Sunday, March 18, 2007

ரஷ்ய விஞ்ஞானிகளை விஞ்சிய தமிழக களவானிகள்.

முதலில் ரஷ்ய விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்பைப் பற்றி தெரிந்து கொள்வோம். இந்த செய்தி, சவுதியின் நாளேடு, சவுதிகெஸட்டின் இன்றைய பதிவில் வெளியாகி உள்ளது.

ரஷ்ய ராணுவ விஞ்ஞானிகள் பல வருடங்கள் முன்பாக ஒரு ஷூ தயாரித்து
இருக்கிறார்கள், அவர்கள் நாட்டு சிறப்பு இராணுவப்படை வீரர்களுக்காக.

பல வருடங்கள் ரகசியமாக வைக்கப்பட்ட இந்த தொழில் நுட்பம்,
கம்யூனிச ரஷ்யாவின் வீழ்ச்சிக்குப் பிறகு தொன்னூற்று நான்காம் ( 1994 ) ஆண்டுக்கு பிறகுதான் வெளி உலகத்திற்கு தெரிய வந்ததாம். அந்த ஷூவின் சிறப்பம்சங்கள்.

இந்த ஷூ, ஒரு சிலிண்டரும், பிஸ்டனும், எரிபொருள் நிரப்பும் அறையும்,
ஒரு இக்னீசியஸ் சுவிட்ச்சும் பொருத்தப்பட்டு தயாரிக்கப் பட்டுள்ளது.

1. பறனையின் ( விமானம் ) இஞ்ஜின் பிஸ்டனின் தரத்திற்கு இணையான
தொழில் நுனுக்கத்துடன் தயாரிக்கப்பட்டது.

2. ஒரு மோட்டார் வாகனத்தின் இஞ்ஜின் செயல்படுவது போலவே இந்த
இஞ்ஜின், பிஸ்டன் அமைப்பு செயல்படும். இந்த ஷுவை அணிந்து
ஒவ்வொரு கால் அடி எடுத்து வைக்கும்பொழுதும், எரி பொருள்
வெளிப்பட்டு, ஒரு அழுத்தம், ஒரு வெடிப்பு, ஒரு உந்து சக்தி.

3. இந்த ஷூவை அணிந்துகொண்டு ஓடினால் ஒரு மணிக்கு முப்பத்தைந்து
(35 ) கிலோமீட்டர் வேகத்தில் ஓடலாம். அதாவது ஒரு வினாடிக்கு பத்து
( 10 ) மீட்டர் தூரம் ஓடலாம். அதாவது இங்கு ஒரு அடி வைத்தால்,
அடுத்த வினாடியில் அடுத்த அடியை பத்து மீட்டர் தூரத்தில் வைப்பீர்கள்.

சிறப்பு பயிற்சி பெற்ற இராணுவ வீரர்கள், கவச வண்டிகளின் குறுக்கே ஓடவும்,
மின்னல் வேகத்தில் எதிரிகளின் தாக்குதலில் இருந்து தப்பித்து ஓடவும் இந்த ஷூவை உபயோகப் படுத்துவார்களாம். இப்போது இந்த ஷூவை, வர்தக ரீதியில் தயாரித்து, பொதுமக்கள் அனைவரின் உபயோகத்திற்காகவும் விற்பனை செய்ய இருக்கிறார்களாம்.

இப்போது நம்ம ஊர் களவானிகளின் கதைக்கு வருவோம்.

இரண்டாயிரத்து மூன்றாம் வருடம் நான் கடலூர் மாவட்டத்தின் சிதம்பரம் நகரில் தங்கியிருந்து பணியாற்றிகொண்டிருந்தபோது நடந்த சம்பவம். அப்போது இந்தப் புரளி ஒரு காட்டுத் தீபோல் சிதம்பரத்தின் சுற்று வட்டாரத்து கிராமங்களில் பரவியது. அது ஒரு விநோத மனிதனைப் பற்றியது.

இந்த மனிதன், ஒருவர் வீட்டுக்குப் போன் செய்து, நான் இன்று உங்கள் வீட்டுக்கு வருவேன், என்னை முடிந்தால் பிடித்துக் கொள்ளுங்கள் என்று சவால் விடுவான். அதேபோல் அன்று இரவு வருவான். அவனை பிடிக்க முயற்சித்தால் படு வேகமாக ஓடிவிடுவான். அப்படி ஓடும்பொழுது குறுக்கே வரும் வேலிகளையும், சுவர்களையும் வெகு சுலபமாக தாவிக் குதித்து ஓடி விடுகிறான்.

எங்கள் தெருவின் பக்கத்து தெருவில் உள்ள ஒரு வீட்டிற்கும் இதேபோல்
ஒரு தொலைபேசி வந்தது. நாங்கள் அனைவரும் அருவா, சவுக்கு கட்டை என்று கையில் ஏந்தி தயாராக இருந்தோம். ஆனால் அவன் வரவில்லை.
மறுநாள் போன் செய்து, நான் வந்திருந்தேன், உங்கள் தெரு கோவிலில்தான் ஒளிந்திருந்தேன் என்றெல்லாம் சொன்னான். ஆனால் நேரில் வரவில்லை.

மறுநாள் பக்கத்து கிராமத்தில் இதேபோல விளையாடி இருக்கிறான். அந்த கிராமத்தவர் துரத்திச் சென்றுள்ளனர், ஆனால் அவனை பிடிக்க முடியவில்லை. பிடிக்கமுடியாததற்குக் காரணம் அந்த திருடனின் ஷுதான்.

அந்த திருடன் ஒரு ஷூ போட்டுகிட்டு இருக்காம்பா, படு ஸ்பீடா ஓடுறான்.
ஒரு அடி இங்க வச்சா அடுத்த அடி பத்து மீட்டர் அந்தண்ட வக்குறான். கரும்பு காட்டுக்குள்ள பூந்து ஓடிட்டான், ஊரே சேந்து தேடியும் ஆள புடிக்க முடியல. ஷூவுல எதுவும் ஸ்பிரிங் வச்சுருக்கானோ? என்னாவோ?.

இந்த செய்தி/புரளி ஒரு வார காலம் சிதம்பரம் சுற்று வட்டார கிராம மக்களை தூங்கவிடாமல் செய்தது . அந்த நேரத்தில் இதை ஒரு புரளி என்றோ கட்டுக்கதை என்றோ முழுவதுமாக விலக்க முடியவில்லை.
யாரோ விஷமிகள் போன் செய்து விளையாடி இருக்கலாம்.

ஆனால் அவனை விரட்டிப் பிடிக்க முயன்ற கிராம மக்களின் வாக்குமூலத்தை எப்படி நிராகரிக்க முடியும். ரஷ்ய விஞ்ஞானிகளின் சாதனையை விஞ்சும் அளவுக்கு ஒரு ஷூவை கண்டுபிடித்திருந்த அந்த களவானியை என்னவென்று சொல்வது.

இப்போது ஒரு முக்கியமான சமாச்சாரத்திற்கு வருகிறேன். கம்யூனிச ரஷ்யா உடைந்த பிறகு ஏற்பட்ட பொருளாதாரச் சிக்கலை சமாளிக்க
முடியாத பல அதிகாரிகள்,விஞ்ஞானிகள் ஆயுதங்களை திருட்டுத்தனமாக
விற்று காசு பார்ப்பதாகவும், அது எத்தகைய ஆபத்தானது என்றும் அந்த காலக்கட்டத்தில் பல செய்திகள் வந்தன.

அப்படி விற்கப்பட்ட ஒரு ஷூதான் சிதம்பரம்வரை வந்ததா?. ஏனென்றால் இதே காலகட்டத்தில் சிதம்பரம் பகுதியில் யுரேனியத் தகடு விற்றதாக ஒருவர் கைது செய்யப்பட்டார். அந்த தகடு கல்பாக்கம்
அனு ஆராய்ச்சி மையத்திற்கு பரிசோதனைக்காக எடுத்துச் செல்லப்பட்டது. இது அந்நாட்களில் பத்திரிக்கைகளில் பரபரப்பாக வந்த செய்தி.

கொள்ளிடத்திலிருந்து, வெள்ளாறு முகத்துவாரம் வரையிலான சிதம்பரத்தின் கடற்கரை பகுதி ஒரு காலத்தில் கடத்தல்காரர்களின் சொர்கபூமி என்று அனைவரும் அறிந்ததே.

உண்மையா? புரளியா? விஞ்ஞானமா?கடத்தலா? அந்த தில்லை சபாபதிக்கே வெளிச்சம்.
என்றென்றும் அன்புடன்,
பா.முரளி தரன்.

No comments: