Friday, February 02, 2007

சில ஷொட்டும்; ஒரு குட்டும்.

இந்தியக் குடியரசு தினத்தை முன்னிட்டும், சவுதி அரசரின் இந்திய விஜயத்தின் ஓராண்டு நிறைவை நினைவு படுத்தும் வகையிலும், விழாக் கோலம் பூண்டது ஜெத்தா நகரம். தமிழ் சங்க விழாவிற்காக இந்தியாவிலிருந்து பேராசிரியராக வந்திருந்த ஞானசம்பந்தம் மருத்துவராக திரும்பிப் போனார். அப்புறம் என்னங்க?. வாய் விட்டு சிரிச்சா நோய் விட்டு போகும்னு சொல்லியிருக்காங்கத்தானே? சுமார் ஒரு மணி நேரம் தொடர்ந்து ஜெத்தா வாழ் தமிழ் மக்கள சிரிக்க வச்சிருக்காருங்க. அந்த வகையில பார்த்தா மக்கள வாய்விட்டு சிரிக்க வெச்சு, அவங்க நோய் நொடிகள போக்கடித்த பேராசிரியர் ஞான சம்பந்தம் ஐயாவ ஏன் டாக்டர் ஞானசம்பந்தம்னு கூப்புடக்கூடாதுங்கறன்?.

தமிழ்சங்க நிகழ்ச்சிகள் அனைத்தும் மிகச் சிறப்பா இருந்ததுங்க.
சந்தர்பம் கிடைத்தால், இந்த நிகழ்ச்சியின் சிறப்பை ஜெயா டிவியில் தான் அளிக்கும் இன்றைய சிந்தனை ( நிகழ்ச்சியின் பெயர் சரிதானே?. நான் டிவி பார்ப்பதில்லை ) நிகழ்ச்சியில் குறிப்பிடுவேன் என்று கூறி கரகோஷங்களை அள்ளிச் சென்றார் பேராசிரியர் ஞானசம்பந்தம் ஐயா அவர்கள்.

தமிழ் சங்க நிகழ்ச்சியின் டாப் மூன்று என்று மக்கள் என்னிடம் தெரிவித்தவை.

1. பேராசிரியர் ஞானசம்பந்தம் அவர்களின் பட்டி மண்டபம்.
2. குழந்தைகளின் அனைத்து நடனங்களும்.
3. மூத்த வலைப்பதிவாளர் எண்ணம் ஆசாத் அவர்களின் சிலம்பாட்டம்
மற்றும் கவியரங்கம்.

மறு நாள் ஆந்திர பிரதேச நாள் என்று பெயர் வைத்து விழா. எனது அலுவலகத்தில் பணிபுரியும் ஆந்திராவைச் சேர்ந்த ஒரு கடைநிலை
ஊழியர் இந்த நிகழ்ச்சிகளை பார்க்க வேண்டும் என மிக ஆவலாக இருந்தார் ( நேற்றைய தமிழ் நிகழ்சிக்கும் இவர் வந்திருந்தார்). நான் மிக களைப்பாக இருந்தாலும், அவர் மீது உள்ள மரியாதையால், அவரின் விருப்பத்தை நிறைவேற்ற அவரை அழைத்துச் சென்றேன்.

இவர் வயது அய்ம்பது, பேரன் பேத்தி எடுத்தவர். எழுத படிக்க தெரியாது.
ஆனால் மிக அற்புதமான உழைப்பாளி. வேலையில் உள்ள திறமையின் காரணமாக பல பரிசுகளை வென்றவர். இருவருக்கும்
தூக்கம் சொக்கியதால் வீட்டுக்கு கிளம்பினோம். வரும்போது அவர் ஒரு உணவு விருந்துக்கான செய்தியை கேட்டு விட்டார்.

முரளி அங்கு ஹைதராபாத் பிரியாணி போடுராங்களாம், நான் போய்

சாப்பிட்டு விட்டு வருகிறேன் என்று போனார்.போன வேகத்தில் திரும்பி

வந்தவர், உள்ள விட மாட்டேங்கிறாங்கப்பா நீ வந்து என்னவென்று கேள் என்றார். நான் சென்று அந்த நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களிடம் நடத்திய உரையாடல்.

காசு கொடுத்தால் அனுமதி உண்டுதானே ஏன் மறுக்கிறீர்கள்.

கார்ட் வேண்டும்.

கார்ட் என்றால் டோக்கனா? அது எங்கே கிடைக்கும்?

இங்குதான் எங்காவது கிடைக்கும்.

எனது பக்கத்தில் இருந்தவர்: இங்கு அனைத்து ஸ்டாலிலும் கேட்டு விட்டேன். யாரும் எங்களிடம் கார்டு கிடையாது என்கிறார்கள்.

நான்: கார்டு என்றால் பாஸா. பாஸ் உள்ளவர்களுக்கு மட்டும்தான் அனுமதி என்றால் அதையாவது கூறுங்கள், நாங்கள் போய்விடுகிறோம்.

உணவு விடுதி நபர்: பதில் சொல்லாமல் அமைதியாக இருக்கிறார்.

நான்: பர்ஸிலிருந்து பணம் எடுத்துக் கொடுத்து, ஒரு நபருக்கு அனுமதி கொடுங்கள் என்றேன்.

உணவு விடுதி நபர் பணம் வாங்க மறுத்தார்.

எங்கள் சம்பாஷனை நடந்து கொண்டிருந்தபோது ஷெர்வானி அணிந்திருந்த ஒரு நபர் அத்துமீறி அந்த விருந்து நடக்கும் கட்டிடத்தில் நுழைய முயன்றார். இரண்டு பேர் முரட்டுதனமாக அவரை தடுத்து நிறுத்தி வெளியேற்றினார்கள். அவர் மிகக் கோபம் கொண்டு சரி சவுண்டு விட்டுக் கொண்டிருந்தார்.

இதையெல்லாம் பார்த்த எனது நண்பர் வேண்டாம் விடுப்பா நாம் வீட்டுக்குபோகலாம் என்று கூறிவிட்டார். அவருக்கு அனுமதி மறுக்கப் பட்டது அவரது தன்மானத்தை பாதித்திருக்க வேண்டும். போகும் வழியில் ஒரு ஹோட்டலில் நாங்கள் உணவு உண்டோம். அவர் விடாப்பிடியாக நான்தான் பில்லுக்கு பணம் கொடுப்பேன் என்று கொடுத்து விட்டார். அது அவரது ஒரு நாள் சம்பளம். எங்ககிட்டயும் பணம் இருக்கு, எங்களால பணம் கொடுக்கமுடியாதா என்றெல்லாம் புலம்பிக் கொண்டே வந்தார்.

எனக்கு அந்த நிகழ்ச்சி ஆரம்பத்திலிருந்தே வெறுப்பாய் இருந்தது. பெயர்தான் ஆந்திரபிரதேச நாள். ஆனால் ஆரம்பத்திலிருந்தே ஹைதராபாத் ஹைதராபாத் என ஒரே ஹைதராபாத் மற்றும் சார்மினார் பெருமைதான். ஹைதராபாத் இந்தியாவில் இனைந்து பல வருடங்கள் ஆகிவிட்டன என ஹைதராபாதிகள் மறந்து விட்டார்கள் போலும்.

நான் சவுதி வந்த புதிதில் இப்படித்தான் என்னிடம் ஒருவர் நான் ஹைதராபாதி, ஹைதராபாதி என சொல்லிக்கொண்டே இருந்தார்.

நான் அவரிடம் இந்திய ஹைதராபாத்தா? பாகிஸ்தான் ஹைதராபாத்தா?என்று கேட்டேன். சற்றே கடுப்பான அவர் இந்தியாதான் என்றார். நான் உடனே ஓ நீங்கள் இந்தியரா என்றேன். சவுதியில் இவனுங்க தற்பெருமை தாங்க முடியலப்பா.

நான் எனது நண்பரை கல கலப்பூட்டுவதற்காக சொன்னேன். விட்டு தள்ளுங்க, அவனுங்க இத்துப்போன சார்மினார்ல இடி வுழ அவனுங்க ஊசிப்போன பிரியாணில பல்லி வுழ என்றேன். நண்பர் சிரித்து மனம் லேசானார்.

என்றென்றும் அன்புடன்,

பா.முரளி தரன்.

No comments: