Thursday, November 30, 2006

நான் ஜாதி வெறியனா!!!

நான் மிக மதிக்கும் நபர் ஒருவரை இரு நாட்களுக்கு முன் சந்தித்தபொழுது, எனது எழுத்துக்களில் சாதி வெறி மேலோங்கி இருப்பதாக இனைய நண்பர்கள் பேசுவதாக குறிப்பிட்டார். நான் அப்படியெல்லாம் வெறி பிடித்தவன் இல்லை என்று உடனடியாக அவருக்கு மறுப்பு தெரிவித்திருந்தாலும், ஏனோ மனதிற்குள் ஒரு உறுத்தல் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. ஆகவே சில விளக்கங்களை அளிப்பது என்று முடிவெடுத்தேன்.

நான் இனையத்தில் ஜாதி பேசியிருந்தால் அது ஒரு எதிர் வினையாக மட்டுமே இருந்திருக்குமே அன்றி மேல்ஜாதி மனோபாவ சிந்தனை வெளிப்பாடாக நிச்சயம் இருந்திருக்காது. ஒரு புழுவைக் கூட குச்சியால் குத்தினால் சிறிது எதிர்ப்பைக் காட்டும். இதை தவறென்று யாராலும் மறுக்க முடியுமா?. அதே போன்றதொரு அறச்சீற்றம்தான் எனது எதிர்வினை.

என்னுடைய பார்வையில் வெறியர்கள் என்றால் அது இறைமறுப்பாளர்கள்தான். இவர்கள் தூவிய விஷ வித்துக்களால் கிளர்ந்தெழுந்த பார்ப்பனீய எதிர்ப்பு என்னும் பார்த்தீனிய கருத்தால் நேரடியாக பல முறை பாதிக்கப்பட்டவன் நான். எனவே எனது எதிர்வினை சற்றே வலுவானதாக இருந்திருக்கலாம்.

நான் மரணத்தில் இருந்து வாழ்க்கையை பார்ப்பவன். இன்னிக்கி செத்தா நாளைக்கு பாலு, அந்த பாலும் நமக்கானது இல்லை. என்னைக் கேட்டால் மனிதன் கடவுளை பற்றி சிந்திப்பதை விட மரணத்தைப் பற்றி சிந்தித்தால் சீக்கிரமே பதப்படுவான்.

எனது லட்சியம் தேடல்தான். சிறிது காலம் நாத்திகனாகவும் வாழ்ந்திருக்கிறேன். எனது அனுபவத்தில் நாத்திகவாதம் மிக சுலபமானதும் முட்டாள்தனமானதும் என்று புரிந்து கொண்டேன். அது வெறும் வறட்டுக் கேள்விகளால் நிரம்பிய உலகம். எந்த அனுபவப் புரிதலையும் தராதது. அதனால் நிச்சயம் மனிதனின் மனதில் அன்பு வளர்க்க முடியாது. நாத்திகத்தால் வெறுப்பைத்தான் வளர்க்க முடியும். அதைத்தான் நாம் இன்று தமிழகத்தில் கண்கூடாக கண்டு வருகிறோம்.

பிராமனீயம் என்ற சீரிய ஓடு தளத்தில் இருந்து கிளம்பியதால் முரளீதரன் என்ற விமானத்தின் பயனம் உலகப் பெருவெளியில் அர்த்தமுள்ளதாகவே உள்ளது. ஆனால் நான் ஞானி ஒன்றும் இல்லையே அப்படியே கீழிறங்காமல் உயரவே பறந்துகொண்டு இருப்பதற்கு. நான் சம்சாரி ஐயா, கீழிறங்கித்தானே ஆகவேண்டும்.

அப்படி இறங்க நினைக்கையில், இறங்கு தளத்தில் சில நாடோடிகள் ஆபாசக் குப்பைகளை கொட்டி வைத்திருப்பதையும் ( கார்த்திகை மாசத்து நாய் போல் இவனுக்கு எப்போதும் துருத்திக்கொண்டே இருக்கும் போல), சில கருப்பு பூனைகள் குறுக்கே ஓடுவதையும், சில காட்டான்கள் ஒடு தளத்தை களத்து மேடாக மாற்றி வைத்திருப்பதையும் பார்க்கும் பொழுது, எதிர்வினை புரியாமல் இருக்க முடியவில்லை.
என்றென்றும் அன்புடன்,
பா.முரளி தரன்.

Saturday, November 25, 2006

வாரியார் சுவாமிகள்.

வேலூர் அருகில் உள்ள ரத்னகிரி மலையில் உள்ள முருகப் பெருமானை தரிசிக்க சென்றிருந்தோம். சிறிய மலையாய் இருந்தாலும், மற்ற கோயில்களில் காணப்படாத அளவுக்கு ஒரு சுத்தம், அப்படி ஒரு பராமரிப்பு. இந்த விஷயங்களே மனதிற்கு ஒரு நிறைவை தந்தது. கோயிலின் ஆரம்ப கால தோற்றத்தையும், புதிய கட்டிட வேலைகள் நடைபெற்றுக் கொண்டிருந்ததையும் புகைப்படமாக எடுத்து வைத்திருந்தார்கள். வாரியார் சுவாமிகளின் பெரு முயற்சியும், கோயில் சிறப்பாக எழும்ப காரணம் என்றும்
பக்தர்கள் பேசக் கேட்டேன். வாரியார் சுவாமிகளின் புகைப்படம் ஒன்றும் (எம்.ஜி.ஆர் உடன் இனைந்து இருப்பது) இருந்தது.

முருகன் எங்கள் குல தெய்வம். ஒரு காலத்தில் எனது ஒவ்ஒரு அசைவுக்கும் முருகனை அழைப்பதை வாடிக்கையாக கொண்டிருந்தேன்.வடக்கே வசித்த நாட்களில், நான் முருகா என்பதை, அவர்கள் முர்கா(சேவல்/கோழி) என்று புரிந்துகொண்ட தமாஷெல்லாம் நடந்துள்ளது ( க்யோங் பார்பார் முர்கா முர்கா போல் ரஹே ஹோ?).

முருகனை நினைக்கும் பொழுதெல்லாம் வாரியார் சுவாமிகளின் நினைவை தவிர்க்க இயலாது. எனது சொந்த ஊரான நெய்வேலியில் ஸத்ஸங்கம் மற்றும் மனித்வீபம் என இரு இடங்கள். இங்குதான் வாரியார் சுவாமிகள், புலவர் கீரன், பால கிருஷ்ன சாஸ்திரிகள், அனந்த லஷ்மி நடராஜன் அகியோரின் ராமாயனம், மஹாபாரதம், பாகவதம், கந்த புரானம், திருப்புகழ் உபன்யாசங்கள் நடைபெறும்.

வாரியார் சுவாமிகளின் உபன்யாசம் என்றால் நாங்கள் முன் வரிசையில் அமர்ந்திருப்போம். அவர் சிறுவர்களிடம் கேள்வி கேட்பார், பதில் சொன்னால் ஒரு பரிசு. நான், எனது அண்ணன், அக்கா அனைவரும் இது போன்ற பரிசுகளை வாங்கியிருக்கிறோம்.
இங்குதான் வாரியார் சுவாமிகளுக்கு தி.க வினர் செருப்பு மாலையிட்டனர்.

வாரியார் சுவாமிகள், வடலூர் சத்ய ஞான சபைக்கும் நிறைய திருப்பணி செய்துள்ளார்கள். வாரியார் செய்யாத இறைசேவையும், தமிழ் சேவையுமா?. அவரைப் போன்ற ஆஸ்திகர்களின் கண்களுக்கு,வடலூர் சபையில் தெரியாத குற்றமும்/குறையும், அவருக்கு செருப்பு மாலை போட்டு அவமானப் படுத்திய, நாத்திக திருட்டுக் கூட்டங்களின் கண்களுக்கு தெரிவதின் பின்னால் இருப்பது நாத்திகர்களின் சூழ்ச்சியா?/பிழைப்பா?.

கி.வீ ஆர்பாட்டம் செய்ய வடலூர் வருகிறாராம். வரட்டும், முதலில் வாரியார் மாதிரி அடியவர்களின் சுயமரியாதைக்கு செருப்பு மாலையிட்டு செய்த அவமரியாதைக்கு மன்னிப்பு கேட்கட்டும். பிறகு கேள்வி கேட்கட்டும்.

கி.வீ உனக்கும் ஆன்மீகத்துக்கும் என்ன தொடர்பு?. கருப்பு சட்டையை உதறிவிட ஏன் முடிவெடுத்தாய்?.

என்றென்றும் அன்புடன்,
பா.முரளி தரன்.

Tuesday, November 21, 2006

வாழ்க்கை வெறுத்துப் போச்சு

ஒரு பதிவு போடலாம்னு, கிட்டதட்ட மூனு மணி நேரமா முயற்சி செய்து இப்போதுதான் ப்ளாக்கர் பீட்டா கிடைத்தது. ஏன் இந்த பீட்டாவுக்கு மாறினோம்னு வெறுப்பா இருக்குங்க. பின்னூட்டமும் போடமுடியலை. எனக்கு மட்டும்தான் இப்படியா இல்லை எல்லோருக்குமா? தெரியவில்லை.சாப்டுட்டு தூங்கப் போனும் நாளைக்கு பாக்கலாம்.

ஆங், ஒரு முக்கியமான விஷயம். எங்ககிட்ட ஒரு பூனை இருக்கு. பெயர் நங்கி( சிங்களப் பெயர்). ஜெத்தாவுல இருக்கற மக்கள் யாருக்காவது வளர்க்க வேண்டுமானால், இங்கே தெரியப் படுத்தவும்.பூனையோட வரலாறு அறிய விருப்பமுள்ளவர்கள் பார்க்கவும் எனது முந்தைய பதிவு பெண் என்பதால் (october 27).
என்றென்றும் அன்புடன்,
பா. முரளி தரன்.

Saturday, November 18, 2006

மனிதன் மலம் சுமக்க யார் காரணம்?.

நான் வேகத்தின் காதலன்.எப்போது எந்த வண்டியை தொட்டாலும் அதன் முழு வேகத்தை முயற்சி செய்து பார்ப்பதை ஒரு சாகசமாக நினைப்பவன்.ஆனால் வண்டி ஓட்டும்பொழுது ஒரு சிறிது கூட கவனம் பிசகாமல் இருக்க முயற்சிப்பேன்.140 கிலோமீட்டர் வேகத்தில் ஒரு சிறு தவறு கூட பெரும் விபத்தில் முடிய வாய்ப்பு உள்ளதால், எப்பொழுதும் ஒரு ரெட் அலர்ட் கண்டிஷனில்தான் ஸ்டியரிங் பிடித்திருப்பேன்.அதனால் சாலையில் ஒரு சிறு இடையூறு கூட எனக்கு எரிச்சலை கொடுக்கும்.ஒரே ஒரு விஷயத்தை தவிர,அது உடைப்பெடுத்து ஓடும் சாக்கடையையோ அல்லது மலக்கால்வாயையோ சுத்தப் படுத்திக் கொண்டிருக்கும் தொழிலாளர்களை கண்டால்.

இன்று அருணா சாய்ராமின் குரலில்,சக்கரவர்த்தி ராஜகோபாலச்சாரியாரின் குறை ஒன்றும் இல்லை உச்ச ஸ்தாதியில் ஒலிக்க,
உச்ச வேகத்தில் செல்லும் பொழுது, திடீரென்று அனைத்து வாகனங்களும் வேகம் குறைய ஆரம்பித்தன.சாலையில் சில தொழிலாளர்கள், அடைபட்டு, பொங்கி ஓடிய மலக்கால்வாயை சரிப் படுத்திக் கொண்டிருந்தார்கள்.

குறையொன்றும் இல்லையை ரசிக்க முடியவில்லை.ஏன் இந்த நிலைமை என்று யோசித்தேன்.ப்ளாக்கர் பகுத்தறிவு கவுண்டனாகவோ, களத்துமேட்டு காட்டானாகவோ இருந்திருந்தால் வெகு சுலபமாக மனுவின் மீது பழியைப் போட்டு விடலாம். ஆனால் நிஜமான அக்கறையோடு யோசித்தபோது ஒரு மின்னல் வெட்டியது.

இதற்கு காரணம் நகரமயமாக்கல்தான். கூடவே இதற்கு ஏற்ற வடிவில்
நகரங்களை வடிவமைக்காததும் / பழைய நகரங்களை மாற்றி அமைக்காததும்.
எனது சொந்த ஊரான நெய்வேலி நகரத்தில் இந்த பிரச்சனை கிடையாது.இங்கு மலக்கால்வாய் ஊரின் எல்லையில் உள்ள ஒரு பெரிய கினற்றில் சென்று முடியும். அங்கு ஒரு பெரிய மத்தால் கடையப்பட்டு, அந்த நீர் புல் வெளியில் பாய்ச்சப்படும்.அதில் விளையும் புல்லை( மிகச் செழுமையாக இருக்கும் ) வீதிகளில் கொண்டு வந்து விற்பனை செய்வார்கள்.

மனிதன் இயற்கையோடு ஒட்டி வாழ்ந்த காலங்களில் இந்த பிரச்சனை இல்லை.ஆத்தங்கரை, குளத்தங்கரை, வாய்க்கால்,வரப்பு என இதற்காக சுற்றிய நாட்களெல்லாம் ஞாபகத்திற்கு வருகிறது.

இந்த பிரச்சனையை நம்மூர் ஆட்சியாளர்கள் நினைத்தால் மிகச் சுலபமாக தீர்க்கலாம்.அவர்களை செயல்பட விடாமல் தடுப்பது எது என்றுதான் தெரியவில்லை.
என்றென்றும் அன்புடன்,
பா.முரளி தரன்.

Thursday, November 16, 2006

விட்டதும், சுட்டதும், கெட்டதும்.

கடந்த இரு நாட்களாக ஜெத்தா வாழ் தமிழர்கள் மிக சந்தோஷமாக சுற்றிக் கொண்டிருந்தார்கள்.காரணம்,
கவிஞர் மு.மேத்தா மற்றும் புலவர் சாரங்கபாணி அவர்களின் வருகையும், அவர்களின் பேச்சும்,கவிதையும்.

இதில் புலவர் சாரங்கபாணி அவர்களுடன், இரண்டாம் நாள் நிகழ்ச்சிக்கு முன், சிறிது நேரம் சவுதி வாழ்க்கையை பேசிக் கொண்டிருந்தேன்.அதன் பின் புலவர் ஐயா கூறியது; அரபு உலக வாழ்வில் நம் மக்கள் பெற்றது அதிகம்.இழந்தது அதை விட அதிகம்.

கடந்த வாரம் வியாழன் அன்று எனது பாட்டி சாரதா
( தாயாரின் தாயார் ) வடலூரில் காலமானார்.அவருக்கு வயது 84.நான் ஐந்து வயதுவரை அவரை அம்மா என்றுதான் அழைத்து வந்தேன்.இந்த முறை விடுப்பில்
இந்தியாவில் அவரை சந்தித்த பொழுது, முரளி, பாட்டி சீக்கிரமா போயிடம்னு சாமிகிட்ட வேண்டிக்கோடா,
நான் வாழ்ந்தது போதும்."எல்லாரும் சாவ நினச்சு பயந்துகிட்டு இருக்காங்க, இந்த எமப் பய என்னை பாத்து பயந்து போய்ட்டான் போல, எங்கிட்ட வரவே மாட்டேங்கரான்" என்று ஜோக் அடித்தார்.

பாட்டி,என் ஆத்துக்காரி திரும்பவும் உண்டாகி இருக்கா.இருந்து, அந்த குழந்தையையும் பார்த்துட்டு போ என்றேன். புண்யாத்மா என்பார்களே அதற்கு உதாரனம்.அவருடைய வாழ்வையும் வாக்கையும் மிக விவரமாக பதிய வேண்டும் என்று ஒரு ஆசை.

இந்த வியாழன் அன்று(இன்று)திரும்பவும் ஒரு மரணச் செய்தி.எனது மனைவியின் பாட்டி( அம்மம்மா)காலமானார்.இவர் எனக்கும் அம்மா வழி உறவுதான்.
அவர் இருக்கும் இடம் எப்பொழுதும் ஒரே உற்சாகமாக இருக்கும்.தான் உற்சாகமாக இருந்து அடுத்தவரை சிரிக்க வைப்பதெல்லாம் பெரிய வரம்.அது வாழ்வில் அனைவருக்கும் கிட்டாது.பயங்கர குறும்புக்கார பாட்டி.

இந்த விடுப்பில் சந்தித்தபோது மனம் நிறைய வாழ்த்தினார்.என்ன செய்வது? பரதேச வாழ்வில் பகிர்ந்துகொள்ள முடியாததில்,அதிகமாக கஷ்டப்படுத்துவது மரண செய்திதான்.

பட்டினத்தாரின் வரிகள் ஞாபகம் வருகிறது.
" உயிர் விட்டது, உடலை சுற்றம் சுட்டது" என்று.
ஆனால் மரணம் போலொரு சிறந்த ஆசான் உலகில் இல்லை.மரண செய்தி கேட்கும் பொழுதெல்லாம்,
பொனம் போன பிறகு எழவு வீட்டை கழுவி விடுவார்களே,
அதுபோல் மனதின் தீவினை எண்ணங்கள் கெட்டுப் போய்
சுயம் சிறிது கழுவப்படுகிறது.
என்றென்றும் அன்புடன்,
பா.முரளி தரன்.

Saturday, November 11, 2006

பற்ற வைப்பு

நண்பர் ஒருவர் alloy20 க்கு என்ன வெல்டிங் ராடு உபயோகப் படுத்தனும்னு?. கேட்டுருந்தார்.

இந்த alloy20-ஐ, carenter20 என்றும் குறிப்பிடுவார்கள்.இரண்டின் உலோகக் கலவையும் ஒன்னுதான்.
இது stainless steel வகையைச் சார்ந்த உலோகம்.
இதை ss320 என்பதாக வகைப்படுத்தி உள்ளார்கள்.
எனவே AWS320 என்று குறிப்பிட பட்டிருக்கும் வெல்டிங்ராடுகளை கொண்டு வேலையை தொடங்குங்கள் என ஆலோசனை கூறினேன்.

Friday, November 10, 2006

விடாது கருப்புக்கு வேண்டுகோள்.

கருப்பு,
சமீபத்தில் காக்டெய்ல் கம்யூனிசம்னு ஒரு பதிவர் எழுதியிருந்தாரு.அந்தமாதிரி உன்னோடத, வலைப்பதிவு பகுத்தறிவுன்னு வகைப்படுத்தலாம். ஏன்னா உம்ம பகுத்தறிவு எல்லாம் எழுத்தோட/பேச்சோட சரிபோல.செயல்ல எதுவும் கிடையாதுபோல.

நீ புரட்சி பன்னனும்யா. நீ கவுண்டன்னு ஆப்புல படிச்சேன்.உன்ன விட தாழ்ந்த ஜாதியில,விதவப் பொண்ணா,ரெண்டு குழந்த பெத்ததா, தாலி கட்டாம,ஐயர் வெக்காம, மேளம் அடிக்காம, மாலை மாத்தாம, வெறும் கைய மட்டும் புடிச்சு, முக்கியமா வரதட்சனை வாங்காம வாழ்க்கை துணையா ஏத்துக்கனும்யா.அப்படி பன்னாத்தான் அது புரட்சி திருமணம்.
அப்படி கல்யாணம் செய்யர எண்ணம் இருந்தா, அறிவுப்பு கொடுப்பா.உலகத்துல எந்த மூலைல இருந்தாலும் உன் திருமணத்துல வந்து கலந்துக்குறேன்.

உனக்கு ஒரு சகோதரி இருக்கர்தாவும் ஆப்புல படிச்சேன்.திருமணம் ஆகாம இருந்தா (ஆயிருந்தால் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்),பொண்ணு கொடுத்து, பொண்ணு எடுத்துக்கலாம்.உறவு இன்னும் வலிமையா இருக்கும்.

மற்றபடி திருமணம் என்பது அவரவர் சொந்த விஷயம். இதுல ஜாதி மட்டுமே முக்கியமில்ல.பணமும், வேலையும் எவங்கிட்ட இல்ல.நல்ல மனம்தான் முக்கியம்.காசு பணம் இருந்தாலும் வக்கிரம் புடிச்ச பசங்களுக்கெல்லாம் எவனும் பொண்ணு கொடுக்க மாட்டான்.
என்றென்றும் அன்புடன்,
பா.முரளிதரன்.

Wednesday, November 08, 2006

வள்ளலாரும்..விடாதுகருப்பும்..ஜால்ராக்களும்.

விடாது கருப்பின் பதிவில் இப்போதுதான் மருதூர் இராமலிங்கம் பிள்ளை பற்றிய கருப்பின் பினாத்தல்களையும், அவரது அடிவருடி அரைகுறைகளின் பின்னூட்டங்களையும் படித்தேன். நினைவு தெரிந்த நாள் முதல் "அருட்பெருஞ்சோதி தனிப்பெருங்கருணை" என்று சொல்லி வாழ்ந்துவரும் நான், சிலரின் தெளிவிற்காக இந்தப் பதிவை எழுதுவது அவசியமாகிறது.

நான் பிறந்து வளர்ந்தது நெய்வேலியாய் இருந்தாலும், முதல் வகுப்பு படித்தது வடலூர் முருகானந்தா ஆஸ்ரம பள்ளியில்தான். எனது தாய் வழிப்பாட்டன், மாமன்மார்கள், சித்தப்பா அனைவரும் வடலூரில்தான் வசித்து வருகிறார்கள். நான் நடை பழகிய நாள் முதல் வடலூர் சத்திய ஞான சபை
செல்லும் பழக்கமுடையவன்.

எனது குடும்பத்தார் அனைவரும் கூட்டாக அருட்பா படிக்கும் பழக்கம் உள்ளவர்கள். எனது குடும்பத்தில் ஜோதி என்ற பெயருடைய பல குழந்தைகள் உண்டு. அந்த அளவு வள்ளல் மீதும், அருட்பா மீதும் பற்றுள்ள குடும்பம் எங்களுடையது.

எனது மகனுக்கு, வள்ளல் கையால் ஏற்றப்பட்டு 140 வருடங்களுக்கும் மேலாக அணையாமல் பாதுகாக்கப்படும் அடுப்பில் சமைத்த உணவினைத்தான், முதல் சமைத்த உணவாக கொடுத்தோம்.

மானிடரின் வயிற்றில் பசி என்னும் அணையா நெருப்பு உள்ளவரை, இந்த அடுப்பு அணையாமல் எரிந்து, பசித்த வயிற்றிர்கு உணவிட வேண்டும் என்பது வள்ளலாரின் கட்டளை. இங்கு தானியங்கள் சேகரிக்க பெரிய பெரிய பத்தாயங்கள் இருக்கும். சுற்றுப் பகுதிவாழ் மக்கள் மூட்டை மூட்டையாக இங்கு கொண்டு வந்து தானியங்கள் கொடுப்பார்கள்.எங்கள் குடும்பத்தில் எந்த விஷேஷமாய் இருந்தாலும், இங்கு தானியம் கொடுப்பதை நாங்கள் ஒரு பழக்கமாக வைத்திருக்கிறோம்.

தைப்பூச திருநாள் எங்களுக்கு மிக முக்கியமான நாள். குடும்பத்தார் அனைவரும் பூசத்திற்கு முன்பே வடலூரில் கூடி விடுவோம். சிறு வயதில் ஒரே கொண்டாட்டமாக இருந்த பூசம், பெரியவன் ஆனதும் உள் முகப் பயனத்திற்கான உந்துதலாய் இருந்தது.

பூசம் அன்று ஆறு திரைகளை விலக்கி ஏழாவதாக உள்ள ஜோதி தரிசனம் காட்டுவார்கள். ஆறு திரைகள், ஆறு ஆதார நிலைகளையும் ஏழாவதான ஜோதி தரிசனம், ஜோதிவடிவான இறை தரிசனம்( சகஸ்ராரம்) என்றும் சொல்வார்கள்( மறைபொருள்).

எனது சித்தப்பா குடும்பம் ஒரு சத்திரத்திற்கு பொறுப்பாளிகள்.அதனால் பூசத்திற்கு ஒரு மாதத்திற்கு முன்பிருந்தே சில ஆயத்த வேலைகளை
சன்மார்கிகளுக்காக செய்ய ஆரம்பித்து விடுவார்கள். சன்மார்கிகள் வந்து தங்கி செல்ல, உறங்க,உணவருந்த தேவையான ஏற்பாடுகள். இதை அவர்கள் சில தலைமுறைகளாக ஒரு தொண்டாகத்தான் செய்து வருகிறார்கள் ( பிழைப்பு அல்ல).

தைப்பூசம் அன்று, வடலூர் பிராமண சங்கத்தின் சார்பாக தண்ணீர்ப் பந்தல் அமைத்து பக்தர்களுக்கு மோர், பானகம், சித்ராண்ணம் அளிப்பதையும்
வழக்கமாக செய்து வருகிறோம்.

இப்போது கருப்பின் புரட்டுகளைப் பார்ப்போம்.

"சிதம்பரத்தை அபகரித்து தமிழை தள்ளிவைத்துபோல் வடலூரிலும் தங்கள் கைங்கர்யத்தைக் காட்ட பேராசைப்படுவது தெரிகிறது.வள்ளலாரும், தன் முப்பாட்டனாரும் நண்பர்கள் என்றும், சத்தியஞான சபையில் வழிபாடு நடத்த தங்கள் குலத்திற்கே உரிமை உள்ளதாக வள்ளலார் எழுதிக் கொடுத்ததாகவும் போலியாக ஆவனங்களை தயார் செய்து தனது அட்டூழியங்களை செய்துவருகின்றார் சபாநாதஒளி என்ற இந்த பார்ப்பனன்."

நாங்கள் எல்லாம் ஒளி மாமா என்று அன்போடு அழைக்கும் இந்த சத்தியசீலருக்கு, பல காலமாகவே நாத்திகர்களாலும், பிராமண
துவேஷிகளாலும் பிரச்சனைதான். பல வருடங்கள் முன்னதாகவே

சிலபேர் அவரை எதிர்த்து கோர்ட்டுக்கு சென்றார்கள்.

அவர் சுப்ரீம் கோர்ட்வரை சென்று வள்ளலாரின் கையெழுத்தாலான அந்த ஆவனங்களை நிரூபித்துள்ளார். வள்ளலார் சத்திய ஞான சபை கட்டிடத்தை வடிவமைத்து ( தாமரை வடிவிலான இந்த கட்டிடம் வள்ளலாரின் சொந்த வடிவமைப்பு) கட்டி முடித்த பின், அதன் பராமரிப்பையும், வழிபாட்டு முறைகளையும், சொத்துக்களையும் நிர்வகிக்கும் பொறுப்பையும், இந்த ஒளி மாமா குடும்பத்திற்கும் அவரது தலைமுறைக்கும் ஒப்படைத்து விட்டார். இது வள்ளலார் ஜோதியில் கலக்கும்(மேட்டுக்குப்பம்) முன்னரே நடைமுறைப் படுத்தப்பட்டது.

அதனால் சில பூனைகள் கண் மூடிக்கொண்டு
பூலோகம் இருண்டு விடாதா, எலி பிடிக்கலாம் என்ற கனவை முடித்துக் கொள்வது நன்று.


இப்போது கருப்பின் இன்னொரு புரட்டைப் பார்ப்போம்.

"அந்த சத்திய ஞான சபைக்கு சோதனையாக, ஆமை புகுந்தது போல் ஆரியர்கள் புகுந்து இராமலிங்க வள்ளலாரின் வழிபாட்டு முறையை தங்களுக்கு சாதகமாக சிவன் கோவில் போல் மாற்றியும், சமஸ்கிரத மந்திரங்களை ஓதியும் இழுக்கு ஏற்படுத்தி, கேவலமான பிழைப்பை நடத்துகின்றனர்."

இந்த சபையில் வள்ளராரால் பூஜிக்கப்பட்ட மரகதலிங்கம் உள்ளது.ஒவ்வொரு பிரதோஷம் அன்றும் இந்த சிவ லிங்கத்திற்கு அர்ச்சனையும், அபிஷேகமும் நடைபெறும். எனது குழந்தைப் பருவத்திலிருந்தே நான் இந்த அபிஷேக அர்ச்சனை முறைகளை கண்டு வந்திருக்கிறேன். இது ஒன்றும் இடைச்செருகல் அல்ல.

இதனால் அறியப்படுவது யாதெனில் " கோயில்களை கொள்ளை கூடாரங்களாக மாற்றிவரும் நாத்திக பகுத்தறிவு
திருட்டுக் கூட்டம், இப்போது வடலூருக்கு குறி வைத்துள்ளார்கள்"
இந்த வக்கிர புத்திகாரர்கள், வள்ளலார் ஏற்றி வைத்த அணையா அடுப்பில் தண்ணீர் ஊற்றும் முன் தடுத்து, சரியான மனிதர்களின் பொறுப்பில் இந்த தொண்டு தொடர நம் ஆதரவை பதிவோம்.
என்றென்றும் அன்புடன்,
பா.முரளி தரன்.

Tuesday, November 07, 2006

பேனைப் பெருமாளாக்குவது.

திரு சுந்தர வடிவேல் அவர்களின் சாவிலும் பிழைக்கும் பார்ப்பன கூட்டம் பதிவிற்கு இட்ட பின்னூட்டம்.

ஐயா, உங்கள் தந்தையாரின் மறைவிற்கு எனது வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

1. அறுபது வயது முதியவர்தானே என இதை நீங்கள் மிகச் சாதாரனமாக எடுத்துக் கொண்டிருக்கலாம்.நான் அப்படித்தான் எடுத்துக் கொண்டிருப்பேன்(ஜாதி ஆராய்ச்சியெல்லாம் செய்திருக்க மாட்டேன்).

2. உங்கள் மனதில் ஊட்டி வளர்க்கப் பட்டிருக்கும் பிராமண எதிர்ப்புதான் உங்களை கோபப்பட வைத்திருக்கிறது.

3. பிராமணர்கள் என்றில்லை, தமிழகத்தில் எந்த சாதியைச் சேர்ந்த வயதானர்வர்களாயிருந்தாலும், வயதில் சிறியவரை வா, போ என்று ஒருமையில் அழைப்பதுதான் நமது கலாச்சாரம்/பழக்கம்.

4. இந்த விஷயத்தில், உங்கள் சித்தப்பா என்ன உணர்ந்தார் என அறிய ஆசைப்படுகிறேன்.

5. நான் பழகியவரையில், பிராமண குடும்பங்களில், எங்களுக்குள்ளாகவே நாங்கள் ஒருமையில்தான் பேசிக் கொள்வோம். உதாரணத்திற்கு அண்ணா, அக்கா யாராயிருந்தாலும் வாடா, போடாதான். அப்பா, அம்மா எல்லாம் நீ,போ,வா தான். இதில் ஜாதி வித்தியாசம் பார்க்கிறார்கள் என்பதெல்லாம் கிடையாது.

6. இப்படி அழைப்பது ஒரு அன்பினாலும், அந்நியோன்யத்தினாலும்தான், அவமரியாதக்காக அல்ல.

7. என்னுடய அனுபவத்தில், கோவை மாவட்டத்தை தவிர்த்து, தமிழகத்தின் ஏனைய இடங்களில் பேசு மொழியில் மரியாதை என்பதே கிடையாது ( எல்லாம் ஒருமைதான்).

8. கோவையில் நான் இருந்தபோது நடந்த சம்பவம்.நான் குடியிருந்த வீட்டின் ஓனர் ஒரு கவுண்டர். ஒரு நாள் தெருவில் குழி வெட்டும் வேலைமுடித்த சில உழைப்பாளிகள் குடிக்க தண்ணீர் கேட்டார்கள்.நான் தண்ணீர்கொடுத்தேன். நான் வீட்டினுள் சென்ற பின் என்னை பின் தொடர்ந்து வந்த எனது வீட்டு ஓனர். என்னப்பா சக்கிலிப் பசங்களுக்கு கையில/சொம்புல தண்ணீ கொடுக்கிற அதுவும் இல்லாம சொம்ப கழுவாம வேற கொண்டுப்போற என்று என்னைக் கடிந்து கொண்டார். நான் அதிர்ந்து போனேன். நம்புங்கள் அது நாள் வரை எனக்கு தீண்டாமை என்றால் என்னவென்றே தெரியாது.

9. இதே மனிதர் அவர்கள் வீட்டு மூன்று வயது குழந்தையை நான் வாடீ போடீ என்று அழைப்பதாக ஒரு கட்டத்தில் வருத்தப் பட்டார். அவர்கள் எல்லாம் ஏங் கண்ணு என்றுதான் அழப்பார்கள். நானும் அதுபோல் அந்த குழந்தையை மரியாதையாக அழைக்க வேண்டும் என்று கேட்டுக்(கட்டாயம்) கொள்ளப்பட்டேன்.எனக்கு இது மிகவும் செயற்கையாக/விநோதமாக இருந்தது. நானும் they need respect?. என்று கோபப்பட்டு சிறிது காலம் அந்த குழந்தையிடம் பேசாமலே இருந்தேன். குழந்தைதானே அதற்கு இந்த வார்த்தை ஜாலமெல்லாம் புரியவில்லை. அது என்னை(அன்பை) சரியாகவே புரிந்து கொண்டிருந்தது.அதனால் குழந்தையிடம் ஏன் கோபம் என்று சீக்கிரம் இளகி விட்டேன். ஆனால் கடைசிவரை வாடி போடி தான்.

10. மருத்துவர் இராமன் அடிமை கூட பத்திரைக்கையாளர்களிடம் நீ,வா,போ என்றுதான் பேசுவார்.

11. 1994/1995ஆம் வருடம், நான் சென்னை,திருவல்லிக்கேனியில் வசித்த வருடம், ஒரு நாள் மெரீனா பீச்சில் குளித்துக் கொண்டிருக்கும்போது கரைக்கு இழுக்கப்பட்ட கட்டுமரத்துக்கு அருகே சிறிது சென்றதால்,வீரமணியால்(தாதா)ஓ..ஒதுங்குடா என்று திட்டப்பட்டேன், சிறிது முறைத்ததும் தே...என்று திட்டப் பட்டேன். அவர்களது இயல்பான பேச்சு மொழியே அதுதான்.அதுவில்லாமல் வலியவனை எட்டி உதைக்க முடியுமா என்ன?.

12. நீ, வா, போ என்று அழைத்தது ஒரு பிராமணன் என்ற ஒரே காரணத்திற்காக நீங்கள் பேனை பெருமாள் ஆக்கி விட்டீர்கள் என்றுதான் நினைக்கிறேன்.
என்றென்றும் அன்புடன்,
பா,முரளி தரன்.

Thursday, November 02, 2006

தேன்கூடு போட்டி - இலவசம்.

மூன்றாம் நாள்:-
அறைக்கு பக்கத்து சந்தில் யாரோ நடந்து வரும் ஓசை கேட்டது. யாராயிருக்கும்?.

முரளி கதவத் திற.... இது வாசனின் குரல் அல்லவா.

மெதுவாக எழுந்து சென்று கதவைத் திறந்தேன்..... வாங்க வாசன்.

என்னப்பா இவ்ளோ சீக்கிரமா படுத்துட்ட?.

தாடப்பள்ளிகூடம் சிமெண்ட் பாக்டரி போயிட்டு வந்தேங்க. நடையான நட, ஒரே டயர்ட், அதான் சீக்கிரம் படுத்துட்டேன்... நீங்க எப்ப வாசன் வந்தீங்க ராஜமுந்திரிலேந்து?.

ம்ம்ம்...இப்பதான்... சரி வாங்க, சாப்பிட போலாம்.

நான் டிபன் சாப்டுட்டேங்க...நீங்க போய் சாப்ட்டு வாங்க வாசன்,
எனக்கு தூக்கமா வருது.

ம்ம்ம்..பரவாயில்ல வாங்க, டிபன்தான சாப்டிங்க, செரிச்சிருக்கும். இப்ப சாப்பாடு சாப்ட்டு வரலாம்.

பசிக்கல வாசன்.

பொய் சொல்லாதிங்க முரளி. மூனு நாளா மெஸ் பக்கமே வரலன்னு பட்டுகாரு சொன்னாரு. பணம் இல்லன்னா கேட்க வேண்டியது தானே. ஏன் இப்படி கொலப்பட்னி கிடக்குரீங்க.

இல்ல வாசன் நான் வரல.

நான் உங்க friend ஆ இருக்கனும்னா..இப்ப கிளம்பி சாப்ட வாங்க.

பைக்கில் அழைத்துச் சென்று, சாப்பிட வைத்து, திரும்பி வீட்டில் விட்டுச் சென்ற நண்பா. நீ போட்ட அந்த சோற்றை இலவசம் என்று சொன்னால் மரியாதையாக இருக்காது என்பதால் அதை விட மிக ஆழமான வேறு பதத்தை தேடிக் கொண்டிருக்கிறேன்.

இரண்டாம் நாள்:-

தாடகை எத்தன பெரிய உருவமா தெரியுமா இருந்தா?..

அவளோட நகம் ஒவ்வொன்னும் ஒரு முறம் பெருசு இருந்ததாம்.அப்படின்னா அவளோட விரல் எத்தன பெருசு இருந்துருக்கும், அவளோட கை எத்தன பெருசு இருந்துருக்கும். அவ எத்தன உயரமா இருந்துருப்பா.

அப்படிப்பட்ட ஒரு ராட்ஷஸிய, ராமா உன்னோட ஒற்றை அம்பு சாய்ச்சிடுச்சாமே!!!.

ராமா உன்னோட ஒற்றை பாதம் பட்டதும், கல் அகலிகையா மாறிடிச்சாமே!!!.

ராமா உன்னோட ஒற்றை பார்வைக்கு, அன்னை சீதா தன்வசம் இழந்தாளேமே!!!.

ராமா உன்னோட ஒற்றைக் கையால் சிவதனுசை முறித்தாயேமே!!!.

ஆயிரம் பெண்களை மணந்த தசரதனின் புத்திரன் நீ. ஆனால் ராமா, நீ ஒருவனுக்கு ஒருத்தி என வாழ்ந்து காட்டினாயேமே.

அதனால்தான் ராமா என்னும் ஒற்றைச் சொல், இந்த பிறவியை காக்கும் மஹாமந்திரமானதோ!!!. ராமா..ராமா...ராமா.

ஹரிகதா முடிந்தது. அன்று பசி தீர்த்த கோயில் பொங்கலையும், சுண்டலையும் இலவசம் என்று சொன்னால் இழுக்கு. அதனால்தான் பிரசாதம் என்று சொல்கிறார்களோ.

ஐய்ந்தாம் நாள்:-

பசி ரொம்ப கொடுமைதான். மனசு இதுக்கெல்லாம் பழகிடுச்சு. வயிறுக்கு பழக்கமில்ல. உள்ள இருக்குர நெருப்புல எதையாவது அள்ளிப் போட்டுகிட்டே இருக்கனும். இல்லன்னா அந்த நெருப்பு சுமந்துகிட்டு இருக்கிறவனையும், சில நேரம் சுத்தி இருக்கிறவனையும் எரிச்சிடுது.

இரண்டு நாட்களாய் வயிறு காய்ந்து கிடந்தாலும், சூழ் நிலையில் இருந்த உற்சாகம் மனசை தொற்றிக் கொண்டது.

இன்னிக்கி எலக்க்ஷன் ரிசல்ட். அடுத்து ஆளப்போவது யார்?. காங்கிரஸ்ஸா அல்லது தெலுங்கு தேசமா?...ஊரே தவித்துக் கிடந்தது. எனது வயிறோ பசித்துக் கிடந்தது.

தெருவில் சுற்றிக்கொண்டிருந்த என் கண்ணில் பட்டது, கீழே கிடந்த ஒரு நாலனா.

சாதாரன நேரமாய் இருந்தால் அதை தாண்டிப்போயிருப்பேன். பசி வந்தாலே பத்தும் பறந்து போய்விடும், இங்கோ மூன்று நாள் அரைகுறை சாப்பாடு, இரண்டு நாள் கொலைப்பட்டினி.

நாலனாவை குனிந்து எடுத்தேன். தூரத்தில் ஒரு தள்ளுவண்டியில் இருந்த வாழைப் பழம் கண்ணில் பட்டது. நாலனாவுக்கு ஒரு பழம் தருவானா?..மிகுந்த அவமானத்துடன் காசை நீட்டி ஒரு பழம் கொடுங்க என்றேன்.

பழ வண்டிக்காரர்: நாலனாவுக்கு பழம் வராது தம்பி.

நான்: அமைதியாய் முகத்தை திருப்பி ஒரு ஓரமாய் நகர்ந்து நின்று கொண்டேன்.

ரேடியோ அறிவிப்பு: தெலுகு தேசம் பெரும்பான்மை பெற்றது. அடுத்த முதல்வர் என்.டி.ராமாராவ்.

ஒரே கைத்தட்டல், விசில் எங்கும் பரவியது.

பழ வண்டிக்காரர்: அண்ணகாரு ஜெயிச்சிட்டாரு டோய். ஒரே சந்தோஷக் கூச்சல். தம்பீ இந்தா என்று ஒரு முழு சீப்பு வாழைப்பழத்தை தூக்கிக் கொடுத்தார். கூடவே வாழ்க்கையில் நான் பெற்ற மறக்க முடியாத இலவசத்தையும்.

என்றென்றும் அன்புடன்,

பா.முரளி தரன்.