Saturday, March 31, 2007

CREAMY LAYER கயவர்களே.

"ஈர்ங்கை விதிரார் கயவர் கொடிறுடைக்கும்
கூன்கைய ரல்லா தவர்க்கு".
கயவர், தம் கன்னத்தை இடித்து உடைக்கும்படி கை உடையவரல்லாத மற்றவர்க்கு, தாம் உண்ட எச்சில்
கையையும் உதறமாட்டார், என்ற குறளுக்கு ஒரு உதாரணமாகவே இருந்து வருகிறார்கள் கிருமி லேயர் கயவர்கள்.அவர்கள் கன்னத்தை
இடித்து அடேய் போதுமடா உங்கள் பேராசை என்று சொல்வதுபோலவே வந்துள்ளது உச்சநீதி மன்றத்தின் தீர்ப்பு. யார் பிற்படுத்தப்பட்டவர் என்று கண்டுபிடிப்பது, பிரம்மனும்,
ஹரியும் முயன்று முடியாமல் போன சிவனின்அடியும் முடியும் போல அத்தனை கடினமான காரியமா என்ன?

இலவச கேஸ் அடுப்பு, இலவச நிலப்பட்டா வழங்க, வறுமை கோட்டிற்கு
கீழே உள்ளவர்களை ஆறே மாதத்தில் கண்டுபிடித்த அரசால் இதை
கண்டுபிடிக்க முடியாதா என்ன? முயன்றால் முடியும், முயலக் கூடாது என்பதுதானே பிற்படுத்தவர் வேஷம் கட்டும் இந்த பணக்கார ஓட்டு வேட்டை அரசியல்வாதிகளின் கொள்கை.

"ஊணுடை எச்சம் உயிர்க்கெல்லாம் வேறல்ல
நாணுடை மாந்தர் சிறப்பு"
உணவும், உடையும் எல்லோருக்கும் பொதுவானது. அம் மக்களில் சிறப்பானவர்கள் என்பவர்கள், தகாத செயல்களை செய்வதற்கு வெட்கப்படுபவர்கள் என்பவர்தாமே. அதுவும் நூல் பல கற்றவர், அறிவில் சிறந்தோர் இதில்
ஒரு படி மேலே அல்லவா இருக்க வேண்டும்.

ஆனால் இந்த கிருமி லேயர்கள், ஏழைகளின் சலுகைகளை நாங்களும்
அனுபவித்தே தீருவோம் என வெட்கங்கெட்டு திரிகின்றனவே.

"அக்கி அகன்ற அறிவென்னாம் யார்மாட்டும்
வெக்கி வெறிய செயின்"
யாரிடத்திலும் பொருளை கவர விரும்பி
பொருந்தாதவற்றை செய்தால் உன் அகன்ற அறிவால் என்ன பயன்.
சமூகத்தில் பண பலம், அதிகார பலம், வீடு, நிலபுலன் என சவுகரிமாய்த்தானே இருக்கிறீர்கள். ஏன் காட்டிலேயும்,
கழனியிலேயும் வியர்வை சிந்த உழைக்கும் பாட்டாளிகளின்,
ஏழைகளின் சலுகைகளை கவர விரும்பிகிறீர்கள்.தூசு புகாத அறைகளில்
குளிர்காற்று வாங்கிக்கொண்டு, குந்தி தின்னும் கோமான்களே, வெள்ளைப்
பறங்கியைப்போல நிறத்தில் மின்னும் சீமான்களே, உங்களுக்கு இட
ஒதுக்கீடு ஒரு கேடா?.


"மடியிலா மன்னவன் எய்தும் அடியளந்தான்
தாஅய தெல்லாம் ஒருங்கு"
தன் மூன்றடியால் மூவுலகத்தை அளந்த
மஹாவிஷ்னு தாவிய பரப்பு எல்லாவற்றையும், சோம்பல் இல்லாத
அரசன் ஒரு சேர அடைவான், என்பதற்கு உதாரணமாய் நமது அரசியல்
வியாதிகள். ஒரு வட்டம், மாவட்டம் பதவி கிடைத்தால் கூட போதும், உடனே ஏழு தலைமுறைக்கு சொத்து சேர்த்து விடுகிறார்கள். இவர்கள் எல்லாம் எந்த விதத்தில் பிற்படுத்தப் பட்டவர்கள்?.

இட ஒதுக்கீட்டிற்கு பொருளாதார அளவுகோள்தான் சரியானது.

"நடுவின்றி நன்பொருள் வெக்கின் குடிபொன்றிக்
குற்றமும் ஆங்கே தரும்"
ஏ கிருமி லேயர் பணக்கார பேராசை பிச்சைக்காரர்களே, ஏழைகளுக்கு சேர வேண்டிய இடஒதுக்கீட்டை
மனசாட்சி சிறிதும் இல்லாமல் நீங்கள் கவர விரும்பினால், நீங்கள் பெரிய குற்றம் செய்தவர்கள் ஆகிறீர்கள். நீங்களும், உங்கள் குடியும்
கெட்டுப் போவீர்கள்.

ஏ கிருமி லேயர்களே மனசாட்சி என்று ஒன்று இருந்தால், நாங்கள் பிற்படுத்தப்பட்ட பட்டியலில் இருந்தாலும், முற்பட்டவர்களே , ஆதலால் எங்களுக்கு இட ஒதுக்கீடு வேண்டாம் என்று முன் வந்து அறிவிப்பு செய்யுங்கள்.

ஏழை பாழைகளின் உரிமைகளை தட்டிப் பறித்து சொகுசு வாழ்க்கை
வாழாதீர்கள். அப்படி செய்தால் அரசாங்கம் எத்தனை சலுகைகளை
கொடுத்தாலும்.

போவீர் போவீர் ஐயோ என்று போவீர்.
என்றென்றும் அன்புடன்,
பா.முரளி தரன்.

Wednesday, March 28, 2007

பெரியாரும் நானும் - 1.

எனது தந்தையார் நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில் ஒரு சாதாரண தொழிலாளியாக வாழ்க்கையை துவங்கினார். நாங்கள் குடியிருந்த தொழிலாளர் குடியிருப்பில் அனைத்து ஜாதி மதம் சார்ந்தவர்களும் இணைந்துதான் வசித்து வந்தோம். இன்னும் சொல்லப்போனால் ஜாதி, மதம் என்றெல்லாம் இருப்பதே தெரியாது. அனைவரும் நல்ல விதமாகவே பழகி வந்தாலும் ஒரே ஒரு வீட்டு அம்மா மட்டும் சும்மாவே காரணம் கண்டுபிடித்து எங்கள் வீட்டோடு வலிய வம்பு சண்டை வளர்த்துக்கொண்டே இருப்பார்கள். சிறுவனான எனக்கு இது மிகுந்த ஆச்சரியம் அளித்த விஷயம். இத்தனைக்கும் அவருடைய மகன் எனக்கு நல்ல நண்பன். அப்பொழுது அதற்கு காரணம் தெரியவில்லை. பிற்காலத்தில் அவர்கள் வீட்டு சுவற்றில் வரைந்திருந்த ஒரு தாடி தாத்தாவின் படம் ஞாபகம் வந்தபொழுதுதான் அதற்கான காரணம் புரிந்தது.

எனக்கு பதினோரு வயதில் உபநயனம். அதற்காக முன்தலையில் சிறிது முடி வழித்து, குடிமியும் சிறிது நாள் வைத்திருந்தேன். அனைத்து சிறுவர்களும் அதை விசித்திரமாக கவனித்து சில கேள்விகளும், சிறிது கேலியும் பேசி மட்டுமே வந்தனர். ஆனால் ஒரு பெரியவகுப்பு அண்ணன் மட்டும் விடாது என் குடிமியை பிடித்து இழுத்தும், அடித்தும், பிளேடால் குடுமியை நறுக்கிவிடுவேன் என பயமுறுத்தியும் தாங்க முடியாது தொந்தரவு செய்து வந்தான். நான் கொஞ்சம் துறுதுறுப்பு என பெயர் பெற்றவன் ஆனால் அதன் பிறகுதான் கொஞ்சம் முரடு என பெயர் பெற்றேன். அவன் தொந்தரவு எல்லை மீறிப்போனதால், பள்ளியில்
வளர்ந்திருந்த ஒரு மரத்திலிருந்து ஒரு கழியை உடைத்து, அவனை பள்ளி மொத்தமும் விரட்டி விரட்டி அடித்தேன். அப்படி அடித்ததற்காக அரை நாள் ஹெட்மாஸ்டர் அறை வாசலில் முட்டி போட்டேன். அவனுடைய தந்தையாரும் என்னை வந்து மிரட்டிவிட்டுப் போனார். அதன்பின் பள்ளியின் ஆசிரியர்கள் அதை பெரிய பிரச்சனையாக ஆகாமல் தடுத்து விட்டார்கள். பிற்காலத்தில் அந்த அண்ணா ஏன் அப்படி நடந்துகொண்டான் என்பதை அவர்கள் வீட்டு சைக்கிளின் முன்பக்கத்தில் பறந்த ஒரு கொடியின் ஞாபகம் வந்ததும் தெரிந்துகொண்டேன்.

சிறு வயதில் பட்சக்குதிரை தாண்டும் விளையாட்டு. ஒரு சிறுவன் கால் முட்டியில் கையை வைத்துக்கொண்டு, குனிந்து, முதுகுப் பரப்பை சமதளமாக்கி நிற்க வேண்டும். மீதி சிறுவர்கள் வரிசையில் நின்று ஓடிவந்து , குனிந்துநிற்பவன் முதுகில் இரு கைகளை வைத்து, எம்பி, இரு கால்களை விரித்து , அவன் உடலின் வேறு எந்த பாகங்களிலும், நமது உடலின் பாகங்கள் படாமல் தாண்டி குதிக்க வேண்டும். ஓடி வருவதால் குதிரை. கால்கள் இரண்டையும் விரிக்கும்போது ஒரு சிறகை விரிப்பதுபோல் இருப்பதால் பட்சம் ( பட்சம் என்றால் சிறகு , பட்சத்தை உடையது பட்ஷி. நன்றி: வாரியார் சுவாமிகள்). ஒடி வந்து எம்பி கால்களை விரித்து தாண்டும்பொழுது, ஒரு குதிரை இறக்கை விரித்துப் பறப்பதுபோல் இருப்பதால் இந்த விளையாட்டுக்கு பட்சக்குதிரை என பேர் ஆனதோ?.
நாங்கள் இதை ஆபியம் விளையாட்டு என்றும் சொல்வோம்.

அப்படி ஒவ்வொரு முறை தாண்டும்பொழுதும், ஒவ்வொரு வார்த்தையாக சொல்லி தாண்டுவோம்.
ஆபியம், இஸ்தாபியம், மணியாபியம், முத்தாபியம்,
லக்கடிகொக்கு என்று, கடைசி முறையாக தாண்டி குதிக்கும்பொழுது
ராஜா சூத்துல ஒத என்று சொல்லி,
குனிந்து நிற்பவன் பின்பக்கம் ஒரு உதை விட்டுவிட்டு குதிக்க வேண்டும்.
இந்த விளையாட்டில் நான் சூரன் என்று பெயர் பெற்றவன் ( நம்புங்கண்ணா, டேக்வாண்டோவில் இந்த விளையாட்டே ஒரு உடற்பயிற்சி. ஆனால் பின்புறம் உதைப்பது கிடையாது. எப்படி சரியானபடி தாவிக்குதிக்க வேண்டும் என demonstrate செய்துகாட்ட வேண்டுமானால் எங்கள் கேப்டன் ( குருநாதர் ) என்னைத்தான் கூப்பிடுவார் ) .

ராஜா சூத்துல ஒத என்று சொல்லி உதைத்துக்கொண்டே தாவிக் குதிப்பது சற்றே கடினமான ஒரு செயல். இதை சரியானபடி செய்ய முடியாது, நிறைய சிறுவர்கள் out ஆகி, குனிந்து நிற்கும் ஆளாக மாறி விடுவார்கள். சில குறும்பர்கள் வேண்டுமென்றே வலி எடுக்கும் அளவுக்கு ஓங்கி உதைப்பார்கள். இதனால் சில நேரம் சண்டை வந்து விடும். அதனால்
ஒங்கி உதைப்பது கூடாது என்றும், சிறிது அளவு உடையில் கால்படும் அளவிற்கு உரசினால் கூடப்போதும் என்றும் விதி மாற்றம் செய்யப்படும்.

அப்படி உரசினால் அதை குனிந்து நிற்பவர் உணரமுடியாமல் போகும். அதனால் குனிந்து நிற்பவர் out கேட்கும் வாய்ப்பு உள்ளது. அதனால் தாண்டியவரின் கால் குனிந்து நிற்பவரின் மேல் பட்டதா என்பதை கண்கானிக்க ஒரு நடுவரை நியமித்திருப்போம்.

அன்று எங்கள் தெருவில் புதிதாக குடிவந்த ஒரு சிறுவன் விளையாட்டில்
சேர்ந்தான். நான் அவன் பின் புறம் டவுசரில் (கால்சட்டை) ஒரு உரசு உரசி தாவிக் குதித்து சென்றேன். ஆனால் எனது கால் அவன் மீது படவே இல்லை
என சாதித்தான். நடுவர் எனது கால் பட்டது என அவர் கண்டதை அறிவித்தும், அவன் நடுவர் தீர்ப்பை ஏற்க மறுத்து விட்டான்.

நான், நடுவர் தீர்ப்பைதான் ஏற்பேன் என்று பிடிவாதமாக இருந்ததால் எனது
வாழ்வில் முதல் முறையாக ஒரு வசவை கேட்க நேர்ந்தது. இந்த பார்ப்பார பசங்கள எதிலியுமே சேக்க கூடாது என்பதுதான் அது. நான் பதிலுக்கு அவனை திட்ட அது பெரிய சண்டையாக மாறிவிட்டது. அந்த நிகழ்ச்சிக்குப்
பிறகு எப்பொழுது, எப்படி மாறினோம் என்றே ஞாபகம் இல்லை, ஆனால் இன்றும் நாங்கள் உயிர் நண்பர்கள்.

பிற்காலத்தில் நாங்கள் இந்த சண்டையை பேசி சிரித்து ஆராய்ந்து பார்த்தபொழுது ஒரு விஷயம் புரிந்தது. எனது நண்பனின் குடும்பத்து
ஆண்கள் பார்ப்பன எதிர்ப்பு என்பதை ஒரு கொள்கையாகவே கொண்டவர்கள் என்றதால் சிறுவனான எனது நண்பனும் எந்த காரணமும், அவசியமும் இல்லாவிட்டாலும் கூட பெரியவர்கள் செய்ததால், பேசுவதால் நாமும் அதேபோல் செய்வோம், பேசுவோம் என முடிவெடுத்துவிட்டான்.

நீளம் அதிகமாகிக்கொண்டே போகிறது. மீதி அடுத்தடுத்த பதிவுகளில்.
என்றென்றும் அன்புடன்,
பா.முரளி தரன்.

Saturday, March 24, 2007

கார்த்தி சிதம்பரம்.

"தாய் எட்டடி பாய்ந்தால் குட்டி பதினாறு அடி பாயும் என்பார்கள்" அப்படித்தான் இருந்தது திரு. கார்த்தி சிதம்பரம் அவர்களின் பேச்சு. அப்பாவைப் போன்றே உயரம், மீசையற்ற முகம், தோற்றம்.
அவரது அறிவுச் செறிவு அவரது பேச்சில் தெரிந்தது.

ஜெத்தா வாழ் தமிழர்கள் இணைந்து gulf residents indian tamils ( GRIT ), வளைகுடா வாழ் தமிழர் அமைப்பு என்றொரு அமைப்பை துவக்கியுள்ளார்கள். இந்த அமைப்பை துவக்கி வைக்க, சிறப்பு விருந்தினராக வந்திருந்தார் திரு.கார்த்தி சிதம்பரம். மேதகு இந்தியத் தூதர் திரு.பாரூக் மரைக்காயர் அவர்களும், இணைத்தூதர் திரு அவுசப் சயீத் அவர்களும் அமைப்பை வாழ்த்தி, ஆலோசனை நல்கினார்கள்.

அமைப்பை குத்து விளக்கு ஏற்றியும், இணைய தளத்தை சொடுக்கியும் துவக்கி வைத்தார் திரு கார்த்தி சிதம்பரம். GRIT என்னும் இந்த அமைப்பு GUIDE, GROW, GAIN என்ற நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டு துவங்கப்பட்டுள்ளது.

GRIT அமைப்பை வாழ்த்தி, சில ஆலோசனைகளையும் வழங்கினார் திரு.கார்த்தி சிதம்பரம். மேலும் இந்தியாவைப் பற்றியும், இந்தியாவின் வளர்ச்சி பற்றியும் பொதுவான சில விஷயங்களை பேசினார்.
அதில் நான் கிரஹித்தவை.

1. இந்த நூற்றாண்டில் உலகப் பொருளாதார மையங்களாக, வலுவான
சக்தியாக இந்தியாவும், சைனாவும் இருக்கும்.

2. பல்வேறு பிரிவுகளை கொண்ட இந்தியாவில் சமூக, பொருளாதார,
மாற்றங்கள் மிக மெதுவாகவே நடந்து வருகிறது. ஆனால் முந்தைய
பல ஆண்டுகளை ஒப்பிட்டால், கடந்த பதினாறு வருடங்களில் இந்த
மாற்றம் துரிதமடைந்துள்ளது.

3. மிகச் சாதாரண பின்புலத்திலிருந்து வந்த சிவ நாடார், நாராயண மூர்த்தி
போன்றோர், தங்கள் அறிவுத்திறன் ஒன்றையே மூலதனமாக கொண்டு
பெரும் தொழில் அதிபர்களாக மாறி சாதனை படைத்து, இளைய தொழில்
முனைவோருக்கு முன் மாதிரியாக உள்ளார்கள்.
அத்தகைய வாய்ப்புகள் நிறைந்த சூழ்நிலைகளை கொண்டதாக இன்றைய
நாட்களில் இந்தியா உள்ளது.

4. உள் கட்டமைப்பில் சிங்கப்பூர், சவுதி அரேபியா போலெல்லாம் இந்தியா
எப்பொழுது மாறும் எனச் சிலர் கேட்கிறார்கள். இந்தியாவை
இந்த நாடுகளோடு ஒப்பிடுவதே தவறு. ஏனென்றால்
இந்தியா மிகப் பெரிய நாடு. ஆனாலும் இன்னும் ஒரு
இருபத்தைந்து வருடங்களுக்குள் நாம் அதை சாதிக்க முடியும்.

5. GRIT அமைப்பின் சார்பாக micro investment என்ற ஒரு சித்தாந்தத்தின்
அடிப்படையில் அனைத்து தமிழர்களின் முதலீட்டில் ஒரு மருத்துவனை
தொடக்க நிலையில் உள்ளது.
அதேபோன்ற சீரிய முயற்சிகள் முன்னெடுத்து செல்லப்பட வேண்டும்
என்றும் , மேலும் gulf residents indian tamils என்பதிலிருந்து
gulf residents indians என்றொரு பரந்துபட்ட தளத்திற்கு இந்த அமைப்பு
மாறவேண்டும் என்ற மேதகு இந்திய தூதுவர் திரு.பரூக் மரைக்காயர்
மற்றும் இணைதூதர் திரு.அவுசப் சயீத் அவர்களின் ஆலோசனையை
வழிமொழிந்தார் திரு.கார்த்தி சிதம்பரம்.

6.மேலும் வளைகுடாவாழ் தொழிலாளர்களின் பிரச்சனைகளை குறித்தும்
இனி வேலைவாய்ப்பு தேடி தமிழகத்திலிருந்து வருபவர்களுக்கு
விழிப்புணர்வினை ஊட்டவும், GRIT அமைப்பின் பிரிவு, தமிழக
நகரங்களான சென்னை, திருச்சி மற்றும் மதுரையில்
துவக்கப்படவேண்டும் என்ற தனது அவாவினையும் வெளியிட்டார்
திரு. கார்த்தி சிதம்பரம்.

7. NRI களுக்காக ஐந்து சதவீத இட ஒதுக்கீடு, இந்திய கல்வி
நிறுவனங்களில் சரியானபடி அமல்படுத்தப்படுவதில்லை என்ற
குறைபாட்டிற்கு பதில் அளிக்கையில், இது சம்பந்தமாக GRIT தனது
கோரிக்கையை தொடர்ந்து இந்திய அரசியல்வாதிகளிடம், அதிகார
வர்கத்தினரிடமும் வலியுருத்தலும், நினைவுருத்தலும் செய்யவேண்டும்
என கேட்டுக்கொண்டார். ஏனென்றால் இட ஒதுக்கீடு போன்ற
விஷயங்கள் இந்தியாவில் பல சிக்கல்கள் நிறைந்த விஷயமாக
உள்ளதால் சற்றே மெதுவாகத்தான் மாற்றங்கள் வரும் என்றார்.

8. அதே நேரத்தில் same side goal போடவும் தவறவில்லை.இந்தியாவில்
அரசியலும், அதிகார வர்கமும் ஒரு கசியும் குழாயைப்போல்
உள்ளதால், எந்த செயலையும் முன்னெடுத்துச் செல்வதில் வேகம்
மிதமாகவே உள்ளதாக குறைபட்டுக்கொண்டார் ( நகைச்சுவை).

9. இந்தியாவை ஒரு யானைக்கு உருவகப்படுத்தினார். இந்திய
பொருளாதரத்தைச் சொன்னாரா, அரசியலைச் சொன்னாரா,
ஒட்டு மொத்த இந்தியாவின் குணநலத்தைச் சொன்னாரா என்பதை நான்
சரியாக உள் வாங்கவில்லை. யானை பலம் வாய்ந்த பிரானியாக
இருந்தாலும், சில நேரங்களில் நம்மிடமிருந்து வாழைப்பழம் வாங்கி
தின்னும் அளவிற்கு சாதுவாகவும், சில நேரத்தில் நமக்கு மாலை
அணிவித்து மரியாதை செய்வதும், சில நேரத்தில் மதம் பிடித்து கட்டற்று
செல்வது போலவும், இந்தியா.............( அப்பாவும் பிள்ளையும் பிரானிகளின் நேசர்களாய் இருப்பார்கள் போல் உள்ளது. தமயன் யானையை பற்றி பேசுகிறார், அப்பா பாராளுமன்றத்தில்
சமர்ப்பித்த பட்ஜெட்டிலே.................).

மொத்தத்தில் இந்திய அரசியல் வானில் எதிர்காலத்தில் ஒரு நம்பிக்கை நட்சத்திரமாய் மின்னப்போகும் ஒருவரை நேரில் கண்ட மகிழ்ச்சி எனக்கு.

என்றென்றும் அன்புடன்,
பா.முரளி தரன்.

Sunday, March 18, 2007

ரஷ்ய விஞ்ஞானிகளை விஞ்சிய தமிழக களவானிகள்.

முதலில் ரஷ்ய விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்பைப் பற்றி தெரிந்து கொள்வோம். இந்த செய்தி, சவுதியின் நாளேடு, சவுதிகெஸட்டின் இன்றைய பதிவில் வெளியாகி உள்ளது.

ரஷ்ய ராணுவ விஞ்ஞானிகள் பல வருடங்கள் முன்பாக ஒரு ஷூ தயாரித்து
இருக்கிறார்கள், அவர்கள் நாட்டு சிறப்பு இராணுவப்படை வீரர்களுக்காக.

பல வருடங்கள் ரகசியமாக வைக்கப்பட்ட இந்த தொழில் நுட்பம்,
கம்யூனிச ரஷ்யாவின் வீழ்ச்சிக்குப் பிறகு தொன்னூற்று நான்காம் ( 1994 ) ஆண்டுக்கு பிறகுதான் வெளி உலகத்திற்கு தெரிய வந்ததாம். அந்த ஷூவின் சிறப்பம்சங்கள்.

இந்த ஷூ, ஒரு சிலிண்டரும், பிஸ்டனும், எரிபொருள் நிரப்பும் அறையும்,
ஒரு இக்னீசியஸ் சுவிட்ச்சும் பொருத்தப்பட்டு தயாரிக்கப் பட்டுள்ளது.

1. பறனையின் ( விமானம் ) இஞ்ஜின் பிஸ்டனின் தரத்திற்கு இணையான
தொழில் நுனுக்கத்துடன் தயாரிக்கப்பட்டது.

2. ஒரு மோட்டார் வாகனத்தின் இஞ்ஜின் செயல்படுவது போலவே இந்த
இஞ்ஜின், பிஸ்டன் அமைப்பு செயல்படும். இந்த ஷுவை அணிந்து
ஒவ்வொரு கால் அடி எடுத்து வைக்கும்பொழுதும், எரி பொருள்
வெளிப்பட்டு, ஒரு அழுத்தம், ஒரு வெடிப்பு, ஒரு உந்து சக்தி.

3. இந்த ஷூவை அணிந்துகொண்டு ஓடினால் ஒரு மணிக்கு முப்பத்தைந்து
(35 ) கிலோமீட்டர் வேகத்தில் ஓடலாம். அதாவது ஒரு வினாடிக்கு பத்து
( 10 ) மீட்டர் தூரம் ஓடலாம். அதாவது இங்கு ஒரு அடி வைத்தால்,
அடுத்த வினாடியில் அடுத்த அடியை பத்து மீட்டர் தூரத்தில் வைப்பீர்கள்.

சிறப்பு பயிற்சி பெற்ற இராணுவ வீரர்கள், கவச வண்டிகளின் குறுக்கே ஓடவும்,
மின்னல் வேகத்தில் எதிரிகளின் தாக்குதலில் இருந்து தப்பித்து ஓடவும் இந்த ஷூவை உபயோகப் படுத்துவார்களாம். இப்போது இந்த ஷூவை, வர்தக ரீதியில் தயாரித்து, பொதுமக்கள் அனைவரின் உபயோகத்திற்காகவும் விற்பனை செய்ய இருக்கிறார்களாம்.

இப்போது நம்ம ஊர் களவானிகளின் கதைக்கு வருவோம்.

இரண்டாயிரத்து மூன்றாம் வருடம் நான் கடலூர் மாவட்டத்தின் சிதம்பரம் நகரில் தங்கியிருந்து பணியாற்றிகொண்டிருந்தபோது நடந்த சம்பவம். அப்போது இந்தப் புரளி ஒரு காட்டுத் தீபோல் சிதம்பரத்தின் சுற்று வட்டாரத்து கிராமங்களில் பரவியது. அது ஒரு விநோத மனிதனைப் பற்றியது.

இந்த மனிதன், ஒருவர் வீட்டுக்குப் போன் செய்து, நான் இன்று உங்கள் வீட்டுக்கு வருவேன், என்னை முடிந்தால் பிடித்துக் கொள்ளுங்கள் என்று சவால் விடுவான். அதேபோல் அன்று இரவு வருவான். அவனை பிடிக்க முயற்சித்தால் படு வேகமாக ஓடிவிடுவான். அப்படி ஓடும்பொழுது குறுக்கே வரும் வேலிகளையும், சுவர்களையும் வெகு சுலபமாக தாவிக் குதித்து ஓடி விடுகிறான்.

எங்கள் தெருவின் பக்கத்து தெருவில் உள்ள ஒரு வீட்டிற்கும் இதேபோல்
ஒரு தொலைபேசி வந்தது. நாங்கள் அனைவரும் அருவா, சவுக்கு கட்டை என்று கையில் ஏந்தி தயாராக இருந்தோம். ஆனால் அவன் வரவில்லை.
மறுநாள் போன் செய்து, நான் வந்திருந்தேன், உங்கள் தெரு கோவிலில்தான் ஒளிந்திருந்தேன் என்றெல்லாம் சொன்னான். ஆனால் நேரில் வரவில்லை.

மறுநாள் பக்கத்து கிராமத்தில் இதேபோல விளையாடி இருக்கிறான். அந்த கிராமத்தவர் துரத்திச் சென்றுள்ளனர், ஆனால் அவனை பிடிக்க முடியவில்லை. பிடிக்கமுடியாததற்குக் காரணம் அந்த திருடனின் ஷுதான்.

அந்த திருடன் ஒரு ஷூ போட்டுகிட்டு இருக்காம்பா, படு ஸ்பீடா ஓடுறான்.
ஒரு அடி இங்க வச்சா அடுத்த அடி பத்து மீட்டர் அந்தண்ட வக்குறான். கரும்பு காட்டுக்குள்ள பூந்து ஓடிட்டான், ஊரே சேந்து தேடியும் ஆள புடிக்க முடியல. ஷூவுல எதுவும் ஸ்பிரிங் வச்சுருக்கானோ? என்னாவோ?.

இந்த செய்தி/புரளி ஒரு வார காலம் சிதம்பரம் சுற்று வட்டார கிராம மக்களை தூங்கவிடாமல் செய்தது . அந்த நேரத்தில் இதை ஒரு புரளி என்றோ கட்டுக்கதை என்றோ முழுவதுமாக விலக்க முடியவில்லை.
யாரோ விஷமிகள் போன் செய்து விளையாடி இருக்கலாம்.

ஆனால் அவனை விரட்டிப் பிடிக்க முயன்ற கிராம மக்களின் வாக்குமூலத்தை எப்படி நிராகரிக்க முடியும். ரஷ்ய விஞ்ஞானிகளின் சாதனையை விஞ்சும் அளவுக்கு ஒரு ஷூவை கண்டுபிடித்திருந்த அந்த களவானியை என்னவென்று சொல்வது.

இப்போது ஒரு முக்கியமான சமாச்சாரத்திற்கு வருகிறேன். கம்யூனிச ரஷ்யா உடைந்த பிறகு ஏற்பட்ட பொருளாதாரச் சிக்கலை சமாளிக்க
முடியாத பல அதிகாரிகள்,விஞ்ஞானிகள் ஆயுதங்களை திருட்டுத்தனமாக
விற்று காசு பார்ப்பதாகவும், அது எத்தகைய ஆபத்தானது என்றும் அந்த காலக்கட்டத்தில் பல செய்திகள் வந்தன.

அப்படி விற்கப்பட்ட ஒரு ஷூதான் சிதம்பரம்வரை வந்ததா?. ஏனென்றால் இதே காலகட்டத்தில் சிதம்பரம் பகுதியில் யுரேனியத் தகடு விற்றதாக ஒருவர் கைது செய்யப்பட்டார். அந்த தகடு கல்பாக்கம்
அனு ஆராய்ச்சி மையத்திற்கு பரிசோதனைக்காக எடுத்துச் செல்லப்பட்டது. இது அந்நாட்களில் பத்திரிக்கைகளில் பரபரப்பாக வந்த செய்தி.

கொள்ளிடத்திலிருந்து, வெள்ளாறு முகத்துவாரம் வரையிலான சிதம்பரத்தின் கடற்கரை பகுதி ஒரு காலத்தில் கடத்தல்காரர்களின் சொர்கபூமி என்று அனைவரும் அறிந்ததே.

உண்மையா? புரளியா? விஞ்ஞானமா?கடத்தலா? அந்த தில்லை சபாபதிக்கே வெளிச்சம்.
என்றென்றும் அன்புடன்,
பா.முரளி தரன்.

Friday, March 16, 2007

வெட்டி சாச்சுப்புட்டாங்களே.

நான் முதல் முறையாக சவுதியை வானத்திலிருந்து பார்த்தபொழுது அதுவரை வாழ்வில் கண்டிராத ஒருவித்தியாசமான காட்சியாக இருந்தது.எங்கும் மணல் பிரதேசம். நோக்குமிடம் எல்லாம் பாலைவன மணல். அதற்கு நடுவே அரிதாக வளர்ந்திருக்கும் மரங்கள்.

இயல்பாகவே எனது எண்ணங்கள் எனது சொந்த ஊரான நெய்வேலிக்கு பயணப்படுவதை தவிர்க்கமுடியவில்லை. எங்கள் ஊரில் பூமாதேவி பசுமை போர்த்திக் கொண்டுதான் காட்சி அளிப்பாள். ஒரு வீட்டுக்கு சராசரியாக 130 மரங்கள் உள்ளதாக ஒரு புள்ளி விவரம். அதனால் அதிக மழை பெறும் பிரதேசமாகவும் உள்ளது.

நெய்வேலி ஒரு காலத்தில் காடாக இருந்த பிரதேசம். ஜம்புலிங்க முதலியார் கிணறு வெட்டப்போய் நிலக்கரி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. நிலக்கரி சுரங்கத்தில் வெட்டிய மேல் மண்ணை ஒரு மலைபோல குவித்து வைத்திருப்பார்கள். எங்கள் பாஷையில் அதற்குப் பெயர் மண்ணுமேடு.

காலப்போக்கில் அந்த மண்மேட்டில் இயற்கையாகவும், மனித முயற்சியாலும் நிறைய மரங்கள் நிறைந்து விட்டன. சிறு வயதில் நண்பர்களுடன் இணைந்து ஒரு காட்டுவாசி வாழ்க்கையை இந்த மண்மேட்டின்மேல் வாழ்ந்திருக்கிறேன். அங்கு உள்ள குட்டைகளில்
குளிப்பதும், அங்கு கிடைக்கும் நாகப்பழம், இலந்தைப்பழம் போன்றவற்றை உண்டும், ஒரு நாள் முழுதும் மலை மேலேயே தங்கியிருப்போம். சில நண்பர்கள் உண்டிவில்லால் அடித்து பறவைகளை பிடித்து சமைத்து உண்பார்கள். மேலும் நீர் நிலைகளில் கிடைக்கும் மீன், நண்டு போன்றவற்றை பிடித்தும் பசியாறுவோம்.

மலையின் இண்டுஇடுக்கு மற்றும் சந்து பொந்துகள், முக்கியமான பாதைகள்,
குகைகள், ஊற்றுகள், குளம் குட்டைகள் ஆகியவை சிறுவர்களான எங்களுக்கு அத்துப்படி. உடும்பு பிடிப்பது, முயல் பிடிப்பது, காடை கவுதாரி பிடிப்பது என்று எங்கள் வேட்டைப் பட்டியல் மிக நீளமானது.

ஒரு முறை ஆவாரம் புதரில் குடிகொண்டிருந்த நல்லபாம்பு குட்டிகளை சுருக்கு போட்டு பிடித்து விளையாடிக் கொண்டிருந்தபொழுது, தாய்நாகம் வந்து விட்டது.அதை அடித்தால் தப்பித்து ஓடி விட்டது. நல்ல பாம்பு நம்மளை பழிவாங்கி கொன்றுவிடும் என்று பயந்து, ஒரு நாள் முழுதும் அதை நாணல் புதர்களில் விரட்டி தேடிக் கொன்று கொளுத்தி சாம்பலாக்கியபிறகுதான் சமாதானமானோம்.

இப்படி ஒரு இயற்கையோடு இணைந்த காட்டுவாசி வாழ்க்கை வாழ்ந்திருந்த எனக்கு மரங்களோடு ஒரு நேச உணர்வு உண்டு. சவுதியில் எங்கள் பக்கத்து வீட்டில் அரிதாக ஒரு வேம்பு, ஒரு போகன் வில்லா, ஒரு பேரீச்சை மரம் இருந்தது. வருடத்தில் ஓரிருநாள் பெய்யும் அசுர மழை பேரீச்சை மர ஓலையில் பட்டு எழுப்பும் ஓசை, பறை ஓசையின் அதிர்வை உள்ளுக்குள் உருவாக்கும்.

காம்போண்ட் சுவரின்மேல் புதராக பரவியிருந்த போகன்வில்லா கிளைமறைவில்
பச்சைக் குழந்தைகளைப் போல குரல் எழுப்பிக்கொண்டு சில நேரங்களில்
பூனைகள் சரசமாடுவதைக் கண்டிருக்கிறேன். குளிர்ச்சியைப் பரப்பும் வேம்பின் நிழலில் சந்தர்பம் கிடைத்தால் எனது காரை பார்க் செய்து மகிழ்வேன்.

இன்று திடீரென்று மூன்று மரங்களும் வெட்டப்பட்டன. அதனை ஒரு வேதனையோடு பார்த்துக் கொண்டிருந்தேன். எனது அண்டை வீட்டு பெங்காலி என்னிடம் வந்து, பார்த்திங்களா சார் இப்படி மரத்தை வெட்டி தள்ராங்களே என்றார். நான், அமாங்க மரம் இருந்தது எவ்வளவு அழகாக இருந்தது, மனசுக்கும் எவ்வளவு நிறைவா இருந்தது. இந்த மண்ணுல மரம் வளர்ரது எவ்வளவு கஷ்டம். எப்படியும் இருபது முப்பது வருஷம் வயசு இருக்கும் ஒவ்வொரு மரத்துக்கும் இப்படி அநியாயமா வெட்டி சாய்க்கிறாங்களே என்றேன்.

அவர் ஆமாங்க அநியாயம்தான் இதை வெட்ட ஆயிரம் சவுதி ரியால் செலவாம் ( இந்திய மதிப்பு கிட்டதட்ட பன்னிரெண்டாயிரம் ) இதையே
ஒரு பெங்காலிகிட்ட கொடுத்திருந்தா இருநூறு சவுதி ரியால்ல வேலைய முடிச்சிருப்பாங்க என்றார். நான் அவர் கரிசனத்தைக் கேட்டு ங்நே என்று விழித்தேன்.
என்றென்றும் அன்புடன்,
பா. முரளி தரன்.

Tuesday, March 06, 2007

சாகரன் கல்யாணுக்கு ஒரு அஞ்சலி.

அன்று அப்துல் கலாமைப்பற்றி ஒரு பதிவு எழுதிக் கொண்டிருந்தேன். திடீரென்று வரிசையாக தேன்கூடு நிறுவனர், நிர்வாகி சாகரன் கல்யாண் மரணம் என செய்திகள் வரத் தொடங்கின.

ஒவ்வொரு பதிவாக வரிசையாக படித்ததும் எனக்கு ஏற்பட்ட வருத்தத்தை வார்த்தையில் வடிக்க இயலாது. இதைப்பற்றி ஒரு பதிவு இட வேண்டும் என நினைத்து நாட்கள் நகர்ந்ததுதான் மிச்சம்.

சாகரன் மரணம் பற்றி பதிவு இடாதது ஒரு மிகப்பெரிய உறுத்தலாகவே
மனதில் இருந்து வந்தது.

எனக்கும், பெரும்பான்மையான வலைப்பதிவாளர்கள் போலவே, கல்யாண் என்பவரைப் பற்றி எதுவும் தெரியாது.

நான் இருக்கும் ஜெத்தாவிலிருந்து ஆயிரம் கிலோமீட்டர் தொலைவில் உள்ள ரியாத்தில் இருந்திருக்கிறார் ஆனால் தெரியாமல் போய்விட்டது. கடந்தா ரம்ஜான் விடுமுறையில் ஐய்ந்து நாட்கள் ரியாத்தில்தான் இருந்தேன். அப்போது தெரிந்திருந்தால் கூட சந்தித்திருப்பேன்.

ஆனால் ஒரு நாள் வலத்தளத்தில் மேய்ந்து கொண்டிருந்த பொழுது சாகரஅலை என ஒரு வலைப்பூவைக் கண்டேன். இருப்பிடம் ரியாத் என்று வேறு இருந்ததால் ஆர்வமாக படிக்க தொடங்கினேன்.

அவரது எழுத்து மிகவும் பக்குவப்பட்டதாக இருந்தது. ஒரு நீண்ட இடைவேளைக்குப் பிறகு மீண்டும் எழுதத் துவங்கியிருப்பது தெரிந்தது.

குறிப்பாக செல்போன் குறித்து ஒரு பதிவு எழுதியிருந்தார். அதில் நான் ஒரு பின்னூட்டம் கூட இட்டிருந்தேன்.

மேலும் அவர் தலைமையேற்று நடத்திவந்த எழுத்துக் கூடம் பற்றியும், நகுலன், இராமகிருஷ்ணன், விசாகாஹரி என எங்கெங்கோ சுற்றி வருவதாய் இருந்தது அவரது எழுத்து.

அன்றிலிருந்து சாகரனின் வலைத்தளத்தையும் படிப்பது என்பதை வழமையாக்கிக்கொண்டேன்.

அவரது மரணச்செய்தியும், அவரது அருகாமையிலேயே வசித்து வந்தும் அவரைப் பற்றி ஏதும் அறியாத அறியாமையில் இருந்து விட்டதும் என்னை
மிகவும் பாதித்து விட்டது.

எப்பொழுதும் இடைவிடாமல் ஒலித்துக் கொண்டிருக்கும் எனது காரின் டேப்ரிக்காடரை இரண்டு நாட்களாக நான் தொடவே இல்லை என்பதை இரண்டு நாட்கள் கழித்துதான் என்னால் உணரவே முடிந்தது.

நான் அறிந்த ஒரேஒரு வலைப்பதிவரை அழைத்து எனது வருத்தத்தை தெரியப்படுத்தினேன். அவரும் உடைந்து போயிருந்தார். அவர் என்னைப்போலல்லாமல் கல்யாணை நன்றாக அறிந்தவராகவும், தொடர்பில் இருந்தவராகவும் இருந்திருக்கிறார் என்பதே எனக்கு அப்பொழுதுதான் தெரிந்தது. எனக்கு மட்டும் அந்த வாய்ப்பு கிடைக்காமல் போய்விட்டதை எண்ணி வருந்தினேன்.

மிகச் சாதரணமான மனிதன் நான். வலைப்பூவில் கையெடுத்து வைத்த உடனே
விடாது கருப்புவை திட்டி பிறகு மன்னிப்பு கேட்டேன். பிறகு போலியின் தொல்லை சிறிது நாள் தொடர்ந்தது. பிறகுதான் ஒரு நிதானத்துக்கு வந்தேன் எனச் சொல்லலாம்.

வலைப்பூ எனக்கு புதிய விஷயங்களை அறிமுகப் படுத்தியது. புதிய புரிதல்களை ஏற்படுத்தித்தந்தது. அதற்கு தளம் அமைத்துக் கொடுத்த கல்யாண்சாகரன் இன்று இல்லை.

எனது தாயாரின் மரணத்திற்கு பின் நான் இந்த அளவு வேறு யாருடைய மரணத்தாலும் இந்தளவு பாதிக்கப்பட்டதில்லை.

சிறிய வயது ஆதலால் அவரது மரணமும் இயற்கையானதாக இருந்திருக்காதோ என்றொரு ஆதாரமற்ற சந்தேகமும் எனது மனதை வாட்டியபடி இருந்தது. ஏனென்றால் அதற்கு சிறிது நாட்களுக்கு முன்தான் அவர் தன்னை வெளிக்காட்டியுள்ளார்.

வலைப்பூவில் உள்ள எல்லையற்ற சுதந்திரம் அனைவரும் அறிந்ததே. அதில் காயப்பட்டவர்களால், எழுத்துச் சுதந்திரத்தின் குரல்வலை நெறிக்கப்பட்டதோ?
என்றெல்லாம் குழம்பித் தவித்தேன்.

ஆனால் மேன்மேலும் வந்த தெளிவான தகவல்களால் எனது குழப்பம் தீர்ந்தது. இந்த பதிவை எழுதும் முடிவுக்கு வந்தேன்.

கல்யாணின் குடும்பம் தற்போது எப்படி உள்ளது என்று சென்னைப் பதிவர்கள் யாரும் எழுதினால் நல்லது.

ஜனாதி அப்துல் கலாம் அடிக்கடி சொல்வது போல, இந்தியாவின் பலம் கல்யாணைப் போன்ற சாதனை படைக்கத் துடிக்கும் இளைனர்களின் கைகளில்தான் உள்ளது. அப்படி ஒரு சாதனை படைத்த இளைஞனின் இதயம்
தனது துடிப்பை நிறுத்தியிருந்தாலும், ஏராளமான இளைஞர்களின் இதயத்தில் சுடரேற்றிச் சென்றுள்ளது.

எனது அடுத்த வாரீசுக்காக நான் காத்திருக்கிறேன். அது ஆணாய் இருந்தால் சாகரன், பெண்ணாய் இருந்தால் கல்யாணி.

கல்யாண், தேன்கூடு தளத்தை நிறுவியதன் மூலம்,
அடைந்து கிடந்த என் இதயக் குகையின் சாளரங்களை திறந்து விட்டார்.
தனித்துக் கிடந்த என்னை ஒரு தள(இணைய)உலகத்தில் தள்ளி விட்டார்.
சிதறிக் கிடந்த எண்ணங்களை சற்றே குவியச் செய்தார்.
மாசு படிந்த மதிப்புரைகளின் மேல் இருந்த தூசி தட்டி விட்டார்.

அத்தனையும் செய்துவிட்டு, அறிமுகம் இல்லாமலேயே, அல்ப ஆயுசுல் போய்விட்டாயே
ஐயோ சாகரா அதனால்தான் சாக (ரன்) என பெயர் வைத்துக்கொண்டாயோ.
ஆனால் எனது இதயத்தில் நீ என்றும் சாகா வரம் பெற்றிருப்பாய்.
என்றென்றும் அன்புடன்,
பா. முரளி தரன்.

Monday, March 05, 2007

சமஸ்கிருதம்.

சமீபத்தில் ஒரு மாநில ஆளுனர் சமஸ்கிருதம் பயில்வதால் நடைமுறை வாழ்க்கைக்கு பயன் ஏதும் இல்லை என்பது போன்றதொரு கருத்தை வெளியிட்டு சிலரின் கண்டனத்திற்கு ஆளாகி உள்ளார். இது சம்பந்தமான எனது கருத்தை பதிய நினைத்தேன். காஞ்சி மஹாசுவாமிகளின் வாக்கை கடைபிடிக்கும் குடும்பம் எங்களுடையது. அவரது கட்டளைகளில் சில,

1. பிடியரசி திட்டம். ( தினமும் சமைக்கும்பொழுது குடும்ப தலைவிகள் ஒரு பிடி அரிசி எடுத்து தனியாக சேமித்து வைத்து, அந்த அரிசி ஓரளவு சேர்ந்ததும் தேவைப்படும் ஏழைகளுக்கோ, ஆதரவற்றவர்களுக்கோ, அநாதை இல்லங்களுக்கோ வழங்குதல்). இதை எனது தாயார் செய்யக் கண்டிருக்கிறேன்

2. வரதட்சனை வாங்க கூடாது. வரதட்சனை வாங்குபவர்கள் என்னிடம் ஆசி பெற வர வேண்டாம் என ஒரு முறை பரமாச்சாரியார் அறிவித்தார். ( திருமணத்திற்கு முன், கல்யாண பத்திரிக்கையை எடுத்துச் சென்று குல குருவிடம் ஆசி பெறுவது என்பதொரு வழக்கம் ). மேலும் திருமணத்தில் தங்க மாங்கல்யம் என்பது கூட இடையில் புகுந்த வழக்கம் என்றும், பழங்காலத்தில் திருமாங்கல்யம் என்பது வெறும் பனை ஓலையால் செய்யப்படுவதாக இருந்த்தாகவும் குறிப்பிட்டுள்ளார். நானும், எனது சகோதரும், வாங்கமாட்டோம் வரதட்சனை என்று சொல்லித்தான் திருமணம் செய்தோம்.

3. வேத சம்ரஷனம் பொருட்டு குடும்பத்தில் ஒரு குழந்தையையாவது வேதபாட சாலையில் கல்வி பயில சேர்க்க வேண்டும். வேதபாடசாலைக் கல்வி என்பது, உபநயனம் முடிந்தபின் எட்டு வயதில் குரு குலத்தில் சேர்த்துவிடுவது என நினைக்கிறேன். இது எட்டு பத்து வருட படிப்பு என்றும் நினைக்கிறேன்.

எனது சிறு வயதில் என்னை வேதம் பயில்வதற்கு அனுப்ப, எனது தாய் மாமனால் ஒரு யோசனை முன் வைக்கப்பட்டது. சேலத்தின் அருகில் உள்ள ஸ்கந்தாஸ்ரமம் என நினைக்கிறேன். சிறுவயதில் நடந்ததால் சரியாக நினைவில்லை. ஆனால் நான் வேதபாட சாலையில் சேர்வதை எனது தந்தையார் விரும்பவில்லை. அதற்கு என்ன காரணம் என்று இது நாள் வரையில் நான் கேட்கவில்லை. இப்போது அதற்கான காரணம் என்னவாக இருந்திருக்க வேண்டும் என ஓரளவு புரிகிறது.


எனது தாத்தாவரை புரோகிதம்தான் எங்கள் குடும்ப தொழில். திராவிட கட்சிகளின் தலையெடுப்பிற்குப் பின் அதற்கு பெரிய மரியாதையோ, அதனால் தேவையான வருமானமோ கிடைக்காத சூழ்நிலை ஏற்பட்டுவிட்டது. எனது தந்தையார் குடும்ப தொழிலிருந்து விலகி, வீட்டைவிட்டு ஓடி வந்து, நெய்வேலியில் ஒரு வேலையில் சேர்ந்து, ஒரு சுயம்புவாய் வாழ்க்கையை தொடங்கியவர். குழந்தைகளுக்கு முழுவதுமான சமஸ்கிருதக் கல்வி தேவையில்லை என்று அவர் நினைத்திருக்கலாம். ஆனால் இப்போது காலம் மாறிவிட்டது வேதமும் சமஸ்கிருதமும் கற்றவர்களுக்கு, தற்போது ஒரு நல்ல மதிப்பு உள்ளது. வருமானத்திற்கும் குறைவில்லை, சக்கைபோடு போடுகிறார்கள்.

பக்தி, தத்துவம், இலக்கியம் போன்றவற்றில் ஆழ்ந்த அறிவும், தெளிவும் பெற நிச்சயம் சமஸ்கிருதம் உதவும் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் பொருளாதாரத்திற்கும், உலகளாவிய தொடர்புக்கும் ஆங்கிலம் மிக அவசியம். எத்தனை மொழி கற்றாலும் தவறில்லை. அது அவரவர் ஆர்வம் மற்றும் திறமையின் பாற்பட்டது. நான் கூட எனது குழந்தைகளுக்கு சமஸ்கிருதமும் கற்றுத்தரவேண்டும் என முடிவெடுத்துள்ளேன்.

என்றென்றும் அன்புடன்,
பா. முரளி தரன்.