Thursday, February 21, 2008

அத்வைத புன்னகையும் அப்பாவுக்கான பிரண்டையும்.

கடந்த பிப்பரவரி 19 ஆம் தேதி இரவு எனது தந்தையார் திரு. பாலதண்டபானி சிவ / வைகுண்ட லோகப் பிராப்தி அடைந்தார். அப்பாவுக்கு வயது 65. சில வருடங்களாக இதய நோய் மற்றும் ஆஸ்துமாவினால் அவதிபட்டுக்கொண்டிருந்தார். மருந்துகளின் உதவியுடன் சமாளித்துக்கொண்டிருந்தார் ஆனால் திடீரெனப் போய்விடுவார் என யாருமே எதிர்பார்கவில்லை.

எனது தாயார் 14 வருடங்களுக்கு முன் இறந்த அதே நாளில் அப்பாவும் இறந்து போனது அதிர்சியிலும் ஒரு ஆச்சரியம். இதைத்தான் "விதி அடிக்களனாலும் திதி அடிச்சிடும்னு" சொல்வாங்க, என்று எங்கள் சுற்றத்தார் சொன்னார்கள்.

கும்பகோனம் அம்மங்குடி பக்கத்தில் புத்தகரம் என்ற சிறு கிராமத்தில், புரோகிதர் மற்றும் நில உடைமையாளராக இருந்த எனது தாத்தா லஷ்மிநாரயண ஐயருக்கு மூத்த பிள்ளையாக பிறந்த எனது தகப்பனார்
இப்பொழுதும் எனக்கு ஒரு புரியாத புதிர்தான்.

சில நேரங்களில் அந்த வானத்தைப்போல பரந்த மனம் கொண்டவராக தெரிந்தாலும், பல நேரங்களில் அதே வானத்தைப்போல புரியாத புதிராகவும் இருந்தார். மகன்களிடம் அவ்வாறு ஒரு தோற்றத்தை செயற்கையாக ஏற்படுத்தி இருந்தாரா? என்பதும் நான் அறியாத ரகசியம்தான்.

ஆனால் அப்பா இறந்த தருனத்தில் உலகமே உணர துடிக்கும் ஒரு மேன்மையான ரகசியத்தை உணர்ந்திருக்க வேண்டும் என்று அப்பாவின் முகத்தைக் கண்டதும் தோன்றியது. அப்படி ஒரு புன்னகை தங்கியிருந்தது முகத்தில். அந்த புன்னகை, எல்லா உயிரிலும் தன்னைக் காணும், எல்லா உயிரிடத்திலும் முழுமையான அன்பை செலுத்தும் ஒரு ஞானியின் புன்னகையைப் போல இருந்தது. எனக்கு தோன்றியதை என்னுள்ளேயே வைத்துக்கொண்டேன். யாரிடமும் பகிர்ந்து கொள்ளவில்லை.

அப்பாவின் பதிமூன்று நாள் பிதுர் காரியங்களை முடித்தபின் ஒரு நாள் எனது மகனுடன் அமர்ந்து சில பைல்-களை புரட்டிக் கொண்டிருந்தேன். அதில் இருந்த காஞ்சி மஹாபெரியவரின் புகைப்படத்தை பார்த்த எனது மகன், அப்பா தாத்தா போட்டோப்பா என கத்தினான். ஒரு வேளை நரைத்த தாடியும், கண்ணாடியும் பார்த்து அப்படிச் சொன்னானோ என்று நினைத்து, இல்லடா என்றேன். ஆனால் அடுத்த புரட்டலில், காஞ்சி பெரியவரின் இளைய வயது புன்னகைக்கும் படம் இருந்தது. என் மகன் மீண்டும் அதே போல், தாத்தா போட்டோதான் இப்ப பாரு நல்லா என்றான். என்னுள்ளே அப்பா முகத்தில் இருந்தது, அத்வைதப் புன்னகையேதான் என்று தோன்றியது.

அப்பாவைப் பற்றிய பதிவுகள் தொடரும்.
என்றென்றும் அன்புடன்,
பா. முரளி தரன்.

No comments: