Friday, March 16, 2007

வெட்டி சாச்சுப்புட்டாங்களே.

நான் முதல் முறையாக சவுதியை வானத்திலிருந்து பார்த்தபொழுது அதுவரை வாழ்வில் கண்டிராத ஒருவித்தியாசமான காட்சியாக இருந்தது.எங்கும் மணல் பிரதேசம். நோக்குமிடம் எல்லாம் பாலைவன மணல். அதற்கு நடுவே அரிதாக வளர்ந்திருக்கும் மரங்கள்.

இயல்பாகவே எனது எண்ணங்கள் எனது சொந்த ஊரான நெய்வேலிக்கு பயணப்படுவதை தவிர்க்கமுடியவில்லை. எங்கள் ஊரில் பூமாதேவி பசுமை போர்த்திக் கொண்டுதான் காட்சி அளிப்பாள். ஒரு வீட்டுக்கு சராசரியாக 130 மரங்கள் உள்ளதாக ஒரு புள்ளி விவரம். அதனால் அதிக மழை பெறும் பிரதேசமாகவும் உள்ளது.

நெய்வேலி ஒரு காலத்தில் காடாக இருந்த பிரதேசம். ஜம்புலிங்க முதலியார் கிணறு வெட்டப்போய் நிலக்கரி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. நிலக்கரி சுரங்கத்தில் வெட்டிய மேல் மண்ணை ஒரு மலைபோல குவித்து வைத்திருப்பார்கள். எங்கள் பாஷையில் அதற்குப் பெயர் மண்ணுமேடு.

காலப்போக்கில் அந்த மண்மேட்டில் இயற்கையாகவும், மனித முயற்சியாலும் நிறைய மரங்கள் நிறைந்து விட்டன. சிறு வயதில் நண்பர்களுடன் இணைந்து ஒரு காட்டுவாசி வாழ்க்கையை இந்த மண்மேட்டின்மேல் வாழ்ந்திருக்கிறேன். அங்கு உள்ள குட்டைகளில்
குளிப்பதும், அங்கு கிடைக்கும் நாகப்பழம், இலந்தைப்பழம் போன்றவற்றை உண்டும், ஒரு நாள் முழுதும் மலை மேலேயே தங்கியிருப்போம். சில நண்பர்கள் உண்டிவில்லால் அடித்து பறவைகளை பிடித்து சமைத்து உண்பார்கள். மேலும் நீர் நிலைகளில் கிடைக்கும் மீன், நண்டு போன்றவற்றை பிடித்தும் பசியாறுவோம்.

மலையின் இண்டுஇடுக்கு மற்றும் சந்து பொந்துகள், முக்கியமான பாதைகள்,
குகைகள், ஊற்றுகள், குளம் குட்டைகள் ஆகியவை சிறுவர்களான எங்களுக்கு அத்துப்படி. உடும்பு பிடிப்பது, முயல் பிடிப்பது, காடை கவுதாரி பிடிப்பது என்று எங்கள் வேட்டைப் பட்டியல் மிக நீளமானது.

ஒரு முறை ஆவாரம் புதரில் குடிகொண்டிருந்த நல்லபாம்பு குட்டிகளை சுருக்கு போட்டு பிடித்து விளையாடிக் கொண்டிருந்தபொழுது, தாய்நாகம் வந்து விட்டது.அதை அடித்தால் தப்பித்து ஓடி விட்டது. நல்ல பாம்பு நம்மளை பழிவாங்கி கொன்றுவிடும் என்று பயந்து, ஒரு நாள் முழுதும் அதை நாணல் புதர்களில் விரட்டி தேடிக் கொன்று கொளுத்தி சாம்பலாக்கியபிறகுதான் சமாதானமானோம்.

இப்படி ஒரு இயற்கையோடு இணைந்த காட்டுவாசி வாழ்க்கை வாழ்ந்திருந்த எனக்கு மரங்களோடு ஒரு நேச உணர்வு உண்டு. சவுதியில் எங்கள் பக்கத்து வீட்டில் அரிதாக ஒரு வேம்பு, ஒரு போகன் வில்லா, ஒரு பேரீச்சை மரம் இருந்தது. வருடத்தில் ஓரிருநாள் பெய்யும் அசுர மழை பேரீச்சை மர ஓலையில் பட்டு எழுப்பும் ஓசை, பறை ஓசையின் அதிர்வை உள்ளுக்குள் உருவாக்கும்.

காம்போண்ட் சுவரின்மேல் புதராக பரவியிருந்த போகன்வில்லா கிளைமறைவில்
பச்சைக் குழந்தைகளைப் போல குரல் எழுப்பிக்கொண்டு சில நேரங்களில்
பூனைகள் சரசமாடுவதைக் கண்டிருக்கிறேன். குளிர்ச்சியைப் பரப்பும் வேம்பின் நிழலில் சந்தர்பம் கிடைத்தால் எனது காரை பார்க் செய்து மகிழ்வேன்.

இன்று திடீரென்று மூன்று மரங்களும் வெட்டப்பட்டன. அதனை ஒரு வேதனையோடு பார்த்துக் கொண்டிருந்தேன். எனது அண்டை வீட்டு பெங்காலி என்னிடம் வந்து, பார்த்திங்களா சார் இப்படி மரத்தை வெட்டி தள்ராங்களே என்றார். நான், அமாங்க மரம் இருந்தது எவ்வளவு அழகாக இருந்தது, மனசுக்கும் எவ்வளவு நிறைவா இருந்தது. இந்த மண்ணுல மரம் வளர்ரது எவ்வளவு கஷ்டம். எப்படியும் இருபது முப்பது வருஷம் வயசு இருக்கும் ஒவ்வொரு மரத்துக்கும் இப்படி அநியாயமா வெட்டி சாய்க்கிறாங்களே என்றேன்.

அவர் ஆமாங்க அநியாயம்தான் இதை வெட்ட ஆயிரம் சவுதி ரியால் செலவாம் ( இந்திய மதிப்பு கிட்டதட்ட பன்னிரெண்டாயிரம் ) இதையே
ஒரு பெங்காலிகிட்ட கொடுத்திருந்தா இருநூறு சவுதி ரியால்ல வேலைய முடிச்சிருப்பாங்க என்றார். நான் அவர் கரிசனத்தைக் கேட்டு ங்நே என்று விழித்தேன்.
என்றென்றும் அன்புடன்,
பா. முரளி தரன்.

1 comment:

Anonymous said...

ஹரிஹரன் பானியில் ஒரு டெஸ்ட்.
என்றென்றும் அன்புடன்,
பா.முரளிதரன்.