Saturday, July 29, 2006

மொழி ஒரு சாதனமா அல்லது ஆயுதமா

அன்பர்களே நண்பர்களே,
மொழி தொடர்பு கொள்வதற்கான ஒரு சாதனம்தான் என்று பொதுவாக சொல்வார்கள். ஆனால் நடைமுறையில், மொழி சாதனமாக மட்டும்தான் பெரும்பாலன நேரங்களில் பயன்படுத்தப் படுகிறதா என்ற ஒரு கேள்வி நான் எதிர்கொண்ட ஒரு சில நிகழ்வுகளின் ஊடே எனக்கு ஏற்ப்பட்டது.

முதலாவதாக நான் தற்காப்பு கலையான டேக்வாண்டோ கற்க சென்றபோது ஏற்பட்டது. வகுப்பில் சேரும்பொழுதே எனக்கு அரபி சுத்தமாக தெரியாது என்று புரிந்து கொண்டார்கள். எனக்கு, கேப்டன் ஹமாதா மற்றும் கேப்டன் பாசீம் என இரண்டு ஆசிரியர்கள்.
இதில் கேப்டன் ஹமாதாதான் பாசீமிற்க்கும் குரு.

ஹமாதா ஒரளவு ஆங்கிலம் பேசுவார் அதனால் என்னை வகுப்பில் உடனே சேர்துக்கொண்டார். இதில் பாசீமிற்கு உடன்பாடு இல்லை. நீ வகுப்பில் அரபியில்தான் பேச வேண்டும் என்ற ஒரு கட்டளையோடு எனைச் சேர்த்துக் கொண்டார். எனக்கு காஷ்மீர் முதல் கன்யாகுமரிவரை சுற்றிய / வேலை பார்த்த / வசித்த அனுபவம் இருந்ததால் இந்திய மொழிகள் எதுவாயிருந்தாலும் சமாளித்து விடுவேன். ஆனால் அரபி?.

இந்த மொழிப் பிரச்சனையால் நிறைய கேலியும், கிண்டலும்
ஆரம்ப நாட்களில் சந்திக்க வேண்டி இருந்தது. ஆனால் அரபி தெரியாமலே என்னால் போட்டிகளில் கலந்துகொள்ளும் அளவுக்கு முன்னேற முடிந்தது.

பிற்காலத்தில் எனது நலனில் அக்கறை கொள்ளும் மிக நல்ல நண்பராக பாசீம் ஆனார். யோசித்துப் பார்த்தால் ஆங்கிலம் தெரியாது என்ற அவரது இயலாமையை மறைக்கத்தான், அரபி மொழி ஆயுதம் கொண்டு எனை வதைத்தாரோ என நினைக்கத் தோன்றுகிறது. ஆனால் அவர் புண்ணியத்தில்தான் நான் நிறைய அரபி வார்த்தைகள் கற்க முடிந்தது.

அதேபோல் எனது வாடிக்கையாளர் ஒருவர் உள்ளார். அவர் எகிப்தியர் ( அரபியில் எகிப்தியர்களை மிசிறி என்பார்கள்) நன்றாக ஆங்கிலம் பேசுவார் ஆனால் செல்பேசியில் எனை தவிர்க்க வேண்டும் என நினைத்தால் மிக கடினமான அரபியில் சரளமாக பேச ஆரம்பித்து விடுவார். நான் பஞ்சாபிலும் உத்திர பிரதேசத்திலும் சுற்றி திரிந்த நாட்களில், சில வட இந்தியர்களை ஆங்கிலம் பேசி ( ஹிந்தி தெரிந்திருந்தாலும்) தவிர்த்ததுண்டு.
அட நம்ம டெக்னிக் நம்ம கிட்டயே ரிப்பீட் ஆகுதா என்று சிரித்துக் கொள்வேன்.

தமாம்-இல் வாழ்ந்த நாட்களில், எனது வேலைக்கு அரபி அத்தனை அவசியமாகப் படவில்லை. அங்கு வெளிநாட்டவர்களின் ஆதிக்கம் தொழிற்சாலைகளிலும், கடை வீதியிலும் அதிகம். ஜெத்தாவின் தொழிற்சாலைகளில் முக்கிய பதவிகளில் அரபி ஆட்கள் அதிகம்.

நேற்று, பாகிஸ்தானிலிருந்து உம்ராவிற்காக வந்திருந்த நண்பனின் குடும்பத்தை அழைத்துக் கொண்டு கடற்கரை மற்றும் கடைவீதியில் சுற்றித்திரிந்தேன் அப்போது ஒரு அரபி வியாபாரி என்னை அரபியில் பேசு அரபியில் பேசு என்று வற்புறுத்தியாதால் உருவான பதிவு இது.

அப்படியே நினைவுகளை தமிழகத்துக்கு திருப்புகிறேன். நிறைய வேற்று மாநில நண்பர்களுக்கு சென்னையின் ஆட்டோ ஓட்டுநர்களுடன் இதே மாதிரி கசப்பான அனுபவங்கள் மிக அதிகம். அத்தனையும் நம்ம அரசியல்வாதிகளால் உண்டாக்கப்பட்ட குழப்பங்கள். நம்ம நாடு திருந்தினாத்தானே அடுத்தவன குறை சொல்ல முடியும்.
என்றென்றும் அன்புடன்,
பா. முரளி தரன்.

1 comment:

Anonymous said...

ddddddddd