Saturday, December 16, 2006

தேன்கூடு போட்டி-குறும்பு/வெக்கப்போரு.

வணக்கம்மா, எம் பேரு முரளி, சாரதா பாட்டியோட பேரன், ஆத்தாள பாக்கலாம்னு வந்தேன்.

சாரதா மாமி பேரனா, அட உள்ள வாங்க தம்பி....டேய் மொச்ச, அந்த ஸ்டூல கொண்டாந்து போடுறா. உட்காருங்க தம்பி. என்ன சாப்புடரிங்க; மோரா, காபியா?.

இல்லம்மா ஒன்னும் வேனாம்.


ஏன்? எங்க வூட்ல எல்லாம் சாப்புடமாட்டிங்களோ!.

ஐய, அப்படில்லாம் இல்லீங்க. ஆத்தா ஊட்டி வுட்டு நிறைய சாப்டுருக்கேன். கொளஞ்சி மாமாவக் கேட்டுப் பாருங்க, சொல்லுவாரு.

சும்மா தமாஷ் பன்னம்பா. மொச்சயோட அப்பா சொல்லி இருக்காரு உங்களப்பத்தியெல்லாம். அவரு எங்க மாமியார கூட்டிகிட்டு டாக்டர் வூட்டுக்கு போயிருக்காங்க, திரும்பி வர்ர நேரம்தான்.

அது என்னங்க மொச்ச..ன்னு கூப்புடரிங்க பையன? டேய் உம் பேரு என்னாடா?.

சதீஷ்............என்னாது சதீஷா?.

இல்லங்க சகீஷ்.......என்னாது சகீஷா?.

என்னங்க பேர் புதுமையா இருக்கே!.அப்படின்னா என்னா அர்த்தம்.

யாருக்கு தெரியும். திருச்சி ஜமால் முகம்மது காலேஜ்ல படிக்கும்போது எங்க ஊட்டுக்காரரோட க்லோஸ் பிரண்டு, சகீருதின்..னு பேராம். எல்லாம் சகீஷ்-னு கூப்புடுவாங்களாம். அவங்க அப்பா மலையாலமாம், அம்மா தமிழாம். அவரும் எங்க வூட்டுக்காரர் மாதிரியே பெரியார் கட்சியாம். மலேசியாவுல இருந்தாராம் அப்பறம் சிங்கப்பூர்ல இருந்தாராம். இப்ப சவுதில இருக்காராம். அவரு ஞாபகமா எங்க வூட்டுக்காரரு சகீஷ்-னு பேர் வச்சுட்டாரு. எங்க மாமனாரு இமயவரம்பன் -னு பேர் வச்சுருக்காரு. எங்க அத்த சின்னகருப்பு-ன்னு கூப்புடுவாங்க.

நீங்க மொச்சன்னு கூப்புடிவிங்களாம். மொத்தத்துல சகஸ்ரநாமம் -னு சொல்லுங்க. அது சரி அது என்னாங்க மொச்ச?.

ஒரு நா, அத்தனை பேருக்கும் மொச்ச பயிரு அவிச்சு வெச்சிருந்தேன். இவன் யாருக்கும் தெரியாம ஒரு குண்டாம் பயிற ஒத்த ஆளா தின்னுப்புட்டாங்க. தின்னது பரவாயில்ல, மறு நா முச்சூடும் ஒரு வாயு மண்டலம் உருவாக்கினாம் பாருங்க....வூட்டுக்குள்ள யாரும் உட்கார முடில....ஹா..ஹா..ஹா...ஹா. அன்னிலேந்து மொச்ச ஆயிட்டாரு.

உங்க கண்ணாலத்துக்குதான் வர முடியாம போச்சு. நீ புள்ளையோடயே வந்துட்ட. குடும்பத்தோட முத முறையா வந்திருக்கிங்க, இருந்து சாப்டுதான் போனும்.

யம்மா மருமவளே, என்ன சமைக்கட்டும் சொல்லு.

எது வேனாலும் செய்யுங்க.

இதப் பாருடா, உஞ் சம்சாரத்தோட பதில. சரி கருவாட்டு குழம்பு வச்சிரட்டுமா?.

கொளஞ்சி மாமா எனக்கு மீன் வூட்டி வுட்டாரு. நீங்க எம்பொஞ்சாதிக்கு கருவாட்டு குழம்பா!. சரிதான், பேசாம ஒரு கடா வெட்டிப்புடுங்க; எம் புள்ளைக்கும் சேர்த்து கறி சோறே ஊட்டி விட்டுரலாம். ஹா...ஹா....ஹா என்ற எங்கள் சிரிப்பை சிதற அடித்தது ஆத்தாவின் வெங்கலக்குரல்.

எலேய் வெக்கப்போரு, எப்படா வந்த, வாடா வா என்று என் கன்னத்தை வழித்து எடுத்து தன் நெற்றிப்பொட்டில் சொடுக்கெடுத்தாள் ஆத்தா. வெக்கப்போரு, இந்த ஆத்தால ஞாபகம் வச்சுக்கினு பாக்க வந்தியாடா, என்ற ஆத்தாவின் கண்ணும் எனது கண்ணும் சேர்ந்து கலங்கியது.

கொண்டா கொண்டா, உம் மவனக் கொண்டா என்று என் மகனை வாரி அனைத்துக் கொண்டாள். ஆத்தாவின் குரலும், உருவமும் ஏற்படுத்திய கிலியில் எனது மகன் அழ ஆரம்பித்து விட்டான்.

என்னாடா உம் மவன் இப்புடி சினுங்குரான். எலேய் உங்கப்பன் வக்கப்போரு கணக்கா இருக்கனும்டா. குறும்புக்காரன் புள்ள அழுமூஞ்சியா இருக்கலாமாடா.

நான் - ஆத்தா அவன இப்ப இறக்கி விட்டா, வீட்ட ரெண்டாக்கிடுவான். வரும்போது அவங்க அம்மாக்கிட்ட அடி வாங்குனதால சினுங்கிட்டு இருக்காரு. அடிக்கடி புள்ளைய போட்டு அடிச்சிபுடுது ஆத்தா, நீங்களே கேளுங்க.

என் மனைவி - ஆங், மண்ணு தின்னா அடிக்காம வேற என்ன பன்னுவாங்களாம்.

ஆத்தா - மண்னு தின்னா; கின்னுன்னு வளரும் புள்ளைங்க. பச்ச புள்ளைய போட்டு அடிக்காத.

என் மனைவி - கிருஷ்ணர் வெண்ண தின்ன மாதிரி, புடி புடியா மண்ண அள்ளி திங்குறான் ஆத்தா. இவரு, அவனை அதட்டாம....வேடிக்கப் பார்த்ததும் இல்லாம......அங்க பாருடி, கல்லையெல்லாம் பொறுக்கி எடுத்து தனியா வச்சிட்டு, என்ன அழகா மண்ணு திங்கறாம் பாருன்னு, அத ரசிச்சுகிட்டு வேற உட்காந்துகிட்டு இருக்காரு. இந்த மாதிரி மண்ணு தின்னா வயித்துல பூச்சி வந்துடும். அப்பறம் இரத்த சோகைதான், அதான் நாலு சாத்து சாத்தினேன்.

ஆத்தா - அதுசரி, நீ சொல்ரத பார்த்தா நீ சாத்துனது உம் புள்ளையா மட்டுமா!! இல்ல வூட்டுக்காரனையும் சேத்தா.

என் மனைவி - ம்க்கும்....இவர யாரு சாத்துரது. இவரப் பத்தி உங்களுக்குத் தெரியாதா என்ன?. அடுத்தவங்கள பார்வையாலேயே மெரட்டுர ஆளு. ஒரு பார்வை; ஒரு சொல்லு போதும், அப்படியே கத்தியால கிழிக்கிற மாதிரி.

ஆத்தா - என்னடா என் பேத்திய மெரட்ரியாமே. இனிமே மிரட்டுனா எனக்கு ஒரு போன் போட்டுச் சொல்லு, நான் பாத்துக்கிறேன், இந்த வெக்கப்போரு பயல.

என் மனவி - அது என்னங்க ஆத்தா?. வெக்கப்போரு...வெக்கப்போருன்னு சொல்ரிங்க?.

ஆத்தா - பய இது வரைக்கும் உங்கிட்ட விஷயத்தையே சொல்லலயா. இவன் ஆறு வயசுப் பயலா இருக்கும்போது, இவன் மாமன் அ..னா..ஆ..வன்னா எழுதிக்காட்டச் சொல்லியிருப்பான் போல. அலமாரி உசரத்துல இருந்த சிலேட்ட, பயலால எடுக்க முடியல. மாமன் பூஜைய முடிச்சுட்டு வந்தா, அடிச்சிருவான்னு பயந்துகிட்டு, எங்கயோ ஓடிப் போய் ஒழிஞ்சுகிட்டான்.

எங்க யாருக்கும் இந்த விஷயம் தெரியல. புள்ளையக் காணலையேன்னு, அத்தன பேரும் அதுந்து போய்ட்டோம். தெருவே சேந்து புள்ளய தேடுது. வள்ளலார் சபைக்கு நடந்து போயிட்டானோன்னு, அங்க ஒரு கும்பல் தேடி ஓடுது. ரயில் ஏறி போய்ட்டானோன்னு, ரயில்வே ஸ்டேஷனுக்கு போய் ஒரு கும்பல் விசாரனை நடத்துது. சபைக்கு சோறு துன்ன வந்த பண்டாரப் பரதேசி எவனும் புள்ளயக் கூட்டிகிட்டு போய்டானோன்னு, கண்ணுல பட்ட பிச்சக்காரப் பசங்ககிட்டல்லாம் ஒரு கும்பல் விசாரனை நடத்துது. கிணத்துல ஏதும் விழுந்துட்டானோன்னு, சில பசங்க தண்ணிக்குள்ள கரனம் அடிச்சி, கிணறு முச்சூடும் தேடிப் பாத்துட்டாங்க.

அதுக்குள்ள இவங்க அப்பனுக்கு தகவல் போயி, அவரு நெய்வேலிலேந்து, பயர் வண்டி, ஜீப்புன்னு கூட்டாளிங்களோட வந்து போலீஸ் ஸ்டேஷனுக்கு தகவல் சொல்லி, ஊரையே அமர்களப்படுத்திகிட்டு இருந்தாரு.

இவனோட சித்தி, பாட்டி, அம்மா எல்லாரும் ஒப்பாரி வெச்சு ஊரக் கூட்டிகிட்டு இருக்காங்க. ஊருல இருக்கர அத்தன கோயிலுக்கும், உலகத்துல இருக்கர அத்தனசாமிக்கும் வேண்டுதலை போயிகிட்டு இருக்கு.

அப்ப நான் கிணத்தடிக்கு போயிருந்தேன். சில நேரம் இவன் மாட்டுகொட்டால கன்னுக்குட்டியோட விளையாடிகிட்டு இருப்பான். அதனால சந்தேகப்பட்டு அங்க போயி பாத்தேன். அப்ப வெக்கப்போரு ( வைக்கோல் அடுக்கு ) உள்ளேர்ந்து எதோ சர சரன்னு சத்தங் கேட்டுது. நான் கூட ஏதாவது நல்லதோ, சாரையோ கிடக்குதோன்னு பயந்து போயிட்டேன். கொஞ்சம் உத்துப் பாத்தா, இவனோட சட்டை தெரியுது. வைக்கப்புல்ல வாரி மேலப்போட்டுகிட்டு, உள்ள ஒழிஞ்சுக்கினு கிடந்தான்.

அன்னிக்கு இவன் வாங்கினாம் பாரு அடி, நாலு புளியஞ்சிம்பு முறிஞ்சிப்போச்சுன்னா பாத்துக்கோயன். அதுக்கப்பறம், இவன நெய்வேலிக்கு கூட்டிகிட்டு போய்ட்டாங்க. ஆனால் எப்ப வந்தாலும், வெக்கப்போரு வெக்கப்போருன்னு கூப்புடர இந்த பாட்டிய மட்டும் பாக்காம போமாட்டான் எம்பேரன் என்ற ஆத்தாவின் கண்களில் பாசம், எனது நினைவில் கடந்த காலம்.

இப்போதும் குறும்பு மேலிடும் தருனங்களில், என் மனைவி என்னை அழைப்பது....ஏ...ஏ..வெக்கப்போரே..ரே..ரே.
என்றென்றும் அன்புடன்,
பா.முரளி தரன்.

No comments: