Wednesday, February 14, 2007

கற்பழித்துக் கொல்லப்பட்ட TRO பிரேமினி.

திரு.சுந்தர வடிவேல் அவர்கள் பதிவில் என்னால் இடமுடியாமல் போன பின்னூட்டம்.

"டி.பி.எஸ் ஜெயராஜ் இப்ப ஒரு கட்டுரை எழுதியிருக்காரு. இதப் படிச்சா குலை நடுங்கும், நெஞ்சுல ஈரமிருந்தா கண்ணீர் வரும்."

படித்தேன். அதிர்ந்தேன்.

சமீபத்தில் எனது அலுவல் நிமித்தமாக சில ஆஸ்திரிய நண்பர்களுடன் ஒரு நாளை கழிக்க நேர்ந்தது. நான் தமிழகத்தை சேர்ந்தவன் எனத் தெரிந்ததும், என்ன பிரச்சனை இலங்கையில்? என்று கேட்டார்கள்.

நான் பத்திரிக்கைகளின் மூலமாகவும், இணையத்தின் மூலமாகவும்,
நண்பர்கள் மூலமாகவும் அறிந்தவற்றை அவர்களுக்கு எடுத்துச் சொன்னேன்.
எனது சொந்த ஊரான நெய்வேலியில் ஒரு இலங்கை அகதிகள் முகாம் இருந்தது, ராமகிருஷ்ணன் என்றொரு நண்பன், ஒன்பது, பத்தாம் வகுப்பில் எனது பக்கத்து இருக்கை. அந்த வயதில் அதிகம் பக்குவப்பட்டிராத நான் ( இப்போதும் அப்படித்தான் ) நீ ஏன் புலியாக மாறிப் போராடாமல் இங்கு வந்தாய் என்ற எனது கேள்விகளால் எரிச்சல் அடையாமல் நல்ல நண்பனாக இருந்தான்.

கூடவே சித்தார்த்தன் என்றொரு நண்பன். இவன் நகர திராவிடர் கழகத் தலைவரின் மகன். அவர்கள் வீட்டிற்கு சென்றபொழுது சில புலிப்படை போராளிகளை கண்டிருக்கிறேன்.அப்போதெல்லாம் எங்கள் பள்ளியில்( 1987-1988) புலித்தலைவர் பிராபகரனின் படங்களை ஒரு ரூபாய் கொடுத்து வாங்க சிறுவர்கள் போட்டி போடுவோம்.

இலங்கை பிரச்சனைக்காக பள்ளிப் பருவத்திலேயே ஸ்டெரைக் செய்தோம்.
அது எம்ஜிஆரின் ஆட்சிக்காலம். எங்கள் ஊர் திருவிழாக்களிலும்,வீதி முனைகளிலும், புலிகளின் ஆதரவாளர்கள் இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக நடக்கும் அட்டூழியங்களின் வீடியோ கட்சிகளை ஒளிபரப்புவார்கள். அதைக் கண்ட யாவரும், நம்மால் ஆன உதவிகளை நிச்சயமாக இலங்கை தமிழர்களுக்கு செய்ய வேண்டும் என்றொரு மன நிலையில், எங்களால் ஆன பொருளும், பணமும் அளிப்போம்.

ஒரு கட்டத்தில் இந்திய அமைதிப்படை இலங்கைக்கு சென்ற பொழுது,தீர்ந்தது பிரச்சனை என்று தோன்றியது. ஆனால் அதன் பிறகு நடந்த துன்பியல் சம்பவங்களால் நிலைமை மேலும் சிக்கலாகிவிட்டது.
ஒரு இந்தியனாக மனதில் புலிகளின்பால் ஒரு வெறுப்பும் ( ராஜீவ் கொல்லப்பட்ட செய்தி வந்ததும் நான் அழுதேன்), அதே வேளையில் ஈழத் தமிழர்களின் நிலை குறித்து ஒரு வேதனையும், சிங்கள இனவாத அரசின் மீதான ஒரு கோபமும் ஆன ஒரு மன நிலையில் இருக்கிறேன்.

ஒரு சாதரன மனிதனாக ஈழப் பிரச்சனைக்கு என்னால் எதுவும் செய்ய முடியாது ஆனால் எனது ஐரோப்பிய நண்பர்களிடம் சொன்னேன், நீங்கள் ஐரோப்பாவில் ஒரு ஈழத் தமிழனைக் கண்டால் உங்களால் முடிந்த ஆதரவினைத் தாருங்கள் ஏனென்றால் அவர்களின் உடனடித் தேவை, அனைத்து உலக நாடுகளின், மக்களின், நாகரீக சமுகங்களின் ஆதரவுக் கரம்தான்.
என்றென்றும் அன்புடன்,
பா. முரளி தரன்.

Sunday, February 11, 2007

காந்தியை சுட்டோம், கலாமை விட்டோம்.

இந்த ஆண்டு குடியரசு தினம் வெள்ளிக் கிழமை வந்ததால், மிக வசதியாய் போயிற்று ( வார இறுதி நாள் விடுமுறை). சில நண்பர்களுடன் இனைந்து, ஜெத்தா இந்திய தூதரகத்தில் நடக்கும் குடியரசு தினக் கொடியேற்ற நிகழ்ச்சியில் கலந்துகொள்வது என முடிவெடுத்தேன்.

இந்தியாவிற்கு வெளியே நான் கலந்துகொண்ட முதல் குடியரசு தின நிகழ்ச்சி. தேசிய கீதத்தை ஒலிப்பேழை கொண்டு இசைப்பதையும்,
சிறுவர்களை மட்டும் பாடச்சொல்லி மற்றவர்கள் மெளனமாக இருப்பதையும் ஒழித்துக்கட்ட வேண்டும். இனிமேல் தேசிய கீதத்தை அனைவரும் தத்தமது சொந்தக்குரலில் பாட வேண்டும் என்பதை ஒரு உறுதி மொழியாக எடுத்துக்கொண்டால்கூட தவறில்லை.

தேசிய கீதம் பாடி முடித்தவுடன், ஒரு ஒற்றைக்குரல் மட்டும் பாரத் மாதா கீ என்று ஓங்கி ஒலித்தது. அந்த குரலுக்கு பதிலாக நானும் உரத்த
குரலில் ஜே என்று கத்திச் சொல்லி எனது ஆதங்கத்தை தீர்த்து கொண்டேன்.

பிறகு ஜனாதிபதி அப்துல் கலாம் அவர்களின் குடியரசு தின உரை வாசிக்கப்பட்டது. அனைவருக்கும் அந்த உரையின் படிமமும் வழங்கப்பட்டது. ஒரு இந்தியன் என நினைத்து பெருமை கொள்ளும்
விதமாக இருந்தது ஜனாதிபதியின் உரை. கூடுதலாக அவர் தமிழர் என்பதால் மேலும் உவகை கொண்டேன்.

அப்துல் கலாம் ஒரு ஆச்சரியப்படுத்தும் அறிவுத்திறனும், குண நலனும் கொண்ட மனிதராக உள்ளார். இளைனர்களுக்கும், சிறார்களுக்கும் ஒரு முன் மாதிரி வாழ்க்கை வாழ்ந்து காட்டுகிறார் என்றால் அது மிகையல்ல.

மிகப் பக்குவப்பட்ட சிந்தையும், பேறறிவும், அறநெறி சார்ந்த வாழ்வும்,
தெய்வ பக்தியும், பல்கலை வித்தகமும், தத்துவ விசாரனையும், அனைத்து மதங்களைப் பற்றி சம நோக்கு பார்வையும், மேதமையை மதிக்கும் பண்பும், இன்ன பிற நற்குணங்களின் உறைவிடமாய் உள்ளார். கூடவே தலைசிறந்த நிர்வாகி, விஞ்ஞானி என்றெல்லாம் நிரூபித்து உள்ளார்.

நாட்டை வல்லரசாக்குவதற்கு அவர் அறிவித்துள்ள 2020 மிக அற்புதமான திட்டம்/கனவு.

சில அற்ப அரசியல் காரணங்களால் ( இத்தாலி சோனியா பிரதமர் ஆவதற்கு முட்டுக்கட்டை போட்டதால்) அடுத்தமுறை அவர் குடியரசு தலைவர் ஆவது சந்தேகம்தான் என்கிறார்கள்.

நான் கேட்கிறேன், இப்படி ஒரு மனிதர் ஏன் திரும்பவும் குடியரசு தலைவர் ஆகவேண்டும்?. பேசாமல் அவரையே அடுத்த இந்தியப் பிரதமர் ஆக்கிவிட்டால் என்ன?. அவர் கொடுத்த 2020 திட்டத்தை அவர் தலைமையிலேயே நாடு செய்து முடித்தால் என்ன?.

அடுத்த இந்தியப்பிரதமர் அப்துல் கலாம் என்று அறிவித்து ஒரு புது அரசியல் கட்சி தொடங்கினால் என்ன?. அப்படி ஒரு சிறு பொறியை யாரும் பற்ற வைத்தால் அது கலாம் பிரதமரானார் என்னும் பெரும் நெருப்பாக முடியும் என்பது திண்ணம்.

அறிவுஜீவிகள் இதற்காக முயற்சி செய்யலாம். ஆன்மீகப் பெரியவர்களின் ஆசிகளையும் கேட்டுப் பெறலாம். கலாம் பிரதமராவதால், இந்திய முஸ்லீம்கள் மனதில் பாபர் மசூதி இடிப்பால் ஏற்பட்ட காயமும் ஆறும்.

இந்திய முஸ்லீம்களுக்கு ஒரு வார்த்தை. கலாம் பிரதமராகாவிட்டால் வேறொறு முஸ்லீம் பிரதமர் என்பது இந்த நூற்றாண்டில் இந்தியாவில் சாத்தியமில்லாது போகலாம்.
தனிந்த சிந்தனை கொண்ட கலாம்தான் அடுத்த பிரதமர் என்று அறிவித்து ஒரு கட்சி துவக்கப்பட்டாலோ / ஏற்கனவே இருக்கும் கட்சி அறிவிப்பு வெளியிட்டலோ, பெரும்பான்மை இந்து சமூகம் மிக சந்தோஷமாக அதை ஏற்றுக்கொள்ளும்.

காந்திக்குப் பின் அனைத்து மத, சமூக, மொழி, இனப் பிரிவினராலும் ஏற்றுக் கொள்ளப்படும் ஒரே மனிதராக கலாம் உள்ளார் என்பது எனது எண்ணம்.

கலாமைப்போல் ஒரு மனிதரிடம் நம்மை ஆளும் அதிகாரத்தை தர நாம் தவறினால், இந்தியாவின் வல்லரசு, நல்லரசுக் கனவு, ஏன் கனவாகவே தொடர்ந்து கொண்டிருக்கிறது என்பதை 2050 இல் உட்காந்து யோசிக்கும்போது கிடைக்கும் விடை இதுவாகத்தான் இருக்கும்,

காந்தியை சுட்டோம், கலாமையும் கை நழுவ விட்டோம்.

என்றென்றும் அன்புடன்,
பா.முரளி தரன்.

Saturday, February 10, 2007

காவேரித் தண்ணீரும், கன்னடர்களும், தீர்வும்.

நமது நாட்டின் பெரும்பான்மையான நதிகள் பெண்களின் பெயர் கொண்டவைதான். நதிகள் அன்னையருக்கு இனையாக வைத்து
மதிக்கப்படுகின்றன, துதிக்கப்படுகின்றன.

காவேரியின் பிறந்தகம் கர்நாடகம், புக்ககம் தமிழ்நாடு. புகுந்த வீட்டில்தான் ஒரு பெண் தாய் என்ற பெரும் பேறு அடைவதால் தமிழகத்தின் தவப் புதல்வர்களுக்கே அன்னை காவேரியிடம் அதிக உரிமை உள்ளது.

அதற்கு ஏற்றார்ப்போலத்தான் தமிழகத்திற்கு நியாயமான அதிக பங்கை அறிவித்து தீர்ப்பு வெளியாகி உள்ளது. இந்த அளவு போதுமானதோ, பற்றாக் குறையோ, எதுவாக இருந்தாலும், ஏற்றுக் கொள்வதே அறிவுடைமையாகும். தமிழகம் தீர்ப்பை ஏற்று, அதிக பங்கிற்காக மேல் முறையீடு ஏதும் செய்யாமல் இருந்தால், இந்த விவகாரம் அதிக பிரச்சனை ஆகாமல், இரு தரப்பாலும் ஏற்றுக்கொள்ளப்படக்கூடியதாய் சில நாட்களில் மாறிவிடும் என்பது எனது அபிப்ராயம்.

அதை விடுத்து தமிழக அரசியல்வாதிகள் ஏதும் குட்டையை குழப்பினால்
கர்நாடக வாழ் தமிழர்களுக்கு பெரும் பிரச்சனையாய் போய்விடும். ( காவேரிப் பிரச்சனையில் மாட்டி பெங்களூருவில் அடிவாங்கியவன் நான், அந்த அனுபவத்தை தனிப்பதிவாக அப்புறம் எழுதுகிறேன் )அதனால் வழங்கப்பட்ட தீர்ப்பை உறுதி செய்வதிலும், அதை செயல்படுத்துவதிலும் மட்டுமே முனைவது நல்லது.

மேலும் அதிக அளவு தண்ணீர் வேண்டும் என்பதை கோரிக்கையாக்குவதை விடுத்து, தமிழகத்தில் உள்ள நீர் வளங்களை பாதுகாப்பதிலும், புதிய நீர்வள
ஆதாரங்களை உருவாக்குவதிலும் முனைய வேண்டும்.

பாட்டாளி மக்கள் கட்சி, கிராமப் புரங்களில் உள்ள ஏரி குளங்களை,
பசுமைத்தாயகம் அமைப்பு மூலமாக தூர் வாரி சரி செய்தது. அதைப்போன்றதொரு காரியத்தை அனைத்து மக்களும் பங்குகொண்டு
மேலும் தீவிரமாக செயல்படுத்தலாம்.

தமிழகத்தில் தற்போது உள்ள ஏரி, குளங்களில் பஸ் ஸ்டாண்ட் கட்டாமல், அவற்றை நல்லவிதமாக பாதுகாக்கலாம். மழை நீர் வீணாவதை தடுத்து அங்கங்கே தடுப்பனைகளை உருவாக்கலாம்.

அரசியல்வாதிகள் மணல் கொள்ளையடிப்பதை தவிர்த்து, ஆற்றுப் படுகைகளில் நிலத்தடி நீர்மட்டம் உயர உதவி செய்யலாம்.

மன்னர்களால் தொலை நோக்கு சிந்தனையோடு உருவாக்கப்பட்ட ஏரி, குளங்களை பட்டா போடாமல் இருக்கலாம்.
இன்னும் ஏராளமான மரக்கன்றுகளை நட்டு மழைப்பொழிவை அதிகப்படுத்தலாம்.

தமிழக அமைச்சரவையில் விரிவாக்ககமும், மாறுதலும் வரலாம் என்கிறார்கள். அதில் இரண்டு புதிய அமைச்சகம் உருவாக்க கலைஞருக்கு கோரிக்கை வைக்கிறேன்.

1. நீர்வள ஆதாரங்களை பாதுகாக்கவும், புதிய நீர் வள ஆதாரங்களை
உருவாக்கவும் விசேஷ அதிகாரங்களை கொண்ட ஒரு அமைச்சகம்.

2. வெளிநாட்டு வாழ் தமிழர் நலன் காக்கவும், வெளிநாட்டு வேலை
வாய்ப்புகளை முறைப்படுத்தவும் ஒரு அமைச்சகம்.

இவை இரண்டும் காலத்தின் கட்டாயம் என்பதை உணர்ந்து கலைஞர்
ஆவன செய்ய வேண்டும்.
என்றென்றும் அன்புடன்,
பா,முரளி தரன்.

Friday, February 02, 2007

சில ஷொட்டும்; ஒரு குட்டும்.

இந்தியக் குடியரசு தினத்தை முன்னிட்டும், சவுதி அரசரின் இந்திய விஜயத்தின் ஓராண்டு நிறைவை நினைவு படுத்தும் வகையிலும், விழாக் கோலம் பூண்டது ஜெத்தா நகரம். தமிழ் சங்க விழாவிற்காக இந்தியாவிலிருந்து பேராசிரியராக வந்திருந்த ஞானசம்பந்தம் மருத்துவராக திரும்பிப் போனார். அப்புறம் என்னங்க?. வாய் விட்டு சிரிச்சா நோய் விட்டு போகும்னு சொல்லியிருக்காங்கத்தானே? சுமார் ஒரு மணி நேரம் தொடர்ந்து ஜெத்தா வாழ் தமிழ் மக்கள சிரிக்க வச்சிருக்காருங்க. அந்த வகையில பார்த்தா மக்கள வாய்விட்டு சிரிக்க வெச்சு, அவங்க நோய் நொடிகள போக்கடித்த பேராசிரியர் ஞான சம்பந்தம் ஐயாவ ஏன் டாக்டர் ஞானசம்பந்தம்னு கூப்புடக்கூடாதுங்கறன்?.

தமிழ்சங்க நிகழ்ச்சிகள் அனைத்தும் மிகச் சிறப்பா இருந்ததுங்க.
சந்தர்பம் கிடைத்தால், இந்த நிகழ்ச்சியின் சிறப்பை ஜெயா டிவியில் தான் அளிக்கும் இன்றைய சிந்தனை ( நிகழ்ச்சியின் பெயர் சரிதானே?. நான் டிவி பார்ப்பதில்லை ) நிகழ்ச்சியில் குறிப்பிடுவேன் என்று கூறி கரகோஷங்களை அள்ளிச் சென்றார் பேராசிரியர் ஞானசம்பந்தம் ஐயா அவர்கள்.

தமிழ் சங்க நிகழ்ச்சியின் டாப் மூன்று என்று மக்கள் என்னிடம் தெரிவித்தவை.

1. பேராசிரியர் ஞானசம்பந்தம் அவர்களின் பட்டி மண்டபம்.
2. குழந்தைகளின் அனைத்து நடனங்களும்.
3. மூத்த வலைப்பதிவாளர் எண்ணம் ஆசாத் அவர்களின் சிலம்பாட்டம்
மற்றும் கவியரங்கம்.

மறு நாள் ஆந்திர பிரதேச நாள் என்று பெயர் வைத்து விழா. எனது அலுவலகத்தில் பணிபுரியும் ஆந்திராவைச் சேர்ந்த ஒரு கடைநிலை
ஊழியர் இந்த நிகழ்ச்சிகளை பார்க்க வேண்டும் என மிக ஆவலாக இருந்தார் ( நேற்றைய தமிழ் நிகழ்சிக்கும் இவர் வந்திருந்தார்). நான் மிக களைப்பாக இருந்தாலும், அவர் மீது உள்ள மரியாதையால், அவரின் விருப்பத்தை நிறைவேற்ற அவரை அழைத்துச் சென்றேன்.

இவர் வயது அய்ம்பது, பேரன் பேத்தி எடுத்தவர். எழுத படிக்க தெரியாது.
ஆனால் மிக அற்புதமான உழைப்பாளி. வேலையில் உள்ள திறமையின் காரணமாக பல பரிசுகளை வென்றவர். இருவருக்கும்
தூக்கம் சொக்கியதால் வீட்டுக்கு கிளம்பினோம். வரும்போது அவர் ஒரு உணவு விருந்துக்கான செய்தியை கேட்டு விட்டார்.

முரளி அங்கு ஹைதராபாத் பிரியாணி போடுராங்களாம், நான் போய்

சாப்பிட்டு விட்டு வருகிறேன் என்று போனார்.போன வேகத்தில் திரும்பி

வந்தவர், உள்ள விட மாட்டேங்கிறாங்கப்பா நீ வந்து என்னவென்று கேள் என்றார். நான் சென்று அந்த நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களிடம் நடத்திய உரையாடல்.

காசு கொடுத்தால் அனுமதி உண்டுதானே ஏன் மறுக்கிறீர்கள்.

கார்ட் வேண்டும்.

கார்ட் என்றால் டோக்கனா? அது எங்கே கிடைக்கும்?

இங்குதான் எங்காவது கிடைக்கும்.

எனது பக்கத்தில் இருந்தவர்: இங்கு அனைத்து ஸ்டாலிலும் கேட்டு விட்டேன். யாரும் எங்களிடம் கார்டு கிடையாது என்கிறார்கள்.

நான்: கார்டு என்றால் பாஸா. பாஸ் உள்ளவர்களுக்கு மட்டும்தான் அனுமதி என்றால் அதையாவது கூறுங்கள், நாங்கள் போய்விடுகிறோம்.

உணவு விடுதி நபர்: பதில் சொல்லாமல் அமைதியாக இருக்கிறார்.

நான்: பர்ஸிலிருந்து பணம் எடுத்துக் கொடுத்து, ஒரு நபருக்கு அனுமதி கொடுங்கள் என்றேன்.

உணவு விடுதி நபர் பணம் வாங்க மறுத்தார்.

எங்கள் சம்பாஷனை நடந்து கொண்டிருந்தபோது ஷெர்வானி அணிந்திருந்த ஒரு நபர் அத்துமீறி அந்த விருந்து நடக்கும் கட்டிடத்தில் நுழைய முயன்றார். இரண்டு பேர் முரட்டுதனமாக அவரை தடுத்து நிறுத்தி வெளியேற்றினார்கள். அவர் மிகக் கோபம் கொண்டு சரி சவுண்டு விட்டுக் கொண்டிருந்தார்.

இதையெல்லாம் பார்த்த எனது நண்பர் வேண்டாம் விடுப்பா நாம் வீட்டுக்குபோகலாம் என்று கூறிவிட்டார். அவருக்கு அனுமதி மறுக்கப் பட்டது அவரது தன்மானத்தை பாதித்திருக்க வேண்டும். போகும் வழியில் ஒரு ஹோட்டலில் நாங்கள் உணவு உண்டோம். அவர் விடாப்பிடியாக நான்தான் பில்லுக்கு பணம் கொடுப்பேன் என்று கொடுத்து விட்டார். அது அவரது ஒரு நாள் சம்பளம். எங்ககிட்டயும் பணம் இருக்கு, எங்களால பணம் கொடுக்கமுடியாதா என்றெல்லாம் புலம்பிக் கொண்டே வந்தார்.

எனக்கு அந்த நிகழ்ச்சி ஆரம்பத்திலிருந்தே வெறுப்பாய் இருந்தது. பெயர்தான் ஆந்திரபிரதேச நாள். ஆனால் ஆரம்பத்திலிருந்தே ஹைதராபாத் ஹைதராபாத் என ஒரே ஹைதராபாத் மற்றும் சார்மினார் பெருமைதான். ஹைதராபாத் இந்தியாவில் இனைந்து பல வருடங்கள் ஆகிவிட்டன என ஹைதராபாதிகள் மறந்து விட்டார்கள் போலும்.

நான் சவுதி வந்த புதிதில் இப்படித்தான் என்னிடம் ஒருவர் நான் ஹைதராபாதி, ஹைதராபாதி என சொல்லிக்கொண்டே இருந்தார்.

நான் அவரிடம் இந்திய ஹைதராபாத்தா? பாகிஸ்தான் ஹைதராபாத்தா?என்று கேட்டேன். சற்றே கடுப்பான அவர் இந்தியாதான் என்றார். நான் உடனே ஓ நீங்கள் இந்தியரா என்றேன். சவுதியில் இவனுங்க தற்பெருமை தாங்க முடியலப்பா.

நான் எனது நண்பரை கல கலப்பூட்டுவதற்காக சொன்னேன். விட்டு தள்ளுங்க, அவனுங்க இத்துப்போன சார்மினார்ல இடி வுழ அவனுங்க ஊசிப்போன பிரியாணில பல்லி வுழ என்றேன். நண்பர் சிரித்து மனம் லேசானார்.

என்றென்றும் அன்புடன்,

பா.முரளி தரன்.