Saturday, January 20, 2007

வெல்டிங் மெஷினால் தீ விபத்தா?.

துபாயில் ஒரு பல மாடிக்கட்டிட வேலையில் தீ பிடித்ததில், இந்தியர்கள் உட்பட பல தொழிலாளர்கள் உயிர் இழந்துள்ளார்கள். தீ விபத்துக்கான காரணமாக ஒரு வெல்டிங் மெஷினை சொல்லியிருக்கிறார்கள்.

எனது துறை சார்ந்த அறிவின் அடிப்படையில், இதற்கான சாத்தியக் கூறுகள் மிகவும் குறைவு. ஒரு வெல்டிங் மெஷினில், இந்த அளவிற்கு ஒரு பெரிய தீ விபத்தை ஏற்படுத்தும் அளவிற்கான பாகங்கள் எதுவும் கிடையாது. அதுவும் அரபு நாடுகளில் உபயோகப் படுத்தப்படும் மெஷின்கள், நவீன தொழில் நுட்பம்
கொண்டவை.

பெரும்பாலும் இது போன்ற உயரமான கட்டிட வேலைகளில், மிகக் குறைந்த எடையில் ஆன, பெரும்பாலும் எலக்ட்ரானிக் பாகங்கள் கொண்ட மெஷினைத்தான் உபயோகப் படுத்துவார்கள்.
இவைதான் கையாள்வதற்கு மிக எளிதானவை.

இந்தியாவில் ட்ரான்ஸ்பார்மர் டைப் மெஷின்கள், சிறிய பட்டறைகளில் இப்பொழுதும் புழக்கத்தில் உள்ளது. அது போன்ற வெல்டிங் மெஷின்கள் இங்கு கிடையாது.

ஒரு வேளை டீசலை உபயோகிப்படுத்தி செயல்படும் ஜெனரேட்டர் வகை மெஷின்களாக இருந்திருக்கலாம். அப்படிப்பட்ட சூழ்நிலையில் டீசல் டேங்க் வெடித்ததால், இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம்.

வெல்டிங்கில், கேஸ் வெல்டிங் என்றொரு வகை உண்டு. இதில் ஆக்சிஜன், அசிட்லின் வாயுக்களின் உதவியால் வெல்டிங் செய்யப்படும். அப்படி ஒரு வெல்டிங் முறையை தேர்வு செய்திருந்தால், அந்த கேஸ் சிலிண்டர் வெடித்ததால் இப்படி ஒரு விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. இந்த சூழ்நிலையிலேயும் சிலிண்டர் வெடிக்க வாய்ப்புகள் கோடியில் ஒன்றுதான்.

எப்படி யோசித்தாலும் வெல்டிங் மெஷினால் ஏற்பட்ட தீ என்பது குழப்பம் ஏற்படுத்துவதாவே உள்ளது. பாதுகாப்பு ஏற்பாடுகள் சரியானபடி இருந்ததா என தெரியவில்லை. அதிக விவரங்கள் கிடைக்கும்வரை பொறுத்திருந்து பார்ப்போம்.

இதில் இறந்துபோன இந்தியர் ஒருவர் வேலைக்கு புதிதாய் சேர்ந்திருந்தாராம்.
என்ன கொடுமை பாருங்கள்.

இதற்கெல்லாம் தீர்வு நம்மை ஆளும் அரசியல்வாதிகள் கையில் இருப்பதுதான் அதைவிடக் கொடுமை.

என்றென்றும் அன்புடன்,
பா.முரளி தரன்.

No comments: