இந்த ஆண்டு குடியரசு தினம் வெள்ளிக் கிழமை வந்ததால், மிக வசதியாய் போயிற்று ( வார இறுதி நாள் விடுமுறை). சில நண்பர்களுடன் இனைந்து, ஜெத்தா இந்திய தூதரகத்தில் நடக்கும் குடியரசு தினக் கொடியேற்ற நிகழ்ச்சியில் கலந்துகொள்வது என முடிவெடுத்தேன்.
இந்தியாவிற்கு வெளியே நான் கலந்துகொண்ட முதல் குடியரசு தின நிகழ்ச்சி. தேசிய கீதத்தை ஒலிப்பேழை கொண்டு இசைப்பதையும்,
சிறுவர்களை மட்டும் பாடச்சொல்லி மற்றவர்கள் மெளனமாக இருப்பதையும் ஒழித்துக்கட்ட வேண்டும். இனிமேல் தேசிய கீதத்தை அனைவரும் தத்தமது சொந்தக்குரலில் பாட வேண்டும் என்பதை ஒரு உறுதி மொழியாக எடுத்துக்கொண்டால்கூட தவறில்லை.
தேசிய கீதம் பாடி முடித்தவுடன், ஒரு ஒற்றைக்குரல் மட்டும் பாரத் மாதா கீ என்று ஓங்கி ஒலித்தது. அந்த குரலுக்கு பதிலாக நானும் உரத்த
குரலில் ஜே என்று கத்திச் சொல்லி எனது ஆதங்கத்தை தீர்த்து கொண்டேன்.
பிறகு ஜனாதிபதி அப்துல் கலாம் அவர்களின் குடியரசு தின உரை வாசிக்கப்பட்டது. அனைவருக்கும் அந்த உரையின் படிமமும் வழங்கப்பட்டது. ஒரு இந்தியன் என நினைத்து பெருமை கொள்ளும்
விதமாக இருந்தது ஜனாதிபதியின் உரை. கூடுதலாக அவர் தமிழர் என்பதால் மேலும் உவகை கொண்டேன்.
அப்துல் கலாம் ஒரு ஆச்சரியப்படுத்தும் அறிவுத்திறனும், குண நலனும் கொண்ட மனிதராக உள்ளார். இளைனர்களுக்கும், சிறார்களுக்கும் ஒரு முன் மாதிரி வாழ்க்கை வாழ்ந்து காட்டுகிறார் என்றால் அது மிகையல்ல.
மிகப் பக்குவப்பட்ட சிந்தையும், பேறறிவும், அறநெறி சார்ந்த வாழ்வும்,
தெய்வ பக்தியும், பல்கலை வித்தகமும், தத்துவ விசாரனையும், அனைத்து மதங்களைப் பற்றி சம நோக்கு பார்வையும், மேதமையை மதிக்கும் பண்பும், இன்ன பிற நற்குணங்களின் உறைவிடமாய் உள்ளார். கூடவே தலைசிறந்த நிர்வாகி, விஞ்ஞானி என்றெல்லாம் நிரூபித்து உள்ளார்.
நாட்டை வல்லரசாக்குவதற்கு அவர் அறிவித்துள்ள 2020 மிக அற்புதமான திட்டம்/கனவு.
சில அற்ப அரசியல் காரணங்களால் ( இத்தாலி சோனியா பிரதமர் ஆவதற்கு முட்டுக்கட்டை போட்டதால்) அடுத்தமுறை அவர் குடியரசு தலைவர் ஆவது சந்தேகம்தான் என்கிறார்கள்.
நான் கேட்கிறேன், இப்படி ஒரு மனிதர் ஏன் திரும்பவும் குடியரசு தலைவர் ஆகவேண்டும்?. பேசாமல் அவரையே அடுத்த இந்தியப் பிரதமர் ஆக்கிவிட்டால் என்ன?. அவர் கொடுத்த 2020 திட்டத்தை அவர் தலைமையிலேயே நாடு செய்து முடித்தால் என்ன?.
அடுத்த இந்தியப்பிரதமர் அப்துல் கலாம் என்று அறிவித்து ஒரு புது அரசியல் கட்சி தொடங்கினால் என்ன?. அப்படி ஒரு சிறு பொறியை யாரும் பற்ற வைத்தால் அது கலாம் பிரதமரானார் என்னும் பெரும் நெருப்பாக முடியும் என்பது திண்ணம்.
அறிவுஜீவிகள் இதற்காக முயற்சி செய்யலாம். ஆன்மீகப் பெரியவர்களின் ஆசிகளையும் கேட்டுப் பெறலாம். கலாம் பிரதமராவதால், இந்திய முஸ்லீம்கள் மனதில் பாபர் மசூதி இடிப்பால் ஏற்பட்ட காயமும் ஆறும்.
இந்திய முஸ்லீம்களுக்கு ஒரு வார்த்தை. கலாம் பிரதமராகாவிட்டால் வேறொறு முஸ்லீம் பிரதமர் என்பது இந்த நூற்றாண்டில் இந்தியாவில் சாத்தியமில்லாது போகலாம்.
தனிந்த சிந்தனை கொண்ட கலாம்தான் அடுத்த பிரதமர் என்று அறிவித்து ஒரு கட்சி துவக்கப்பட்டாலோ / ஏற்கனவே இருக்கும் கட்சி அறிவிப்பு வெளியிட்டலோ, பெரும்பான்மை இந்து சமூகம் மிக சந்தோஷமாக அதை ஏற்றுக்கொள்ளும்.
காந்திக்குப் பின் அனைத்து மத, சமூக, மொழி, இனப் பிரிவினராலும் ஏற்றுக் கொள்ளப்படும் ஒரே மனிதராக கலாம் உள்ளார் என்பது எனது எண்ணம்.
கலாமைப்போல் ஒரு மனிதரிடம் நம்மை ஆளும் அதிகாரத்தை தர நாம் தவறினால், இந்தியாவின் வல்லரசு, நல்லரசுக் கனவு, ஏன் கனவாகவே தொடர்ந்து கொண்டிருக்கிறது என்பதை 2050 இல் உட்காந்து யோசிக்கும்போது கிடைக்கும் விடை இதுவாகத்தான் இருக்கும்,
காந்தியை சுட்டோம், கலாமையும் கை நழுவ விட்டோம்.
என்றென்றும் அன்புடன்,
பா.முரளி தரன்.
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
Post a Comment