Tuesday, October 17, 2006

ஜனனீ ஜன்ம பூமி - 1

இரண்டு மாதம் தாய் நாட்டு வாசம். இந்தியாவில் இருந்து திரும்பி வந்து பதினைந்து நாள் ஆன பிறகும் ஊர் வாசனை மறக்க மாட்டேன் என்கிறது.
அதனால் விடுமுறை நாட்களை பற்றி பதிவு போட்டு விடவேண்டியதுதான் என முடிவு செய்தேன்.

இரண்டு வருட சவுதி வாழ்க்கைக்குப் பிறகு மீண்டும் இந்தியா.சென்னை விமான நிலையம் வாசல் தொட்டதும், கண்கள் முதலில் தேடியது குழந்தையைத்தான். இரண்டரை வயதில் விட்டுச் சென்றது. அடிக்கடி தொலைபேசியில் / கனினியில் பேசுவதுதான் என்றாலும், மெல்லிய உடலும்,
பிஞ்சு கைகளும் ஸ்பரிசிக்க, வாரி அனைப்பது போலான மகிழ்ச்சி வருமா.

கூட்டத்தை விலக்கிக் கொண்டு, முதல் ஆளாய் ஓடி வந்து, பாய்ந்து அனைத்துக் கொண்டான் குழந்தை. தன்னலம் அற்ற அந்த அன்பை, முழுதும் உள் வாங்கிக் கொண்டேன். இந்த இடத்தில் ஒரு வார்த்தை. எனது வாழ்வின் மிக சந்தோஷமான தருனம் எது எனக் கேட்டால், எனது குழந்தையால் அனைக்கப் படுவதும், எனது குழந்தையை அனைப்பதும் என நிச்சயமாகச் சொல்வேன்.

எனது சகோதரரின் பெண் குழந்தையும், எனது சகோதரியின் மைத்துனர் குழந்தையும் ( பெண் ), சொப்புச் சாமான் வைத்து விளையாடிக் கொண்டிருந்த போது, ஒரு குழந்தை பொம்மையை சாப்பிட வைத்து, தாலாட்டி, தூங்க வைத்தார்கள். இதை கவனித்த நான், எனது குடும்ப பெண்களிடம் ஒரு கேள்வியை முன் வைத்தேன்.

குழந்தைகள், தாயார் செய்ததை நினைவில் நிறுத்தி இதேபோல் செய்கிறார்களா?. அல்லது இது ஒரு பெண் குழந்தையின் இயல்பான குணமா?.

அவர்கள் பதில் இரண்டும்தான். கூடவே ஒரு பெண் தாய்மையை மிக விரும்புகிறாள் என்றும் பதில் அளித்தார்கள்.

ஆனால், ஆண்கள் கதை?. ஆண்களிடம் இந்த கேள்வியை கேட்டதில்லை.
பிற ஆண்கள் எவ்வாறு உணர்கிறார்கள் என தெரியவில்லை. ஆனால் நான் திருமணம் நிச்சயமான உடனேயே, நல்ல ஞானமுள்ள குழந்தை வேண்டி இறைவனை பிரார்த்திக்க ஆரம்பித்துவிட்டேன்.

குழந்தையிடம் சிறிது கூட முகம்கோன நான் ஒரு பொழுதும் விரும்பியதில்லை. சமத்து என்ற சொல்லை தவிர வேறு மாதிரி விளித்ததில்லை. அதனால் அவன் என்னிடம் மிக ஒட்டுதலாய் இருப்பான்.

எப்பொழுதும், என்னிடமே ஒட்டிக் கொண்டிருந்ததால், அவனுக்கு கங்காரு என ஒரு செல்லப் பெயரை எனது தாய்மாமன் வைத்தார். என்னப்பா ஏர்போட்ல இறங்கினதுக்கே இத்தனை பில்டப்பா. ஓக்கே, எனது கங்காரு சமத்து குறித்தும், பிற விடுமுறை அனுபவங்கள்/உணர்வுகள் தொடரும்.
என்றென்றும் அன்புடன்,
பா. முரளி தரன்.

No comments: