Saturday, July 29, 2006

மொழி ஒரு சாதனமா அல்லது ஆயுதமா

அன்பர்களே நண்பர்களே,
மொழி தொடர்பு கொள்வதற்கான ஒரு சாதனம்தான் என்று பொதுவாக சொல்வார்கள். ஆனால் நடைமுறையில், மொழி சாதனமாக மட்டும்தான் பெரும்பாலன நேரங்களில் பயன்படுத்தப் படுகிறதா என்ற ஒரு கேள்வி நான் எதிர்கொண்ட ஒரு சில நிகழ்வுகளின் ஊடே எனக்கு ஏற்ப்பட்டது.

முதலாவதாக நான் தற்காப்பு கலையான டேக்வாண்டோ கற்க சென்றபோது ஏற்பட்டது. வகுப்பில் சேரும்பொழுதே எனக்கு அரபி சுத்தமாக தெரியாது என்று புரிந்து கொண்டார்கள். எனக்கு, கேப்டன் ஹமாதா மற்றும் கேப்டன் பாசீம் என இரண்டு ஆசிரியர்கள்.
இதில் கேப்டன் ஹமாதாதான் பாசீமிற்க்கும் குரு.

ஹமாதா ஒரளவு ஆங்கிலம் பேசுவார் அதனால் என்னை வகுப்பில் உடனே சேர்துக்கொண்டார். இதில் பாசீமிற்கு உடன்பாடு இல்லை. நீ வகுப்பில் அரபியில்தான் பேச வேண்டும் என்ற ஒரு கட்டளையோடு எனைச் சேர்த்துக் கொண்டார். எனக்கு காஷ்மீர் முதல் கன்யாகுமரிவரை சுற்றிய / வேலை பார்த்த / வசித்த அனுபவம் இருந்ததால் இந்திய மொழிகள் எதுவாயிருந்தாலும் சமாளித்து விடுவேன். ஆனால் அரபி?.

இந்த மொழிப் பிரச்சனையால் நிறைய கேலியும், கிண்டலும்
ஆரம்ப நாட்களில் சந்திக்க வேண்டி இருந்தது. ஆனால் அரபி தெரியாமலே என்னால் போட்டிகளில் கலந்துகொள்ளும் அளவுக்கு முன்னேற முடிந்தது.

பிற்காலத்தில் எனது நலனில் அக்கறை கொள்ளும் மிக நல்ல நண்பராக பாசீம் ஆனார். யோசித்துப் பார்த்தால் ஆங்கிலம் தெரியாது என்ற அவரது இயலாமையை மறைக்கத்தான், அரபி மொழி ஆயுதம் கொண்டு எனை வதைத்தாரோ என நினைக்கத் தோன்றுகிறது. ஆனால் அவர் புண்ணியத்தில்தான் நான் நிறைய அரபி வார்த்தைகள் கற்க முடிந்தது.

அதேபோல் எனது வாடிக்கையாளர் ஒருவர் உள்ளார். அவர் எகிப்தியர் ( அரபியில் எகிப்தியர்களை மிசிறி என்பார்கள்) நன்றாக ஆங்கிலம் பேசுவார் ஆனால் செல்பேசியில் எனை தவிர்க்க வேண்டும் என நினைத்தால் மிக கடினமான அரபியில் சரளமாக பேச ஆரம்பித்து விடுவார். நான் பஞ்சாபிலும் உத்திர பிரதேசத்திலும் சுற்றி திரிந்த நாட்களில், சில வட இந்தியர்களை ஆங்கிலம் பேசி ( ஹிந்தி தெரிந்திருந்தாலும்) தவிர்த்ததுண்டு.
அட நம்ம டெக்னிக் நம்ம கிட்டயே ரிப்பீட் ஆகுதா என்று சிரித்துக் கொள்வேன்.

தமாம்-இல் வாழ்ந்த நாட்களில், எனது வேலைக்கு அரபி அத்தனை அவசியமாகப் படவில்லை. அங்கு வெளிநாட்டவர்களின் ஆதிக்கம் தொழிற்சாலைகளிலும், கடை வீதியிலும் அதிகம். ஜெத்தாவின் தொழிற்சாலைகளில் முக்கிய பதவிகளில் அரபி ஆட்கள் அதிகம்.

நேற்று, பாகிஸ்தானிலிருந்து உம்ராவிற்காக வந்திருந்த நண்பனின் குடும்பத்தை அழைத்துக் கொண்டு கடற்கரை மற்றும் கடைவீதியில் சுற்றித்திரிந்தேன் அப்போது ஒரு அரபி வியாபாரி என்னை அரபியில் பேசு அரபியில் பேசு என்று வற்புறுத்தியாதால் உருவான பதிவு இது.

அப்படியே நினைவுகளை தமிழகத்துக்கு திருப்புகிறேன். நிறைய வேற்று மாநில நண்பர்களுக்கு சென்னையின் ஆட்டோ ஓட்டுநர்களுடன் இதே மாதிரி கசப்பான அனுபவங்கள் மிக அதிகம். அத்தனையும் நம்ம அரசியல்வாதிகளால் உண்டாக்கப்பட்ட குழப்பங்கள். நம்ம நாடு திருந்தினாத்தானே அடுத்தவன குறை சொல்ல முடியும்.
என்றென்றும் அன்புடன்,
பா. முரளி தரன்.

Thursday, July 27, 2006

என்னை பாதித்த மஹான்கள் - சீரடி சாய்பாபா

அன்பர்களே நண்பர்களே,
கட்டிக் கொடுத்த சோறும், சொல்லிக் கொடுத்த வார்த்தையும் நீண்ட நாள் தாக்குப் பிடிக்காது என்று ஒரு பழமொழி போல் சொல்வார்கள். என்னைப் பொறுத்தவரையில் இறை உணர்வும் இந்த வரையரைக்குள் வந்துவிடும் என்று நினைக்கிறேன்.

அவரவர் இறை நம்பிக்கை அவரவர் சொந்த அனுபவத்தின் மீதுதான் வலுப்பெறும் என நினைக்கிறேன். வம்படியாக தானாகவே வலியவந்து என் வாழ்வில் புகுந்து சில அதிசய அனுபவங்களை விட்டுச் சென்றவர் சீரடி சாய்பாபா அவர்கள்.

எனக்கு சீரடியாரைப்பற்றி ஏதும் தெரியாத ஒரு கால கட்டத்தில், கடல் கடந்து வேலைக்கு செல்ல வேண்டுமா என என்னுள் ஒரு குழப்பம் நிலவிய மன நிலையில் ஒரு கனவு வந்தது. நான் ஒரு மலைகள் சூழ்ந்த பகுதியில் வழி தடுமாறி குழம்பி நிற்பதும், அங்கே வரும் பாபா எனக்கு
சரியான பயணத் திசையை காட்டுவதுமாக இருந்தது அக்கனா.

சரிதான், பாபாவே கை காட்டிய பிறகு வேறென்ன வேண்டும் என கிளம்பி ஜெத்தா வந்தால், நான் கனவுல பார்த்ததும்; பாபா கை காட்டியதுமான
ஊர் ஜெத்தாதான். நினைத்துப் பாருங்கள் எனக்கு எப்படி இருந்திருக்கும்.

அப்பறம் நான் பாம்பே போயிருந்தபோது அங்கிருந்து சீரடிக்கு சென்று பாபாவின் சமாதி+கோவிலை தரிசித்து வந்தேன். அங்கு ஒரு அதிசயமான விஷயம் சொன்னார்கள். சீரடி சாயிபாபா இந்துவா / முஸ்லீமா
என்று குழப்பமாகவே இருந்ததாம். அதனால் அவர் உயிர் நீத்த பின் ஒரு சாரார் உடலை புதைக்க வேண்டும் என்றும்/ ஒரு சாரார் உடலை எரிக்க வேண்டும் எனவும் வலியுருத்தினார்களாம்.

அவர் உடலை மூடியிருந்த துணியை அகற்றினால்; உடல் பூக்களாக மாறிப் போயிருந்ததாம். தான் பூவாக மாறி இந்து/முஸ்லீம் உள்ளங்களில் அன்பு மலரச் செய்தவர்.

ஓம் சாய் நமோ நமோ; ஷ்ரீ சாய் நமோ நமோ
ஜெய ஜெய சாய் நமோ நமோ; சத்குரு சாய் நமோ நமோ.

என்றென்றும் அன்புடன்,
பா. முரளி தரன்.

Saturday, July 22, 2006

என்னை பாதித்த மஹான்கள்-ராகவேந்திரர்

நான் எங்கு அழைத்தாலும் நீ அங்கு வர வேண்டும்,
நான் எங்கு இருந்தாலும் உன் அருள் வேண்டும்,
புவனகிரி பிறந்தவரே மந்த்ராலய மஹான் - ராகவேந்திரா.......

ஒவ்வொரு வியாழக்கிழமையும் இந்த வரிகளை முதல் அடிகளாக கொண்ட பாடல், ராகவேந்திர மஹானின் பிறந்த இடமான புவனகிரியில் அமைந்த கோவிலில் பாடப்படும் பொழுது நான் அடையும் ஆனந்தத்திற்கு அளவே கிடையாது. ராகவேந்திரரின் அருள் எனக்கு எப்பொழுதும் உண்டு என முழுமையாக நம்புபவன் நான்.

ராகவேந்திரரின் அவதார ஸ்தலமான புவனகிரி, சிதம்பரத்திலிருந்து பத்து கிலோமீட்டர் தொலைவில் கடலூர் செல்லும் சாலையில் உள்ளது. அவர் பிறந்த வீட்டையே கோவிலாக மாற்றி உள்ளார்கள். அவர் பிறந்த இடத்தைப் பற்றி நிறைய குழப்பங்கள் இருந்ததாகவும், காஞ்சி மஹாபெரியவர்தான் பல்வேறு ஆதாரங்கள் கொண்டு, புவனகிரிதான் என நிரூபித்ததாகவும் சொல்வார்கள்.

நான் சவுதி வேலைக்கு வருவதற்காக விண்ணப்பத்தை அவர் காலடியில் வைத்து ஆசி பெற்று அனுப்பியது நினைவுக்கு வருகிறது.
அவரது படம் ஒன்றையும் கூடவே சவுதிக்கு கொண்டு வந்தேன். விமான நிலையத்தில் எனது உடமைகளை சோதித்த ஒரு குடியேற்ற அதிகாரி அந்த படத்தை அனுமதிக்க மறுத்து தன்னிடம் எடுத்து வைத்துக்கொண்டார். நான் அவர் கண்களை ஊடுருவிப் பார்த்தபடியே, அவரிடமிருந்து திரும்ப எடுத்து
கொண்டேன். என்ன நினத்தாரோ தெரியவில்லை, என்னை எடுத்துச் செல்ல அனுமதித்து விட்டார். ராகவேந்திரர் டாலர் கோர்த்த துளசி மாலை ஒன்று எனது காரில் எப்பொழுதும் தொங்கிக்கொண்டிருக்கும்.

சில பேர் பயமுறுத்திக்கொண்டே இருப்பார்கள். முரளி மாலையக் கழட்டு போலிஸ் பார்த்தா பிரச்சனை ஆயிடும். இதெல்லாம் இங்க அனுமதி கிடையாது. எக்சிட் அடிச்சி விட்ருவாங்க. அதுவே ராகவேந்திரர் விருப்பமாயிருந்தால் அப்படியே நடக்கட்டும் என்று நானும் தினமும் பல செக் போஸ்ட்களை தாண்டிக்கொண்டுதான் இருக்கிறேன்.

என்றென்றும் அன்புடன்,
பா. முரளி தரன்.

Thursday, July 20, 2006

என்னை பாதித்த மஹான்கள்-ஓஷோ

லெபனானில், குண்டு வீச்சில் மூன்று இந்தியத் தொழிலாளர்கள் பலி. படித்தவுடன் துக்கம் தொண்டையை அடைத்தது. எந்த நரைத்த முடியினரின் ஊன்றுகோல் உடைந்ததோ. யார் குங்குமத்தை தொலைத்தாரோ! எந்த குழந்தைகள் நல்லாசிரியரை இழந்தனரோ! எந்த முதிர் கன்னி நம்பிக்கையை இழந்தாளோ! எண்ணிலாக் கேள்விகள் என்னுள்ளே.

எண்ணை வளம் கொழிக்கும் இஸ்லாமிய நாடுகளில் பணிபுரியும் இந்தியர்களில் பெரும்பான்மையானோர் தொழிலாளர் வர்கத்தினரே. மேலே குறிப்பிட்ட குடும்பத்தோரின் நலன்களுக்காக தங்கள் சுகவாழ்வை அடமானம் வைத்தவர்கள். டாலர் தேச வெள்ளை சட்டைப்பட்டை தொழிலாளர்களுக்கும் இவர்களுக்கும் வசதியிலும், வாழும் முறையிலும் உள்ள வித்தியாசம் பசுமைக்கும் பாலைக்கும் உள்ள வித்தியாசம்.

இங்கு வேலைக்கு வந்த புதிதில் பார்ப்பவரிடமெல்லாம் புலம்பித்
தள்ளுவதுண்டு.

பாய் எப்படி பாய் இத்தனை நாள் தாக்குப் புடிச்சிங்க? நான் இந்த முறை ஊருக்குப் போய் அங்கேயே உட்காந்துரலாம்னு இருக்கேன்.

முரளி நாங்களும் வந்த புதுசுல இப்படியெல்லாம் யோசிச்சவங்கதான் எல்லாம் கொஞ்சம் நாளானா சரியாயிடும் என்ற ஆறுதல் வார்த்தைகள் கிடைக்கும்.

பல பேர் குடும்ப நலன்களுக்காக பெற்றோரின் அன்பையும், மனைவியின் அன்மையையும், குழந்தைகளின் அந்நியோன்யத்தையும் தியாகம் செய்தவர்கள்தான். ஒரு அஞ்சு வருசம் இருந்துட்டு போயிடலாம் என்று வந்துவிட்டு பொறுப்புகளையும் கடமைகளையும் நிறைவேற்றுவதர்க்காக கால நீட்டிப்பு செய்துகொண்டே போகிறவர்கள்தான்.

சந்ததினையினரின் சாதனைக் கனவுகளுக்காக, தங்களின் வாழ்க்கைப் பயனத்தை பாலைவனத்தில் தொடர்ந்த சாதனையாளர்களின் மரணத்ததிற்கு
எனது அஞ்சலிகள்.

இதுல ஓஷோ எங்கேயிருந்து வந்தார் என தேடுபவர்களுக்கு; ஒரு பாலைவனத் தொழிலாளியான நான் எனது மகனை தாய் நாட்டில் விட்டு தனியே திரும்பிய பொழுது ஏற்பட்ட உணர்ச்சிகளை பதிய ஒரு தனி பதிவு போட வேண்டும். எனது மகன் பெயர் ஓஷோ.

ஓஷோவின் குறிப்பிட்ட சில எழுத்துக்கள் என் மனதில் ஒரு முக்கியமான மாற்றத்தை ஏற்படுத்தியதால் என் மகன் பெயர் ஓஷோவானது. ஓஷோ என்ற பதத்திற்க்கு அழகான பொருளும் உண்டு.
வானத்தால் ( இறையால்) பூச்சொரிந்து ஆசீர்வதிக்கப்பட்டவர் மற்றும் இறைத்தன்மையில் கரைந்தவர். கூடவே ஒரு செய்தி எனது மகனுக்கு இன்று பிறந்த நாள்.
என்றென்றும் அன்புடன்,
பா. முரளி தரன்.

Monday, July 17, 2006

என்னை பாதித்த மஹான்கள்

அன்பர்களே நண்பர்களே,
இந்த நிலை இல்லா வாழ்க்கையில் உழன்று, மாண்டு பிறறால் மறக்கப்பட்டவர்கள் ஏராளம். விஞ்ஞாநிகள், புவி ஆண்ட மன்னவர்கள், இலக்கிய கர்த்தாக்கள், கவிகள், கலைஞர்கள், சீர்திருத்தவாதிகள், பெரும் போராளிகள், சாதனையாளர்கள், விளையாட்டு வீரர்கள் போன்ற முத்திரைகளை பதித்து, மாண்டு பிறறால் மறக்க முடியாதவர்களும் ஏராளம்.
வலிந்து அதிகார வர்கத்தால் மறக்கடிக்கப்பட்டவர்களும் ஏராளம் ( உதாரனம் தமிழகத்தை சேர்ந்த சுதந்திரப் போராட்ட தியாகிகள்). ஆனால் வாழ்ந்த காலத்தில் அன்பாய் மலர்ந்து, அன்பின் மணத்தைப் பரப்பி, சமூகத்தை மலர்ச்சியாக வைத்திருந்து, இப்பொழுதும் வாழ்கிறார்கள் என மானிடர்களால் நம்பப்படும் மாமுனிகள் எப்பொழுதும் எனக்கு ஒரு ஆச்சரியமாகவே இருந்திருக்கிறார்கள்.

அதுவும் நமது இந்திய சமூகத்தில் ( எதுக்கு வம்பு, திராவிட சமூகத்தில் கூட) இத்தகைய புண்ணிய ஆத்மாக்கள் மிக அதிகம். அதனால்தான் நமது தேசத்தை புண்ணிய தேசம் என்று அழைக்கிறார்கள் என நினைக்கிறேன். இத்தகையப் பெரியோர்கள் இந்து இஸ்லாமிய கிருஸ்துவ சீக்கிய பார்சி புத்த ஜைன( பாத்தீங்களா பாத்தீங்களா ஒரு கமா கூட நம்மை பிரிப்பதை நான் விரும்பவிலை) மதங்களின் பின்னனியில் வந்திருந்தாலும், அவர்களின் மதப் பின்னனி புறந்தள்ளப்பட்டு மாந்தர்களால் கொண்டாடப்படுகிறார்கள்.

இவர்களில் நான் உணர்ந்த சிலரைப்பற்றி இனி வரும் நாட்களில் பதிவு செய்வேன்.
என்றென்றும் அன்புடன்,
பா. முரளி தரன்.

Sunday, July 16, 2006

SRI LANKA

Monday, June 19, 2006

SRI LANKA
It is very painful to watch the happenings in srilanka. My roommate is an sinhala, he always use the term terrorist to mention LTTE. If i ask him why not srilanka allow to form a federal goverment in north. He refuses because srilanka is small country and they don't want to divide it for any reason and any form. He also says in such a situation all the tamils in south srilanka has to go back to north or they should be killed. His openions are very harsh always. He identify himself as JVP. I can understand his emotions because his brother is working in army.I remember a news published in some tamil magazine longtime back. Some people approched a holyman ( chithar ) while freedom struggle started in srilanka and asked them to foresee the result of the struggle?. He said that the hole country will become graveyard nothing more will happen. That is what we see in the past 25 years.

IS THEIR ANY PERMANENT SOLUTION?. SHARE YOUR VIEWS.

அம்மா வருவா

Friday, July 07, 2006

தேன்கூடு - போட்டி. அம்மா வருவா.

தான் ஏன் ஜோசியம் ஜாதகம் எல்லாம் கற்றோம் என்று தாத்தா வாழ்க்கையில் முதல் முறையாக வேதனைப்பட்டார். இருக்காதா பின்னே இந்த வயதில் தான் ஆரோக்கியமாக இருக்க தன் மகளுக்கு இப்படி ஒரு கொடிய நோயை பகவான் கொடுக்க வேண்டுமா அதுவும் இல்லாமல்,இருப்பாளா போய்டுவாளா என்று தானே ஜாதகத்தை ஆராயவேண்டிய நிலைமை வேறு. தாத்தா ஜாதக கட்டங்களை மேய்ந்தார், பஞ்சாங்கத்தை பார்த்தார். அமாவாசைக்கு முன்னே ஒரு பெரிய கண்டம் இருக்கு, கஷ்டம்தான் என்றார் குரல் நடுங்க. கூடியிருந்த பெண்கள் விசும்ப ஆரம்பித்து விட்டனர். கொஞ்சம் குரல் உயர்த்தி அழ ஆரம்பித்த ஒரு சகோதரியை மாமா முறைக்க அவர் சட்டென்று கூடத்தை விட்டு வெளியேறி வாசலில் சென்று அழுதார். இதை எதுவும் உனர முடியாதவளாக, மருந்துகள் தந்த ஆழ்ந்த மயக்கத்தில் உள் அறையில் உறங்கிகொண்டிருந்தாள் அம்மா.

நான் மெலிதாக மனதுக்குள் சிரித்துக்கொண்டேன். கண்டமாம் கண்டம்; அம்மா என்னை பார்க்கும் போதெல்லாம் சிரிக்கிறா அவ நிச்சயமா பழையபடி எழுந்து உட்காந்து இன்னும் பலமாக சிரிக்கத்தான் போறா.

தேவராஜன் ரொம்ப அதிகமா பரவிடுத்து, மனுஷ யத்தநத்துல முடியாது, அதிகமா ஆறு மாசம் அதுக்குமேல பகவானோட க்ருப என்று மாமாவிடம் தனியறையில் சென்னை டாக்டர் சொன்னதை கேட்டபோதும் இப்படித்தான் மனதுக்குள் சிரித்துக்கொண்டேன். லூசு மாதிரி பேசறான் இந்த டாக்டர், ஆப்பரேஷன் பன்ன காயமெல்லாம் ஆறி பழையபடி சைக்கிள் ஓட்டத்தான் போறா அம்மா.


நாலு மாசத்துக்கு முன்ன இப்படித்தான் சில சொந்தக்காரா பேசிண்டு இருந்தா; முரளியோட ஜாதகப் பிரகாரம் இந்த வயசுல பத்மாவ ரொம்ப படுத்துமாம். டேய் முரளி பக்கத்துல இருக்கர கோயிலுக்கு போய் டெய்லி கார்தால விஷ்னு சகஸ்ரநாமம் சொல்லுடா......... இவாள்ளாம் ரொம்பத்தான் அலட்ரா என்று மனதுக்குள் சிரித்துக்கொண்டேன். ஆனால் தினமும் காலையில் விஷ்னு சகஸ்ரநாமம் சொல்ல தவறியதில்லை. அம்மா எழுந்து வந்து செவ்வா வெள்ளி குத்துவெளக்கு பூஜை,விரதம் வாரம்னு அதம் பன்னத்தான் போறா.

அவ போயிட்டான்னா நானும் இந்த பாஷாநத்த சாப்டுட்டு அவளோடவே போயிடுவேன் என்று அழுத அப்பாவிடம் இருந்து விஷப்பொட்டலத்தை பிடுங்கி எறிந்து விட்டு பாட்டி அண்ணா அக்கா எல்லோரும் அழுத போது மனதுக்குள் சிரித்துக்கொண்டேன்;அப்பா,நல்லா இருந்த போதுல்லாம் நரசிம்மமூர்த்தி மாதிரி கோபப்பட்டு அம்மாவ அடி உதனு கொடுமப்படுத்திட்டு இப்ப நல்லவன் மாதிரி நடிக்கிறியா?. ஒன்னும் ஆயிடாது அவளுக்கு. தான் எத்தனத்தான் கஷ்டப்பட்டாலும் அத எல்லாம் தொடச்சி எரிஞ்சிட்டு ஊருக்கள்ளாம் நல்லது பன்றவ அவ. அதையெல்லாம் தொடர்ந்து செய்யத்தான் போறா.

அம்மா பெட்டுக்கு பக்கத்தில் ஒரு புழுவப் பார்த்தேன். இது எப்படி இங்க வந்தது! அம்மா பார்த்தா பயப்படபோறா....ஒரு பேப்பரை அதன்மேல் போட்டு பிடித்து எடுத்துச் சென்று வெளியே எறிந்தேன். நாலு அஞ்சுன்னு பார்த்த பிறகு பாட்டிகிட்ட விஷயத்த சொன்னேன். பாட்டி அம்மாவப் போய் பாத்துட்டு வந்து பக்கத்து வீட்டுக்கு போய் பெருங்குரலெடுத்து அழுதா, ஒரு சின்ன புழு பூச்சிக்கு கூட கெடுதல் நினைக்காத மனசு அவளுக்கு, புத்து வச்சதுமில்லாம புழு புளுத்துப்போச்சே....சேச்சே இதுக்கு போய் ஏன் அழறா? மனதுக்குள் சிரித்துக்கொண்டேன். டெட்டால் போட்டு சுத்தம் பன்னிட்டாபுழு எல்லாம் செத்து போயிடும். அம்மா எழுந்து வருவா, தினமும் காலையில் வீட்டை மெழுகி சுத்தமா மடி ஆச்சாரமா இருக்கத்தான் போறா.

ஏதோ பச்சிலை வைத்தியமாம், அலோபதி கைவிட்டுட்டாக்கூட முயற்சிபன்னி பாக்கலாமாம். அம்மா நெய்வேலி விட்டு தஞ்சாவூர் போய்விட்டாள் வைத்தியத்திற்காக. புயலில் விழுந்து விட்ட மரங்களை அப்புறப்படுத்துவதற்காக நான் வீட்டிலே இருந்தேன். என்ன இது வேலை இழுத்துக்கொண்டே இருக்கிறது, நான் அம்மாவ பார்கபோவதிற்குள் அம்மா உடம்பு சரியாகி வந்து விடுவாள் போலிருக்கிறது, மனதுக்குள் சிரித்துக்கொண்டேன்.

தஞ்சையிலிருந்து போன், பணத்தேவை இருக்கிறது, மரம் விற்ற காசை எடுத்துக்கொண்டு வரவும். பஸ் தஞ்சையை நெருங்க நெருங்க பெரிய கோவிலின் கோபுரத்தை வைத்த கண் விட்டு விலகாமல் பார்துக்கொண்டே சென்றேன். திடீரென்று உடம்பும் மனதும் நடுங்க ஆரம்பித்து விட்டது. ஏன் என்ற காரனமும் உடனே புரிந்து விட்டது.சிவ பஞ்சாட்சரத்தை தொடர்ச்சியாக உச்சரிக்க ஆரம்பித்துவிட்டேன்.அம்மா ஆகாசத்தில் தெரிகிறாளா என்று சித்தி வீடு சென்று சேரும்வரை தேடிக்கொண்டே இருந்தேன். மூலிகை வைத்தியசாலையில் இருந்து சித்தியையும் என்னையும் அழைத்து செல்ல கார் வந்திருந்தது. பணத்தை காலையில் எடுத்து செல்லலாம் என்று சொன்ன சித்தியிடம் மறுத்து கையோடு எடுத்து சென்றேன். அம்மா பெட்டிற்கு சிறிது தூரம் நின்றிருந்த அப்பா; பத்மா போயிட்டா என்று அழ; சித்தி மயங்கி விழ; நான் மட்டும் போகும்பொழுது என்னை உலுக்கிவிட்டுச் சென்ற அம்மாவை நினைத்துமனதிற்குள் சிரித்துக்கொண்டேன்.

எனக்கு திருமணமாகி மனைவி சூல்கொண்டதும், எனக்கு பெண் குழந்தைதான் வேண்டும் என்ற என்னை மனைவி அதிசியமாகப் பார்த்தாள். ஆனால் தலைச்சன் ஆண். அதனால்எ ன்ன இந்த முறை நிச்சயம் அம்மா வருவா.

என்றென்றும் அன்புடன்,
பா. முரளி தரன்.

Saturday, July 15, 2006

1. இறை வணக்கம்

கலையாத கல்வியும் குறையாத வயதுமோர்
கபடு வாராத நட்பும்
கன்றாத வளமையும் குன்றாத இளமையும்
கழுபிணி இலாத உடலும்
சலியாத மனமும் அன்பு அகலாத மனைவியும்
தவறாத சந்தானமும்
தாழாத கீர்த்தியும் மாறாத வார்த்தையும்
தடைகள் வராத கொடையும்
தொலையாத நிதியமும் கோணாத கோலுமொரு
துன்பம் இல்லாத வாழ்வும்
துய்யநின் பாதத்தில் அன்பும் உதவிப் பெரிய
தொண்ட ரொடு கூட்டு கண்டாய்
அலையாழி அறிதுயிலு மாயனது தங்கையே
ஆதிகடவூரின் வாழ்வே
அமுதீசர் ஒருபாகம் அகலாத சுகபாணி
அருள்வாமி அபிராமியே.