Tuesday, January 23, 2007

புட்டபர்த்தி சாய்பாபாவும்; கலைஞரும்.

என்னை வாழ்வில் முதல்முறையாக சேவை செய்ய வைத்தது பாபாதான் என்று சொல்வேன். எனது ஊரான நெய்வேலியில் ஒரு சாயி சமிதி இருக்கிறது. ஒவ்வொரு குருவாரமும் அங்கு சாய்பஜன் நடைபெறும்.

மிகச் சிறிய வயதிலேயே அம்மாவுடன் சேர்ந்து சாயிசமிதி செல்லும் பழக்கம் இருந்தது. சாய்பஜனில் பாடப்படும் மங்கள ஹாரத்தி கொடுக்கும் மனநிறைவை வார்த்தைகளில் வர்னிக்க இயலாது.

ஞாயிற்றுக் கிழமைகளில் சாயி சமித்தி தொண்டர்கள் சேர்ந்து, எங்கள் ஊர் மருத்துவமனைக்கு சென்று, நோயாளிகளுக்கு தேவையான
சிறு சிறு உதவிகள் செய்வோம். அவர்களுக்கு பழம் மற்றும் வேறு தின்பண்டங்கள் வாங்கிக் கொடுப்போம். தனது துன்பங்களை சொல்லி கலங்குபவர்களுக்கு ஆறுதலான வார்த்தைகளை சொல்லி நம்பிக்கையூட்டுவார்கள், குழுவில் வரும் பெரியவர்கள்.

எங்கள் ஊரில் வேலுடையான்பட்டு முருகன் கோயிலில், பங்குனி உத்திரத் திருவிழா மிகச் சிறப்பாக நடைபெறும். அந்த திருவிழா கூட்டத்தை கட்டுப் படுத்துவதிலும், வழிகாட்டவும் காவல் துறைக்கு உதவி செய்வோம்.

முட்புதர்களை அகற்றுவது, தண்ணீர்ப் பந்தல் அமைத்து அன்னதானம் செய்வது போன்ற பனிகளில் ஈடுபடுவோம். எனது அம்மா ஒரு சாயி பக்தை.வீட்டில் கடைக்குட்டி ஆதலால் நான் எப்போதும் அம்மாவோடே ஒட்டிக்கொண்டிருப்பேன். அதனால் கிடைத்த அனுபவங்கள் இவை.

எனது பள்ளி நாட்களில், எங்கள் ஊருக்கு ஒருமுறை சாயிபாபா வந்திருந்தார். நாங்கள் குழந்தைகள் எல்லாம் வெள்ளை உடுப்பு அணிந்து நின்று அவருக்கு வரவேற்பு அளித்தோம். எனக்கு அருகாமையில் அமர்ந்திருந்த ஒரு பக்தருக்கு விபூதி வரவழைத்துக் கொடுத்தார் பாபா.அதில் ஒரு துளி எனது நெற்றியிலும் ஏறியது.

அண்ணாவும், அக்காவும் ஸ்லோகங்கள் சொல்லி பரிசு வாங்கியிருக்கிறார்கள்.
சாயி சமிதியில் சிறுவர்களுக்கு ஸ்லோகங்கள் சொல்லிக் கொடுப்பார்கள்.மேலும் ஒரு சிறப்பான விஷயம் அங்கு உள்ள மத நல்லினக்க சூழ்நிலை. அனைத்து மதச் சின்னங்களும் வைத்து வழிபாடு நடத்தப்படும். அதனாலோ என்னவோ தெரியவில்லை, சிறு வயதில் வேற்றுமத நண்பர்களோடு சேர்ந்து சர்வ சாதாரனமாக மசூதி மற்றும் சர்ச் என்றெல்லாம் சுற்றி வருவேன்.


சாயிசமிதியின் சார்பாக இலவச மருத்துவ முகாம்கள் பல நடத்தப்படும்.
அதில் கலந்துகொண்டு பெரியவர்கள் சொல்லும் சிறு பணிவிடைகளை
செய்வோம்.

எனது அனுபவங்கள் இந்த அளவில் இருக்க, எனது மனைவி வீட்டு உறுப்பினர்கள் அதி தீவிர சாயி பக்தர்கள். எனது மாமியார் தொண்டு தொண்டு என சாயியின் பெயரால் ஊருக்கு உழைப்பவர்.

எனது மனைவியின் வாழ்வில் சாய்பாபா நிகழ்த்திய ஒரு சிறிய அதிசயம். எனது மனைவி கறுவுற்றிருப்பதை சாயிபாபா, அவளின் கனவில் வந்து உணர்த்தி அதை அவளது தாயாரிடம் (அதி தீவிர சாயி பக்தையான எனது மாமியாரிடம் ) தெரியப்படுத்தச் சொன்னார். அதனால்
எனது மகனுக்கு சாய்ராம் என்றொரு பெயரும் உண்டு.எனது சித்தப்பா
வீட்டில் இருந்த சாயி புகைப்படத்தில் இருந்து விபூதி பல நாட்களுக்கு கொட்டிக்கொண்டிருந்த அதிசயமும் நடந்துள்ளது.

ஆந்திராவில் ஏதோ ஒரு வறண்ட பகுதியில் தன்னை வெளிப்படுத்திக்கொண்ட மஹாசக்தியானது, தனது அமைதியான அன்பு, தொண்டு மற்றும் சத்திய போதனையால், தமிழகத்தில் இருந்த என்னிடம் ஒரு நல்வித்தை விதைப்பதும், நம்பிக்கையை வலுப்படுத்துவதும் போன்ற செயல்களெல்லாம் தன்னலமில்லாத
ஞானிகளுக்கு மட்டுமே சாத்தியம். அதனால்தான் சொல்கிறார்களோ
"உலகம் என்பது உயர்ந்தோர் மாட்டு" என்று.

கலைஞருக்கு நன்றி தெரிவித்து முன்பே ஒரு பதிவு போடவேண்டும் என நினைத்திருந்தேன், வேலையிலா பட்டதாரிகளுக்கு உதவித் தொகை அறிவித்தபொழுது. தொகை சிறியதாக இருந்தாலும், வேலைக்காக ஒரு விண்ணப்பம் அனுப்பவாவது அந்த தொகை உதவும். நானெல்லாம் ஒரு அப்ளிகேஷன் அனுப்ப பணம் இல்லாமல் அவதிப்பட்டவன். நேர்முகத்தேர்வுக்கான அழைப்பு வந்திருந்தும், பிரயானம் செய்ய காசு இல்லாததால் இந்திய விமானப் படை வேலையை தவற விட்டவன். எனவே வேலையில்லா பட்டதாரிகளுக்கான உதவியின் மகத்துவம் எனக்கு பெரிதாக தெரிகிறது. நமது வரிப்பணம்தான், இருந்தாலும் சரியான விஷயத்திற்கு அளிக்கப்பட்டதால், பல பேர் வாழ்வில் ஒளியேற்றும்.

எம்பத்திரண்டு வயதுவரை நாத்திகக் கொள்கையில் ஊறியவருக்கு
வலிய சென்று பாபா ஆசி வழங்கி உள்ளார், என்ன ஒரு பாக்கியம் பாருங்கள். தான் நாத்திகவாதியாக இருந்தாலும், தனது குடும்ப உறுப்பினர்களின் ஆத்திக கொள்கைக்கு மதிப்பளிப்பது என்பது எவ்வளவு பெரிய பக்குவம். அந்த பக்குவத்திற்கும், தெளிவிற்கும் கிடைத்த அங்கீகாரமாக இந்த வலிய தேடிச் சென்ற ஆசிகளை எடுத்துக் கொள்ளலாம்.

மேலும் துறவிகளிடமும், ஞானிகளிடமும் பாகுபாடு என்பதே கிடையாது
என்பதற்கும் இந்த நிகழ்வு ஒரு சாட்சியாகிவிட்டது.

அறம் என்பதை தமது வாழ்க்கையின் செய்தியாக உலகிற்கு கொடுக்கும் துறவிகளும், ஞானிகளும்தான் பாரதத்தின் உண்மையான அடையாளம்.
என்றென்றும் அன்புடன்,
பா.முரளி தரன்.

3 comments:

BadNewsIndia said...

நல்ல பதிவு.

கருணாநிதி தன் வீட்டாரின் இறை அன்பை தடையாமல் இருந்தது வியப்பாக இருந்தது.

நல்ல செய்தி. அவர் நம்பிக்கை அவர்க்கு; மற்றவர் நம்பிக்கை மற்றவர்க்கு. நன்று.

Anonymous said...

பேஷ் ! ஊருக்கு செய்யும் உபதேசம் வீட்டில் எடுபடாவிட்டால் பெருந்தன்மை ஆகிவிடுமா? இத்தகைய பெருந்தகையாளர் குறைந்த பட்சம் மாற்று நம்பிக்கையாளர்களின் மனம் புண்படாத வகையில் பேசியும் நடக்காமலுமிருந்தால் அதுவே அவர்கள் செய்யும் பெரிய தொண்டு. குட்டையை குழப்பி மீன் பிடிப்பவர்களுக்கு எதற்காக நற்சான்றிதழ். நாம் சத்திய சாயியின் செயலுக்கு காரணம் தேட வேண்டியதில்லை. அவர்கள் மிக மிக உயரத்தில் இருப்பவர்கள். விமானத்திலிருந்து பார்ப்பவர்க்கு கீழே மரம், செடி புல் எல்லாம் ஒன்றே. அவை நடுவே வித்தியாசம் காண முடியாது.

Anonymous said...

Man, You missed the chance!!
You should have informed that to
a magazine reporter for instant success in TamilNadu!!

Guys accept the reality first!!

Nothing can come out!! There may be a hole in the photo and behind that there may be a Thiruneer producer!!