Tuesday, March 06, 2007

சாகரன் கல்யாணுக்கு ஒரு அஞ்சலி.

அன்று அப்துல் கலாமைப்பற்றி ஒரு பதிவு எழுதிக் கொண்டிருந்தேன். திடீரென்று வரிசையாக தேன்கூடு நிறுவனர், நிர்வாகி சாகரன் கல்யாண் மரணம் என செய்திகள் வரத் தொடங்கின.

ஒவ்வொரு பதிவாக வரிசையாக படித்ததும் எனக்கு ஏற்பட்ட வருத்தத்தை வார்த்தையில் வடிக்க இயலாது. இதைப்பற்றி ஒரு பதிவு இட வேண்டும் என நினைத்து நாட்கள் நகர்ந்ததுதான் மிச்சம்.

சாகரன் மரணம் பற்றி பதிவு இடாதது ஒரு மிகப்பெரிய உறுத்தலாகவே
மனதில் இருந்து வந்தது.

எனக்கும், பெரும்பான்மையான வலைப்பதிவாளர்கள் போலவே, கல்யாண் என்பவரைப் பற்றி எதுவும் தெரியாது.

நான் இருக்கும் ஜெத்தாவிலிருந்து ஆயிரம் கிலோமீட்டர் தொலைவில் உள்ள ரியாத்தில் இருந்திருக்கிறார் ஆனால் தெரியாமல் போய்விட்டது. கடந்தா ரம்ஜான் விடுமுறையில் ஐய்ந்து நாட்கள் ரியாத்தில்தான் இருந்தேன். அப்போது தெரிந்திருந்தால் கூட சந்தித்திருப்பேன்.

ஆனால் ஒரு நாள் வலத்தளத்தில் மேய்ந்து கொண்டிருந்த பொழுது சாகரஅலை என ஒரு வலைப்பூவைக் கண்டேன். இருப்பிடம் ரியாத் என்று வேறு இருந்ததால் ஆர்வமாக படிக்க தொடங்கினேன்.

அவரது எழுத்து மிகவும் பக்குவப்பட்டதாக இருந்தது. ஒரு நீண்ட இடைவேளைக்குப் பிறகு மீண்டும் எழுதத் துவங்கியிருப்பது தெரிந்தது.

குறிப்பாக செல்போன் குறித்து ஒரு பதிவு எழுதியிருந்தார். அதில் நான் ஒரு பின்னூட்டம் கூட இட்டிருந்தேன்.

மேலும் அவர் தலைமையேற்று நடத்திவந்த எழுத்துக் கூடம் பற்றியும், நகுலன், இராமகிருஷ்ணன், விசாகாஹரி என எங்கெங்கோ சுற்றி வருவதாய் இருந்தது அவரது எழுத்து.

அன்றிலிருந்து சாகரனின் வலைத்தளத்தையும் படிப்பது என்பதை வழமையாக்கிக்கொண்டேன்.

அவரது மரணச்செய்தியும், அவரது அருகாமையிலேயே வசித்து வந்தும் அவரைப் பற்றி ஏதும் அறியாத அறியாமையில் இருந்து விட்டதும் என்னை
மிகவும் பாதித்து விட்டது.

எப்பொழுதும் இடைவிடாமல் ஒலித்துக் கொண்டிருக்கும் எனது காரின் டேப்ரிக்காடரை இரண்டு நாட்களாக நான் தொடவே இல்லை என்பதை இரண்டு நாட்கள் கழித்துதான் என்னால் உணரவே முடிந்தது.

நான் அறிந்த ஒரேஒரு வலைப்பதிவரை அழைத்து எனது வருத்தத்தை தெரியப்படுத்தினேன். அவரும் உடைந்து போயிருந்தார். அவர் என்னைப்போலல்லாமல் கல்யாணை நன்றாக அறிந்தவராகவும், தொடர்பில் இருந்தவராகவும் இருந்திருக்கிறார் என்பதே எனக்கு அப்பொழுதுதான் தெரிந்தது. எனக்கு மட்டும் அந்த வாய்ப்பு கிடைக்காமல் போய்விட்டதை எண்ணி வருந்தினேன்.

மிகச் சாதரணமான மனிதன் நான். வலைப்பூவில் கையெடுத்து வைத்த உடனே
விடாது கருப்புவை திட்டி பிறகு மன்னிப்பு கேட்டேன். பிறகு போலியின் தொல்லை சிறிது நாள் தொடர்ந்தது. பிறகுதான் ஒரு நிதானத்துக்கு வந்தேன் எனச் சொல்லலாம்.

வலைப்பூ எனக்கு புதிய விஷயங்களை அறிமுகப் படுத்தியது. புதிய புரிதல்களை ஏற்படுத்தித்தந்தது. அதற்கு தளம் அமைத்துக் கொடுத்த கல்யாண்சாகரன் இன்று இல்லை.

எனது தாயாரின் மரணத்திற்கு பின் நான் இந்த அளவு வேறு யாருடைய மரணத்தாலும் இந்தளவு பாதிக்கப்பட்டதில்லை.

சிறிய வயது ஆதலால் அவரது மரணமும் இயற்கையானதாக இருந்திருக்காதோ என்றொரு ஆதாரமற்ற சந்தேகமும் எனது மனதை வாட்டியபடி இருந்தது. ஏனென்றால் அதற்கு சிறிது நாட்களுக்கு முன்தான் அவர் தன்னை வெளிக்காட்டியுள்ளார்.

வலைப்பூவில் உள்ள எல்லையற்ற சுதந்திரம் அனைவரும் அறிந்ததே. அதில் காயப்பட்டவர்களால், எழுத்துச் சுதந்திரத்தின் குரல்வலை நெறிக்கப்பட்டதோ?
என்றெல்லாம் குழம்பித் தவித்தேன்.

ஆனால் மேன்மேலும் வந்த தெளிவான தகவல்களால் எனது குழப்பம் தீர்ந்தது. இந்த பதிவை எழுதும் முடிவுக்கு வந்தேன்.

கல்யாணின் குடும்பம் தற்போது எப்படி உள்ளது என்று சென்னைப் பதிவர்கள் யாரும் எழுதினால் நல்லது.

ஜனாதி அப்துல் கலாம் அடிக்கடி சொல்வது போல, இந்தியாவின் பலம் கல்யாணைப் போன்ற சாதனை படைக்கத் துடிக்கும் இளைனர்களின் கைகளில்தான் உள்ளது. அப்படி ஒரு சாதனை படைத்த இளைஞனின் இதயம்
தனது துடிப்பை நிறுத்தியிருந்தாலும், ஏராளமான இளைஞர்களின் இதயத்தில் சுடரேற்றிச் சென்றுள்ளது.

எனது அடுத்த வாரீசுக்காக நான் காத்திருக்கிறேன். அது ஆணாய் இருந்தால் சாகரன், பெண்ணாய் இருந்தால் கல்யாணி.

கல்யாண், தேன்கூடு தளத்தை நிறுவியதன் மூலம்,
அடைந்து கிடந்த என் இதயக் குகையின் சாளரங்களை திறந்து விட்டார்.
தனித்துக் கிடந்த என்னை ஒரு தள(இணைய)உலகத்தில் தள்ளி விட்டார்.
சிதறிக் கிடந்த எண்ணங்களை சற்றே குவியச் செய்தார்.
மாசு படிந்த மதிப்புரைகளின் மேல் இருந்த தூசி தட்டி விட்டார்.

அத்தனையும் செய்துவிட்டு, அறிமுகம் இல்லாமலேயே, அல்ப ஆயுசுல் போய்விட்டாயே
ஐயோ சாகரா அதனால்தான் சாக (ரன்) என பெயர் வைத்துக்கொண்டாயோ.
ஆனால் எனது இதயத்தில் நீ என்றும் சாகா வரம் பெற்றிருப்பாய்.
என்றென்றும் அன்புடன்,
பா. முரளி தரன்.

2 comments:

சீமாச்சு.. said...

அன்பு முரளிதரன்,
ரொம்ப சந்தோஷம். அருமையான அஞ்சலி.

இந்த மாதிரி விஷயங்களுக்கெல்லாம் வீட்டில் எல்லோரையும் கலந்து கட்டி முடிவெடுத்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன்...

உங்கள் குடும்பத்திற்கும் பிறக்கப் போகும் குழந்தைக்கும் என் வாழ்த்துக்களும் ஆசிகளும்.

என்றென்றும் அன்புடன்,
சீமாச்சு..

murali said...

நன்றி சீமாச்சு,
வலைப்பூ நிஜமாகவே எனக்குள் பல புரிதல்களை உண்டாக்கியது.அதனால்தான் இந்த முடிவு.

வீட்டில் கலந்து கட்டி எடுத்த முடிவு அல்ல, ஆனால் சாகரன் கல்யாண் பற்றி மனைவியிடம் நிறைய பேசினேன்.

சாகரனை என்றும் நினைவில் கொள்ள முடிவெடுத்ததால் இந்த பெயர் வைக்கும் முடிவுக்கு வந்தேன்.

எனது புதிய வாரீசுக்கான உங்கள் வாழ்த்துக்கு மிக நன்றி.
என்றென்றும் அன்புடன்,
பா.முரளி தரன்.