Saturday, October 07, 2006

தேன்கூடு போட்டி/விடுதலை/மாணிக்கம்

சாடாரென்ற பேருந்து குலுக்கலில் புத்தகத்திலிருந்து விலகிய கண் அந்த பெரியவர் மீது பட்டது. முதுமைக்கே உரிய அடையாளங்களோடு எனது இருக்கைக்கு பக்கத்தில் நின்று கொண்டிருந்தார். நான் அமர்ந்திருந்தது ஜன்னலோர சீட். ஐயா இங்க உட்காருங்க என்று எழுந்து வெளியே நின்றேன்.

அடுத்த நிறுத்தத்தில் பெரியவருக்கு அருகில் இருந்தவர் இறங்கிக்கொண்டார். நான் பெரியவருக்கு அருகில் மீண்டும் புத்தகப் புழுவாய்.

தம்பிக்கு எந்த ஊரு?.
நெய்வேலி.
இன்னும் மூனு மணி நேரம் போனுமே. அடுத்த ஸ்டாப்புல இறங்கின பக்கத்து சீட்டுக்காரன் எந்திரிக்காதபோது, தம்பி டக்குனு எந்திரிச்சி நின்னீங்களே, சந்தோஷம். நான் புன்னகை; மீண்டும் புழு.

என்ன புத்தகம் தம்பீ?.
குண்டலீனி யோகம்.
தம்பி பேரு என்னா?.
முரளீ தரன்.
தம்பி ஐயமாருங்களா?.
நான் தலையசைத்தேன்.
ஐயரு புள்ளைங்கள்ளாம் தங்கமாத்தான் இருக்கு. என் பேரன் படிக்கிற ஸ்கூல்ல நாப்பது புள்ளைங்க. ஒரே ஒரு ஐயரு புள்ள ஆனால் அதுதான் எல்லாத்தலயும் முதலா நிக்குது.
நான் புன்னகை.
நம்ம ஊரு போஸ்ட்மாஸ்டர் ஐயர் புள்ள பாக்க உங்கள மாதிரித்தேன் இருக்கும், அன்னிக்கி பென்ஷன் வாங்கப் போனன், ஐயா மெட்ராஸ்ல வேலை கிடைச்சு போறன் ஆசீர்வாதம் பன்னுங்கன்னு நெடுஞ்சான்கிடையா கால்ல வுழுந்திருச்சு. நான் கலங்கிட்டன், நம்ம புள்ளைங்கதான் நம்மள மதிக்க மாட்டேங்குது. ஒருத்தன் குடிச்சி கூத்தடிக்கிறான், இன்னோருத்தன் கூத்தியா வெச்சுக்கிட்டு குடியழிக்கிறான்.
நான் பேசியாகவேண்டிய இக்கட்டில்; ஐயா வாத்தியாரா இருந்திங்களா?.
இல்ல தம்பீ.
போஸ்ட் ஆபிசுக்கு பென்ஷன் வாங்கப் போனதா சொன்னீங்க.
தியாகி பென்ஷன் தம்பி.
தியாகி பென்ஷனா?.
ஆமாம் தம்பி நான் ஐ என் ஏ-வுல இருந்தேன்.
ஐ என் ஏ-வுலயா?. உடம்பு சிலிர்த்தது. எப்படி சேர்ந்தீங்க?.

என் தாய் மாமன் மலேயாவுல இருந்தாரு. அவரு பொண்ண கல்யாணம் கட்டனும்னு மெட்ராஸ்ல இருந்து கப்பல் ஏறி மலேயா போனன். அவரு குடும்பத்தோட சேர்ந்து ரப்பர் தோட்டத்துல வேலை செஞ்சேன்.

அப்பத்தான் சண்டை வந்துடுச்சு. ப்ளேன்ல வந்து குண்டு போட்டாங்க. குண்டுபோட்டதுல என்மாமன் குடும்பம் மொத்தமும் அழிஞ்சுப் போச்சு.
நான் ஜனங்களோட ஜனங்களா சேந்து நடக்க ஆரம்பிச்சிட்டன்.

அப்பத்தான் ஐ என் ஏ வுல சேரச்சொல்லி எல்லாரையும் கூப்டாங்க.
நான் சேர்ந்துட்டேன். நான் இருந்த படைக்கு பேரு குரங்குப் படை.

குரங்குப் படையா?.

ஆமாம் மரத்துமேல ஏறி நின்னு, எதிரிங்க வர்ராங்களான்னு பாத்து, பின்னால வர்ர நம்ம ஆளுங்களுக்கு தகவல் சொல்லி விடனும். ப்ளேன்ல வந்து தொடர்ச்சியா குண்டு போட்டுகிட்டே இருந்தாங்க. தமிழருங்க அதுக்கெள்ளாம் பயந்துருவம்மா என்ன. ஆனால் நாங்க எல்லாம் சிதறிப்போய்ட்டோம். நேதாஜீ வேற என்ன ஆனாருன்னு தெரியல. கால்நடையா நடந்து கல்கத்தா வந்தோம். நேதாஜீ வீட்டுக்குப் போனோம்.
விடுதலை கிடைச்சிடுச்சுன்னாங்க.ஒரு அட்ட குடுத்தாங்க.

நானும், என் கூட்டாளி செஞ்சி பக்கத்துக்காரன் நாலு வருஷம் முன்னாடித்தான் செத்துப் போனான், ரெண்டு பேரும் கிளம்பி ஊருக்கு வந்து கல்யாணம் முடிச்சிட்டோம்.

ஐயா உங்கள சந்திச்சதுல ரொம்ப பெருமையாவும், சந்தோஷமாவும் இருக்குங்க.

ஆனா ஊருல எல்லாரும் இந்த கிழவன் பென்ஷன வாங்கிட்டு சொகுசா இருக்கறான்னு பேசறாங்கப்பா.

அவங்கள வுடுங்க ஐயா. விடுதலை கிடைச்சதும் உங்களுக்கு எப்படி இருந்தது?.

பெருசா ஒன்னும் தோனல தம்பீ. ஏன்னா தக்கடா ரஹோ-ன்னு நேதாஜீ இந்த மார்ல கை வச்சு சொன்னப்பவே ( மார்பில் ஓங்கி இரண்டு முறை அடித்துக் கொண்டார் ) விடுதலை கிடைச்சிட்டமாரி இருந்தது

நான் அவரைக் கண்டு உணர்வு தடுமாறி உட்காந்திருந்தேன்.

தம்பி நான் இறங்கர ஸ்டாப் வந்துடுச்சு என்று எழுந்து நடந்து போனார்.

ஐயா பேரு சொல்லாமப் போறிங்களே.

மாணிக்கம் என்றார், கம்பீரமாக.
என்றென்றும் அன்புடன்,
பா. முரளி தரன்