Wednesday, February 14, 2007

கற்பழித்துக் கொல்லப்பட்ட TRO பிரேமினி.

திரு.சுந்தர வடிவேல் அவர்கள் பதிவில் என்னால் இடமுடியாமல் போன பின்னூட்டம்.

"டி.பி.எஸ் ஜெயராஜ் இப்ப ஒரு கட்டுரை எழுதியிருக்காரு. இதப் படிச்சா குலை நடுங்கும், நெஞ்சுல ஈரமிருந்தா கண்ணீர் வரும்."

படித்தேன். அதிர்ந்தேன்.

சமீபத்தில் எனது அலுவல் நிமித்தமாக சில ஆஸ்திரிய நண்பர்களுடன் ஒரு நாளை கழிக்க நேர்ந்தது. நான் தமிழகத்தை சேர்ந்தவன் எனத் தெரிந்ததும், என்ன பிரச்சனை இலங்கையில்? என்று கேட்டார்கள்.

நான் பத்திரிக்கைகளின் மூலமாகவும், இணையத்தின் மூலமாகவும்,
நண்பர்கள் மூலமாகவும் அறிந்தவற்றை அவர்களுக்கு எடுத்துச் சொன்னேன்.
எனது சொந்த ஊரான நெய்வேலியில் ஒரு இலங்கை அகதிகள் முகாம் இருந்தது, ராமகிருஷ்ணன் என்றொரு நண்பன், ஒன்பது, பத்தாம் வகுப்பில் எனது பக்கத்து இருக்கை. அந்த வயதில் அதிகம் பக்குவப்பட்டிராத நான் ( இப்போதும் அப்படித்தான் ) நீ ஏன் புலியாக மாறிப் போராடாமல் இங்கு வந்தாய் என்ற எனது கேள்விகளால் எரிச்சல் அடையாமல் நல்ல நண்பனாக இருந்தான்.

கூடவே சித்தார்த்தன் என்றொரு நண்பன். இவன் நகர திராவிடர் கழகத் தலைவரின் மகன். அவர்கள் வீட்டிற்கு சென்றபொழுது சில புலிப்படை போராளிகளை கண்டிருக்கிறேன்.அப்போதெல்லாம் எங்கள் பள்ளியில்( 1987-1988) புலித்தலைவர் பிராபகரனின் படங்களை ஒரு ரூபாய் கொடுத்து வாங்க சிறுவர்கள் போட்டி போடுவோம்.

இலங்கை பிரச்சனைக்காக பள்ளிப் பருவத்திலேயே ஸ்டெரைக் செய்தோம்.
அது எம்ஜிஆரின் ஆட்சிக்காலம். எங்கள் ஊர் திருவிழாக்களிலும்,வீதி முனைகளிலும், புலிகளின் ஆதரவாளர்கள் இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக நடக்கும் அட்டூழியங்களின் வீடியோ கட்சிகளை ஒளிபரப்புவார்கள். அதைக் கண்ட யாவரும், நம்மால் ஆன உதவிகளை நிச்சயமாக இலங்கை தமிழர்களுக்கு செய்ய வேண்டும் என்றொரு மன நிலையில், எங்களால் ஆன பொருளும், பணமும் அளிப்போம்.

ஒரு கட்டத்தில் இந்திய அமைதிப்படை இலங்கைக்கு சென்ற பொழுது,தீர்ந்தது பிரச்சனை என்று தோன்றியது. ஆனால் அதன் பிறகு நடந்த துன்பியல் சம்பவங்களால் நிலைமை மேலும் சிக்கலாகிவிட்டது.
ஒரு இந்தியனாக மனதில் புலிகளின்பால் ஒரு வெறுப்பும் ( ராஜீவ் கொல்லப்பட்ட செய்தி வந்ததும் நான் அழுதேன்), அதே வேளையில் ஈழத் தமிழர்களின் நிலை குறித்து ஒரு வேதனையும், சிங்கள இனவாத அரசின் மீதான ஒரு கோபமும் ஆன ஒரு மன நிலையில் இருக்கிறேன்.

ஒரு சாதரன மனிதனாக ஈழப் பிரச்சனைக்கு என்னால் எதுவும் செய்ய முடியாது ஆனால் எனது ஐரோப்பிய நண்பர்களிடம் சொன்னேன், நீங்கள் ஐரோப்பாவில் ஒரு ஈழத் தமிழனைக் கண்டால் உங்களால் முடிந்த ஆதரவினைத் தாருங்கள் ஏனென்றால் அவர்களின் உடனடித் தேவை, அனைத்து உலக நாடுகளின், மக்களின், நாகரீக சமுகங்களின் ஆதரவுக் கரம்தான்.
என்றென்றும் அன்புடன்,
பா. முரளி தரன்.

1 comment:

Anonymous said...

உங்கள் அன்புக்கு மிக்க நன்றி.
ஆண்டவன் விரைவில் கண் திறக்க
வேண்டும்,