அறைக்கு பக்கத்து சந்தில் யாரோ நடந்து வரும் ஓசை கேட்டது. யாராயிருக்கும்?.
முரளி கதவத் திற.... இது வாசனின் குரல் அல்லவா.
மெதுவாக எழுந்து சென்று கதவைத் திறந்தேன்..... வாங்க வாசன்.
என்னப்பா இவ்ளோ சீக்கிரமா படுத்துட்ட?.
தாடப்பள்ளிகூடம் சிமெண்ட் பாக்டரி போயிட்டு வந்தேங்க. நடையான நட, ஒரே டயர்ட், அதான் சீக்கிரம் படுத்துட்டேன்... நீங்க எப்ப வாசன் வந்தீங்க ராஜமுந்திரிலேந்து?.
ம்ம்ம்...இப்பதான்... சரி வாங்க, சாப்பிட போலாம்.
நான் டிபன் சாப்டுட்டேங்க...நீங்க போய் சாப்ட்டு வாங்க வாசன்,
எனக்கு தூக்கமா வருது.
ம்ம்ம்..பரவாயில்ல வாங்க, டிபன்தான சாப்டிங்க, செரிச்சிருக்கும். இப்ப சாப்பாடு சாப்ட்டு வரலாம்.
பசிக்கல வாசன்.
பொய் சொல்லாதிங்க முரளி. மூனு நாளா மெஸ் பக்கமே வரலன்னு பட்டுகாரு சொன்னாரு. பணம் இல்லன்னா கேட்க வேண்டியது தானே. ஏன் இப்படி கொலப்பட்னி கிடக்குரீங்க.
இல்ல வாசன் நான் வரல.
நான் உங்க friend ஆ இருக்கனும்னா..இப்ப கிளம்பி சாப்ட வாங்க.
பைக்கில் அழைத்துச் சென்று, சாப்பிட வைத்து, திரும்பி வீட்டில் விட்டுச் சென்ற நண்பா. நீ போட்ட அந்த சோற்றை இலவசம் என்று சொன்னால் மரியாதையாக இருக்காது என்பதால் அதை விட மிக ஆழமான வேறு பதத்தை தேடிக் கொண்டிருக்கிறேன்.
இரண்டாம் நாள்:-
தாடகை எத்தன பெரிய உருவமா தெரியுமா இருந்தா?..
அவளோட நகம் ஒவ்வொன்னும் ஒரு முறம் பெருசு இருந்ததாம்.அப்படின்னா அவளோட விரல் எத்தன பெருசு இருந்துருக்கும், அவளோட கை எத்தன பெருசு இருந்துருக்கும். அவ எத்தன உயரமா இருந்துருப்பா.
அப்படிப்பட்ட ஒரு ராட்ஷஸிய, ராமா உன்னோட ஒற்றை அம்பு சாய்ச்சிடுச்சாமே!!!.
ராமா உன்னோட ஒற்றை பாதம் பட்டதும், கல் அகலிகையா மாறிடிச்சாமே!!!.
ராமா உன்னோட ஒற்றை பார்வைக்கு, அன்னை சீதா தன்வசம் இழந்தாளேமே!!!.
ராமா உன்னோட ஒற்றைக் கையால் சிவதனுசை முறித்தாயேமே!!!.
ஆயிரம் பெண்களை மணந்த தசரதனின் புத்திரன் நீ. ஆனால் ராமா, நீ ஒருவனுக்கு ஒருத்தி என வாழ்ந்து காட்டினாயேமே.
அதனால்தான் ராமா என்னும் ஒற்றைச் சொல், இந்த பிறவியை காக்கும் மஹாமந்திரமானதோ!!!. ராமா..ராமா...ராமா.
ஹரிகதா முடிந்தது. அன்று பசி தீர்த்த கோயில் பொங்கலையும், சுண்டலையும் இலவசம் என்று சொன்னால் இழுக்கு. அதனால்தான் பிரசாதம் என்று சொல்கிறார்களோ.
ஐய்ந்தாம் நாள்:-
பசி ரொம்ப கொடுமைதான். மனசு இதுக்கெல்லாம் பழகிடுச்சு. வயிறுக்கு பழக்கமில்ல. உள்ள இருக்குர நெருப்புல எதையாவது அள்ளிப் போட்டுகிட்டே இருக்கனும். இல்லன்னா அந்த நெருப்பு சுமந்துகிட்டு இருக்கிறவனையும், சில நேரம் சுத்தி இருக்கிறவனையும் எரிச்சிடுது.
இரண்டு நாட்களாய் வயிறு காய்ந்து கிடந்தாலும், சூழ் நிலையில் இருந்த உற்சாகம் மனசை தொற்றிக் கொண்டது.
இன்னிக்கி எலக்க்ஷன் ரிசல்ட். அடுத்து ஆளப்போவது யார்?. காங்கிரஸ்ஸா அல்லது தெலுங்கு தேசமா?...ஊரே தவித்துக் கிடந்தது. எனது வயிறோ பசித்துக் கிடந்தது.
தெருவில் சுற்றிக்கொண்டிருந்த என் கண்ணில் பட்டது, கீழே கிடந்த ஒரு நாலனா.
சாதாரன நேரமாய் இருந்தால் அதை தாண்டிப்போயிருப்பேன். பசி வந்தாலே பத்தும் பறந்து போய்விடும், இங்கோ மூன்று நாள் அரைகுறை சாப்பாடு, இரண்டு நாள் கொலைப்பட்டினி.
நாலனாவை குனிந்து எடுத்தேன். தூரத்தில் ஒரு தள்ளுவண்டியில் இருந்த வாழைப் பழம் கண்ணில் பட்டது. நாலனாவுக்கு ஒரு பழம் தருவானா?..மிகுந்த அவமானத்துடன் காசை நீட்டி ஒரு பழம் கொடுங்க என்றேன்.
பழ வண்டிக்காரர்: நாலனாவுக்கு பழம் வராது தம்பி.
நான்: அமைதியாய் முகத்தை திருப்பி ஒரு ஓரமாய் நகர்ந்து நின்று கொண்டேன்.
ரேடியோ அறிவிப்பு: தெலுகு தேசம் பெரும்பான்மை பெற்றது. அடுத்த முதல்வர் என்.டி.ராமாராவ்.
ஒரே கைத்தட்டல், விசில் எங்கும் பரவியது.
பழ வண்டிக்காரர்: அண்ணகாரு ஜெயிச்சிட்டாரு டோய். ஒரே சந்தோஷக் கூச்சல். தம்பீ இந்தா என்று ஒரு முழு சீப்பு வாழைப்பழத்தை தூக்கிக் கொடுத்தார். கூடவே வாழ்க்கையில் நான் பெற்ற மறக்க முடியாத இலவசத்தையும்.
என்றென்றும் அன்புடன்,
பா.முரளி தரன்.
7 comments:
எளிமையான எதார்த்தமான கதை முரளி
ஷைலஜா
நல்ல எழுத்து முரளி. மெல்லிய சோகம் இழையோடிய எழுத்து. வாழ்த்துக்கள்.
வெற்றி பெற வாழ்த்துக்கள்!!!
Dear Brother
Only few have the gift of writing in good way. Keep up you good work. I am totally passionate and proud about you.
God be with you and bless you.
Vishnu.
நல்லா இருந்தது. தொடர்ந்து எழுதுங்க.
Post a Comment