Monday, March 05, 2007

சமஸ்கிருதம்.

சமீபத்தில் ஒரு மாநில ஆளுனர் சமஸ்கிருதம் பயில்வதால் நடைமுறை வாழ்க்கைக்கு பயன் ஏதும் இல்லை என்பது போன்றதொரு கருத்தை வெளியிட்டு சிலரின் கண்டனத்திற்கு ஆளாகி உள்ளார். இது சம்பந்தமான எனது கருத்தை பதிய நினைத்தேன். காஞ்சி மஹாசுவாமிகளின் வாக்கை கடைபிடிக்கும் குடும்பம் எங்களுடையது. அவரது கட்டளைகளில் சில,

1. பிடியரசி திட்டம். ( தினமும் சமைக்கும்பொழுது குடும்ப தலைவிகள் ஒரு பிடி அரிசி எடுத்து தனியாக சேமித்து வைத்து, அந்த அரிசி ஓரளவு சேர்ந்ததும் தேவைப்படும் ஏழைகளுக்கோ, ஆதரவற்றவர்களுக்கோ, அநாதை இல்லங்களுக்கோ வழங்குதல்). இதை எனது தாயார் செய்யக் கண்டிருக்கிறேன்

2. வரதட்சனை வாங்க கூடாது. வரதட்சனை வாங்குபவர்கள் என்னிடம் ஆசி பெற வர வேண்டாம் என ஒரு முறை பரமாச்சாரியார் அறிவித்தார். ( திருமணத்திற்கு முன், கல்யாண பத்திரிக்கையை எடுத்துச் சென்று குல குருவிடம் ஆசி பெறுவது என்பதொரு வழக்கம் ). மேலும் திருமணத்தில் தங்க மாங்கல்யம் என்பது கூட இடையில் புகுந்த வழக்கம் என்றும், பழங்காலத்தில் திருமாங்கல்யம் என்பது வெறும் பனை ஓலையால் செய்யப்படுவதாக இருந்த்தாகவும் குறிப்பிட்டுள்ளார். நானும், எனது சகோதரும், வாங்கமாட்டோம் வரதட்சனை என்று சொல்லித்தான் திருமணம் செய்தோம்.

3. வேத சம்ரஷனம் பொருட்டு குடும்பத்தில் ஒரு குழந்தையையாவது வேதபாட சாலையில் கல்வி பயில சேர்க்க வேண்டும். வேதபாடசாலைக் கல்வி என்பது, உபநயனம் முடிந்தபின் எட்டு வயதில் குரு குலத்தில் சேர்த்துவிடுவது என நினைக்கிறேன். இது எட்டு பத்து வருட படிப்பு என்றும் நினைக்கிறேன்.

எனது சிறு வயதில் என்னை வேதம் பயில்வதற்கு அனுப்ப, எனது தாய் மாமனால் ஒரு யோசனை முன் வைக்கப்பட்டது. சேலத்தின் அருகில் உள்ள ஸ்கந்தாஸ்ரமம் என நினைக்கிறேன். சிறுவயதில் நடந்ததால் சரியாக நினைவில்லை. ஆனால் நான் வேதபாட சாலையில் சேர்வதை எனது தந்தையார் விரும்பவில்லை. அதற்கு என்ன காரணம் என்று இது நாள் வரையில் நான் கேட்கவில்லை. இப்போது அதற்கான காரணம் என்னவாக இருந்திருக்க வேண்டும் என ஓரளவு புரிகிறது.


எனது தாத்தாவரை புரோகிதம்தான் எங்கள் குடும்ப தொழில். திராவிட கட்சிகளின் தலையெடுப்பிற்குப் பின் அதற்கு பெரிய மரியாதையோ, அதனால் தேவையான வருமானமோ கிடைக்காத சூழ்நிலை ஏற்பட்டுவிட்டது. எனது தந்தையார் குடும்ப தொழிலிருந்து விலகி, வீட்டைவிட்டு ஓடி வந்து, நெய்வேலியில் ஒரு வேலையில் சேர்ந்து, ஒரு சுயம்புவாய் வாழ்க்கையை தொடங்கியவர். குழந்தைகளுக்கு முழுவதுமான சமஸ்கிருதக் கல்வி தேவையில்லை என்று அவர் நினைத்திருக்கலாம். ஆனால் இப்போது காலம் மாறிவிட்டது வேதமும் சமஸ்கிருதமும் கற்றவர்களுக்கு, தற்போது ஒரு நல்ல மதிப்பு உள்ளது. வருமானத்திற்கும் குறைவில்லை, சக்கைபோடு போடுகிறார்கள்.

பக்தி, தத்துவம், இலக்கியம் போன்றவற்றில் ஆழ்ந்த அறிவும், தெளிவும் பெற நிச்சயம் சமஸ்கிருதம் உதவும் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் பொருளாதாரத்திற்கும், உலகளாவிய தொடர்புக்கும் ஆங்கிலம் மிக அவசியம். எத்தனை மொழி கற்றாலும் தவறில்லை. அது அவரவர் ஆர்வம் மற்றும் திறமையின் பாற்பட்டது. நான் கூட எனது குழந்தைகளுக்கு சமஸ்கிருதமும் கற்றுத்தரவேண்டும் என முடிவெடுத்துள்ளேன்.

என்றென்றும் அன்புடன்,
பா. முரளி தரன்.

1 comment:

Anonymous said...

Samaskritham matrum Tamil ... Kalakukireerkal...

Araivekkadukal... Western slave'kalaka maari ... Sanskrit vendam endru sollikondu... "Arabi" languagai ethirka theriyamal irukindranar...

Mikka Nandru, Ungal Karutthu.

Anbudan
Thamizhan