Friday, July 20, 2007

செங்கரப்பான், மாந்தம், அரவத்தல்.

நண்பர்களே வணக்கம்,
ஒரு மாத விடுப்பில் தாயகம் சென்று வந்தேன், எனது குடும்பத்தில் புதிய வரவான எனது இரண்டாவது மகனை காண்பதற்காக. மகனை அருகில் இருந்து காணும், கொஞ்சும் பாக்கியம் ஒரு மாதம் மட்டுமே. அந்த நாட்களில் கேட்ட புதிய வார்த்தைகள் மற்றும் அது சம்பந்தமான சில தகவல்கள்.

செங்கரப்பான் - பிறந்த சிறு குழந்தைகளின் உடலில் காணப்படும் அல்லது புதிதாக உருவாகும் சிரங்குக்கு பெயர் கரப்பானாம். இதில் இரு வகை உண்டாம். ஒன்று செங்கரப்பான் மற்றது கருங்கரப்பான். எனது மகனின் உடலில் கருப்பாக ஒரு திட்டு காணப்பட்டது. இது கருங்கரப்பான் எனவே அதைச் சரி செய்ய கழுதைப்பால் கொடுக்க வேண்டும் என சிலர் சொல்ல,
வேறு சிலர் அது கரப்பான் அல்ல, மச்சம்தான் என்று சொல்லவே, கழுதைப்பால் தேடி அலையவேண்டிய இக்கட்டில் இருந்து தப்பித்தேன். நடுவே ஒரு டாக்டர் உறவினரை பார்த்து விஷயத்தை சொல்ல, என்னை ஒரு முறை முறைத்து, நக்கல் பன்றியா ? நல்லாதான் இருக்கான் குழந்தை ,
போய் வேற வேலையப் பாரு என்று அனுப்பி வைத்தார்.

மாந்தம் - குழந்தையின் ஜீரன சக்தி மந்தம் ஆவதைத்தான் மாந்தம் என்று குறிப்பிடுகிறார்கள். தாய்மார்கள் பலா, மா போன்ற பழங்களை உண்டாலோ, பச்சை கடலை போன்றவற்றை உண்டாலோ, தாய்ப்பால் கொடுக்கும் நாட்களில் கணவருடன் இணைந்தாலோ, தாயின் உடலில் ஏற்படும் மாறுபாட்டால், குழந்தை குடிக்கும் தாய்ப்பால் ஜீரனம் ஆகாமல், தாய்ப்பாலை குழந்தை கக்கிக்கொண்டே இருக்குமாம். இதை சரி செய்ய பழங்காலத்தில், மாந்தகட்டையை, வேப்ப எண்ணை விட்டு எரிக்கும் விளக்கில் சுட்டு , பிறகு அதை சந்தனக் கட்டையில் தேய்த்து, அதில் சிறிது விழுதை எடுத்து, குழந்தையின் நாக்கில் தடவ மாந்தம் சரி ஆகிவிடுமாம். தற்காலத்தில் டாக்டர் கொடுக்கும் சிரப்தான்.

அரவத்தல் - பிறக்கும்போது மூன்றிலிருந்து மூன்றரை கிலோ வரைக்கும் இருக்கும் சில குழந்தைகள், முதல் மாதத்தில் சிறிது உடல் வற்றி / இளைத்து
பிறகு திரும்பவும் உடல் பெருக்குமாம். அப்படி குழந்தை சிறிது இளைப்பதை
அரைவத்தல் என்கிறார்கள்.

ஐயாமாரே, அம்மாமாரே இது சம்பந்தமாக ஏதெனும் புதிய தகவல்கள் இருந்தால் தெரியப்படுத்தவும்.
என்றென்றும் அன்புடன்,
பா. முரளி தரன்.