Tuesday, October 31, 2006

பற்றவைப்பு

கேளுங்கள் தரப்படும். பற்றவைப்பு சம்பந்தமான உங்கள் கேள்விகளுக்கு இந்த பதிவில் முடிந்தவரை எளிய தமிழில் பதில் தர ஆசைப்படுகிறேன். ப்ளாக் தொடங்கிய சமயத்திலேயே மனதில் இருந்த எண்ணம்தான். இன்றுதான் அறிவிக்க வேண்டுமென தோன்றியது. கேள்வி பதிலுடன் கூடவே இந்த துறை சம்பந்தமான வளர்ச்சிகளையும், எனது அனுபவங்களையும் பதிய ஆசை.
முதல் கேள்வியை நானே கேட்டுவிடுகிறேன். கேள்வியும் நானே, பதிலும் நானே.

1. ஆமாம், இந்த பற்றவைப்பு-ன்னா என்னாப்பா?. கேள்விப்படாத மாதிரி
இருக்கே?. அத சொல்லு முதல்ல.
பற்றவைப்பு - welding.

Friday, October 27, 2006

பெண் என்பதால்.

இந்தியாவில் விடுமுறை முடித்து சவுதி திரும்பிய எனக்கு, அலுவலகத்தில் இரு புதிய முகங்கள் காண கிடைத்தது. இருவரையும் எனது ரூம் மேட் சமீலாவுடன் பார்த்தேன். விடுமுறைக்கு செல்லும் முன் எனக்கும் சமீலாவிற்குமான உறவு எலியும் பூனையுமாக இருந்தது.

அவன் விடுதலைப் புலிகளை தீவிரவாதியென்பான், நான் போராளிகள் என்பேன். அவன் இரவு ஒன்பது மணிக்குள் உறங்க வேண்டுமென்பான், நான் ஒரு மணிவரை விளக்கெரித்து அவன் தூக்கம் கெடுப்பேன். நான் தியானம் பழகுவேன், அவன் மேற்கத்திய இசையை உரத்து ஒலிக்கச் செய்வான். இரண்டு பேருக்கும் உரசல் இருந்து கொண்டே இருந்தது. நேரடியாக மோதிக்கொள்ளாத அளவுக்கு, நண்பர்கள் எங்கள் இருவரையும் கட்டுக்குள் வைத்திருந்தனர்.

இப்படி எலியும் பூனையுமாக இருந்த இருவரும், இந்த இரு புது முகங்களின் வருகையால் ஒன்று சேர்ந்தோம். ஒருவர் ஆண் மற்றொருவர் பெண்.....பிறந்து ஐந்து நாட்களே ஆன இரு பூனைக்குட்டிகள்.

பூனைகளின் தாயார் அவற்றை எங்கள் வேர்ஹவுஸில் விட்டுச் சென்று விட்டதால், தான் அவற்றை பராமரிப்பதாக சமீலாவும்......... சமீலா அந்த குட்டிகளை தொட்டதால்தான், அவற்றின் தாயார் அவற்றை விட்டுச் சென்று விட்டதாக ( குற்றச் சாட்டு ) நண்பர்களும் என்னிடம் சொன்னார்கள்.

ஏனோ, அலுவலகத்தில் யாருக்கும் பூனைக்குட்டிகளை பிடிக்கவில்லை. எல்லோரும் பூனைக் குட்டிகளை, வேர்ஹவுஸிலிருந்து வெளியே எறிந்து விடவேண்டும் என மிகப் பிடிவாதமாக இருந்தார்கள். சமீலாவின் கோபத்துக்கு பயந்து அதைச் செய்யாமல் இருந்தார்கள். ஆனால் ஒரு குழுவாக இனைந்து, பூனைகளுக்கு எதிரான போராட்டத்தை நடத்திக் கொண்டிருந்தார்கள்.

சமீலா, பால் கரைத்து மூன்று வேளையும், பூனைகளுக்கு ஸ்பூனில் உணவு ஊட்டிக் கொண்டிருந்தான். அவன் தனது வேலையைச் சரியாகச் செய்யாமல்,
சதா சர்வ காலமும் பூனைகளோடு விளையாடுவதாக, அவனுக்கு எதிராக எங்கள் மேனேஜரிடம் சென்று ஏனையோர் புகார் செய்திருந்தனர். என்னிடமும் அவனுக்கும்,பூனைகளுக்கும் எதிரான கருத்துக்களை சொல்லி கொண்டிருந்தனர்.

முரளி, இத்தன சின்ன குட்டிகள, வெளிய எறியச் சொல்றாங்க, பால் கூட ஸ்பூனில் கொடுக்க வேண்டி இருக்கு. வெளியே எறிஞ்சா ஒரே நாள்ல செத்துரும்......இல்லன்னா வண்டி அடிச்சி போட்ரும்...
என்னால எறிய முடியாது....என்று புலம்பித் தீர்த்தான்.

அவனுடைய பிடிவாதத்தால் வன்மம் கொண்ட ஏனையோர், மேலும் அதிக புகார்களை அவன் மீது வாசித்துக் கொண்டிருந்தார்கள். அனைத்து ஊழியர்களின் புகாரை அடுத்து, சமீலாவிடம் எங்களது மேனேஜர் ஒரு விசாரனையை நடத்தி, விளக்கம் கேட்டுக் கொண்டிருந்தார். இதை அறியாத நான், இரு பூனைகளுக்கும் பால் குடுக்க வசதியாக , இரு பீடிங் பாட்டில் வாங்கிக் கொண்டு அலுவலகத்தில் நுழைந்தேன். இப்போது நாங்கள் இருவரும் எதிரிகள்போல் மற்றவரால் பார்க்கப்பட்டோம்.

பூனைகள் சிறிது வளர்ந்த உடன், அவற்றை வெளியேற்றி விடுகிறோம் என எங்கள் மேனேஜருக்கு உறுதிமொழி கொடுத்து அப்போதைக்கு அவரிடம் இருந்து தப்பித்தோம்.

அவற்றை வளர்ப்பதால் சமீலாவும், பால் புட்டி வாங்கிவந்து அவ்வப்போது அவற்றிற்கு பாலூட்டுவதால் நானும், பூனைகளின் தந்தைகள் என அலுவலக நண்பர்களால் அழைக்கப்பட்டோம்.

வார இறுதியில், மேலும் ஒரு பிரச்சனை. இரண்டு நாட்கள் குட்டிகளை விட்டுச் சென்றால் உணவின்றி இறந்துவிடும் என்பதால், குட்டிகளை வீட்டிற்கு எடுத்துச் சென்று, பால்கனியில் விட்டிருந்தோம்.

குட்டிகள் ஹாலில் நுழைவதற்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர் ( ஒன்னுக்கு, இரண்டுக்கு பிரச்சனைதான் ). அதனால் பால்கனி கதவை மூடி வைத்திருந்தோம். இப்போது காற்றோற்றம் இல்லை என எதிர்ப்பு தெரிவித்தார்கள். நாங்கள் அவர்களை சமாதானம் செய்தால், அப்பொழுதுக்கு அமைதியாகிவிட்டு சிறிது நேரம் கழித்து திரும்பவும் எதிர்ப்பாளர்கள் ஆனார்கள்.

எப்படியோ இரண்டு வாரங்கள் நகர்த்திவிட்டோம். குட்டிகளும் ஓடப் பழகி இருந்தன. ஆனால் புட்டிப் பால் மட்டும்தான் குடித்தன. தட்டிலிருக்கும் பாலை நக்கிக் குடிக்க அவற்றிற்குத் தெரியவில்லை. இந்த லட்சனத்தில் திட ஆகாரம் எங்கிருந்து குடுப்பது.

ஷாப்பிங் மால்களில் சுற்றியபோது, cat food என கண்ணில் பட்டது. கையில் எடுத்துப் பார்த்தால், மீன் மற்றும் எலி சேர்த்து செய்யப்பட்டதாக இருந்தது. பின்னங்கால் பிடரியில் அடிக்க ஓடி வந்துவிட்டேன். திட உணவு கொடுக்கும் முன், சிக்கன் எலும்புகளை கொடுத்து கடிக்கப் பழக்கலாம் எனவும், அந்த சுவைக்கு பழக்கிய பிறகு வேறு உணவுகளை கொடுக்கலாம் எனவும் நானும் சமீலாவும் சேர்ந்து முடிவெடுத்தோம். எலும்புகள் வாங்கி வரும் பொறுப்பை சமீலா ஏற்றுக் கொண்டான்.

ஆனால் பாலைத்தவிர வேறு எந்த உணவையும் அவை தொட மறுத்தன. எத்தனை நாள் அவை பால் குடிக்கும் என்ற விவரமும் தெரியவில்லை. பூனைகளின் ஆயுட்காலம் பன்னிரண்டு வருடங்கள் எனவும் அதில் பால் குடிக்கும் பருவம் ஒரு வருடம் எனவும் கூறி, ஒரு நண்பன் வேறு வயிற்றில் புளியைக் கரைத்தான். நாங்கள் இருவரும் கையில் பால் புட்டியோடு அலைந்து கொண்டிருந்தோம். எப்படியோ பூனைகள் அவற்றின் அழகால், துறுதுறுப்பால் மேலும் இரு ஆதரவாளர்களை சேர்த்துக் கொண்டன.

இப்போது, பூனைகள் வேர்ஹவுஸில் இருக்க பெரிய எதிர்ப்பு இல்லை என்றாலும், வார இறுதியில் வீட்டிற்க்கு கொண்டு வருவதற்கு ஒரு சாரார் எதிர்ப்பு தெரிவித்துக் கொண்டுதான் இருந்தார்கள். அதனால் குட்டிகளை இனிமேல் பால்கனியில் விடுவதில்லை எனவும், அதற்கு பதிலாக
மாடிப் படிகளுக்கு அருகில் உள்ள இடை வெளியில் விடுவது எனவும், ஆனால் குட்டிகள் சாலைக்கு சென்றுவிடும் அபாயம் இருப்பதால் வீட்டின் மெயின்டோரை எப்பொழுதும் மூடியே வைத்திருப்பது என்ற முடிவும் பலத்த எதிர்புகளுக்கு இடையே எடுக்கப்பட்டது. இப்படியே மேலும் இரண்டு வாரங்கள் கடந்தன.

இரண்டு குட்டிகளில் ஒன்று ஆண், மற்றொன்று பெண். ஆண் வேகமாகவும், பெண் சிறிது மந்தமாகவும் இருந்தது. குட்டிகளின் இருப்புக்கு எதிர்ப்பு தெரிவித்த சிலர் "ஆயிரம் இருந்தாலும் ஆம்பளை ஆம்பளைதான்" என்று அல்ப சந்தோஷம் வேறு பட்டுக்கொண்டார்கள். ஆனால் நான் கூர்ந்து கவனித்ததில், பெண் குட்டியிடம், உள்ளுணர்வு அதிகமாக இருந்ததைக் கண்டேன். குதிப்பது, தாவுவது, ஏறுவது, உரசுவது போன்றவற்றை பெண்குட்டிதான் முதலில் செய்தது. ஆண் இவைகளை செய்ய சிறிது முயற்சி செய்து கொண்டிருந்தது.

ஒரு வார இறுதியில் ( வெள்ளிக் கிழமை ) நன்றாக ஊர்சுற்றிவிட்டு, விடியற்காலை நான்கு மணிக்கு படுக்கைக்கு சென்ற சமீலாவும் நானும், தாமதமாக எழுந்ததால், ஒரே ஓட்டமாகக் கிளம்பி, பதினைந்து நிமிடம் தாமதமாக அலுவலகம் சென்றடைந்த பிறகுதான், பூனைகளுக்கு பால் கொடுக்க மறந்ததும்,
வீட்டிலேயே விட்டுவிட்டு வந்து விட்டதும் ஞாபகம் வந்தது.

நண்பன் மஹபூஸ், சமீலாவிடம், பூனைகளை தெருவில் பார்த்ததாக சொல்லிக் கொண்டிருந்தான். யாரோ மெயின் டோரை திறந்து வைத்திருந்ததால் பூனைகள் தெருவுக்கு வந்துவிட்டது போலும். குட்டிகள் தெருவில் சுற்றிகொண்டிருந்ததை அத்தனை பேர் பார்த்திருந்தும், பூனை எதிர்ப்பாளர்கள் எங்களிடம் விஷயத்தைச் சொல்லாமல் விட்டுவிட்டதால்,
"இதயமற்றவர்கள்" என அனைவரையும் ஏசிக் கொண்டிருந்தான் சமீலா.

ஒரு அப்பாய்ண்ட்மெண்ட் இருக்கிறது என்ற பொய்யைச் சொல்லி, அலுவலகத்திலிருந்து உடனே கிளம்பிய நான், வீட்டிற்கு சென்று பூனைகளை தேட ஆரம்பித்தேன். எங்கள் வீட்டிலிருந்து ஒரு முன்னூறு மீட்டர் தொலைவிலிருந்த ஒரு குப்பைத்தொட்டியின் அருகில் காக்கைகளால்
விரட்டப்பட்டுக் கொண்டிருந்தது பெண் குட்டி.

நான் காரிலிருந்து இறங்கியதும் ஓடி வந்து காலை கட்டிக்கொண்டு .....மியாவ்......மியாவ் என இடைவிடாமல் கத்த ஆரம்பித்து விட்டது (எனது கறுப்பு காலனிகளை அதற்கு அடையாளம் தெரியுமோ?.) பசியெடுத்தால் இப்படித்தான் விடாமல் காலைசுற்றி வந்து கத்தித் தீர்த்து விடும்.

எத்தனை தேடியும் ஆண் குட்டியை கண்டு பிடிக்க முடியவில்லை.
குப்பை பொறுக்கும் ஆப்பிரிக்கர்களிடமும், தெருவை சுத்தம் செய்து கொண்டிருந்த பெங்காலிகளிடமும் விசாரித்துக்கொண்டே சுற்றி சுற்றி வந்தேன். எங்கள் குடியிருப்பு பகுதியில் இருக்கும் அத்தனை குப்பை தொட்டிகளையும், சந்து பொந்துகளையும் விடாமல் தேடிப்பார்த்தேன்.

சவுதியில் பூனைகளின் எண்ணிக்கை மிக அதிகம். ஒவ்வொரு தெருவிலும், காருக்கு அடியில், ஏதோவொரு பூனை கண் மூடி ஏகாந்தத்தில் கிடந்தது. சாலையில்
குனிந்து , படுத்து என அத்தனை விதமாகவும் தேடியும் ஆண் குட்டி தட்டுப்படவில்லை.

பெண் குட்டி பாலுக்காக கதறிக் கொண்டிருந்தது. பெண் என்பதால் இதை புறக்கனித்துவிட்டு , ஆண் குட்டியை மட்டும் யாரோ எடுத்துச் சென்று விட்டார்கள் என நினைத்துக் கொண்டேன். வீட்டிற்குச் சென்று குட்டிக்கு பால் கொடுத்துவிட்டு, பத்திரப் படுத்திவிட்டு, எனது வேலைகளை தொடர தொழிற்பேட்டைக்கு சென்றுவிட்டேன்.

சாயங்காலம் வீட்டிற்கு வந்ததும், மனது உறுத்தலாகவே இருந்தது.
நானும், சமீலாவும் ஆளுக்கு ஒரு பக்கமாக மீண்டும் தேடுதல் வேட்டையை
ஆரம்பித்தோம். antha shuf sageer qitt hinna?( நீ பார்த்தாயா குட்டிப் பூனையை இங்கு) என்று தெருவில் விளையாடிக்கொண்டிருந்த அரபிக்குழந்தைகளை விசாரித்ததில் ஒரு துப்பு கிடைத்து, ஒரு மணல் மேட்டின் மேல் படுத்து முனகிக் கொண்டிருந்த ஆண்பூனையையும் கண்டுபிடித்து விட்டோம்.
மிக சந்தோஷமாக இருந்தது.

ஆனால் குட்டியின் குணம் மிகவும் மாறி இருந்தது. பெரிய பூனைகளால் தாக்கப்பட்டிருக்கும் என நினைத்தோம். பால் குடிக்க மறுத்தது.
ஐந்து நாள் ரம்தான் விடுமுறையை ரியாத்தில் கழித்துவிட்டு திரும்பிய என்னிடம்,
பால் குடிக்காமலே இருந்து, ஆண் குட்டி உயிரை விட்டுவிட்டதாக சமீலா வருத்தத்தோடு சொன்னான்.

ஆனால் பெண் என்பதால் அலட்சியமாக பார்கப்பட்ட குட்டி, தட்டிலிருந்து பால் குடிக்கவும், திட உணவு உண்ணவும் ஆரம்பித்து விட்டது. ஏதோ ஒரு சாதனை செய்துவிட்டது போல சோகத்திலும் இருவரும் மகிழ்ந்தோம்.
என்றென்றும் அன்புடன்,
பா. முரளி தரன்.

Thursday, October 19, 2006

ஸ்ரீவித்யா

ஸ்ரீவித்யா அற்புதமான நடிகை.வசந்தின் ஒரு படத்தில் கவுதமியின் அம்மாவாக மிகச் சிறப்பாக நடித்திருப்பார்.அப்புறம் அந்த அபூர்வ ராகங்கள் மறக்க முடியாத நடிப்பு.

அமரன் படம் என்று நினைக்கிறேன்,ஒரு பாடல் கூட பாடியிருப்பார்.

மிக நாகரீகமான,குடும்ப பாங்கான பாரம்பர்ய இந்திய அழகு.முக்கியமாக அந்த கண்கள். தீட்சன்யம் என்பதற்கு உதாரனம்.

தனிப்பட்ட வாழ்வில் மிகப்பெரிய சோகத்தை சுமந்து வாழ்ந்த பெண்.

கல்லூரி வாழ்வில் ஏற்பட்ட கண்மூடித்தனமான காதலில் தேடிக்கொண்ட துனையால், தன் வாழ்வில் சந்தித்த துயரங்களை ஒரு பத்திரிக்கை பேட்டியில் சொல்லியிருந்ததாக ஞாபகம்.

கடைசிவரை அவரது கணவர்,அவருக்கு விவாகரத்து தரவில்லை என நினைக்கிறேன்.

ஒரு பெண் எழுத்தாளரிடம் (அனுராதா ரமனன் (அ )சிவசங்கரி (அ )வாசந்தி (அ ) இந்துமதி என நினைக்கிறேன் )....குழந்தை வயிற்றில் இருக்கும் பொழுது, அந்த உணர்வு எப்படி இருக்கும் என்று கேட்டு ஆதங்கப் பட்டதாகவும் படித்திருக்கிறேன்.

சட்ட சிக்கலில் வாழ்க்கையை தொலைத்த அவருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள்.

"மங்கையராய்ப் பிறப்பதற்கே மாதவம் செய்திடல் வேண்டுமம்மா" என்னும் இந்த நாட்டினில்தான் பெண்களுக்கு எத்தனை இன்னல்கள்.
வருத்தத்துடன்,
பா.முரளி தரன்.

Tuesday, October 17, 2006

ஜனனீ ஜன்ம பூமி - 1

இரண்டு மாதம் தாய் நாட்டு வாசம். இந்தியாவில் இருந்து திரும்பி வந்து பதினைந்து நாள் ஆன பிறகும் ஊர் வாசனை மறக்க மாட்டேன் என்கிறது.
அதனால் விடுமுறை நாட்களை பற்றி பதிவு போட்டு விடவேண்டியதுதான் என முடிவு செய்தேன்.

இரண்டு வருட சவுதி வாழ்க்கைக்குப் பிறகு மீண்டும் இந்தியா.சென்னை விமான நிலையம் வாசல் தொட்டதும், கண்கள் முதலில் தேடியது குழந்தையைத்தான். இரண்டரை வயதில் விட்டுச் சென்றது. அடிக்கடி தொலைபேசியில் / கனினியில் பேசுவதுதான் என்றாலும், மெல்லிய உடலும்,
பிஞ்சு கைகளும் ஸ்பரிசிக்க, வாரி அனைப்பது போலான மகிழ்ச்சி வருமா.

கூட்டத்தை விலக்கிக் கொண்டு, முதல் ஆளாய் ஓடி வந்து, பாய்ந்து அனைத்துக் கொண்டான் குழந்தை. தன்னலம் அற்ற அந்த அன்பை, முழுதும் உள் வாங்கிக் கொண்டேன். இந்த இடத்தில் ஒரு வார்த்தை. எனது வாழ்வின் மிக சந்தோஷமான தருனம் எது எனக் கேட்டால், எனது குழந்தையால் அனைக்கப் படுவதும், எனது குழந்தையை அனைப்பதும் என நிச்சயமாகச் சொல்வேன்.

எனது சகோதரரின் பெண் குழந்தையும், எனது சகோதரியின் மைத்துனர் குழந்தையும் ( பெண் ), சொப்புச் சாமான் வைத்து விளையாடிக் கொண்டிருந்த போது, ஒரு குழந்தை பொம்மையை சாப்பிட வைத்து, தாலாட்டி, தூங்க வைத்தார்கள். இதை கவனித்த நான், எனது குடும்ப பெண்களிடம் ஒரு கேள்வியை முன் வைத்தேன்.

குழந்தைகள், தாயார் செய்ததை நினைவில் நிறுத்தி இதேபோல் செய்கிறார்களா?. அல்லது இது ஒரு பெண் குழந்தையின் இயல்பான குணமா?.

அவர்கள் பதில் இரண்டும்தான். கூடவே ஒரு பெண் தாய்மையை மிக விரும்புகிறாள் என்றும் பதில் அளித்தார்கள்.

ஆனால், ஆண்கள் கதை?. ஆண்களிடம் இந்த கேள்வியை கேட்டதில்லை.
பிற ஆண்கள் எவ்வாறு உணர்கிறார்கள் என தெரியவில்லை. ஆனால் நான் திருமணம் நிச்சயமான உடனேயே, நல்ல ஞானமுள்ள குழந்தை வேண்டி இறைவனை பிரார்த்திக்க ஆரம்பித்துவிட்டேன்.

குழந்தையிடம் சிறிது கூட முகம்கோன நான் ஒரு பொழுதும் விரும்பியதில்லை. சமத்து என்ற சொல்லை தவிர வேறு மாதிரி விளித்ததில்லை. அதனால் அவன் என்னிடம் மிக ஒட்டுதலாய் இருப்பான்.

எப்பொழுதும், என்னிடமே ஒட்டிக் கொண்டிருந்ததால், அவனுக்கு கங்காரு என ஒரு செல்லப் பெயரை எனது தாய்மாமன் வைத்தார். என்னப்பா ஏர்போட்ல இறங்கினதுக்கே இத்தனை பில்டப்பா. ஓக்கே, எனது கங்காரு சமத்து குறித்தும், பிற விடுமுறை அனுபவங்கள்/உணர்வுகள் தொடரும்.
என்றென்றும் அன்புடன்,
பா. முரளி தரன்.

Saturday, October 07, 2006

தேன்கூடு போட்டி/விடுதலை/மாணிக்கம்

சாடாரென்ற பேருந்து குலுக்கலில் புத்தகத்திலிருந்து விலகிய கண் அந்த பெரியவர் மீது பட்டது. முதுமைக்கே உரிய அடையாளங்களோடு எனது இருக்கைக்கு பக்கத்தில் நின்று கொண்டிருந்தார். நான் அமர்ந்திருந்தது ஜன்னலோர சீட். ஐயா இங்க உட்காருங்க என்று எழுந்து வெளியே நின்றேன்.

அடுத்த நிறுத்தத்தில் பெரியவருக்கு அருகில் இருந்தவர் இறங்கிக்கொண்டார். நான் பெரியவருக்கு அருகில் மீண்டும் புத்தகப் புழுவாய்.

தம்பிக்கு எந்த ஊரு?.
நெய்வேலி.
இன்னும் மூனு மணி நேரம் போனுமே. அடுத்த ஸ்டாப்புல இறங்கின பக்கத்து சீட்டுக்காரன் எந்திரிக்காதபோது, தம்பி டக்குனு எந்திரிச்சி நின்னீங்களே, சந்தோஷம். நான் புன்னகை; மீண்டும் புழு.

என்ன புத்தகம் தம்பீ?.
குண்டலீனி யோகம்.
தம்பி பேரு என்னா?.
முரளீ தரன்.
தம்பி ஐயமாருங்களா?.
நான் தலையசைத்தேன்.
ஐயரு புள்ளைங்கள்ளாம் தங்கமாத்தான் இருக்கு. என் பேரன் படிக்கிற ஸ்கூல்ல நாப்பது புள்ளைங்க. ஒரே ஒரு ஐயரு புள்ள ஆனால் அதுதான் எல்லாத்தலயும் முதலா நிக்குது.
நான் புன்னகை.
நம்ம ஊரு போஸ்ட்மாஸ்டர் ஐயர் புள்ள பாக்க உங்கள மாதிரித்தேன் இருக்கும், அன்னிக்கி பென்ஷன் வாங்கப் போனன், ஐயா மெட்ராஸ்ல வேலை கிடைச்சு போறன் ஆசீர்வாதம் பன்னுங்கன்னு நெடுஞ்சான்கிடையா கால்ல வுழுந்திருச்சு. நான் கலங்கிட்டன், நம்ம புள்ளைங்கதான் நம்மள மதிக்க மாட்டேங்குது. ஒருத்தன் குடிச்சி கூத்தடிக்கிறான், இன்னோருத்தன் கூத்தியா வெச்சுக்கிட்டு குடியழிக்கிறான்.
நான் பேசியாகவேண்டிய இக்கட்டில்; ஐயா வாத்தியாரா இருந்திங்களா?.
இல்ல தம்பீ.
போஸ்ட் ஆபிசுக்கு பென்ஷன் வாங்கப் போனதா சொன்னீங்க.
தியாகி பென்ஷன் தம்பி.
தியாகி பென்ஷனா?.
ஆமாம் தம்பி நான் ஐ என் ஏ-வுல இருந்தேன்.
ஐ என் ஏ-வுலயா?. உடம்பு சிலிர்த்தது. எப்படி சேர்ந்தீங்க?.

என் தாய் மாமன் மலேயாவுல இருந்தாரு. அவரு பொண்ண கல்யாணம் கட்டனும்னு மெட்ராஸ்ல இருந்து கப்பல் ஏறி மலேயா போனன். அவரு குடும்பத்தோட சேர்ந்து ரப்பர் தோட்டத்துல வேலை செஞ்சேன்.

அப்பத்தான் சண்டை வந்துடுச்சு. ப்ளேன்ல வந்து குண்டு போட்டாங்க. குண்டுபோட்டதுல என்மாமன் குடும்பம் மொத்தமும் அழிஞ்சுப் போச்சு.
நான் ஜனங்களோட ஜனங்களா சேந்து நடக்க ஆரம்பிச்சிட்டன்.

அப்பத்தான் ஐ என் ஏ வுல சேரச்சொல்லி எல்லாரையும் கூப்டாங்க.
நான் சேர்ந்துட்டேன். நான் இருந்த படைக்கு பேரு குரங்குப் படை.

குரங்குப் படையா?.

ஆமாம் மரத்துமேல ஏறி நின்னு, எதிரிங்க வர்ராங்களான்னு பாத்து, பின்னால வர்ர நம்ம ஆளுங்களுக்கு தகவல் சொல்லி விடனும். ப்ளேன்ல வந்து தொடர்ச்சியா குண்டு போட்டுகிட்டே இருந்தாங்க. தமிழருங்க அதுக்கெள்ளாம் பயந்துருவம்மா என்ன. ஆனால் நாங்க எல்லாம் சிதறிப்போய்ட்டோம். நேதாஜீ வேற என்ன ஆனாருன்னு தெரியல. கால்நடையா நடந்து கல்கத்தா வந்தோம். நேதாஜீ வீட்டுக்குப் போனோம்.
விடுதலை கிடைச்சிடுச்சுன்னாங்க.ஒரு அட்ட குடுத்தாங்க.

நானும், என் கூட்டாளி செஞ்சி பக்கத்துக்காரன் நாலு வருஷம் முன்னாடித்தான் செத்துப் போனான், ரெண்டு பேரும் கிளம்பி ஊருக்கு வந்து கல்யாணம் முடிச்சிட்டோம்.

ஐயா உங்கள சந்திச்சதுல ரொம்ப பெருமையாவும், சந்தோஷமாவும் இருக்குங்க.

ஆனா ஊருல எல்லாரும் இந்த கிழவன் பென்ஷன வாங்கிட்டு சொகுசா இருக்கறான்னு பேசறாங்கப்பா.

அவங்கள வுடுங்க ஐயா. விடுதலை கிடைச்சதும் உங்களுக்கு எப்படி இருந்தது?.

பெருசா ஒன்னும் தோனல தம்பீ. ஏன்னா தக்கடா ரஹோ-ன்னு நேதாஜீ இந்த மார்ல கை வச்சு சொன்னப்பவே ( மார்பில் ஓங்கி இரண்டு முறை அடித்துக் கொண்டார் ) விடுதலை கிடைச்சிட்டமாரி இருந்தது

நான் அவரைக் கண்டு உணர்வு தடுமாறி உட்காந்திருந்தேன்.

தம்பி நான் இறங்கர ஸ்டாப் வந்துடுச்சு என்று எழுந்து நடந்து போனார்.

ஐயா பேரு சொல்லாமப் போறிங்களே.

மாணிக்கம் என்றார், கம்பீரமாக.
என்றென்றும் அன்புடன்,
பா. முரளி தரன்

Tuesday, October 03, 2006

தேன்கூடு போட்டி/விடுதலை

முரளி உன்னச் சொல்லி குத்தமில்லடா, உனக்கு மாசம் பதினஞ்சாயிரம் ரூவா சம்பாதிக்கர மாதிரி ஒரு வேலைய கொடுத்து, கிரண்பேடி வீட்டுக்கு பக்கத்தல பங்களாமாதிரி ஒரு வீட்ல சொகுசா தங்கவச்சாம் பாரு, நம்ம கம்பேனிக்காரன் அவன சொல்லனும்டா. மிதப்புடா,
சோத்துக்கு சிங்கி அடிச்சதும், வேலைக்கு நாயா அலைஞ்சதும் மறந்து போச்சா?. ... இது ராஜ்குமார்.

டேய் நீ சும்மா பொத்துரா, அவன் உசந்த விஷயத்த பத்தி பேசறான்..... இது இர்பான்.

உசந்த விஷயத்த பேசர அளவுக்கு இவன் ஒழுக்கமா? ஒரு நாளக்கி ஒரு பாக்கெட் சிகரெட்டு, வாரத்துக்கு நாலு தடவயாச்சும் ஜின்னுல எழுமிச்சம் பழத்த புழிஞ்சு சரக்கு. ஸ்டார் ஹோட்டல்ல சைட் டிஷ் வாங்காம
மட்ட ஊறுகாய நக்கிட்டு மானத்த வாங்குறவண்டா இவன்...இது ராஜ்குமார்.

ஆனா கவுச்சி சாப்பிடாமா கட்டுப்பாடாத்தான இருக்கான்....இது இர்பான்.

ஐயரு வூட்ல பொறந்திருந்தா நானும் அப்படித்தான் இருந்திருப்பேன். இந்த சண்டிகர் ஆபீசுல பொண்ணுங்ககிட்ட அதிக கடலை போடரது இவன்தாண்டா. அத்தன குட்டிகளுக்கும் இவனத்தான் புடிச்சிருக்காம், இவன் ஜென்டில் மேனாம். பஞ்சாப்புல குட்டிங்களுக்கு வெட்கம் மானமே கிடையாது....இது ராஜ்குமார்.

டேய் மசிராண்டி வாய மூடுறா, மரியாதை கெட்டுப்போய்டும்...உனக்கு அவங்களோட பேச ஹிந்தியும் வராது, இங்லீஷும் வராது, அந்த பொச்சரிப்புல பொண்ணுங்கள தப்பா பேசாத....இது நான்.

ஒக்கா மக்கா, நிறுத்துடா, யோக்கியன்மாரி பேசற. அன்னிக்கு சுக்னா லேக்காண்ட ஒரு பொண்ணு தெரியாம இடிச்சுட்டு போனப்பறம், மச்சான் மெத்துன்னு இருந்துதுடான்னு சொன்னவன்தாண்டா நீனு....இது ராஜ்குமார்.

ஆமாண்டா, உள்ளத சொன்னன், அதுக்காக நான் என்ன உன்னையமாரி நைட்டேல்லாம் நீலப்படம் பாத்தா அழிஞ்சிகிட்டு இருக்கேன்.
போடா வேலையப் பாத்துகிட்டு, நியாயம் பொளக்க வந்துட்டாரு....இது நான்.

எக்கேடும் கெட்டுப்போடா, நல்லா சமைச்சு நாலு வேலையும் நக்கர நாயி, நீயெல்லாம் திருவோடு ஏந்தப் போறன்னு சொன்னா எவன் நம்புவான். சாமியாராப் போரதா இருந்தா சீக்கிரம் போ. இருக்கறவன கிறுக்குப் புடிக்க வக்காத.....இது ராஜ்குமார்.

போத்தாண்டா போறன் என்று சொல்லி ஒரு நாள் யாருக்கும் தெரியாமல் இருப்பிடம் விட்டுப் போய் நின்ற இடம், ரிஷிகேஷ்.

ரிஷிகேஷில் முனி கீ ரேத்தீ என்ற இடத்தில் கால் பதித்தேன். பிறகு தேடியது சந்யாசம் வாங்க ஒரு வழியை. ஒரு மலை உச்சியில் இருந்த ஆஸ்ரமத்தில் வசித்த சாமியாரிடம் விஷயத்தைச் சொன்னேன்.

சாமி: ஏன் இந்த முடிவு?.
நான்: சாவு நிச்சயம்னு தெரிஞ்சுப்போச்சு, அதுக்கு முன்னால கடவுளை
உணர்ந்துடனும்னு நினைக்கிறேன்.
சாமி: எப்பேலேர்ந்து இந்த உணர்வு?.
நான்: அம்மாவோட மறைவுக்கு அப்பறம்.
சாமி: மயான வைராக்கியம் அதிக நாள் நிக்காது.
நான்: அது தொடக்கம்தான், தீவிரமானது அதுக்கு பிறகுதான்.
சாமி: எந்த அளவுக்கு தீவிரம்?.
நான்: குரு சிஷ்யன தண்ணியில அமுக்கி, வெளியில விட்டப்பறம், சிஷ்யன்
காத்துக்காக தவிச்ச தீவிரம். விவேகாநந்தர் கூட சொல்லியிருக்காரே;
தீவிரத்தோட அளவ பொறுத்து ஒரு மண்டலத்துக்குள்ளேயே இறை
அனுபவம் சாத்தியம்தான்னு.
சாமி: இது படிப்பறிவு.
நான்: அனுபவ அறிவும் உண்டு, காஞ்சி பரமாச்சாரியார் மூலமாக.
சாமி: தரிசனம் செஞ்சதுண்டா?.
நான்: குல குரு ஆனால் நேர்ல பார்த்தது கிடையாது. அவர் சமாதி ஆன
இரவு கனவுல வந்து ஆசீர்வாதம் பன்னிட்டு போனார். அந்த அனுபவம்
மட்டும் இல்லன்னா என்னிக்கோ நாத்திகன் ஆயிருப்பேன்.
சாமி: அப்ப தகுதி இருக்குன்னு நம்பற. வீட்ல அனுமதி
வாங்கியாச்சா?.
நான்: இல்ல, யார்கிட்டயம் சொல்லாம ஓடி வந்துட்டேன்.
சாமி: தப்பு, பெற்றோர்கள் சம்மதம் இல்லாம சன்யாசம் கொடுக்க மாட்டார்கள்.
நான்: சம்மதம் குடுப்பாங்கன்னு தோனல, ஆதி சங்கரை கூட அவங்க அம்மா
அனுமதிக்களையே அப்பறம் முதலை புடிச்ச நேரம்தான அனுமதிச்சாங்க.
சாமி: நீயே சொல்லிட்டியே, பெத்தவங்க அனுமதி முக்கியம்.
நான்: திரும்பி போற எண்ணம் இல்ல.
சாமி: சரி, ஒரு மூனு நாள் ஆஸ்ரமத்துல தங்கி இரு. நல்லா திரும்பவும்
யோசி. அப்பறம் பாக்கலாம்.

தினமும் காலையில் யோகாசனமும், பிரானாயாமமும் பிறகு நாள் முழுவதும் கங்கை கரையிலும், காடுகளுக்குள்ளும் அலைந்து திரிந்தேன்.
வீட்டை விட்டு ஓடி வந்து பண்டாரங்களாய் சுற்றியவர்களையும் சந்தித்தேன்.
அதில் ஒரு பண்டாரம் பாம்பு கடித்தால், உள்ளுக்கு வெத்தலையில் மிளகு வைத்து கொடுத்து, கடிவாயில் மிளகாயை அரைத்து தடவி கோழியோட
குதத்தை வைத்து அமுக்கினால், எரிச்சலில் குதம் இன்க் பில்லர் போல செயல்பட்டு விஷத்தை எடுத்துவிடும் என்று டிப்ஸ் வேறு கொடுத்தார். ஒரே தமாஷாக இருந்தது. இந்த விவாதமெல்லாம் நடந்த பொழுது இரவு மணி ஒன்று.
ராம் ஜூலாவிலிருந்து, நீல் கண்ட் வரை நடந்தே சென்றேன். எனது தகுதியைப் பற்றி நானே சுய விமர்சனம் செய்து கொண்டேன். நான் சந்நியாசி ஆவதற்கு தகுதியானவன்தான் என முழுதும் நம்பினேன். பூனூல் இரண்டாகப் பிரிக்கும் உடலின் கீழ் பகுதியில் உள்ள பசியையும், காமத்தையும் வென்று, மேல் பகுதியில் உள்ள இதயத்தையும், சுவாசத்தையும், அறிவையும் கட்டுக்குள் கொனர்ந்து கடவுளை உணர்ந்து விடலாம்.

அத்தனையும் மூன்றாவது நாள் காலைவரைதான். மலை மீதிருந்து கங்கையின் ஒட்டத்தை அவதானித்துக்கொண்டிருந்த பொழுது எனது பக்கத்தில் நின்று, என்னைப் பார்த்த ஜப்பானியப் பெண்ணின் புன்னகையில் அத்தனை வைராக்கியமும் அடித்துக்கொண்டு போய்விட்டது.

உள்ளேயிருந்து ஒரு குரல்; டேய் டேய் முரளி காமத்தை வெல்ல முடியலடா உன்னாள.

நான்: நான் திரும்பி போறன்.
சாமி: சரி போ, என்ன புரிஞ்சிகிட்ட?.
நான்: கடவுளை உணர்வதுக்கும், கடவுள் அருள் வேண்டும்.
அதுவரைக்கும் தாமர இலை தண்ணி மாதிரி வாழனும்.
விடுதலை சுலபமில்லை.
என்றென்றும் அன்புடன்,
பா. முரளி தரன்.