Wednesday, March 28, 2007

பெரியாரும் நானும் - 1.

எனது தந்தையார் நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில் ஒரு சாதாரண தொழிலாளியாக வாழ்க்கையை துவங்கினார். நாங்கள் குடியிருந்த தொழிலாளர் குடியிருப்பில் அனைத்து ஜாதி மதம் சார்ந்தவர்களும் இணைந்துதான் வசித்து வந்தோம். இன்னும் சொல்லப்போனால் ஜாதி, மதம் என்றெல்லாம் இருப்பதே தெரியாது. அனைவரும் நல்ல விதமாகவே பழகி வந்தாலும் ஒரே ஒரு வீட்டு அம்மா மட்டும் சும்மாவே காரணம் கண்டுபிடித்து எங்கள் வீட்டோடு வலிய வம்பு சண்டை வளர்த்துக்கொண்டே இருப்பார்கள். சிறுவனான எனக்கு இது மிகுந்த ஆச்சரியம் அளித்த விஷயம். இத்தனைக்கும் அவருடைய மகன் எனக்கு நல்ல நண்பன். அப்பொழுது அதற்கு காரணம் தெரியவில்லை. பிற்காலத்தில் அவர்கள் வீட்டு சுவற்றில் வரைந்திருந்த ஒரு தாடி தாத்தாவின் படம் ஞாபகம் வந்தபொழுதுதான் அதற்கான காரணம் புரிந்தது.

எனக்கு பதினோரு வயதில் உபநயனம். அதற்காக முன்தலையில் சிறிது முடி வழித்து, குடிமியும் சிறிது நாள் வைத்திருந்தேன். அனைத்து சிறுவர்களும் அதை விசித்திரமாக கவனித்து சில கேள்விகளும், சிறிது கேலியும் பேசி மட்டுமே வந்தனர். ஆனால் ஒரு பெரியவகுப்பு அண்ணன் மட்டும் விடாது என் குடிமியை பிடித்து இழுத்தும், அடித்தும், பிளேடால் குடுமியை நறுக்கிவிடுவேன் என பயமுறுத்தியும் தாங்க முடியாது தொந்தரவு செய்து வந்தான். நான் கொஞ்சம் துறுதுறுப்பு என பெயர் பெற்றவன் ஆனால் அதன் பிறகுதான் கொஞ்சம் முரடு என பெயர் பெற்றேன். அவன் தொந்தரவு எல்லை மீறிப்போனதால், பள்ளியில்
வளர்ந்திருந்த ஒரு மரத்திலிருந்து ஒரு கழியை உடைத்து, அவனை பள்ளி மொத்தமும் விரட்டி விரட்டி அடித்தேன். அப்படி அடித்ததற்காக அரை நாள் ஹெட்மாஸ்டர் அறை வாசலில் முட்டி போட்டேன். அவனுடைய தந்தையாரும் என்னை வந்து மிரட்டிவிட்டுப் போனார். அதன்பின் பள்ளியின் ஆசிரியர்கள் அதை பெரிய பிரச்சனையாக ஆகாமல் தடுத்து விட்டார்கள். பிற்காலத்தில் அந்த அண்ணா ஏன் அப்படி நடந்துகொண்டான் என்பதை அவர்கள் வீட்டு சைக்கிளின் முன்பக்கத்தில் பறந்த ஒரு கொடியின் ஞாபகம் வந்ததும் தெரிந்துகொண்டேன்.

சிறு வயதில் பட்சக்குதிரை தாண்டும் விளையாட்டு. ஒரு சிறுவன் கால் முட்டியில் கையை வைத்துக்கொண்டு, குனிந்து, முதுகுப் பரப்பை சமதளமாக்கி நிற்க வேண்டும். மீதி சிறுவர்கள் வரிசையில் நின்று ஓடிவந்து , குனிந்துநிற்பவன் முதுகில் இரு கைகளை வைத்து, எம்பி, இரு கால்களை விரித்து , அவன் உடலின் வேறு எந்த பாகங்களிலும், நமது உடலின் பாகங்கள் படாமல் தாண்டி குதிக்க வேண்டும். ஓடி வருவதால் குதிரை. கால்கள் இரண்டையும் விரிக்கும்போது ஒரு சிறகை விரிப்பதுபோல் இருப்பதால் பட்சம் ( பட்சம் என்றால் சிறகு , பட்சத்தை உடையது பட்ஷி. நன்றி: வாரியார் சுவாமிகள்). ஒடி வந்து எம்பி கால்களை விரித்து தாண்டும்பொழுது, ஒரு குதிரை இறக்கை விரித்துப் பறப்பதுபோல் இருப்பதால் இந்த விளையாட்டுக்கு பட்சக்குதிரை என பேர் ஆனதோ?.
நாங்கள் இதை ஆபியம் விளையாட்டு என்றும் சொல்வோம்.

அப்படி ஒவ்வொரு முறை தாண்டும்பொழுதும், ஒவ்வொரு வார்த்தையாக சொல்லி தாண்டுவோம்.
ஆபியம், இஸ்தாபியம், மணியாபியம், முத்தாபியம்,
லக்கடிகொக்கு என்று, கடைசி முறையாக தாண்டி குதிக்கும்பொழுது
ராஜா சூத்துல ஒத என்று சொல்லி,
குனிந்து நிற்பவன் பின்பக்கம் ஒரு உதை விட்டுவிட்டு குதிக்க வேண்டும்.
இந்த விளையாட்டில் நான் சூரன் என்று பெயர் பெற்றவன் ( நம்புங்கண்ணா, டேக்வாண்டோவில் இந்த விளையாட்டே ஒரு உடற்பயிற்சி. ஆனால் பின்புறம் உதைப்பது கிடையாது. எப்படி சரியானபடி தாவிக்குதிக்க வேண்டும் என demonstrate செய்துகாட்ட வேண்டுமானால் எங்கள் கேப்டன் ( குருநாதர் ) என்னைத்தான் கூப்பிடுவார் ) .

ராஜா சூத்துல ஒத என்று சொல்லி உதைத்துக்கொண்டே தாவிக் குதிப்பது சற்றே கடினமான ஒரு செயல். இதை சரியானபடி செய்ய முடியாது, நிறைய சிறுவர்கள் out ஆகி, குனிந்து நிற்கும் ஆளாக மாறி விடுவார்கள். சில குறும்பர்கள் வேண்டுமென்றே வலி எடுக்கும் அளவுக்கு ஓங்கி உதைப்பார்கள். இதனால் சில நேரம் சண்டை வந்து விடும். அதனால்
ஒங்கி உதைப்பது கூடாது என்றும், சிறிது அளவு உடையில் கால்படும் அளவிற்கு உரசினால் கூடப்போதும் என்றும் விதி மாற்றம் செய்யப்படும்.

அப்படி உரசினால் அதை குனிந்து நிற்பவர் உணரமுடியாமல் போகும். அதனால் குனிந்து நிற்பவர் out கேட்கும் வாய்ப்பு உள்ளது. அதனால் தாண்டியவரின் கால் குனிந்து நிற்பவரின் மேல் பட்டதா என்பதை கண்கானிக்க ஒரு நடுவரை நியமித்திருப்போம்.

அன்று எங்கள் தெருவில் புதிதாக குடிவந்த ஒரு சிறுவன் விளையாட்டில்
சேர்ந்தான். நான் அவன் பின் புறம் டவுசரில் (கால்சட்டை) ஒரு உரசு உரசி தாவிக் குதித்து சென்றேன். ஆனால் எனது கால் அவன் மீது படவே இல்லை
என சாதித்தான். நடுவர் எனது கால் பட்டது என அவர் கண்டதை அறிவித்தும், அவன் நடுவர் தீர்ப்பை ஏற்க மறுத்து விட்டான்.

நான், நடுவர் தீர்ப்பைதான் ஏற்பேன் என்று பிடிவாதமாக இருந்ததால் எனது
வாழ்வில் முதல் முறையாக ஒரு வசவை கேட்க நேர்ந்தது. இந்த பார்ப்பார பசங்கள எதிலியுமே சேக்க கூடாது என்பதுதான் அது. நான் பதிலுக்கு அவனை திட்ட அது பெரிய சண்டையாக மாறிவிட்டது. அந்த நிகழ்ச்சிக்குப்
பிறகு எப்பொழுது, எப்படி மாறினோம் என்றே ஞாபகம் இல்லை, ஆனால் இன்றும் நாங்கள் உயிர் நண்பர்கள்.

பிற்காலத்தில் நாங்கள் இந்த சண்டையை பேசி சிரித்து ஆராய்ந்து பார்த்தபொழுது ஒரு விஷயம் புரிந்தது. எனது நண்பனின் குடும்பத்து
ஆண்கள் பார்ப்பன எதிர்ப்பு என்பதை ஒரு கொள்கையாகவே கொண்டவர்கள் என்றதால் சிறுவனான எனது நண்பனும் எந்த காரணமும், அவசியமும் இல்லாவிட்டாலும் கூட பெரியவர்கள் செய்ததால், பேசுவதால் நாமும் அதேபோல் செய்வோம், பேசுவோம் என முடிவெடுத்துவிட்டான்.

நீளம் அதிகமாகிக்கொண்டே போகிறது. மீதி அடுத்தடுத்த பதிவுகளில்.
என்றென்றும் அன்புடன்,
பா.முரளி தரன்.

3 comments:

அருண்மொழி said...

பாயும் பார்பனரே,

இப்போது குடுமி இருக்கா இல்ல ஏதாவது திராவிட பெத்தடின் அதை வெட்டி போட்டுவிட்டதா??

murali said...

அருண்மொழியாரே,
நான் வைதீகத்தை வாழ்க்கைப்பாடாக
கொள்ளவில்லை எனவே குடுமி வைத்துக்கொள்ள அவசியம் இல்லாது போய்விட்டது.
என்றென்றும் அன்புடன்,
பா. முரளி தரன்.

Anonymous said...

கொஞ்சம் அப்படியே இறங்கி "லியோ மோஹன் " என்பார் போட்டிருக்கும் பதிவை பார்க்கவும்.
தயாராக இருங்கள்..
உங்கள் முதல் பதிவுக்கு வாழ்த்துக்கள்.