்
வெக்கி வெறிய செயின்"
யாரிடத்திலும் பொருளை கவர விரும்பி
பொருந்தாதவற்றை செய்தால் உன் அகன்ற அறிவால் என்ன பயன்.
சமூகத்தில் பண பலம், அதிகார பலம், வீடு, நிலபுலன் என சவுகரிமாய்த்தானே இருக்கிறீர்கள். ஏன் காட்டிலேயும்,
கழனியிலேயும் வியர்வை சிந்த உழைக்கும் பாட்டாளிகளின்,
ஏழைகளின் சலுகைகளை கவர விரும்பிகிறீர்கள்.தூசு புகாத அறைகளில்
குளிர்காற்று வாங்கிக்கொண்டு, குந்தி தின்னும் கோமான்களே, வெள்ளைப்
பறங்கியைப்போல நிறத்தில் மின்னும் சீமான்களே, உங்களுக்கு இட
ஒதுக்கீடு ஒரு கேடா?.


"மடியிலா மன்னவன் எய்தும் அடியளந்தான்
தாஅய தெல்லாம் ஒருங்கு"
தன் மூன்றடியால் மூவுலகத்தை அளந்த
மஹாவிஷ்னு தாவிய பரப்பு எல்லாவற்றையும், சோம்பல் இல்லாத
அரசன் ஒரு சேர அடைவான், என்பதற்கு உதாரணமாய் நமது அரசியல்
வியாதிகள். ஒரு வட்டம், மாவட்டம் பதவி கிடைத்தால் கூட போதும், உடனே ஏழு தலைமுறைக்கு சொத்து சேர்த்து விடுகிறார்கள். இவர்கள் எல்லாம் எந்த விதத்தில் பிற்படுத்தப் பட்டவர்கள்?.

இட ஒதுக்கீட்டிற்கு பொருளாதார அளவுகோள்தான் சரியானது.

"நடுவின்றி நன்பொருள் வெக்கின் குடிபொன்றிக்
குற்றமும் ஆங்கே தரும்"
ஏ கிருமி லேயர் பணக்கார பேராசை பிச்சைக்காரர்களே, ஏழைகளுக்கு சேர வேண்டிய இடஒதுக்கீட்டை
மனசாட்சி சிறிதும் இல்லாமல் நீங்கள் கவர விரும்பினால், நீங்கள் பெரிய குற்றம் செய்தவர்கள் ஆகிறீர்கள். நீங்களும், உங்கள் குடியும்
கெட்டுப் போவீர்கள்.

ஏ கிருமி லேயர்களே மனசாட்சி என்று ஒன்று இருந்தால், நாங்கள் பிற்படுத்தப்பட்ட பட்டியலில் இருந்தாலும், முற்பட்டவர்களே , ஆதலால் எங்களுக்கு இட ஒதுக்கீடு வேண்டாம் என்று முன் வந்து அறிவிப்பு செய்யுங்கள்.

ஏழை பாழைகளின் உரிமைகளை தட்டிப் பறித்து சொகுசு வாழ்க்கை
வாழாதீர்கள். அப்படி செய்தால் அரசாங்கம் எத்தனை சலுகைகளை
கொடுத்தாலும்.

போவீர் போவீர் ஐயோ என்று போவீர்.
என்றென்றும் அன்புடன்,
பா.முரளி தரன்.

Wednesday, March 28, 2007

பெரியாரும் நானும் - 1.

எனது தந்தையார் நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில் ஒரு சாதாரண தொழிலாளியாக வாழ்க்கையை துவங்கினார். நாங்கள் குடியிருந்த தொழிலாளர் குடியிருப்பில் அனைத்து ஜாதி மதம் சார்ந்தவர்களும் இணைந்துதான் வசித்து வந்தோம். இன்னும் சொல்லப்போனால் ஜாதி, மதம் என்றெல்லாம் இருப்பதே தெரியாது. அனைவரும் நல்ல விதமாகவே பழகி வந்தாலும் ஒரே ஒரு வீட்டு அம்மா மட்டும் சும்மாவே காரணம் கண்டுபிடித்து எங்கள் வீட்டோடு வலிய வம்பு சண்டை வளர்த்துக்கொண்டே இருப்பார்கள். சிறுவனான எனக்கு இது மிகுந்த ஆச்சரியம் அளித்த விஷயம். இத்தனைக்கும் அவருடைய மகன் எனக்கு நல்ல நண்பன். அப்பொழுது அதற்கு காரணம் தெரியவில்லை. பிற்காலத்தில் அவர்கள் வீட்டு சுவற்றில் வரைந்திருந்த ஒரு தாடி தாத்தாவின் படம் ஞாபகம் வந்தபொழுதுதான் அதற்கான காரணம் புரிந்தது.

எனக்கு பதினோரு வயதில் உபநயனம். அதற்காக முன்தலையில் சிறிது முடி வழித்து, குடிமியும் சிறிது நாள் வைத்திருந்தேன். அனைத்து சிறுவர்களும் அதை விசித்திரமாக கவனித்து சில கேள்விகளும், சிறிது கேலியும் பேசி மட்டுமே வந்தனர். ஆனால் ஒரு பெரியவகுப்பு அண்ணன் மட்டும் விடாது என் குடிமியை பிடித்து இழுத்தும், அடித்தும், பிளேடால் குடுமியை நறுக்கிவிடுவேன் என பயமுறுத்தியும் தாங்க முடியாது தொந்தரவு செய்து வந்தான். நான் கொஞ்சம் துறுதுறுப்பு என பெயர் பெற்றவன் ஆனால் அதன் பிறகுதான் கொஞ்சம் முரடு என பெயர் பெற்றேன். அவன் தொந்தரவு எல்லை மீறிப்போனதால், பள்ளியில்
வளர்ந்திருந்த ஒரு மரத்திலிருந்து ஒரு கழியை உடைத்து, அவனை பள்ளி மொத்தமும் விரட்டி விரட்டி அடித்தேன். அப்படி அடித்ததற்காக அரை நாள் ஹெட்மாஸ்டர் அறை வாசலில் முட்டி போட்டேன். அவனுடைய தந்தையாரும் என்னை வந்து மிரட்டிவிட்டுப் போனார். அதன்பின் பள்ளியின் ஆசிரியர்கள் அதை பெரிய பிரச்சனையாக ஆகாமல் தடுத்து விட்டார்கள். பிற்காலத்தில் அந்த அண்ணா ஏன் அப்படி நடந்துகொண்டான் என்பதை அவர்கள் வீட்டு சைக்கிளின் முன்பக்கத்தில் பறந்த ஒரு கொடியின் ஞாபகம் வந்ததும் தெரிந்துகொண்டேன்.

சிறு வயதில் பட்சக்குதிரை தாண்டும் விளையாட்டு. ஒரு சிறுவன் கால் முட்டியில் கையை வைத்துக்கொண்டு, குனிந்து, முதுகுப் பரப்பை சமதளமாக்கி நிற்க வேண்டும். மீதி சிறுவர்கள் வரிசையில் நின்று ஓடிவந்து , குனிந்துநிற்பவன் முதுகில் இரு கைகளை வைத்து, எம்பி, இரு கால்களை விரித்து , அவன் உடலின் வேறு எந்த பாகங்களிலும், நமது உடலின் பாகங்கள் படாமல் தாண்டி குதிக்க வேண்டும். ஓடி வருவதால் குதிரை. கால்கள் இரண்டையும் விரிக்கும்போது ஒரு சிறகை விரிப்பதுபோல் இருப்பதால் பட்சம் ( பட்சம் என்றால் சிறகு , பட்சத்தை உடையது பட்ஷி. நன்றி: வாரியார் சுவாமிகள்). ஒடி வந்து எம்பி கால்களை விரித்து தாண்டும்பொழுது, ஒரு குதிரை இறக்கை விரித்துப் பறப்பதுபோல் இருப்பதால் இந்த விளையாட்டுக்கு பட்சக்குதிரை என பேர் ஆனதோ?.
நாங்கள் இதை ஆபியம் விளையாட்டு என்றும் சொல்வோம்.

அப்படி ஒவ்வொரு முறை தாண்டும்பொழுதும், ஒவ்வொரு வார்த்தையாக சொல்லி தாண்டுவோம்.
ஆபியம், இஸ்தாபியம், மணியாபியம், முத்தாபியம்,
லக்கடிகொக்கு என்று, கடைசி முறையாக தாண்டி குதிக்கும்பொழுது
ராஜா சூத்துல ஒத என்று சொல்லி,
குனிந்து நிற்பவன் பின்பக்கம் ஒரு உதை விட்டுவிட்டு குதிக்க வேண்டும்.
இந்த விளையாட்டில் நான் சூரன் என்று பெயர் பெற்றவன் ( நம்புங்கண்ணா, டேக்வாண்டோவில் இந்த விளையாட்டே ஒரு உடற்பயிற்சி. ஆனால் பின்புறம் உதைப்பது கிடையாது. எப்படி சரியானபடி தாவிக்குதிக்க வேண்டும் என demonstrate செய்துகாட்ட வேண்டுமானால் எங்கள் கேப்டன் ( குருநாதர் ) என்னைத்தான் கூப்பிடுவார் ) .

ராஜா சூத்துல ஒத என்று சொல்லி உதைத்துக்கொண்டே தாவிக் குதிப்பது சற்றே கடினமான ஒரு செயல். இதை சரியானபடி செய்ய முடியாது, நிறைய சிறுவர்கள் out ஆகி, குனிந்து நிற்கும் ஆளாக மாறி விடுவார்கள். சில குறும்பர்கள் வேண்டுமென்றே வலி எடுக்கும் அளவுக்கு ஓங்கி உதைப்பார்கள். இதனால் சில நேரம் சண்டை வந்து விடும். அதனால்
ஒங்கி உதைப்பது கூடாது என்றும், சிறிது அளவு உடையில் கால்படும் அளவிற்கு உரசினால் கூடப்போதும் என்றும் விதி மாற்றம் செய்யப்படும்.

அப்படி உரசினால் அதை குனிந்து நிற்பவர் உணரமுடியாமல் போகும். அதனால் குனிந்து நிற்பவர் out கேட்கும் வாய்ப்பு உள்ளது. அதனால் தாண்டியவரின் கால் குனிந்து நிற்பவரின் மேல் பட்டதா என்பதை கண்கானிக்க ஒரு நடுவரை நியமித்திருப்போம்.

அன்று எங்கள் தெருவில் புதிதாக குடிவந்த ஒரு சிறுவன் விளையாட்டில்
சேர்ந்தான். நான் அவன் பின் புறம் டவுசரில் (கால்சட்டை) ஒரு உரசு உரசி தாவிக் குதித்து சென்றேன். ஆனால் எனது கால் அவன் மீது படவே இல்லை
என சாதித்தான். நடுவர் எனது கால் பட்டது என அவர் கண்டதை அறிவித்தும், அவன் நடுவர் தீர்ப்பை ஏற்க மறுத்து விட்டான்.

நான், நடுவர் தீர்ப்பைதான் ஏற்பேன் என்று பிடிவாதமாக இருந்ததால் எனது
வாழ்வில் முதல் முறையாக ஒரு வசவை கேட்க நேர்ந்தது. இந்த பார்ப்பார பசங்கள எதிலியுமே சேக்க கூடாது என்பதுதான் அது. நான் பதிலுக்கு அவனை திட்ட அது பெரிய சண்டையாக மாறிவிட்டது. அந்த நிகழ்ச்சிக்குப்
பிறகு எப்பொழுது, எப்படி மாறினோம் என்றே ஞாபகம் இல்லை, ஆனால் இன்றும் நாங்கள் உயிர் நண்பர்கள்.

பிற்காலத்தில் நாங்கள் இந்த சண்டையை பேசி சிரித்து ஆராய்ந்து பார்த்தபொழுது ஒரு விஷயம் புரிந்தது. எனது நண்பனின் குடும்பத்து
ஆண்கள் பார்ப்பன எதிர்ப்பு என்பதை ஒரு கொள்கையாகவே கொண்டவர்கள் என்றதால் சிறுவனான எனது நண்பனும் எந்த காரணமும், அவசியமும் இல்லாவிட்டாலும் கூட பெரியவர்கள் செய்ததால், பேசுவதால் நாமும் அதேபோல் செய்வோம், பேசுவோம் என முடிவெடுத்துவிட்டான்.

நீளம் அதிகமாகிக்கொண்டே போகிறது. மீதி அடுத்தடுத்த பதிவுகளில்.
என்றென்றும் அன்புடன்,
பா.முரளி தரன்.

Saturday, March 24, 2007

கார்த்தி சிதம்பரம்.

"தாய் எட்டடி பாய்ந்தால் குட்டி பதினாறு அடி பாயும் என்பார்கள்" அப்படித்தான் இருந்தது திரு. கார்த்தி சிதம்பரம் அவர்களின் பேச்சு. அப்பாவைப் போன்றே உயரம், மீசையற்ற முகம், தோற்றம்.
அவரது அறிவுச் செறிவு அவரது பேச்சில் தெரிந்தது.

ஜெத்தா வாழ் தமிழர்கள் இணைந்து gulf residents indian tamils ( GRIT ), வளைகுடா வாழ் தமிழர் அமைப்பு என்றொரு அமைப்பை துவக்கியுள்ளார்கள். இந்த அமைப்பை துவக்கி வைக்க, சிறப்பு விருந்தினராக வந்திருந்தார் திரு.கார்த்தி சிதம்பரம். மேதகு இந்தியத் தூதர் திரு.பாரூக் மரைக்காயர் அவர்களும், இணைத்தூதர் திரு அவுசப் சயீத் அவர்களும் அமைப்பை வாழ்த்தி, ஆலோசனை நல்கினார்கள்.

அமைப்பை குத்து விளக்கு ஏற்றியும், இணைய தளத்தை சொடுக்கியும் துவக்கி வைத்தார் திரு கார்த்தி சிதம்பரம். GRIT என்னும் இந்த அமைப்பு GUIDE, GROW, GAIN என்ற நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டு துவங்கப்பட்டுள்ளது.

GRIT அமைப்பை வாழ்த்தி, சில ஆலோசனைகளையும் வழங்கினார் திரு.கார்த்தி சிதம்பரம். மேலும் இந்தியாவைப் பற்றியும், இந்தியாவின் வளர்ச்சி பற்றியும் பொதுவான சில விஷயங்களை பேசினார்.
அதில் நான் கிரஹித்தவை.

1. இந்த நூற்றாண்டில் உலகப் பொருளாதார மையங்களாக, வலுவான
சக்தியாக இந்தியாவும், சைனாவும் இருக்கும்.

2. பல்வேறு பிரிவுகளை கொண்ட இந்தியாவில் சமூக, பொருளாதார,
மாற்றங்கள் மிக மெதுவாகவே நடந்து வருகிறது. ஆனால் முந்தைய
பல ஆண்டுகளை ஒப்பிட்டால், கடந்த பதினாறு வருடங்களில் இந்த
மாற்றம் துரிதமடைந்துள்ளது.

3. மிகச் சாதாரண பின்புலத்திலிருந்து வந்த சிவ நாடார், நாராயண மூர்த்தி
போன்றோர், தங்கள் அறிவுத்திறன் ஒன்றையே மூலதனமாக கொண்டு
பெரும் தொழில் அதிபர்களாக மாறி சாதனை படைத்து, இளைய தொழில்
முனைவோருக்கு முன் மாதிரியாக உள்ளார்கள்.
அத்தகைய வாய்ப்புகள் நிறைந்த சூழ்நிலைகளை கொண்டதாக இன்றைய
நாட்களில் இந்தியா உள்ளது.

4. உள் கட்டமைப்பில் சிங்கப்பூர், சவுதி அரேபியா போலெல்லாம் இந்தியா
எப்பொழுது மாறும் எனச் சிலர் கேட்கிறார்கள். இந்தியாவை
இந்த நாடுகளோடு ஒப்பிடுவதே தவறு. ஏனென்றால்
இந்தியா மிகப் பெரிய நாடு. ஆனாலும் இன்னும் ஒரு
இருபத்தைந்து வருடங்களுக்குள் நாம் அதை சாதிக்க முடியும்.

5. GRIT அமைப்பின் சார்பாக micro investment என்ற ஒரு சித்தாந்தத்தின்
அடிப்படையில் அனைத்து தமிழர்களின் முதலீட்டில் ஒரு மருத்துவனை
தொடக்க நிலையில் உள்ளது.
அதேபோன்ற சீரிய முயற்சிகள் முன்னெடுத்து செல்லப்பட வேண்டும்
என்றும் , மேலும் gulf residents indian tamils என்பதிலிருந்து
gulf residents indians என்றொரு பரந்துபட்ட தளத்திற்கு இந்த அமைப்பு
மாறவேண்டும் என்ற மேதகு இந்திய தூதுவர் திரு.பரூக் மரைக்காயர்
மற்றும் இணைதூதர் திரு.அவுசப் சயீத் அவர்களின் ஆலோசனையை
வழிமொழிந்தார் திரு.கார்த்தி சிதம்பரம்.

6.மேலும் வளைகுடாவாழ் தொழிலாளர்களின் பிரச்சனைகளை குறித்தும்
இனி வேலைவாய்ப்பு தேடி தமிழகத்திலிருந்து வருபவர்களுக்கு
விழிப்புணர்வினை ஊட்டவும், GRIT அமைப்பின் பிரிவு, தமிழக
நகரங்களான சென்னை, திருச்சி மற்றும் மதுரையில்
துவக்கப்படவேண்டும் என்ற தனது அவாவினையும் வெளியிட்டார்
திரு. கார்த்தி சிதம்பரம்.

7. NRI களுக்காக ஐந்து சதவீத இட ஒதுக்கீடு, இந்திய கல்வி
நிறுவனங்களில் சரியானபடி அமல்படுத்தப்படுவதில்லை என்ற
குறைபாட்டிற்கு பதில் அளிக்கையில், இது சம்பந்தமாக GRIT தனது
கோரிக்கையை தொடர்ந்து இந்திய அரசியல்வாதிகளிடம், அதிகார
வர்கத்தினரிடமும் வலியுருத்தலும், நினைவுருத்தலும் செய்யவேண்டும்
என கேட்டுக்கொண்டார். ஏனென்றால் இட ஒதுக்கீடு போன்ற
விஷயங்கள் இந்தியாவில் பல சிக்கல்கள் நிறைந்த விஷயமாக
உள்ளதால் சற்றே மெதுவாகத்தான் மாற்றங்கள் வரும் என்றார்.

8. அதே நேரத்தில் same side goal போடவும் தவறவில்லை.இந்தியாவில்
அரசியலும், அதிகார வர்கமும் ஒரு கசியும் குழாயைப்போல்
உள்ளதால், எந்த செயலையும் முன்னெடுத்துச் செல்வதில் வேகம்
மிதமாகவே உள்ளதாக குறைபட்டுக்கொண்டார் ( நகைச்சுவை).

9. இந்தியாவை ஒரு யானைக்கு உருவகப்படுத்தினார். இந்திய
பொருளாதரத்தைச் சொன்னாரா, அரசியலைச் சொன்னாரா,
ஒட்டு மொத்த இந்தியாவின் குணநலத்தைச் சொன்னாரா என்பதை நான்
சரியாக உள் வாங்கவில்லை. யானை பலம் வாய்ந்த பிரானியாக
இருந்தாலும், சில நேரங்களில் நம்மிடமிருந்து வாழைப்பழம் வாங்கி
தின்னும் அளவிற்கு சாதுவாகவும், சில நேரத்தில் நமக்கு மாலை
அணிவித்து மரியாதை செய்வதும், சில நேரத்தில் மதம் பிடித்து கட்டற்று
செல்வது போலவும், இந்தியா.............( அப்பாவும் பிள்ளையும் பிரானிகளின் நேசர்களாய் இருப்பார்கள் போல் உள்ளது. தமயன் யானையை பற்றி பேசுகிறார், அப்பா பாராளுமன்றத்தில்
சமர்ப்பித்த பட்ஜெட்டிலே.................).

மொத்தத்தில் இந்திய அரசியல் வானில் எதிர்காலத்தில் ஒரு நம்பிக்கை நட்சத்திரமாய் மின்னப்போகும் ஒருவரை நேரில் கண்ட மகிழ்ச்சி எனக்கு.

என்றென்றும் அன்புடன்,
பா.முரளி தரன்.

Sunday, March 18, 2007

ரஷ்ய விஞ்ஞானிகளை விஞ்சிய தமிழக களவானிகள்.

முதலில் ரஷ்ய விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்பைப் பற்றி தெரிந்து கொள்வோம். இந்த செய்தி, சவுதியின் நாளேடு, சவுதிகெஸட்டின் இன்றைய பதிவில் வெளியாகி உள்ளது.

ரஷ்ய ராணுவ விஞ்ஞானிகள் பல வருடங்கள் முன்பாக ஒரு ஷூ தயாரித்து
இருக்கிறார்கள், அவர்கள் நாட்டு சிறப்பு இராணுவப்படை வீரர்களுக்காக.

பல வருடங்கள் ரகசியமாக வைக்கப்பட்ட இந்த தொழில் நுட்பம்,
கம்யூனிச ரஷ்யாவின் வீழ்ச்சிக்குப் பிறகு தொன்னூற்று நான்காம் ( 1994 ) ஆண்டுக்கு பிறகுதான் வெளி உலகத்திற்கு தெரிய வந்ததாம். அந்த ஷூவின் சிறப்பம்சங்கள்.

இந்த ஷூ, ஒரு சிலிண்டரும், பிஸ்டனும், எரிபொருள் நிரப்பும் அறையும்,
ஒரு இக்னீசியஸ் சுவிட்ச்சும் பொருத்தப்பட்டு தயாரிக்கப் பட்டுள்ளது.

1. பறனையின் ( விமானம் ) இஞ்ஜின் பிஸ்டனின் தரத்திற்கு இணையான
தொழில் நுனுக்கத்துடன் தயாரிக்கப்பட்டது.

2. ஒரு மோட்டார் வாகனத்தின் இஞ்ஜின் செயல்படுவது போலவே இந்த
இஞ்ஜின், பிஸ்டன் அமைப்பு செயல்படும். இந்த ஷுவை அணிந்து
ஒவ்வொரு கால் அடி எடுத்து வைக்கும்பொழுதும், எரி பொருள்
வெளிப்பட்டு, ஒரு அழுத்தம், ஒரு வெடிப்பு, ஒரு உந்து சக்தி.

3. இந்த ஷூவை அணிந்துகொண்டு ஓடினால் ஒரு மணிக்கு முப்பத்தைந்து
(35 ) கிலோமீட்டர் வேகத்தில் ஓடலாம். அதாவது ஒரு வினாடிக்கு பத்து
( 10 ) மீட்டர் தூரம் ஓடலாம். அதாவது இங்கு ஒரு அடி வைத்தால்,
அடுத்த வினாடியில் அடுத்த அடியை பத்து மீட்டர் தூரத்தில் வைப்பீர்கள்.

சிறப்பு பயிற்சி பெற்ற இராணுவ வீரர்கள், கவச வண்டிகளின் குறுக்கே ஓடவும்,
மின்னல் வேகத்தில் எதிரிகளின் தாக்குதலில் இருந்து தப்பித்து ஓடவும் இந்த ஷூவை உபயோகப் படுத்துவார்களாம். இப்போது இந்த ஷூவை, வர்தக ரீதியில் தயாரித்து, பொதுமக்கள் அனைவரின் உபயோகத்திற்காகவும் விற்பனை செய்ய இருக்கிறார்களாம்.

இப்போது நம்ம ஊர் களவானிகளின் கதைக்கு வருவோம்.

இரண்டாயிரத்து மூன்றாம் வருடம் நான் கடலூர் மாவட்டத்தின் சிதம்பரம் நகரில் தங்கியிருந்து பணியாற்றிகொண்டிருந்தபோது நடந்த சம்பவம். அப்போது இந்தப் புரளி ஒரு காட்டுத் தீபோல் சிதம்பரத்தின் சுற்று வட்டாரத்து கிராமங்களில் பரவியது. அது ஒரு விநோத மனிதனைப் பற்றியது.

இந்த மனிதன், ஒருவர் வீட்டுக்குப் போன் செய்து, நான் இன்று உங்கள் வீட்டுக்கு வருவேன், என்னை முடிந்தால் பிடித்துக் கொள்ளுங்கள் என்று சவால் விடுவான். அதேபோல் அன்று இரவு வருவான். அவனை பிடிக்க முயற்சித்தால் படு வேகமாக ஓடிவிடுவான். அப்படி ஓடும்பொழுது குறுக்கே வரும் வேலிகளையும், சுவர்களையும் வெகு சுலபமாக தாவிக் குதித்து ஓடி விடுகிறான்.

எங்கள் தெருவின் பக்கத்து தெருவில் உள்ள ஒரு வீட்டிற்கும் இதேபோல்
ஒரு தொலைபேசி வந்தது. நாங்கள் அனைவரும் அருவா, சவுக்கு கட்டை என்று கையில் ஏந்தி தயாராக இருந்தோம். ஆனால் அவன் வரவில்லை.
மறுநாள் போன் செய்து, நான் வந்திருந்தேன், உங்கள் தெரு கோவிலில்தான் ஒளிந்திருந்தேன் என்றெல்லாம் சொன்னான். ஆனால் நேரில் வரவில்லை.

மறுநாள் பக்கத்து கிராமத்தில் இதேபோல விளையாடி இருக்கிறான். அந்த கிராமத்தவர் துரத்திச் சென்றுள்ளனர், ஆனால் அவனை பிடிக்க முடியவில்லை. பிடிக்கமுடியாததற்குக் காரணம் அந்த திருடனின் ஷுதான்.

அந்த திருடன் ஒரு ஷூ போட்டுகிட்டு இருக்காம்பா, படு ஸ்பீடா ஓடுறான்.
ஒரு அடி இங்க வச்சா அடுத்த அடி பத்து மீட்டர் அந்தண்ட வக்குறான். கரும்பு காட்டுக்குள்ள பூந்து ஓடிட்டான், ஊரே சேந்து தேடியும் ஆள புடிக்க முடியல. ஷூவுல எதுவும் ஸ்பிரிங் வச்சுருக்கானோ? என்னாவோ?.

இந்த செய்தி/புரளி ஒரு வார காலம் சிதம்பரம் சுற்று வட்டார கிராம மக்களை தூங்கவிடாமல் செய்தது . அந்த நேரத்தில் இதை ஒரு புரளி என்றோ கட்டுக்கதை என்றோ முழுவதுமாக விலக்க முடியவில்லை.
யாரோ விஷமிகள் போன் செய்து விளையாடி இருக்கலாம்.

ஆனால் அவனை விரட்டிப் பிடிக்க முயன்ற கிராம மக்களின் வாக்குமூலத்தை எப்படி நிராகரிக்க முடியும். ரஷ்ய விஞ்ஞானிகளின் சாதனையை விஞ்சும் அளவுக்கு ஒரு ஷூவை கண்டுபிடித்திருந்த அந்த களவானியை என்னவென்று சொல்வது.

இப்போது ஒரு முக்கியமான சமாச்சாரத்திற்கு வருகிறேன். கம்யூனிச ரஷ்யா உடைந்த பிறகு ஏற்பட்ட பொருளாதாரச் சிக்கலை சமாளிக்க
முடியாத பல அதிகாரிகள்,விஞ்ஞானிகள் ஆயுதங்களை திருட்டுத்தனமாக
விற்று காசு பார்ப்பதாகவும், அது எத்தகைய ஆபத்தானது என்றும் அந்த காலக்கட்டத்தில் பல செய்திகள் வந்தன.

அப்படி விற்கப்பட்ட ஒரு ஷூதான் சிதம்பரம்வரை வந்ததா?. ஏனென்றால் இதே காலகட்டத்தில் சிதம்பரம் பகுதியில் யுரேனியத் தகடு விற்றதாக ஒருவர் கைது செய்யப்பட்டார். அந்த தகடு கல்பாக்கம்
அனு ஆராய்ச்சி மையத்திற்கு பரிசோதனைக்காக எடுத்துச் செல்லப்பட்டது. இது அந்நாட்களில் பத்திரிக்கைகளில் பரபரப்பாக வந்த செய்தி.

கொள்ளிடத்திலிருந்து, வெள்ளாறு முகத்துவாரம் வரையிலான சிதம்பரத்தின் கடற்கரை பகுதி ஒரு காலத்தில் கடத்தல்காரர்களின் சொர்கபூமி என்று அனைவரும் அறிந்ததே.

உண்மையா? புரளியா? விஞ்ஞானமா?கடத்தலா? அந்த தில்லை சபாபதிக்கே வெளிச்சம்.
என்றென்றும் அன்புடன்,
பா.முரளி தரன்.

Friday, March 16, 2007

வெட்டி சாச்சுப்புட்டாங்களே.

நான் முதல் முறையாக சவுதியை வானத்திலிருந்து பார்த்தபொழுது அதுவரை வாழ்வில் கண்டிராத ஒருவித்தியாசமான காட்சியாக இருந்தது.எங்கும் மணல் பிரதேசம். நோக்குமிடம் எல்லாம் பாலைவன மணல். அதற்கு நடுவே அரிதாக வளர்ந்திருக்கும் மரங்கள்.

இயல்பாகவே எனது எண்ணங்கள் எனது சொந்த ஊரான நெய்வேலிக்கு பயணப்படுவதை தவிர்க்கமுடியவில்லை. எங்கள் ஊரில் பூமாதேவி பசுமை போர்த்திக் கொண்டுதான் காட்சி அளிப்பாள். ஒரு வீட்டுக்கு சராசரியாக 130 மரங்கள் உள்ளதாக ஒரு புள்ளி விவரம். அதனால் அதிக மழை பெறும் பிரதேசமாகவும் உள்ளது.

நெய்வேலி ஒரு காலத்தில் காடாக இருந்த பிரதேசம். ஜம்புலிங்க முதலியார் கிணறு வெட்டப்போய் நிலக்கரி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. நிலக்கரி சுரங்கத்தில் வெட்டிய மேல் மண்ணை ஒரு மலைபோல குவித்து வைத்திருப்பார்கள். எங்கள் பாஷையில் அதற்குப் பெயர் மண்ணுமேடு.

காலப்போக்கில் அந்த மண்மேட்டில் இயற்கையாகவும், மனித முயற்சியாலும் நிறைய மரங்கள் நிறைந்து விட்டன. சிறு வயதில் நண்பர்களுடன் இணைந்து ஒரு காட்டுவாசி வாழ்க்கையை இந்த மண்மேட்டின்மேல் வாழ்ந்திருக்கிறேன். அங்கு உள்ள குட்டைகளில்
குளிப்பதும், அங்கு கிடைக்கும் நாகப்பழம், இலந்தைப்பழம் போன்றவற்றை உண்டும், ஒரு நாள் முழுதும் மலை மேலேயே தங்கியிருப்போம். சில நண்பர்கள் உண்டிவில்லால் அடித்து பறவைகளை பிடித்து சமைத்து உண்பார்கள். மேலும் நீர் நிலைகளில் கிடைக்கும் மீன், நண்டு போன்றவற்றை பிடித்தும் பசியாறுவோம்.

மலையின் இண்டுஇடுக்கு மற்றும் சந்து பொந்துகள், முக்கியமான பாதைகள்,
குகைகள், ஊற்றுகள், குளம் குட்டைகள் ஆகியவை சிறுவர்களான எங்களுக்கு அத்துப்படி. உடும்பு பிடிப்பது, முயல் பிடிப்பது, காடை கவுதாரி பிடிப்பது என்று எங்கள் வேட்டைப் பட்டியல் மிக நீளமானது.

ஒரு முறை ஆவாரம் புதரில் குடிகொண்டிருந்த நல்லபாம்பு குட்டிகளை சுருக்கு போட்டு பிடித்து விளையாடிக் கொண்டிருந்தபொழுது, தாய்நாகம் வந்து விட்டது.அதை அடித்தால் தப்பித்து ஓடி விட்டது. நல்ல பாம்பு நம்மளை பழிவாங்கி கொன்றுவிடும் என்று பயந்து, ஒரு நாள் முழுதும் அதை நாணல் புதர்களில் விரட்டி தேடிக் கொன்று கொளுத்தி சாம்பலாக்கியபிறகுதான் சமாதானமானோம்.

இப்படி ஒரு இயற்கையோடு இணைந்த காட்டுவாசி வாழ்க்கை வாழ்ந்திருந்த எனக்கு மரங்களோடு ஒரு நேச உணர்வு உண்டு. சவுதியில் எங்கள் பக்கத்து வீட்டில் அரிதாக ஒரு வேம்பு, ஒரு போகன் வில்லா, ஒரு பேரீச்சை மரம் இருந்தது. வருடத்தில் ஓரிருநாள் பெய்யும் அசுர மழை பேரீச்சை மர ஓலையில் பட்டு எழுப்பும் ஓசை, பறை ஓசையின் அதிர்வை உள்ளுக்குள் உருவாக்கும்.

காம்போண்ட் சுவரின்மேல் புதராக பரவியிருந்த போகன்வில்லா கிளைமறைவில்
பச்சைக் குழந்தைகளைப் போல குரல் எழுப்பிக்கொண்டு சில நேரங்களில்
பூனைகள் சரசமாடுவதைக் கண்டிருக்கிறேன். குளிர்ச்சியைப் பரப்பும் வேம்பின் நிழலில் சந்தர்பம் கிடைத்தால் எனது காரை பார்க் செய்து மகிழ்வேன்.

இன்று திடீரென்று மூன்று மரங்களும் வெட்டப்பட்டன. அதனை ஒரு வேதனையோடு பார்த்துக் கொண்டிருந்தேன். எனது அண்டை வீட்டு பெங்காலி என்னிடம் வந்து, பார்த்திங்களா சார் இப்படி மரத்தை வெட்டி தள்ராங்களே என்றார். நான், அமாங்க மரம் இருந்தது எவ்வளவு அழகாக இருந்தது, மனசுக்கும் எவ்வளவு நிறைவா இருந்தது. இந்த மண்ணுல மரம் வளர்ரது எவ்வளவு கஷ்டம். எப்படியும் இருபது முப்பது வருஷம் வயசு இருக்கும் ஒவ்வொரு மரத்துக்கும் இப்படி அநியாயமா வெட்டி சாய்க்கிறாங்களே என்றேன்.

அவர் ஆமாங்க அநியாயம்தான் இதை வெட்ட ஆயிரம் சவுதி ரியால் செலவாம் ( இந்திய மதிப்பு கிட்டதட்ட பன்னிரெண்டாயிரம் ) இதையே
ஒரு பெங்காலிகிட்ட கொடுத்திருந்தா இருநூறு சவுதி ரியால்ல வேலைய முடிச்சிருப்பாங்க என்றார். நான் அவர் கரிசனத்தைக் கேட்டு ங்நே என்று விழித்தேன்.
என்றென்றும் அன்புடன்,
பா. முரளி தரன்.

Tuesday, March 06, 2007

சாகரன் கல்யாணுக்கு ஒரு அஞ்சலி.

அன்று அப்துல் கலாமைப்பற்றி ஒரு பதிவு எழுதிக் கொண்டிருந்தேன். திடீரென்று வரிசையாக தேன்கூடு நிறுவனர், நிர்வாகி சாகரன் கல்யாண் மரணம் என செய்திகள் வரத் தொடங்கின.

ஒவ்வொரு பதிவாக வரிசையாக படித்ததும் எனக்கு ஏற்பட்ட வருத்தத்தை வார்த்தையில் வடிக்க இயலாது. இதைப்பற்றி ஒரு பதிவு இட வேண்டும் என நினைத்து நாட்கள் நகர்ந்ததுதான் மிச்சம்.

சாகரன் மரணம் பற்றி பதிவு இடாதது ஒரு மிகப்பெரிய உறுத்தலாகவே
மனதில் இருந்து வந்தது.

எனக்கும், பெரும்பான்மையான வலைப்பதிவாளர்கள் போலவே, கல்யாண் என்பவரைப் பற்றி எதுவும் தெரியாது.

நான் இருக்கும் ஜெத்தாவிலிருந்து ஆயிரம் கிலோமீட்டர் தொலைவில் உள்ள ரியாத்தில் இருந்திருக்கிறார் ஆனால் தெரியாமல் போய்விட்டது. கடந்தா ரம்ஜான் விடுமுறையில் ஐய்ந்து நாட்கள் ரியாத்தில்தான் இருந்தேன். அப்போது தெரிந்திருந்தால் கூட சந்தித்திருப்பேன்.

ஆனால் ஒரு நாள் வலத்தளத்தில் மேய்ந்து கொண்டிருந்த பொழுது சாகரஅலை என ஒரு வலைப்பூவைக் கண்டேன். இருப்பிடம் ரியாத் என்று வேறு இருந்ததால் ஆர்வமாக படிக்க தொடங்கினேன்.

அவரது எழுத்து மிகவும் பக்குவப்பட்டதாக இருந்தது. ஒரு நீண்ட இடைவேளைக்குப் பிறகு மீண்டும் எழுதத் துவங்கியிருப்பது தெரிந்தது.

குறிப்பாக செல்போன் குறித்து ஒரு பதிவு எழுதியிருந்தார். அதில் நான் ஒரு பின்னூட்டம் கூட இட்டிருந்தேன்.

மேலும் அவர் தலைமையேற்று நடத்திவந்த எழுத்துக் கூடம் பற்றியும், நகுலன், இராமகிருஷ்ணன், விசாகாஹரி என எங்கெங்கோ சுற்றி வருவதாய் இருந்தது அவரது எழுத்து.

அன்றிலிருந்து சாகரனின் வலைத்தளத்தையும் படிப்பது என்பதை வழமையாக்கிக்கொண்டேன்.

அவரது மரணச்செய்தியும், அவரது அருகாமையிலேயே வசித்து வந்தும் அவரைப் பற்றி ஏதும் அறியாத அறியாமையில் இருந்து விட்டதும் என்னை
மிகவும் பாதித்து விட்டது.

எப்பொழுதும் இடைவிடாமல் ஒலித்துக் கொண்டிருக்கும் எனது காரின் டேப்ரிக்காடரை இரண்டு நாட்களாக நான் தொடவே இல்லை என்பதை இரண்டு நாட்கள் கழித்துதான் என்னால் உணரவே முடிந்தது.

நான் அறிந்த ஒரேஒரு வலைப்பதிவரை அழைத்து எனது வருத்தத்தை தெரியப்படுத்தினேன். அவரும் உடைந்து போயிருந்தார். அவர் என்னைப்போலல்லாமல் கல்யாணை நன்றாக அறிந்தவராகவும், தொடர்பில் இருந்தவராகவும் இருந்திருக்கிறார் என்பதே எனக்கு அப்பொழுதுதான் தெரிந்தது. எனக்கு மட்டும் அந்த வாய்ப்பு கிடைக்காமல் போய்விட்டதை எண்ணி வருந்தினேன்.

மிகச் சாதரணமான மனிதன் நான். வலைப்பூவில் கையெடுத்து வைத்த உடனே
விடாது கருப்புவை திட்டி பிறகு மன்னிப்பு கேட்டேன். பிறகு போலியின் தொல்லை சிறிது நாள் தொடர்ந்தது. பிறகுதான் ஒரு நிதானத்துக்கு வந்தேன் எனச் சொல்லலாம்.

வலைப்பூ எனக்கு புதிய விஷயங்களை அறிமுகப் படுத்தியது. புதிய புரிதல்களை ஏற்படுத்தித்தந்தது. அதற்கு தளம் அமைத்துக் கொடுத்த கல்யாண்சாகரன் இன்று இல்லை.

எனது தாயாரின் மரணத்திற்கு பின் நான் இந்த அளவு வேறு யாருடைய மரணத்தாலும் இந்தளவு பாதிக்கப்பட்டதில்லை.

சிறிய வயது ஆதலால் அவரது மரணமும் இயற்கையானதாக இருந்திருக்காதோ என்றொரு ஆதாரமற்ற சந்தேகமும் எனது மனதை வாட்டியபடி இருந்தது. ஏனென்றால் அதற்கு சிறிது நாட்களுக்கு முன்தான் அவர் தன்னை வெளிக்காட்டியுள்ளார்.

வலைப்பூவில் உள்ள எல்லையற்ற சுதந்திரம் அனைவரும் அறிந்ததே. அதில் காயப்பட்டவர்களால், எழுத்துச் சுதந்திரத்தின் குரல்வலை நெறிக்கப்பட்டதோ?
என்றெல்லாம் குழம்பித் தவித்தேன்.

ஆனால் மேன்மேலும் வந்த தெளிவான தகவல்களால் எனது குழப்பம் தீர்ந்தது. இந்த பதிவை எழுதும் முடிவுக்கு வந்தேன்.

கல்யாணின் குடும்பம் தற்போது எப்படி உள்ளது என்று சென்னைப் பதிவர்கள் யாரும் எழுதினால் நல்லது.

ஜனாதி அப்துல் கலாம் அடிக்கடி சொல்வது போல, இந்தியாவின் பலம் கல்யாணைப் போன்ற சாதனை படைக்கத் துடிக்கும் இளைனர்களின் கைகளில்தான் உள்ளது. அப்படி ஒரு சாதனை படைத்த இளைஞனின் இதயம்
தனது துடிப்பை நிறுத்தியிருந்தாலும், ஏராளமான இளைஞர்களின் இதயத்தில் சுடரேற்றிச் சென்றுள்ளது.

எனது அடுத்த வாரீசுக்காக நான் காத்திருக்கிறேன். அது ஆணாய் இருந்தால் சாகரன், பெண்ணாய் இருந்தால் கல்யாணி.

கல்யாண், தேன்கூடு தளத்தை நிறுவியதன் மூலம்,
அடைந்து கிடந்த என் இதயக் குகையின் சாளரங்களை திறந்து விட்டார்.
தனித்துக் கிடந்த என்னை ஒரு தள(இணைய)உலகத்தில் தள்ளி விட்டார்.
சிதறிக் கிடந்த எண்ணங்களை சற்றே குவியச் செய்தார்.
மாசு படிந்த மதிப்புரைகளின் மேல் இருந்த தூசி தட்டி விட்டார்.

அத்தனையும் செய்துவிட்டு, அறிமுகம் இல்லாமலேயே, அல்ப ஆயுசுல் போய்விட்டாயே
ஐயோ சாகரா அதனால்தான் சாக (ரன்) என பெயர் வைத்துக்கொண்டாயோ.
ஆனால் எனது இதயத்தில் நீ என்றும் சாகா வரம் பெற்றிருப்பாய்.
என்றென்றும் அன்புடன்,
பா. முரளி தரன்.

Monday, March 05, 2007

சமஸ்கிருதம்.

சமீபத்தில் ஒரு மாநில ஆளுனர் சமஸ்கிருதம் பயில்வதால் நடைமுறை வாழ்க்கைக்கு பயன் ஏதும் இல்லை என்பது போன்றதொரு கருத்தை வெளியிட்டு சிலரின் கண்டனத்திற்கு ஆளாகி உள்ளார். இது சம்பந்தமான எனது கருத்தை பதிய நினைத்தேன். காஞ்சி மஹாசுவாமிகளின் வாக்கை கடைபிடிக்கும் குடும்பம் எங்களுடையது. அவரது கட்டளைகளில் சில,

1. பிடியரசி திட்டம். ( தினமும் சமைக்கும்பொழுது குடும்ப தலைவிகள் ஒரு பிடி அரிசி எடுத்து தனியாக சேமித்து வைத்து, அந்த அரிசி ஓரளவு சேர்ந்ததும் தேவைப்படும் ஏழைகளுக்கோ, ஆதரவற்றவர்களுக்கோ, அநாதை இல்லங்களுக்கோ வழங்குதல்). இதை எனது தாயார் செய்யக் கண்டிருக்கிறேன்

2. வரதட்சனை வாங்க கூடாது. வரதட்சனை வாங்குபவர்கள் என்னிடம் ஆசி பெற வர வேண்டாம் என ஒரு முறை பரமாச்சாரியார் அறிவித்தார். ( திருமணத்திற்கு முன், கல்யாண பத்திரிக்கையை எடுத்துச் சென்று குல குருவிடம் ஆசி பெறுவது என்பதொரு வழக்கம் ). மேலும் திருமணத்தில் தங்க மாங்கல்யம் என்பது கூட இடையில் புகுந்த வழக்கம் என்றும், பழங்காலத்தில் திருமாங்கல்யம் என்பது வெறும் பனை ஓலையால் செய்யப்படுவதாக இருந்த்தாகவும் குறிப்பிட்டுள்ளார். நானும், எனது சகோதரும், வாங்கமாட்டோம் வரதட்சனை என்று சொல்லித்தான் திருமணம் செய்தோம்.

3. வேத சம்ரஷனம் பொருட்டு குடும்பத்தில் ஒரு குழந்தையையாவது வேதபாட சாலையில் கல்வி பயில சேர்க்க வேண்டும். வேதபாடசாலைக் கல்வி என்பது, உபநயனம் முடிந்தபின் எட்டு வயதில் குரு குலத்தில் சேர்த்துவிடுவது என நினைக்கிறேன். இது எட்டு பத்து வருட படிப்பு என்றும் நினைக்கிறேன்.

எனது சிறு வயதில் என்னை வேதம் பயில்வதற்கு அனுப்ப, எனது தாய் மாமனால் ஒரு யோசனை முன் வைக்கப்பட்டது. சேலத்தின் அருகில் உள்ள ஸ்கந்தாஸ்ரமம் என நினைக்கிறேன். சிறுவயதில் நடந்ததால் சரியாக நினைவில்லை. ஆனால் நான் வேதபாட சாலையில் சேர்வதை எனது தந்தையார் விரும்பவில்லை. அதற்கு என்ன காரணம் என்று இது நாள் வரையில் நான் கேட்கவில்லை. இப்போது அதற்கான காரணம் என்னவாக இருந்திருக்க வேண்டும் என ஓரளவு புரிகிறது.


எனது தாத்தாவரை புரோகிதம்தான் எங்கள் குடும்ப தொழில். திராவிட கட்சிகளின் தலையெடுப்பிற்குப் பின் அதற்கு பெரிய மரியாதையோ, அதனால் தேவையான வருமானமோ கிடைக்காத சூழ்நிலை ஏற்பட்டுவிட்டது. எனது தந்தையார் குடும்ப தொழிலிருந்து விலகி, வீட்டைவிட்டு ஓடி வந்து, நெய்வேலியில் ஒரு வேலையில் சேர்ந்து, ஒரு சுயம்புவாய் வாழ்க்கையை தொடங்கியவர். குழந்தைகளுக்கு முழுவதுமான சமஸ்கிருதக் கல்வி தேவையில்லை என்று அவர் நினைத்திருக்கலாம். ஆனால் இப்போது காலம் மாறிவிட்டது வேதமும் சமஸ்கிருதமும் கற்றவர்களுக்கு, தற்போது ஒரு நல்ல மதிப்பு உள்ளது. வருமானத்திற்கும் குறைவில்லை, சக்கைபோடு போடுகிறார்கள்.

பக்தி, தத்துவம், இலக்கியம் போன்றவற்றில் ஆழ்ந்த அறிவும், தெளிவும் பெற நிச்சயம் சமஸ்கிருதம் உதவும் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் பொருளாதாரத்திற்கும், உலகளாவிய தொடர்புக்கும் ஆங்கிலம் மிக அவசியம். எத்தனை மொழி கற்றாலும் தவறில்லை. அது அவரவர் ஆர்வம் மற்றும் திறமையின் பாற்பட்டது. நான் கூட எனது குழந்தைகளுக்கு சமஸ்கிருதமும் கற்றுத்தரவேண்டும் என முடிவெடுத்துள்ளேன்.

என்றென்றும் அன்புடன்,
பா. முரளி தரன்.

Wednesday, February 14, 2007

கற்பழித்துக் கொல்லப்பட்ட TRO பிரேமினி.

திரு.சுந்தர வடிவேல் அவர்கள் பதிவில் என்னால் இடமுடியாமல் போன பின்னூட்டம்.

"டி.பி.எஸ் ஜெயராஜ் இப்ப ஒரு கட்டுரை எழுதியிருக்காரு. இதப் படிச்சா குலை நடுங்கும், நெஞ்சுல ஈரமிருந்தா கண்ணீர் வரும்."

படித்தேன். அதிர்ந்தேன்.

சமீபத்தில் எனது அலுவல் நிமித்தமாக சில ஆஸ்திரிய நண்பர்களுடன் ஒரு நாளை கழிக்க நேர்ந்தது. நான் தமிழகத்தை சேர்ந்தவன் எனத் தெரிந்ததும், என்ன பிரச்சனை இலங்கையில்? என்று கேட்டார்கள்.

நான் பத்திரிக்கைகளின் மூலமாகவும், இணையத்தின் மூலமாகவும்,
நண்பர்கள் மூலமாகவும் அறிந்தவற்றை அவர்களுக்கு எடுத்துச் சொன்னேன்.
எனது சொந்த ஊரான நெய்வேலியில் ஒரு இலங்கை அகதிகள் முகாம் இருந்தது, ராமகிருஷ்ணன் என்றொரு நண்பன், ஒன்பது, பத்தாம் வகுப்பில் எனது பக்கத்து இருக்கை. அந்த வயதில் அதிகம் பக்குவப்பட்டிராத நான் ( இப்போதும் அப்படித்தான் ) நீ ஏன் புலியாக மாறிப் போராடாமல் இங்கு வந்தாய் என்ற எனது கேள்விகளால் எரிச்சல் அடையாமல் நல்ல நண்பனாக இருந்தான்.

கூடவே சித்தார்த்தன் என்றொரு நண்பன். இவன் நகர திராவிடர் கழகத் தலைவரின் மகன். அவர்கள் வீட்டிற்கு சென்றபொழுது சில புலிப்படை போராளிகளை கண்டிருக்கிறேன்.அப்போதெல்லாம் எங்கள் பள்ளியில்( 1987-1988) புலித்தலைவர் பிராபகரனின் படங்களை ஒரு ரூபாய் கொடுத்து வாங்க சிறுவர்கள் போட்டி போடுவோம்.

இலங்கை பிரச்சனைக்காக பள்ளிப் பருவத்திலேயே ஸ்டெரைக் செய்தோம்.
அது எம்ஜிஆரின் ஆட்சிக்காலம். எங்கள் ஊர் திருவிழாக்களிலும்,வீதி முனைகளிலும், புலிகளின் ஆதரவாளர்கள் இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக நடக்கும் அட்டூழியங்களின் வீடியோ கட்சிகளை ஒளிபரப்புவார்கள். அதைக் கண்ட யாவரும், நம்மால் ஆன உதவிகளை நிச்சயமாக இலங்கை தமிழர்களுக்கு செய்ய வேண்டும் என்றொரு மன நிலையில், எங்களால் ஆன பொருளும், பணமும் அளிப்போம்.

ஒரு கட்டத்தில் இந்திய அமைதிப்படை இலங்கைக்கு சென்ற பொழுது,தீர்ந்தது பிரச்சனை என்று தோன்றியது. ஆனால் அதன் பிறகு நடந்த துன்பியல் சம்பவங்களால் நிலைமை மேலும் சிக்கலாகிவிட்டது.
ஒரு இந்தியனாக மனதில் புலிகளின்பால் ஒரு வெறுப்பும் ( ராஜீவ் கொல்லப்பட்ட செய்தி வந்ததும் நான் அழுதேன்), அதே வேளையில் ஈழத் தமிழர்களின் நிலை குறித்து ஒரு வேதனையும், சிங்கள இனவாத அரசின் மீதான ஒரு கோபமும் ஆன ஒரு மன நிலையில் இருக்கிறேன்.

ஒரு சாதரன மனிதனாக ஈழப் பிரச்சனைக்கு என்னால் எதுவும் செய்ய முடியாது ஆனால் எனது ஐரோப்பிய நண்பர்களிடம் சொன்னேன், நீங்கள் ஐரோப்பாவில் ஒரு ஈழத் தமிழனைக் கண்டால் உங்களால் முடிந்த ஆதரவினைத் தாருங்கள் ஏனென்றால் அவர்களின் உடனடித் தேவை, அனைத்து உலக நாடுகளின், மக்களின், நாகரீக சமுகங்களின் ஆதரவுக் கரம்தான்.
என்றென்றும் அன்புடன்,
பா. முரளி தரன்.

Sunday, February 11, 2007

காந்தியை சுட்டோம், கலாமை விட்டோம்.

இந்த ஆண்டு குடியரசு தினம் வெள்ளிக் கிழமை வந்ததால், மிக வசதியாய் போயிற்று ( வார இறுதி நாள் விடுமுறை). சில நண்பர்களுடன் இனைந்து, ஜெத்தா இந்திய தூதரகத்தில் நடக்கும் குடியரசு தினக் கொடியேற்ற நிகழ்ச்சியில் கலந்துகொள்வது என முடிவெடுத்தேன்.

இந்தியாவிற்கு வெளியே நான் கலந்துகொண்ட முதல் குடியரசு தின நிகழ்ச்சி. தேசிய கீதத்தை ஒலிப்பேழை கொண்டு இசைப்பதையும்,
சிறுவர்களை மட்டும் பாடச்சொல்லி மற்றவர்கள் மெளனமாக இருப்பதையும் ஒழித்துக்கட்ட வேண்டும். இனிமேல் தேசிய கீதத்தை அனைவரும் தத்தமது சொந்தக்குரலில் பாட வேண்டும் என்பதை ஒரு உறுதி மொழியாக எடுத்துக்கொண்டால்கூட தவறில்லை.

தேசிய கீதம் பாடி முடித்தவுடன், ஒரு ஒற்றைக்குரல் மட்டும் பாரத் மாதா கீ என்று ஓங்கி ஒலித்தது. அந்த குரலுக்கு பதிலாக நானும் உரத்த
குரலில் ஜே என்று கத்திச் சொல்லி எனது ஆதங்கத்தை தீர்த்து கொண்டேன்.

பிறகு ஜனாதிபதி அப்துல் கலாம் அவர்களின் குடியரசு தின உரை வாசிக்கப்பட்டது. அனைவருக்கும் அந்த உரையின் படிமமும் வழங்கப்பட்டது. ஒரு இந்தியன் என நினைத்து பெருமை கொள்ளும்
விதமாக இருந்தது ஜனாதிபதியின் உரை. கூடுதலாக அவர் தமிழர் என்பதால் மேலும் உவகை கொண்டேன்.

அப்துல் கலாம் ஒரு ஆச்சரியப்படுத்தும் அறிவுத்திறனும், குண நலனும் கொண்ட மனிதராக உள்ளார். இளைனர்களுக்கும், சிறார்களுக்கும் ஒரு முன் மாதிரி வாழ்க்கை வாழ்ந்து காட்டுகிறார் என்றால் அது மிகையல்ல.

மிகப் பக்குவப்பட்ட சிந்தையும், பேறறிவும், அறநெறி சார்ந்த வாழ்வும்,
தெய்வ பக்தியும், பல்கலை வித்தகமும், தத்துவ விசாரனையும், அனைத்து மதங்களைப் பற்றி சம நோக்கு பார்வையும், மேதமையை மதிக்கும் பண்பும், இன்ன பிற நற்குணங்களின் உறைவிடமாய் உள்ளார். கூடவே தலைசிறந்த நிர்வாகி, விஞ்ஞானி என்றெல்லாம் நிரூபித்து உள்ளார்.

நாட்டை வல்லரசாக்குவதற்கு அவர் அறிவித்துள்ள 2020 மிக அற்புதமான திட்டம்/கனவு.

சில அற்ப அரசியல் காரணங்களால் ( இத்தாலி சோனியா பிரதமர் ஆவதற்கு முட்டுக்கட்டை போட்டதால்) அடுத்தமுறை அவர் குடியரசு தலைவர் ஆவது சந்தேகம்தான் என்கிறார்கள்.

நான் கேட்கிறேன், இப்படி ஒரு மனிதர் ஏன் திரும்பவும் குடியரசு தலைவர் ஆகவேண்டும்?. பேசாமல் அவரையே அடுத்த இந்தியப் பிரதமர் ஆக்கிவிட்டால் என்ன?. அவர் கொடுத்த 2020 திட்டத்தை அவர் தலைமையிலேயே நாடு செய்து முடித்தால் என்ன?.

அடுத்த இந்தியப்பிரதமர் அப்துல் கலாம் என்று அறிவித்து ஒரு புது அரசியல் கட்சி தொடங்கினால் என்ன?. அப்படி ஒரு சிறு பொறியை யாரும் பற்ற வைத்தால் அது கலாம் பிரதமரானார் என்னும் பெரும் நெருப்பாக முடியும் என்பது திண்ணம்.

அறிவுஜீவிகள் இதற்காக முயற்சி செய்யலாம். ஆன்மீகப் பெரியவர்களின் ஆசிகளையும் கேட்டுப் பெறலாம். கலாம் பிரதமராவதால், இந்திய முஸ்லீம்கள் மனதில் பாபர் மசூதி இடிப்பால் ஏற்பட்ட காயமும் ஆறும்.

இந்திய முஸ்லீம்களுக்கு ஒரு வார்த்தை. கலாம் பிரதமராகாவிட்டால் வேறொறு முஸ்லீம் பிரதமர் என்பது இந்த நூற்றாண்டில் இந்தியாவில் சாத்தியமில்லாது போகலாம்.
தனிந்த சிந்தனை கொண்ட கலாம்தான் அடுத்த பிரதமர் என்று அறிவித்து ஒரு கட்சி துவக்கப்பட்டாலோ / ஏற்கனவே இருக்கும் கட்சி அறிவிப்பு வெளியிட்டலோ, பெரும்பான்மை இந்து சமூகம் மிக சந்தோஷமாக அதை ஏற்றுக்கொள்ளும்.

காந்திக்குப் பின் அனைத்து மத, சமூக, மொழி, இனப் பிரிவினராலும் ஏற்றுக் கொள்ளப்படும் ஒரே மனிதராக கலாம் உள்ளார் என்பது எனது எண்ணம்.

கலாமைப்போல் ஒரு மனிதரிடம் நம்மை ஆளும் அதிகாரத்தை தர நாம் தவறினால், இந்தியாவின் வல்லரசு, நல்லரசுக் கனவு, ஏன் கனவாகவே தொடர்ந்து கொண்டிருக்கிறது என்பதை 2050 இல் உட்காந்து யோசிக்கும்போது கிடைக்கும் விடை இதுவாகத்தான் இருக்கும்,

காந்தியை சுட்டோம், கலாமையும் கை நழுவ விட்டோம்.

என்றென்றும் அன்புடன்,
பா.முரளி தரன்.

Saturday, February 10, 2007

காவேரித் தண்ணீரும், கன்னடர்களும், தீர்வும்.

நமது நாட்டின் பெரும்பான்மையான நதிகள் பெண்களின் பெயர் கொண்டவைதான். நதிகள் அன்னையருக்கு இனையாக வைத்து
மதிக்கப்படுகின்றன, துதிக்கப்படுகின்றன.

காவேரியின் பிறந்தகம் கர்நாடகம், புக்ககம் தமிழ்நாடு. புகுந்த வீட்டில்தான் ஒரு பெண் தாய் என்ற பெரும் பேறு அடைவதால் தமிழகத்தின் தவப் புதல்வர்களுக்கே அன்னை காவேரியிடம் அதிக உரிமை உள்ளது.

அதற்கு ஏற்றார்ப்போலத்தான் தமிழகத்திற்கு நியாயமான அதிக பங்கை அறிவித்து தீர்ப்பு வெளியாகி உள்ளது. இந்த அளவு போதுமானதோ, பற்றாக் குறையோ, எதுவாக இருந்தாலும், ஏற்றுக் கொள்வதே அறிவுடைமையாகும். தமிழகம் தீர்ப்பை ஏற்று, அதிக பங்கிற்காக மேல் முறையீடு ஏதும் செய்யாமல் இருந்தால், இந்த விவகாரம் அதிக பிரச்சனை ஆகாமல், இரு தரப்பாலும் ஏற்றுக்கொள்ளப்படக்கூடியதாய் சில நாட்களில் மாறிவிடும் என்பது எனது அபிப்ராயம்.

அதை விடுத்து தமிழக அரசியல்வாதிகள் ஏதும் குட்டையை குழப்பினால்
கர்நாடக வாழ் தமிழர்களுக்கு பெரும் பிரச்சனையாய் போய்விடும். ( காவேரிப் பிரச்சனையில் மாட்டி பெங்களூருவில் அடிவாங்கியவன் நான், அந்த அனுபவத்தை தனிப்பதிவாக அப்புறம் எழுதுகிறேன் )அதனால் வழங்கப்பட்ட தீர்ப்பை உறுதி செய்வதிலும், அதை செயல்படுத்துவதிலும் மட்டுமே முனைவது நல்லது.

மேலும் அதிக அளவு தண்ணீர் வேண்டும் என்பதை கோரிக்கையாக்குவதை விடுத்து, தமிழகத்தில் உள்ள நீர் வளங்களை பாதுகாப்பதிலும், புதிய நீர்வள
ஆதாரங்களை உருவாக்குவதிலும் முனைய வேண்டும்.

பாட்டாளி மக்கள் கட்சி, கிராமப் புரங்களில் உள்ள ஏரி குளங்களை,
பசுமைத்தாயகம் அமைப்பு மூலமாக தூர் வாரி சரி செய்தது. அதைப்போன்றதொரு காரியத்தை அனைத்து மக்களும் பங்குகொண்டு
மேலும் தீவிரமாக செயல்படுத்தலாம்.

தமிழகத்தில் தற்போது உள்ள ஏரி, குளங்களில் பஸ் ஸ்டாண்ட் கட்டாமல், அவற்றை நல்லவிதமாக பாதுகாக்கலாம். மழை நீர் வீணாவதை தடுத்து அங்கங்கே தடுப்பனைகளை உருவாக்கலாம்.

அரசியல்வாதிகள் மணல் கொள்ளையடிப்பதை தவிர்த்து, ஆற்றுப் படுகைகளில் நிலத்தடி நீர்மட்டம் உயர உதவி செய்யலாம்.

மன்னர்களால் தொலை நோக்கு சிந்தனையோடு உருவாக்கப்பட்ட ஏரி, குளங்களை பட்டா போடாமல் இருக்கலாம்.
இன்னும் ஏராளமான மரக்கன்றுகளை நட்டு மழைப்பொழிவை அதிகப்படுத்தலாம்.

தமிழக அமைச்சரவையில் விரிவாக்ககமும், மாறுதலும் வரலாம் என்கிறார்கள். அதில் இரண்டு புதிய அமைச்சகம் உருவாக்க கலைஞருக்கு கோரிக்கை வைக்கிறேன்.

1. நீர்வள ஆதாரங்களை பாதுகாக்கவும், புதிய நீர் வள ஆதாரங்களை
உருவாக்கவும் விசேஷ அதிகாரங்களை கொண்ட ஒரு அமைச்சகம்.

2. வெளிநாட்டு வாழ் தமிழர் நலன் காக்கவும், வெளிநாட்டு வேலை
வாய்ப்புகளை முறைப்படுத்தவும் ஒரு அமைச்சகம்.

இவை இரண்டும் காலத்தின் கட்டாயம் என்பதை உணர்ந்து கலைஞர்
ஆவன செய்ய வேண்டும்.
என்றென்றும் அன்புடன்,
பா,முரளி தரன்.

Friday, February 02, 2007

சில ஷொட்டும்; ஒரு குட்டும்.

இந்தியக் குடியரசு தினத்தை முன்னிட்டும், சவுதி அரசரின் இந்திய விஜயத்தின் ஓராண்டு நிறைவை நினைவு படுத்தும் வகையிலும், விழாக் கோலம் பூண்டது ஜெத்தா நகரம். தமிழ் சங்க விழாவிற்காக இந்தியாவிலிருந்து பேராசிரியராக வந்திருந்த ஞானசம்பந்தம் மருத்துவராக திரும்பிப் போனார். அப்புறம் என்னங்க?. வாய் விட்டு சிரிச்சா நோய் விட்டு போகும்னு சொல்லியிருக்காங்கத்தானே? சுமார் ஒரு மணி நேரம் தொடர்ந்து ஜெத்தா வாழ் தமிழ் மக்கள சிரிக்க வச்சிருக்காருங்க. அந்த வகையில பார்த்தா மக்கள வாய்விட்டு சிரிக்க வெச்சு, அவங்க நோய் நொடிகள போக்கடித்த பேராசிரியர் ஞான சம்பந்தம் ஐயாவ ஏன் டாக்டர் ஞானசம்பந்தம்னு கூப்புடக்கூடாதுங்கறன்?.

தமிழ்சங்க நிகழ்ச்சிகள் அனைத்தும் மிகச் சிறப்பா இருந்ததுங்க.
சந்தர்பம் கிடைத்தால், இந்த நிகழ்ச்சியின் சிறப்பை ஜெயா டிவியில் தான் அளிக்கும் இன்றைய சிந்தனை ( நிகழ்ச்சியின் பெயர் சரிதானே?. நான் டிவி பார்ப்பதில்லை ) நிகழ்ச்சியில் குறிப்பிடுவேன் என்று கூறி கரகோஷங்களை அள்ளிச் சென்றார் பேராசிரியர் ஞானசம்பந்தம் ஐயா அவர்கள்.

தமிழ் சங்க நிகழ்ச்சியின் டாப் மூன்று என்று மக்கள் என்னிடம் தெரிவித்தவை.

1. பேராசிரியர் ஞானசம்பந்தம் அவர்களின் பட்டி மண்டபம்.
2. குழந்தைகளின் அனைத்து நடனங்களும்.
3. மூத்த வலைப்பதிவாளர் எண்ணம் ஆசாத் அவர்களின் சிலம்பாட்டம்
மற்றும் கவியரங்கம்.

மறு நாள் ஆந்திர பிரதேச நாள் என்று பெயர் வைத்து விழா. எனது அலுவலகத்தில் பணிபுரியும் ஆந்திராவைச் சேர்ந்த ஒரு கடைநிலை
ஊழியர் இந்த நிகழ்ச்சிகளை பார்க்க வேண்டும் என மிக ஆவலாக இருந்தார் ( நேற்றைய தமிழ் நிகழ்சிக்கும் இவர் வந்திருந்தார்). நான் மிக களைப்பாக இருந்தாலும், அவர் மீது உள்ள மரியாதையால், அவரின் விருப்பத்தை நிறைவேற்ற அவரை அழைத்துச் சென்றேன்.

இவர் வயது அய்ம்பது, பேரன் பேத்தி எடுத்தவர். எழுத படிக்க தெரியாது.
ஆனால் மிக அற்புதமான உழைப்பாளி. வேலையில் உள்ள திறமையின் காரணமாக பல பரிசுகளை வென்றவர். இருவருக்கும்
தூக்கம் சொக்கியதால் வீட்டுக்கு கிளம்பினோம். வரும்போது அவர் ஒரு உணவு விருந்துக்கான செய்தியை கேட்டு விட்டார்.

முரளி அங்கு ஹைதராபாத் பிரியாணி போடுராங்களாம், நான் போய்

சாப்பிட்டு விட்டு வருகிறேன் என்று போனார்.போன வேகத்தில் திரும்பி

வந்தவர், உள்ள விட மாட்டேங்கிறாங்கப்பா நீ வந்து என்னவென்று கேள் என்றார். நான் சென்று அந்த நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களிடம் நடத்திய உரையாடல்.

காசு கொடுத்தால் அனுமதி உண்டுதானே ஏன் மறுக்கிறீர்கள்.

கார்ட் வேண்டும்.

கார்ட் என்றால் டோக்கனா? அது எங்கே கிடைக்கும்?

இங்குதான் எங்காவது கிடைக்கும்.

எனது பக்கத்தில் இருந்தவர்: இங்கு அனைத்து ஸ்டாலிலும் கேட்டு விட்டேன். யாரும் எங்களிடம் கார்டு கிடையாது என்கிறார்கள்.

நான்: கார்டு என்றால் பாஸா. பாஸ் உள்ளவர்களுக்கு மட்டும்தான் அனுமதி என்றால் அதையாவது கூறுங்கள், நாங்கள் போய்விடுகிறோம்.

உணவு விடுதி நபர்: பதில் சொல்லாமல் அமைதியாக இருக்கிறார்.

நான்: பர்ஸிலிருந்து பணம் எடுத்துக் கொடுத்து, ஒரு நபருக்கு அனுமதி கொடுங்கள் என்றேன்.

உணவு விடுதி நபர் பணம் வாங்க மறுத்தார்.

எங்கள் சம்பாஷனை நடந்து கொண்டிருந்தபோது ஷெர்வானி அணிந்திருந்த ஒரு நபர் அத்துமீறி அந்த விருந்து நடக்கும் கட்டிடத்தில் நுழைய முயன்றார். இரண்டு பேர் முரட்டுதனமாக அவரை தடுத்து நிறுத்தி வெளியேற்றினார்கள். அவர் மிகக் கோபம் கொண்டு சரி சவுண்டு விட்டுக் கொண்டிருந்தார்.

இதையெல்லாம் பார்த்த எனது நண்பர் வேண்டாம் விடுப்பா நாம் வீட்டுக்குபோகலாம் என்று கூறிவிட்டார். அவருக்கு அனுமதி மறுக்கப் பட்டது அவரது தன்மானத்தை பாதித்திருக்க வேண்டும். போகும் வழியில் ஒரு ஹோட்டலில் நாங்கள் உணவு உண்டோம். அவர் விடாப்பிடியாக நான்தான் பில்லுக்கு பணம் கொடுப்பேன் என்று கொடுத்து விட்டார். அது அவரது ஒரு நாள் சம்பளம். எங்ககிட்டயும் பணம் இருக்கு, எங்களால பணம் கொடுக்கமுடியாதா என்றெல்லாம் புலம்பிக் கொண்டே வந்தார்.

எனக்கு அந்த நிகழ்ச்சி ஆரம்பத்திலிருந்தே வெறுப்பாய் இருந்தது. பெயர்தான் ஆந்திரபிரதேச நாள். ஆனால் ஆரம்பத்திலிருந்தே ஹைதராபாத் ஹைதராபாத் என ஒரே ஹைதராபாத் மற்றும் சார்மினார் பெருமைதான். ஹைதராபாத் இந்தியாவில் இனைந்து பல வருடங்கள் ஆகிவிட்டன என ஹைதராபாதிகள் மறந்து விட்டார்கள் போலும்.

நான் சவுதி வந்த புதிதில் இப்படித்தான் என்னிடம் ஒருவர் நான் ஹைதராபாதி, ஹைதராபாதி என சொல்லிக்கொண்டே இருந்தார்.

நான் அவரிடம் இந்திய ஹைதராபாத்தா? பாகிஸ்தான் ஹைதராபாத்தா?என்று கேட்டேன். சற்றே கடுப்பான அவர் இந்தியாதான் என்றார். நான் உடனே ஓ நீங்கள் இந்தியரா என்றேன். சவுதியில் இவனுங்க தற்பெருமை தாங்க முடியலப்பா.

நான் எனது நண்பரை கல கலப்பூட்டுவதற்காக சொன்னேன். விட்டு தள்ளுங்க, அவனுங்க இத்துப்போன சார்மினார்ல இடி வுழ அவனுங்க ஊசிப்போன பிரியாணில பல்லி வுழ என்றேன். நண்பர் சிரித்து மனம் லேசானார்.

என்றென்றும் அன்புடன்,

பா.முரளி தரன்.

Tuesday, January 23, 2007

புட்டபர்த்தி சாய்பாபாவும்; கலைஞரும்.

என்னை வாழ்வில் முதல்முறையாக சேவை செய்ய வைத்தது பாபாதான் என்று சொல்வேன். எனது ஊரான நெய்வேலியில் ஒரு சாயி சமிதி இருக்கிறது. ஒவ்வொரு குருவாரமும் அங்கு சாய்பஜன் நடைபெறும்.

மிகச் சிறிய வயதிலேயே அம்மாவுடன் சேர்ந்து சாயிசமிதி செல்லும் பழக்கம் இருந்தது. சாய்பஜனில் பாடப்படும் மங்கள ஹாரத்தி கொடுக்கும் மனநிறைவை வார்த்தைகளில் வர்னிக்க இயலாது.

ஞாயிற்றுக் கிழமைகளில் சாயி சமித்தி தொண்டர்கள் சேர்ந்து, எங்கள் ஊர் மருத்துவமனைக்கு சென்று, நோயாளிகளுக்கு தேவையான
சிறு சிறு உதவிகள் செய்வோம். அவர்களுக்கு பழம் மற்றும் வேறு தின்பண்டங்கள் வாங்கிக் கொடுப்போம். தனது துன்பங்களை சொல்லி கலங்குபவர்களுக்கு ஆறுதலான வார்த்தைகளை சொல்லி நம்பிக்கையூட்டுவார்கள், குழுவில் வரும் பெரியவர்கள்.

எங்கள் ஊரில் வேலுடையான்பட்டு முருகன் கோயிலில், பங்குனி உத்திரத் திருவிழா மிகச் சிறப்பாக நடைபெறும். அந்த திருவிழா கூட்டத்தை கட்டுப் படுத்துவதிலும், வழிகாட்டவும் காவல் துறைக்கு உதவி செய்வோம்.

முட்புதர்களை அகற்றுவது, தண்ணீர்ப் பந்தல் அமைத்து அன்னதானம் செய்வது போன்ற பனிகளில் ஈடுபடுவோம். எனது அம்மா ஒரு சாயி பக்தை.வீட்டில் கடைக்குட்டி ஆதலால் நான் எப்போதும் அம்மாவோடே ஒட்டிக்கொண்டிருப்பேன். அதனால் கிடைத்த அனுபவங்கள் இவை.

எனது பள்ளி நாட்களில், எங்கள் ஊருக்கு ஒருமுறை சாயிபாபா வந்திருந்தார். நாங்கள் குழந்தைகள் எல்லாம் வெள்ளை உடுப்பு அணிந்து நின்று அவருக்கு வரவேற்பு அளித்தோம். எனக்கு அருகாமையில் அமர்ந்திருந்த ஒரு பக்தருக்கு விபூதி வரவழைத்துக் கொடுத்தார் பாபா.அதில் ஒரு துளி எனது நெற்றியிலும் ஏறியது.

அண்ணாவும், அக்காவும் ஸ்லோகங்கள் சொல்லி பரிசு வாங்கியிருக்கிறார்கள்.
சாயி சமிதியில் சிறுவர்களுக்கு ஸ்லோகங்கள் சொல்லிக் கொடுப்பார்கள்.மேலும் ஒரு சிறப்பான விஷயம் அங்கு உள்ள மத நல்லினக்க சூழ்நிலை. அனைத்து மதச் சின்னங்களும் வைத்து வழிபாடு நடத்தப்படும். அதனாலோ என்னவோ தெரியவில்லை, சிறு வயதில் வேற்றுமத நண்பர்களோடு சேர்ந்து சர்வ சாதாரனமாக மசூதி மற்றும் சர்ச் என்றெல்லாம் சுற்றி வருவேன்.


சாயிசமிதியின் சார்பாக இலவச மருத்துவ முகாம்கள் பல நடத்தப்படும்.
அதில் கலந்துகொண்டு பெரியவர்கள் சொல்லும் சிறு பணிவிடைகளை
செய்வோம்.

எனது அனுபவங்கள் இந்த அளவில் இருக்க, எனது மனைவி வீட்டு உறுப்பினர்கள் அதி தீவிர சாயி பக்தர்கள். எனது மாமியார் தொண்டு தொண்டு என சாயியின் பெயரால் ஊருக்கு உழைப்பவர்.

எனது மனைவியின் வாழ்வில் சாய்பாபா நிகழ்த்திய ஒரு சிறிய அதிசயம். எனது மனைவி கறுவுற்றிருப்பதை சாயிபாபா, அவளின் கனவில் வந்து உணர்த்தி அதை அவளது தாயாரிடம் (அதி தீவிர சாயி பக்தையான எனது மாமியாரிடம் ) தெரியப்படுத்தச் சொன்னார். அதனால்
எனது மகனுக்கு சாய்ராம் என்றொரு பெயரும் உண்டு.எனது சித்தப்பா
வீட்டில் இருந்த சாயி புகைப்படத்தில் இருந்து விபூதி பல நாட்களுக்கு கொட்டிக்கொண்டிருந்த அதிசயமும் நடந்துள்ளது.

ஆந்திராவில் ஏதோ ஒரு வறண்ட பகுதியில் தன்னை வெளிப்படுத்திக்கொண்ட மஹாசக்தியானது, தனது அமைதியான அன்பு, தொண்டு மற்றும் சத்திய போதனையால், தமிழகத்தில் இருந்த என்னிடம் ஒரு நல்வித்தை விதைப்பதும், நம்பிக்கையை வலுப்படுத்துவதும் போன்ற செயல்களெல்லாம் தன்னலமில்லாத
ஞானிகளுக்கு மட்டுமே சாத்தியம். அதனால்தான் சொல்கிறார்களோ
"உலகம் என்பது உயர்ந்தோர் மாட்டு" என்று.

கலைஞருக்கு நன்றி தெரிவித்து முன்பே ஒரு பதிவு போடவேண்டும் என நினைத்திருந்தேன், வேலையிலா பட்டதாரிகளுக்கு உதவித் தொகை அறிவித்தபொழுது. தொகை சிறியதாக இருந்தாலும், வேலைக்காக ஒரு விண்ணப்பம் அனுப்பவாவது அந்த தொகை உதவும். நானெல்லாம் ஒரு அப்ளிகேஷன் அனுப்ப பணம் இல்லாமல் அவதிப்பட்டவன். நேர்முகத்தேர்வுக்கான அழைப்பு வந்திருந்தும், பிரயானம் செய்ய காசு இல்லாததால் இந்திய விமானப் படை வேலையை தவற விட்டவன். எனவே வேலையில்லா பட்டதாரிகளுக்கான உதவியின் மகத்துவம் எனக்கு பெரிதாக தெரிகிறது. நமது வரிப்பணம்தான், இருந்தாலும் சரியான விஷயத்திற்கு அளிக்கப்பட்டதால், பல பேர் வாழ்வில் ஒளியேற்றும்.

எம்பத்திரண்டு வயதுவரை நாத்திகக் கொள்கையில் ஊறியவருக்கு
வலிய சென்று பாபா ஆசி வழங்கி உள்ளார், என்ன ஒரு பாக்கியம் பாருங்கள். தான் நாத்திகவாதியாக இருந்தாலும், தனது குடும்ப உறுப்பினர்களின் ஆத்திக கொள்கைக்கு மதிப்பளிப்பது என்பது எவ்வளவு பெரிய பக்குவம். அந்த பக்குவத்திற்கும், தெளிவிற்கும் கிடைத்த அங்கீகாரமாக இந்த வலிய தேடிச் சென்ற ஆசிகளை எடுத்துக் கொள்ளலாம்.

மேலும் துறவிகளிடமும், ஞானிகளிடமும் பாகுபாடு என்பதே கிடையாது
என்பதற்கும் இந்த நிகழ்வு ஒரு சாட்சியாகிவிட்டது.

அறம் என்பதை தமது வாழ்க்கையின் செய்தியாக உலகிற்கு கொடுக்கும் துறவிகளும், ஞானிகளும்தான் பாரதத்தின் உண்மையான அடையாளம்.
என்றென்றும் அன்புடன்,
பா.முரளி தரன்.

Saturday, January 20, 2007

வெல்டிங் மெஷினால் தீ விபத்தா?.

துபாயில் ஒரு பல மாடிக்கட்டிட வேலையில் தீ பிடித்ததில், இந்தியர்கள் உட்பட பல தொழிலாளர்கள் உயிர் இழந்துள்ளார்கள். தீ விபத்துக்கான காரணமாக ஒரு வெல்டிங் மெஷினை சொல்லியிருக்கிறார்கள்.

எனது துறை சார்ந்த அறிவின் அடிப்படையில், இதற்கான சாத்தியக் கூறுகள் மிகவும் குறைவு. ஒரு வெல்டிங் மெஷினில், இந்த அளவிற்கு ஒரு பெரிய தீ விபத்தை ஏற்படுத்தும் அளவிற்கான பாகங்கள் எதுவும் கிடையாது. அதுவும் அரபு நாடுகளில் உபயோகப் படுத்தப்படும் மெஷின்கள், நவீன தொழில் நுட்பம்
கொண்டவை.

பெரும்பாலும் இது போன்ற உயரமான கட்டிட வேலைகளில், மிகக் குறைந்த எடையில் ஆன, பெரும்பாலும் எலக்ட்ரானிக் பாகங்கள் கொண்ட மெஷினைத்தான் உபயோகப் படுத்துவார்கள்.
இவைதான் கையாள்வதற்கு மிக எளிதானவை.

இந்தியாவில் ட்ரான்ஸ்பார்மர் டைப் மெஷின்கள், சிறிய பட்டறைகளில் இப்பொழுதும் புழக்கத்தில் உள்ளது. அது போன்ற வெல்டிங் மெஷின்கள் இங்கு கிடையாது.

ஒரு வேளை டீசலை உபயோகிப்படுத்தி செயல்படும் ஜெனரேட்டர் வகை மெஷின்களாக இருந்திருக்கலாம். அப்படிப்பட்ட சூழ்நிலையில் டீசல் டேங்க் வெடித்ததால், இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம்.

வெல்டிங்கில், கேஸ் வெல்டிங் என்றொரு வகை உண்டு. இதில் ஆக்சிஜன், அசிட்லின் வாயுக்களின் உதவியால் வெல்டிங் செய்யப்படும். அப்படி ஒரு வெல்டிங் முறையை தேர்வு செய்திருந்தால், அந்த கேஸ் சிலிண்டர் வெடித்ததால் இப்படி ஒரு விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. இந்த சூழ்நிலையிலேயும் சிலிண்டர் வெடிக்க வாய்ப்புகள் கோடியில் ஒன்றுதான்.

எப்படி யோசித்தாலும் வெல்டிங் மெஷினால் ஏற்பட்ட தீ என்பது குழப்பம் ஏற்படுத்துவதாவே உள்ளது. பாதுகாப்பு ஏற்பாடுகள் சரியானபடி இருந்ததா என தெரியவில்லை. அதிக விவரங்கள் கிடைக்கும்வரை பொறுத்திருந்து பார்ப்போம்.

இதில் இறந்துபோன இந்தியர் ஒருவர் வேலைக்கு புதிதாய் சேர்ந்திருந்தாராம்.
என்ன கொடுமை பாருங்கள்.

இதற்கெல்லாம் தீர்வு நம்மை ஆளும் அரசியல்வாதிகள் கையில் இருப்பதுதான் அதைவிடக் கொடுமை.

என்றென்றும் அன்புடன்,
பா.முரளி தரன்.

Friday, January 12, 2007

இந்த கதையையும் குமுதம் வெளியிடுமா?.

ஒரு முன் அறிவிப்பு. இது குழலியோட கதைக்கு பதில் கதையாக இருந்தாலும் என்னோட சொந்தக் கதை.

பாண்டிச்சேரி.

முரளி என்ன இது? இப்படி அடம் பன்ற?. இன்னிக்கு நாடு உள்ள நிலைமைய புரிஞ்சிக்கோ. கிடைக்காதுன்னு தெரிஞ்சுப் போனதக்கப்பறம் உன்னை வருத்திக்கிறதுல என்ன லாபம்?.மறந்துடு நடந்தது அத்தனையும் மறந்துடு.

டேய் எப்படிடா மறக்க முடியும். நான் அவள எவ்வளவு காதலிச்சன்னு
உங்களுக்கும் தெரியும்தானடா?. லவ் லெட்டர எங்க... எப்படி? குடுக்கலாம்னு ஐடியாவெல்லாம் குடுத்திங்களேடா?.

ஒற்றைப் பார்வையில் மனம் பறித்தாய்; தலை தாழ்ந்தேன்,
மற்றோர் பார்வைக்கு உயிர் தாங்காது.
வற்றல் பார்வைகள் பல உண்டு ஊரினிலே;
வற்றாத புன்னகையை கண்டுகொண்டேன்;உன் கண்களிலே,
காதல் கொண்டேன்.
இந்த கவிதையை படித்த நண்பர்கள் குழு,
மச்சான் இதையே எழுதி குடுடா. நிச்சயம் உம் மனச நிச்சயமா அவ
புரிஞ்சுப்பாடா என்றும் உசுப்பேற்றியிருந்தது.

என் இதயம் கவர்ந்த அந்தக் கள்ளி, அலுவலகத்தில் என் கூடவே வேலை செய்பவள்தான். நாங்கள் இருவருமே இஞ்சினியர்கள். அவள் R&D துறையில் ENGINEER, நான் SERVICE ENGINEER. எனக்கு அலுவல் விஷயமாக ஊர் உலகமெல்லாம் சுற்றி வரும் வேலை. அலுவலகம் வருவதே மாசம் ஒரு வாரம் அல்லது இரண்டு மாசத்துக்கு ஒரு வாரம். அப்படி ஒரு நீண்ட
வட இந்திய பயனத்தை முடித்துவிட்டு திரும்பிய ஒரு நாளில், லஞ்ச் டேபிலில் என் தேவதையைக் கண்டேன்.

கண்டதும் காதல்; காதல் கொண்டதும் கவிதை.
நிலவின் கருப்பு; அவள் முகத்து மச்சம்; இரண்டுமே அழகுதான்.

அம்மா வானத்து நிலா காட்டி சோறு ஊட்டியிருக்கிறாள் ஆனால்
பூமியில் உலவிய என் நிலா எனக்கு சோறு உன்ன வேண்டும் என்பதையே மறக்கடித்தாள்.

SERVICE ENGINEER க்கு எல்லாம் எங்கள் அலுவலகத்தில் நேர ஒழுங்கு கிடையாது...... அவங்கள விட்ருங்கப்பா, மாசத்துக்கு ஒரு வாரம்தான் ஆபிஸ் வரானுங்க, எதையும் கண்டுக்காதீங்க என்று ஒரு உத்தரவே இருந்தது எங்கள் அலுவலகத்தில்........ அடுத்த பிராயனத்துக்கான ஆயத்தங்களை முடித்த பின், புத்தகம் படித்துக்கொண்டே இருப்பேன் நான்.கனையாழி, புதிய ஜனனாயகம், ரீடர்ஸ் டைஜஸ்ட், மற்றும் எனது துறை சார்ந்த புத்தகங்களால் எனது அலுவலக டேபில் நிறைந்திருக்கும்.
எனது தேவதையின் கைப்படும் பாக்கியத்தையும் எனது புத்தகங்கள்
பெற்றன.

அவள் குடித்துவிட்டு மிச்சம் வைத்துவிட்டு சென்ற மினரல் வாட்டர் பாட்டிலை எடுத்து திருட்டுத்தனமாக அனைத்துக்கொண்டிருந்த நாளில் எனது காதல் அலுவலக நண்பர்களிடம் குட்டுப்பட்டது.

ஐயரே, பொண்ணு வெள்ளையா இருக்குன்ன உடனே உங்க ஆளா இருக்கும்னு நினைச்சிட்டியா. அடக்கமா இரு மகனே இல்லன்னா அடி படுவ. அவங்கள்ளாம் அருவா, பெட்ரோல் குண்டு, உருட்டு கட்டன்னு
சுத்தர பார்ட்டி ஆளுங்க.. என்ற நண்பர்களிடம், தெரியும் போங்கடா, எறா, புறா, சுறா எல்லாத்தையுமே என் ஆளு முழுங்கும்போதே அத தெரிஞ்சிக்கிட்டேன் என்றேன். கூடவே ஸ்ரீரங்கத்தில் வசிக்கும் அவளுடைய பெரியப்பா மகள் கலைச்செல்விஅக்கா திருமணம் செய்து, அவர்கள் வீட்டு அத்திம்பேர் ஆனது ஒரு ஐயர்தான் என்பது மேலும் நம்பிக்கை தந்திருந்தது.

நாட்கள் நகர்ந்தது, அவளும் என்னிடம் காதல் கொண்டிருக்கிறாள் என மனம் உணர ஆரம்பித்தது.ஆனால் யாரோ ஒருவர் முதலில் காதலை வெளிப்படுத்த வேண்டுமே.

காதல் உச்சத்தில் இருந்த, நாளும் கோளும் நல்ல நிலையில் இருந்த ஒரு நன்நாளில் எனது காதல் கடிதத்தை அவளது கைப்பையில் வைத்துவிட்டு (ஒரு வேளை என்னை காதலிக்கவில்லை என்று முகத்துக்கு நேராகவே
சொல்லிவிட்டால் அதை தாங்கமுடியாது என்பதால்) மறு நாள் அவளின் பதிலுக்காகவும், வருகைக்காகவும் படபடப்பாக காத்திருந்தேன்.

அதன் பிறகு, வெகு நாள்வரை அவளை பார்க்கவே முடியவில்லை.
அடக்கம் உனது இயல்பாய் இருந்தது,
அன்பு உனது ஆடையாய் இருந்தது,
புன்னகை உனது அணிகலனாய் இருந்தது,
அறிவு உனது பேச்சாய் இருந்தது.
மனம் மட்டும் வெறும் கல்லாய் இருந்ததோ?
என்று காதல் பித்துகொண்டு
அலைந்து தவித்தேன். முடிவாக அவளைத் தேடி அவளின் சொந்த
ஊரான திண்டிவனத்திற்கு சென்றேன்.

என்னை யார் என்றே தெரியாது என்றாள்...... செத்தாலும் ஒரு முடிவு தெரியாமல் நகருவதில்லை என்று பிடிவாதமாக நான் அவள் வீட்டை விட்டு நகராமல் நின்றதும், அவள் தந்தை வரும் முன் அங்கிருந்து போய்விடுமாறு கையெடுத்து கும்பிட்டு கண்ணீரோடு
கேட்டுக்கொண்டாள். அவள் கண்ணீர் என்னை அங்கிருந்து நகர வைத்தது.

அடுத்த இரண்டு நாட்களில் எங்கள் இருவருக்கும் பொதுவான ஒரு நண்பர் என்னைச் சந்தித்து பேசினார். முரளி அவங்க அப்பா திண்டிவனத்துல வலுவா இருக்கிற ஒரு பார்ட்டில முக்கியமான ஆளு,
அவரு லாயரும் கூட...... உனக்கே தெரியும்... ஜாதி இல்ல இல்லன்னு ஒப்பாரி வப்பாங்க ஆனா அந்த கட்சியே ஒரு குறிப்பிட்ட சாதிக்கோசரமே உருவான கட்சி.

கட்சி உருவான ஆரம்ப நாட்களில், குச்சி கொளுத்தறதுங்கற பேர்ல எத்தன தலித்து குடிசங்கள கொளுத்துனாங்கன்னு ஊருக்கே தெரியும்.
இப்ப தலித்துங்க ஒரு வலுவான ஓட்டு வங்கியா மாறிட்டதால அண்ணன் தம்பி ஆகிட்டாங்க. ஆனா மாமன் மச்சானா என்னிக்குமே மாற மாட்டாங்க.பலமான ஓட்டு வங்கியா இருக்கிற தலித்துங்களுக்கே இந்த நிலமைன்னா ? ஓட்டு வங்கியா இல்லாத ஐயருங்கல்லாம் அவங்க வீட்டு மாப்பள்ளையா ஆகனும்னு நினைச்சா!! அது முடியுற காரியமா?? யோசிச்சுப் பாரு.

அப்பறம் அந்தப்புள்ள உன்கிட்ட சொல்ல சொல்லிச்சு. நீ அது மேல அன்பு வச்சது நிசம்னா, நீ நல்லாயிருக்க அப்படிங்கரத, அந்த புள்ள, அதோட வாழ்க்கை முழுக்க கேட்டுகிட்டே இருக்கர மாதிரி உன்ன வாழ்ந்து காட்ட சொல்லிச்சு. இந்த வார்த்தைய அது மேல சத்தியம்பன்னி சொல்ல சொல்லிச்சு.

நான் ஏன் இத்தனை சொல்றேன்னு நீ நினைக்கலாம். பொண்ணு வேற
சாதியில, அதுவும் ஒரு பார்ப்பான கல்யாணம் பன்னிக்கிச்சுன்னா
தன்னோட கட்சியில தனக்கு மரியாத போயிடும்னு நினைச்சு அவங்க அப்பா சொந்தத்துல ஒரு பையனுக்கு நேத்து காலையிலேயே
கல்யாணம் முடிச்சிட்டார்.

என்றென்றும் அன்புடன்,
பா.முரளி தரன்.




மூந,முக,முச.

அன்பு தமிழ் நெஞ்சங்களே, இந்தப் பதிவை ஒரு கற்பனை என நீங்கள் எடுத்துக்கொண்டால், அதில் எனக்கு ஆட்சேபம் ஏதுமில்லை. ஆனால்
இதில் பொதிந்துள்ள சில வரலாற்று உண்மைகளை நீங்கள் மறுக்க
மாட்டீர்கள் என நினைக்கிறேன்.

முதலாவது மூந என்ற மூன்று நண்பர்களை அறிவோம்.

1. ராஜாஜி - குலக்கல்வி திட்டம் கொண்டு வர முயன்றார். ஹிந்தியும் கற்றால் தவறில்லை என்றார். ஆச்சார சீலர். கீர்த்தனைகள் இயற்றியுள்ளார்.சக்கரவர்த்தி திருமகன் என்ற பெயரில் பகவான் ஸ்ரீராமரின் கதையை எழுதினார்.

2. திரு.வி.க - சமஸ்கிருதம், அரபி, ஆங்கிலம் என அனைத்து மொழிகளையும் கற்க வேண்டும் என்றார். தமிழை அதைவிடச் சிறப்பாக கற்க வேண்டும் என்றார். தமிழர்கள் நலமும், வளமும் பெற்று வாழ வேண்டும் என விரும்பினார். சிலப்பதிகாரம், இராமாயணம் போன்ற காவியங்கள் சிறப்பிக்கப்பட வேண்டும் என்றார். பெண்மையை சிறப்பித்தார். அறநெறி தவறாது வாழ்ந்தார்.

3. ஈ.வெ.ரா.- தமிழை பழித்தார். நீ தமிழன் அல்ல திராவிடன் என பிரிவினைவாதத்தை விதைத்தார். பெண்களுக்கு கற்பு அவசியமன்று என்றார். சிலப்பதிகாரம், இராமயணம் போன்ற இலக்கியங்களை பழித்தார்.
அறநெறி தவறிய வாழ்வால் நோய்கள் பல கொண்டு வாழ்ந்தார்.

இந்த மூன்று நண்பர்களும் தங்களுக்குள் இரகசியமாய் பேசி வைத்துக்கொண்டு இப்படி வெவ்வேறு நிலைப்பாட்டை எடுத்தனரோ என நினைக்க தோன்றுகிறது.

ஆனால் ஈ.வே.ரா-க்கு தன் நிலைப்பாடு எத்தகைய அபாயம் நிறைந்தது என்பது புரிந்தே இருந்திருக்கவேண்டும். அதனால் இந்த கட்சி தி.க தன்னோடே அழிந்து போகவேண்டும் என அவர் விரும்பினார்.

அதனால்தான் அவர் காலத்திலேயே முன்னேற்ற கழகங்கள் (முக)
முளைத்தனவோ என்னவோ?.

ஆனால் தமிழர்கள் ஜனத்தொகையில் அரை சதமே உள்ள கொலைவெறி பிடித்த, சில நாத்திக திருடர்கள், சில சுயலாபங்களுக்காக விடாமல் கருப்பை
பிடித்துக்கொண்டு தொங்குகின்றன.

ஈ.வே.ரா தன் காலத்தில் நிலைப்படுத்திய ஆனவத்தின் அடையாளமான கறுப்பு சிந்தனைகள், தமிழர்களை பிரிவினைவாதம், தீவிரவாதம், நாத்திகவாதம் என்ற முச்சந்தியில்தான் (முச) நிறுத்தியிருக்கிறது.

இருட்டான இந்த கறுப்பு முச்சந்தியில் இருந்து வெளியேற தமிழ் பேசும் சமூகம் கைக்கொள்ளவேண்டியது இருட்டை விரட்டும், ஞானவெளிச்சத்தை பரப்பும், அரோக்கியம் தரும்
ஆத்திகம் என்னும் மஞ்சள் ஒளி.

என்றென்றும் அன்புடன்,
பா.முரளி தரன்.

Tuesday, January 02, 2007

நாத்(திக)ரின் ஆத்திரமும், ஆத்(தீ)கரின்......

குமுதம் இதழில் நாத்திக கி.வீ ஒரு பேட்டி அளித்துள்ளார். அதில் கலைஞர் ஆட்சிக்கு கெட்டப் பெயர் வந்துவிடக் கூடாதே என்பதால் அவர்களின் ஆத்திரத்தை அடக்கிகொண்டுள்ளதாக கூறியுள்ளார்.

ஆத்திரத்தை அடக்கிக்கொண்டு நடத்திய வன்முறையிலேயே, பெட்ரோல் குண்டுவரை போயிருக்கிறார்கள் என்றால், ஆத்திரம் கொண்டு வன்முறையில் ஈடுபட்டால் வேறென்னென்ன செய்வார்களோ என்ற அச்சம் மேலிடுகிறது.

வன்முறையில் ஈடுபட்டது திக அல்ல பெதிக என்று ஒரு பொய்யை திரும்ப திரும்ப சொல்லி உண்மையாக்கப் பார்க்கிறார்கள். திக என்னும் தறுதலை பெற்று திரியவிட்டுள்ள தத்தாரி குழந்தைதானே பெதிக.

தமிழகத்தில், நாத்திகம் என்ற பெயரில் திராவிடப் பேரினவாதத்தை விதைத்துள்ள திக, ஸ்ரீலங்காவின் உள்நாட்டுப் பிரச்சனையை சிங்களப் பேரினவாதம் என்று வர்னித்து, மறைமுகமாக புலிகளுக்காக நீலிக்கண்ணீர் வடிப்பதையும் வாடிக்கையாக கொண்டுள்ளனர்.

கிவீ ஒன்றை புரிந்துகொள்ள வேண்டும், தமிழகத்தில் ஆத்திகர்கள் மேல் வன்முறையை ஏவ நினைத்தால், அந்த வன்முறை, வன்முறையாலேயே எதிர்கொள்ளப்படும் நிலைமை உருவாகலாம்.

அப்படி ஒரு முடிவை ஆத்திகர்கள் எடுத்துவிட்டால், தமிழக ஜனத்தொகையில் அரை சதம் கூட இல்லாத நாத்திகர்களை எதிர்கொள்ள ஆத்திகர்களுக்கு பெட்ரோல் குண்டு எதுவும் தேவையில்லை பின் வரும் சொல்லாடல் வழி நடந்தாலே போதுமானது.

"ஆத்திரத்தை அடக்கினாலும்,அடக்கலாம்_________அடக்க முடியாது".

நினைத்துப் பாருங்கள், ஸ்ரீரங்கத்திற்கு வைகுண்ட ஏகாதசிக்கு வந்த லட்சக்கணக்கான பக்தர்கள், நீங்கள், இரவோடு இரவாக, திருட்டுத்தனமாக நட்ட வெறும் கல்லுக்கருகில் இப்படி ஒரு எதிர்ப்பை காட்டியிருந்தால் என்ன ஆகியிருக்கும் என்று?.

"அறிவால் விடையளிக்க முடியாதபோதுதான் நம்பிக்கை துளிர்க்கிறது" என்ற உண்மை நீங்கள் உணர வேண்டிய ஒன்று.

என்றென்றும் அன்புடன்,
பா.முரளி தரன்.