Sunday, December 16, 2007

விலை குறும்பட விமர்சனம்.

கூகுள் வீடியோவில் நான் கண்ட குறும்படம்; விலை. நான் வாழ்வில் கண்ட முதல் குறும்படம். ஈழத்து போராட்ட வாழ்வின் தழும்புகளை தழுவி எடுக்கப் பட்டது என்ற அறிவுப்புடன் துவங்குகிறது. ஒவ்வொரு பத்து நிமிடங்களை கொண்ட இரண்டு பதிவுகளாக காணக்கிடைத்தது.

கூகுள் வீடியோவில் பதிவுகளை பார்த்துக்கொண்டிருந்த பொழுது ஏதேச்சையாக கண்ணில் பட்டது முதல் பகுதி. அதை பார்த்து முடித்த உடன்
இரண்டாம் பகுதியை தேடிப்பிடித்துப் பார்த்தேன்.

ஏனோ இந்தப் படத்தை பார்த்த பொழுது ஒரு படம் பார்க்கிறோம் என்ற உணர்வே எழவில்லை, ஏதோ ஒரு களத்தில் நாமும் கூடவே நின்றுகொண்டிருப்பது போலான ஒரு உணர்வே மேலிட்டது.

கதை நாயகி சுருதி சேர்த்துவைப்பது போல எந்த மண்ணையாவது சேர்த்திட
வேண்டும் என்ற உணர்வு இது நாள்வரை எனக்கு தோன்றியிருக்கிறதா? என
நீண்ட நேரம் யோசித்துப் பார்த்தேன். சுருதியின் பாத்திரப் படைப்பும், நடிப்பும்
அற்புதம். மிக இயல்பான வசனங்கள். ஆனால் முதல் முறை பார்க்கும் பொழுது ஈழத்து தமிழ் புரிவது சற்று கடினமாக இருந்தது. ஆனால் திரும்ப
திரும்பத் பார்த்த பொழுது, அந்தத் தமிழுக்காகவே மீண்டும் மீண்டும் பார்க்க
வேண்டும்போல் இருந்தது.

மதி, கலைஅரசி, ஐயா என எல்லோரும் திரும்பவும் மனக் கண்ணில் வந்து
போய்க் கொண்டிருக்கிறார்கள். ஐயாவை தவிர மற்ற அனைத்து முக்கிய பாத்திரங்களும் பெண்ணாகவே இருப்பது, புலிகள் இயக்கத்தில் பெண்களின் பங்களிப்பை தெளிவாக எடுத்துக் காட்டுகிறது.

இசையும் அற்புதம். கதை மற்றும் இயக்கம் சாரதா என்றிருக்கிறது. வாழ்த்துக்கள். இதே போன்று நிறைய படங்கள் எடுங்கள்.
புத்தகங்களில் எத்தனை படித்தாலும், எத்தனை கேட்டாலும் சரியான அழுத்தத்தில் உணரப்படாத ஈழ மக்களின் வாழ்க்கையையும், போராட்டத்தையும்
இத்தகைய குறும்படங்களால் உணரச் செய்ய முடியும்.

படத்தில் மண் ஒரு வரலாற்றின் குறியீடாக உள்ளபடியால், "என்னை என் மண்ணில் புதைப்பாய், என் மண்ணை எங்கே புதைப்பாய்" என்ற காசி அனந்தனின் வரிகளை நினைவு படுத்தியது ( நன்றி: திரு.சுப.வீ ).

ஈழம் மலர வாழ்த்துக்கள்.
என்றென்றும் அன்புடன்,
பா. முரளி தரன்.

1 comment:

KARTHIK said...

//ஈழத்து தமிழ் புரிவது சற்று கடினமாக இருந்தது. ஆனால் திரும்ப
திரும்பத் பார்த்த பொழுது, அந்தத் தமிழுக்காகவே மீண்டும் மீண்டும் பார்க்க
வேண்டும்போல் இருந்தது.//

உண்மைதாங்க.
இத படத்தோட இணைப்பு இருந்தால் குடுக்கவும்.
நன்றி.