Thursday, November 16, 2006

விட்டதும், சுட்டதும், கெட்டதும்.

கடந்த இரு நாட்களாக ஜெத்தா வாழ் தமிழர்கள் மிக சந்தோஷமாக சுற்றிக் கொண்டிருந்தார்கள்.காரணம்,
கவிஞர் மு.மேத்தா மற்றும் புலவர் சாரங்கபாணி அவர்களின் வருகையும், அவர்களின் பேச்சும்,கவிதையும்.

இதில் புலவர் சாரங்கபாணி அவர்களுடன், இரண்டாம் நாள் நிகழ்ச்சிக்கு முன், சிறிது நேரம் சவுதி வாழ்க்கையை பேசிக் கொண்டிருந்தேன்.அதன் பின் புலவர் ஐயா கூறியது; அரபு உலக வாழ்வில் நம் மக்கள் பெற்றது அதிகம்.இழந்தது அதை விட அதிகம்.

கடந்த வாரம் வியாழன் அன்று எனது பாட்டி சாரதா
( தாயாரின் தாயார் ) வடலூரில் காலமானார்.அவருக்கு வயது 84.நான் ஐந்து வயதுவரை அவரை அம்மா என்றுதான் அழைத்து வந்தேன்.இந்த முறை விடுப்பில்
இந்தியாவில் அவரை சந்தித்த பொழுது, முரளி, பாட்டி சீக்கிரமா போயிடம்னு சாமிகிட்ட வேண்டிக்கோடா,
நான் வாழ்ந்தது போதும்."எல்லாரும் சாவ நினச்சு பயந்துகிட்டு இருக்காங்க, இந்த எமப் பய என்னை பாத்து பயந்து போய்ட்டான் போல, எங்கிட்ட வரவே மாட்டேங்கரான்" என்று ஜோக் அடித்தார்.

பாட்டி,என் ஆத்துக்காரி திரும்பவும் உண்டாகி இருக்கா.இருந்து, அந்த குழந்தையையும் பார்த்துட்டு போ என்றேன். புண்யாத்மா என்பார்களே அதற்கு உதாரனம்.அவருடைய வாழ்வையும் வாக்கையும் மிக விவரமாக பதிய வேண்டும் என்று ஒரு ஆசை.

இந்த வியாழன் அன்று(இன்று)திரும்பவும் ஒரு மரணச் செய்தி.எனது மனைவியின் பாட்டி( அம்மம்மா)காலமானார்.இவர் எனக்கும் அம்மா வழி உறவுதான்.
அவர் இருக்கும் இடம் எப்பொழுதும் ஒரே உற்சாகமாக இருக்கும்.தான் உற்சாகமாக இருந்து அடுத்தவரை சிரிக்க வைப்பதெல்லாம் பெரிய வரம்.அது வாழ்வில் அனைவருக்கும் கிட்டாது.பயங்கர குறும்புக்கார பாட்டி.

இந்த விடுப்பில் சந்தித்தபோது மனம் நிறைய வாழ்த்தினார்.என்ன செய்வது? பரதேச வாழ்வில் பகிர்ந்துகொள்ள முடியாததில்,அதிகமாக கஷ்டப்படுத்துவது மரண செய்திதான்.

பட்டினத்தாரின் வரிகள் ஞாபகம் வருகிறது.
" உயிர் விட்டது, உடலை சுற்றம் சுட்டது" என்று.
ஆனால் மரணம் போலொரு சிறந்த ஆசான் உலகில் இல்லை.மரண செய்தி கேட்கும் பொழுதெல்லாம்,
பொனம் போன பிறகு எழவு வீட்டை கழுவி விடுவார்களே,
அதுபோல் மனதின் தீவினை எண்ணங்கள் கெட்டுப் போய்
சுயம் சிறிது கழுவப்படுகிறது.
என்றென்றும் அன்புடன்,
பா.முரளி தரன்.

No comments: