Friday, October 27, 2006

பெண் என்பதால்.

இந்தியாவில் விடுமுறை முடித்து சவுதி திரும்பிய எனக்கு, அலுவலகத்தில் இரு புதிய முகங்கள் காண கிடைத்தது. இருவரையும் எனது ரூம் மேட் சமீலாவுடன் பார்த்தேன். விடுமுறைக்கு செல்லும் முன் எனக்கும் சமீலாவிற்குமான உறவு எலியும் பூனையுமாக இருந்தது.

அவன் விடுதலைப் புலிகளை தீவிரவாதியென்பான், நான் போராளிகள் என்பேன். அவன் இரவு ஒன்பது மணிக்குள் உறங்க வேண்டுமென்பான், நான் ஒரு மணிவரை விளக்கெரித்து அவன் தூக்கம் கெடுப்பேன். நான் தியானம் பழகுவேன், அவன் மேற்கத்திய இசையை உரத்து ஒலிக்கச் செய்வான். இரண்டு பேருக்கும் உரசல் இருந்து கொண்டே இருந்தது. நேரடியாக மோதிக்கொள்ளாத அளவுக்கு, நண்பர்கள் எங்கள் இருவரையும் கட்டுக்குள் வைத்திருந்தனர்.

இப்படி எலியும் பூனையுமாக இருந்த இருவரும், இந்த இரு புது முகங்களின் வருகையால் ஒன்று சேர்ந்தோம். ஒருவர் ஆண் மற்றொருவர் பெண்.....பிறந்து ஐந்து நாட்களே ஆன இரு பூனைக்குட்டிகள்.

பூனைகளின் தாயார் அவற்றை எங்கள் வேர்ஹவுஸில் விட்டுச் சென்று விட்டதால், தான் அவற்றை பராமரிப்பதாக சமீலாவும்......... சமீலா அந்த குட்டிகளை தொட்டதால்தான், அவற்றின் தாயார் அவற்றை விட்டுச் சென்று விட்டதாக ( குற்றச் சாட்டு ) நண்பர்களும் என்னிடம் சொன்னார்கள்.

ஏனோ, அலுவலகத்தில் யாருக்கும் பூனைக்குட்டிகளை பிடிக்கவில்லை. எல்லோரும் பூனைக் குட்டிகளை, வேர்ஹவுஸிலிருந்து வெளியே எறிந்து விடவேண்டும் என மிகப் பிடிவாதமாக இருந்தார்கள். சமீலாவின் கோபத்துக்கு பயந்து அதைச் செய்யாமல் இருந்தார்கள். ஆனால் ஒரு குழுவாக இனைந்து, பூனைகளுக்கு எதிரான போராட்டத்தை நடத்திக் கொண்டிருந்தார்கள்.

சமீலா, பால் கரைத்து மூன்று வேளையும், பூனைகளுக்கு ஸ்பூனில் உணவு ஊட்டிக் கொண்டிருந்தான். அவன் தனது வேலையைச் சரியாகச் செய்யாமல்,
சதா சர்வ காலமும் பூனைகளோடு விளையாடுவதாக, அவனுக்கு எதிராக எங்கள் மேனேஜரிடம் சென்று ஏனையோர் புகார் செய்திருந்தனர். என்னிடமும் அவனுக்கும்,பூனைகளுக்கும் எதிரான கருத்துக்களை சொல்லி கொண்டிருந்தனர்.

முரளி, இத்தன சின்ன குட்டிகள, வெளிய எறியச் சொல்றாங்க, பால் கூட ஸ்பூனில் கொடுக்க வேண்டி இருக்கு. வெளியே எறிஞ்சா ஒரே நாள்ல செத்துரும்......இல்லன்னா வண்டி அடிச்சி போட்ரும்...
என்னால எறிய முடியாது....என்று புலம்பித் தீர்த்தான்.

அவனுடைய பிடிவாதத்தால் வன்மம் கொண்ட ஏனையோர், மேலும் அதிக புகார்களை அவன் மீது வாசித்துக் கொண்டிருந்தார்கள். அனைத்து ஊழியர்களின் புகாரை அடுத்து, சமீலாவிடம் எங்களது மேனேஜர் ஒரு விசாரனையை நடத்தி, விளக்கம் கேட்டுக் கொண்டிருந்தார். இதை அறியாத நான், இரு பூனைகளுக்கும் பால் குடுக்க வசதியாக , இரு பீடிங் பாட்டில் வாங்கிக் கொண்டு அலுவலகத்தில் நுழைந்தேன். இப்போது நாங்கள் இருவரும் எதிரிகள்போல் மற்றவரால் பார்க்கப்பட்டோம்.

பூனைகள் சிறிது வளர்ந்த உடன், அவற்றை வெளியேற்றி விடுகிறோம் என எங்கள் மேனேஜருக்கு உறுதிமொழி கொடுத்து அப்போதைக்கு அவரிடம் இருந்து தப்பித்தோம்.

அவற்றை வளர்ப்பதால் சமீலாவும், பால் புட்டி வாங்கிவந்து அவ்வப்போது அவற்றிற்கு பாலூட்டுவதால் நானும், பூனைகளின் தந்தைகள் என அலுவலக நண்பர்களால் அழைக்கப்பட்டோம்.

வார இறுதியில், மேலும் ஒரு பிரச்சனை. இரண்டு நாட்கள் குட்டிகளை விட்டுச் சென்றால் உணவின்றி இறந்துவிடும் என்பதால், குட்டிகளை வீட்டிற்கு எடுத்துச் சென்று, பால்கனியில் விட்டிருந்தோம்.

குட்டிகள் ஹாலில் நுழைவதற்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர் ( ஒன்னுக்கு, இரண்டுக்கு பிரச்சனைதான் ). அதனால் பால்கனி கதவை மூடி வைத்திருந்தோம். இப்போது காற்றோற்றம் இல்லை என எதிர்ப்பு தெரிவித்தார்கள். நாங்கள் அவர்களை சமாதானம் செய்தால், அப்பொழுதுக்கு அமைதியாகிவிட்டு சிறிது நேரம் கழித்து திரும்பவும் எதிர்ப்பாளர்கள் ஆனார்கள்.

எப்படியோ இரண்டு வாரங்கள் நகர்த்திவிட்டோம். குட்டிகளும் ஓடப் பழகி இருந்தன. ஆனால் புட்டிப் பால் மட்டும்தான் குடித்தன. தட்டிலிருக்கும் பாலை நக்கிக் குடிக்க அவற்றிற்குத் தெரியவில்லை. இந்த லட்சனத்தில் திட ஆகாரம் எங்கிருந்து குடுப்பது.

ஷாப்பிங் மால்களில் சுற்றியபோது, cat food என கண்ணில் பட்டது. கையில் எடுத்துப் பார்த்தால், மீன் மற்றும் எலி சேர்த்து செய்யப்பட்டதாக இருந்தது. பின்னங்கால் பிடரியில் அடிக்க ஓடி வந்துவிட்டேன். திட உணவு கொடுக்கும் முன், சிக்கன் எலும்புகளை கொடுத்து கடிக்கப் பழக்கலாம் எனவும், அந்த சுவைக்கு பழக்கிய பிறகு வேறு உணவுகளை கொடுக்கலாம் எனவும் நானும் சமீலாவும் சேர்ந்து முடிவெடுத்தோம். எலும்புகள் வாங்கி வரும் பொறுப்பை சமீலா ஏற்றுக் கொண்டான்.

ஆனால் பாலைத்தவிர வேறு எந்த உணவையும் அவை தொட மறுத்தன. எத்தனை நாள் அவை பால் குடிக்கும் என்ற விவரமும் தெரியவில்லை. பூனைகளின் ஆயுட்காலம் பன்னிரண்டு வருடங்கள் எனவும் அதில் பால் குடிக்கும் பருவம் ஒரு வருடம் எனவும் கூறி, ஒரு நண்பன் வேறு வயிற்றில் புளியைக் கரைத்தான். நாங்கள் இருவரும் கையில் பால் புட்டியோடு அலைந்து கொண்டிருந்தோம். எப்படியோ பூனைகள் அவற்றின் அழகால், துறுதுறுப்பால் மேலும் இரு ஆதரவாளர்களை சேர்த்துக் கொண்டன.

இப்போது, பூனைகள் வேர்ஹவுஸில் இருக்க பெரிய எதிர்ப்பு இல்லை என்றாலும், வார இறுதியில் வீட்டிற்க்கு கொண்டு வருவதற்கு ஒரு சாரார் எதிர்ப்பு தெரிவித்துக் கொண்டுதான் இருந்தார்கள். அதனால் குட்டிகளை இனிமேல் பால்கனியில் விடுவதில்லை எனவும், அதற்கு பதிலாக
மாடிப் படிகளுக்கு அருகில் உள்ள இடை வெளியில் விடுவது எனவும், ஆனால் குட்டிகள் சாலைக்கு சென்றுவிடும் அபாயம் இருப்பதால் வீட்டின் மெயின்டோரை எப்பொழுதும் மூடியே வைத்திருப்பது என்ற முடிவும் பலத்த எதிர்புகளுக்கு இடையே எடுக்கப்பட்டது. இப்படியே மேலும் இரண்டு வாரங்கள் கடந்தன.

இரண்டு குட்டிகளில் ஒன்று ஆண், மற்றொன்று பெண். ஆண் வேகமாகவும், பெண் சிறிது மந்தமாகவும் இருந்தது. குட்டிகளின் இருப்புக்கு எதிர்ப்பு தெரிவித்த சிலர் "ஆயிரம் இருந்தாலும் ஆம்பளை ஆம்பளைதான்" என்று அல்ப சந்தோஷம் வேறு பட்டுக்கொண்டார்கள். ஆனால் நான் கூர்ந்து கவனித்ததில், பெண் குட்டியிடம், உள்ளுணர்வு அதிகமாக இருந்ததைக் கண்டேன். குதிப்பது, தாவுவது, ஏறுவது, உரசுவது போன்றவற்றை பெண்குட்டிதான் முதலில் செய்தது. ஆண் இவைகளை செய்ய சிறிது முயற்சி செய்து கொண்டிருந்தது.

ஒரு வார இறுதியில் ( வெள்ளிக் கிழமை ) நன்றாக ஊர்சுற்றிவிட்டு, விடியற்காலை நான்கு மணிக்கு படுக்கைக்கு சென்ற சமீலாவும் நானும், தாமதமாக எழுந்ததால், ஒரே ஓட்டமாகக் கிளம்பி, பதினைந்து நிமிடம் தாமதமாக அலுவலகம் சென்றடைந்த பிறகுதான், பூனைகளுக்கு பால் கொடுக்க மறந்ததும்,
வீட்டிலேயே விட்டுவிட்டு வந்து விட்டதும் ஞாபகம் வந்தது.

நண்பன் மஹபூஸ், சமீலாவிடம், பூனைகளை தெருவில் பார்த்ததாக சொல்லிக் கொண்டிருந்தான். யாரோ மெயின் டோரை திறந்து வைத்திருந்ததால் பூனைகள் தெருவுக்கு வந்துவிட்டது போலும். குட்டிகள் தெருவில் சுற்றிகொண்டிருந்ததை அத்தனை பேர் பார்த்திருந்தும், பூனை எதிர்ப்பாளர்கள் எங்களிடம் விஷயத்தைச் சொல்லாமல் விட்டுவிட்டதால்,
"இதயமற்றவர்கள்" என அனைவரையும் ஏசிக் கொண்டிருந்தான் சமீலா.

ஒரு அப்பாய்ண்ட்மெண்ட் இருக்கிறது என்ற பொய்யைச் சொல்லி, அலுவலகத்திலிருந்து உடனே கிளம்பிய நான், வீட்டிற்கு சென்று பூனைகளை தேட ஆரம்பித்தேன். எங்கள் வீட்டிலிருந்து ஒரு முன்னூறு மீட்டர் தொலைவிலிருந்த ஒரு குப்பைத்தொட்டியின் அருகில் காக்கைகளால்
விரட்டப்பட்டுக் கொண்டிருந்தது பெண் குட்டி.

நான் காரிலிருந்து இறங்கியதும் ஓடி வந்து காலை கட்டிக்கொண்டு .....மியாவ்......மியாவ் என இடைவிடாமல் கத்த ஆரம்பித்து விட்டது (எனது கறுப்பு காலனிகளை அதற்கு அடையாளம் தெரியுமோ?.) பசியெடுத்தால் இப்படித்தான் விடாமல் காலைசுற்றி வந்து கத்தித் தீர்த்து விடும்.

எத்தனை தேடியும் ஆண் குட்டியை கண்டு பிடிக்க முடியவில்லை.
குப்பை பொறுக்கும் ஆப்பிரிக்கர்களிடமும், தெருவை சுத்தம் செய்து கொண்டிருந்த பெங்காலிகளிடமும் விசாரித்துக்கொண்டே சுற்றி சுற்றி வந்தேன். எங்கள் குடியிருப்பு பகுதியில் இருக்கும் அத்தனை குப்பை தொட்டிகளையும், சந்து பொந்துகளையும் விடாமல் தேடிப்பார்த்தேன்.

சவுதியில் பூனைகளின் எண்ணிக்கை மிக அதிகம். ஒவ்வொரு தெருவிலும், காருக்கு அடியில், ஏதோவொரு பூனை கண் மூடி ஏகாந்தத்தில் கிடந்தது. சாலையில்
குனிந்து , படுத்து என அத்தனை விதமாகவும் தேடியும் ஆண் குட்டி தட்டுப்படவில்லை.

பெண் குட்டி பாலுக்காக கதறிக் கொண்டிருந்தது. பெண் என்பதால் இதை புறக்கனித்துவிட்டு , ஆண் குட்டியை மட்டும் யாரோ எடுத்துச் சென்று விட்டார்கள் என நினைத்துக் கொண்டேன். வீட்டிற்குச் சென்று குட்டிக்கு பால் கொடுத்துவிட்டு, பத்திரப் படுத்திவிட்டு, எனது வேலைகளை தொடர தொழிற்பேட்டைக்கு சென்றுவிட்டேன்.

சாயங்காலம் வீட்டிற்கு வந்ததும், மனது உறுத்தலாகவே இருந்தது.
நானும், சமீலாவும் ஆளுக்கு ஒரு பக்கமாக மீண்டும் தேடுதல் வேட்டையை
ஆரம்பித்தோம். antha shuf sageer qitt hinna?( நீ பார்த்தாயா குட்டிப் பூனையை இங்கு) என்று தெருவில் விளையாடிக்கொண்டிருந்த அரபிக்குழந்தைகளை விசாரித்ததில் ஒரு துப்பு கிடைத்து, ஒரு மணல் மேட்டின் மேல் படுத்து முனகிக் கொண்டிருந்த ஆண்பூனையையும் கண்டுபிடித்து விட்டோம்.
மிக சந்தோஷமாக இருந்தது.

ஆனால் குட்டியின் குணம் மிகவும் மாறி இருந்தது. பெரிய பூனைகளால் தாக்கப்பட்டிருக்கும் என நினைத்தோம். பால் குடிக்க மறுத்தது.
ஐந்து நாள் ரம்தான் விடுமுறையை ரியாத்தில் கழித்துவிட்டு திரும்பிய என்னிடம்,
பால் குடிக்காமலே இருந்து, ஆண் குட்டி உயிரை விட்டுவிட்டதாக சமீலா வருத்தத்தோடு சொன்னான்.

ஆனால் பெண் என்பதால் அலட்சியமாக பார்கப்பட்ட குட்டி, தட்டிலிருந்து பால் குடிக்கவும், திட உணவு உண்ணவும் ஆரம்பித்து விட்டது. ஏதோ ஒரு சாதனை செய்துவிட்டது போல சோகத்திலும் இருவரும் மகிழ்ந்தோம்.
என்றென்றும் அன்புடன்,
பா. முரளி தரன்.

No comments: