Saturday, July 22, 2006

என்னை பாதித்த மஹான்கள்-ராகவேந்திரர்

நான் எங்கு அழைத்தாலும் நீ அங்கு வர வேண்டும்,
நான் எங்கு இருந்தாலும் உன் அருள் வேண்டும்,
புவனகிரி பிறந்தவரே மந்த்ராலய மஹான் - ராகவேந்திரா.......

ஒவ்வொரு வியாழக்கிழமையும் இந்த வரிகளை முதல் அடிகளாக கொண்ட பாடல், ராகவேந்திர மஹானின் பிறந்த இடமான புவனகிரியில் அமைந்த கோவிலில் பாடப்படும் பொழுது நான் அடையும் ஆனந்தத்திற்கு அளவே கிடையாது. ராகவேந்திரரின் அருள் எனக்கு எப்பொழுதும் உண்டு என முழுமையாக நம்புபவன் நான்.

ராகவேந்திரரின் அவதார ஸ்தலமான புவனகிரி, சிதம்பரத்திலிருந்து பத்து கிலோமீட்டர் தொலைவில் கடலூர் செல்லும் சாலையில் உள்ளது. அவர் பிறந்த வீட்டையே கோவிலாக மாற்றி உள்ளார்கள். அவர் பிறந்த இடத்தைப் பற்றி நிறைய குழப்பங்கள் இருந்ததாகவும், காஞ்சி மஹாபெரியவர்தான் பல்வேறு ஆதாரங்கள் கொண்டு, புவனகிரிதான் என நிரூபித்ததாகவும் சொல்வார்கள்.

நான் சவுதி வேலைக்கு வருவதற்காக விண்ணப்பத்தை அவர் காலடியில் வைத்து ஆசி பெற்று அனுப்பியது நினைவுக்கு வருகிறது.
அவரது படம் ஒன்றையும் கூடவே சவுதிக்கு கொண்டு வந்தேன். விமான நிலையத்தில் எனது உடமைகளை சோதித்த ஒரு குடியேற்ற அதிகாரி அந்த படத்தை அனுமதிக்க மறுத்து தன்னிடம் எடுத்து வைத்துக்கொண்டார். நான் அவர் கண்களை ஊடுருவிப் பார்த்தபடியே, அவரிடமிருந்து திரும்ப எடுத்து
கொண்டேன். என்ன நினத்தாரோ தெரியவில்லை, என்னை எடுத்துச் செல்ல அனுமதித்து விட்டார். ராகவேந்திரர் டாலர் கோர்த்த துளசி மாலை ஒன்று எனது காரில் எப்பொழுதும் தொங்கிக்கொண்டிருக்கும்.

சில பேர் பயமுறுத்திக்கொண்டே இருப்பார்கள். முரளி மாலையக் கழட்டு போலிஸ் பார்த்தா பிரச்சனை ஆயிடும். இதெல்லாம் இங்க அனுமதி கிடையாது. எக்சிட் அடிச்சி விட்ருவாங்க. அதுவே ராகவேந்திரர் விருப்பமாயிருந்தால் அப்படியே நடக்கட்டும் என்று நானும் தினமும் பல செக் போஸ்ட்களை தாண்டிக்கொண்டுதான் இருக்கிறேன்.

என்றென்றும் அன்புடன்,
பா. முரளி தரன்.

1 comment:

Anonymous said...

//என்ன நினத்தாரோ தெரியவில்லை, என்னை எடுத்துச் செல்ல அனுமதித்து விட்டார்.//
சத்யமேவ ஜயதே.